டியர் டாக்டர்



*காலத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற ‘கவர் ஸ்டோரி’! டீடாக்ஸ்’ பற்றி இவ்வளவு ‘டீட்டெயில்டாக’ கொடுத்ததும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு நல்ல கருத்துக்களை தந்திருப்பதும் மனதைத் தொட்டது. பல்லுக்காக சொன்ன பன்னிரண்டு விசயங்களும் பயனுள்ளவை. இந்த முறை மெடிக்கல் டிரெண்ட்ஸில் நிறைய புதிய பல விஷயங்கள். குளிர்ச்சி தரும் லிச்சி பழம் பற்றிய தகவல்கள் வாங்கி சுவைக்கத் தூண்டியது.
- சிம்மவாஹினி, வியாசர்பாடி.

*EVE தொழில் நுட்பம் மூலம் கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் செயற்கை கருப்பை குறித்த தகவல்கள் மலைக்க வைப்பதாக இருந்தன. செயற்கை கருப்பை கண்டு பிடித்திருப்பது பற்றிய நல்ல தகவல் பலரது வயிற்றில் பால் வார்த்திருந்தது. ஆனால், உணர்வுகளுக்கு இனி மதிப்பிருக்காதோ என்ற கோணம் கவலையை அளித்தது.
- இரா. வளையாபதி,தோட்டக்குறிச்சி.

*பாதாம் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்பது போன்ற பல மருத்துவ மூட நம்பிக்கைகளுக்குக் கடந்த இதழ் நல்ல பதிலை அளித்தது. அதேபோல் எலும்பு நலன் தொடர்பாக நாம் குழப்பத்தோடு இருக்கும் பல சந்தேகங்களுக்கும் பதிலளித்திருந்தது எலும்பே நலம்தானா?!
- ரிஷி, மடுவின்கரை.

*மதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வருவது ஏன்? என்ற கட்டுரை பலருக்கும் பயன் தரும் தகவல்களைத் தந்தது. உண்ட மயக்கம் என்று மேலோட்டமாகவொ, வேடிக்கையாகவோ கடந்துவிடக் கூடாது  என்ற அறிவுரையையும் வழங்கியிருந்தார் ஊட்டச்சத்து நிபுணர் கிரேட்டா ஷெரின்.
- சி.கோபாலகிருஷ்ணன், மேற்கு தாம்பரம்.

*அனுஷ்காவின் எடை குறைப்பு பற்றிய Centre Spread Special சிறப்பு. எடையைக் குறைப்பதில் புத்திசாலித்தனம் வேண்டும் என்ற அவரது அனுபவப்பூர்வ ஆலோசனையை எல்லோரும் மனதில் கொள்ள வேண்டும்!
- காசி, வள்ளியூர்.

*ரவுண்ட்ஸ் பகுதி திருச்சி மருத்துவமனையைக் கவர் செய்திருந்தது மகிழ்ச்சி. ஒரு தனி கட்டுரைக்காக குங்குமம் டாக்டர் எந்தளவு மெனக்கெடுகிறது என்பதைப் புரிய வைக்க இந்த பகுதி ஒன்றே நல்ல உதாரணம். உங்கள் நிருபர் குழுவுக்கும் சபாஷ். டயட்டீஷியன்கள் என்ன டயட்டைப் பின்பற்றுகிறார்கள் என்ற கட்டுரை சுவாரஸ்யம்!
- கே.கிருஷ்ணமூர்த்தி, சேலையூர்.