டியர் டாக்டர்



* ‘உங்கள் டூத் பேஸ்ட்டில் கேன்சரும் இருக்கு’ என்ற தகவல் அதிர வைத்தது. டூத் பேஸ்ட்டில் கலந்து வரும் டிரைக்ளோஸான் என்ற வேதிப் பொருள் பற்றிய எச்சரிக்கை தகவல் கொடுத்ததற்கு மிக்க நன்றி.
- இரா. வளையாபதி, தோட்டக்குறிச்சி.

* ‘வாட்ஸ் அப் மாத்திரை’ பற்றிய கட்டுரை விளையாட்டாக இருந்தாலும், அது நிஜமாகும் காலம் இன்னும் நீண்ட தூரம் இல்லை என்றே தோன்றுகிறது. ‘அஸ்பார்கஸ்’ என்ற தண்ணீர் விட்டான் கிழங்கு பற்றிய விரிவான தகவல்கள், இதுவரை யாரும் சொல்லாதது. ‘கடன் வாழ்வைச் சிதைக்கும்’ என்பதனை மிகத் தெளிவாக சொல்லியிருப்பது லைஃபில் மறக்க முடியாதது. ‘கொஞ்சம் குண்டா இருந்தாத்தான் என்ன’ கவர் ஸ்டோரி உடல்பருமன் பற்றிய இன்றைய இளைய தலைமுறையினருக்கு இருக்கும் ஐயங்களை நிச்சயம் போக்கியிருக்கும்.
- சிம்ம வாஹினி, சென்னை.

* ‘நல்ல குழந்தைகள் வளர்க்க என்ன வழி’ குறிப்பாக இந்த நேரத்துக்கு தேவையான கட்டுரை. பெற்றோரின் கனிவும், கண்டிப்பும் ஒருசேர இருக்க வேண்டியதன் அவசியத்தை அழகாக கூறியிருந்தார் மனநல மருத்துவர் கவிதா.
- கல்பனா, காமராஜபுரம்.

* அப்யங்கம் என்ற தலைப்பே புதிதாக இருந்தது. எண்ணெய் குளியலின் அவசியம், தேக ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் அப்யங்க முறை பற்றி சொல்லி இருந்தது பயனுள்ளதாக இருந்தது. போர்வீரர்களின் உணவுமுறை பற்றிய கட்டுரை சுவாரஸ்யம். இப்போதுள்ள வாழ்க்கையும் ஒருவகையான போர் என்பதால் மீண்டும் அந்த உணவுமுறை தேவைப்படுகிறது போல.
- புனர்பூசன், வண்டலூர்.

*மருத்துவம் குணம் மிக்க மாகாளி பற்றிய தகவல்கள், அதை உபயோகப்படுத்தும் விதம், அதனுடைய பயன்கள் என அனைத்து விவரங்களையும் விளக்கிய முறை மிகவும் அருமை. மாகாளி பற்றி இதுவரை தகவல்கள் பரவலாக வெளியாகவில்லையே என்ற ஆதங்கத்தைப் போக்கியது.
- இளம் பாரதி, தாம்பரம்.