மதுப்பழக்கத்திலிருந்து மீள்வதற்கு என்ன வழி?!



மது உடலுக்கும் மனதுக்கும் கேடு

‘‘நாம் ஏன் மதுவை ருசித்தோம்... பின் அது நம் உணர்வோடும் விருப்பங்களோடும் நீக்கமற நிறைந்தது எப்படி? இப்படிப் பல கேள்விகளை உங்களுக்குள்ளாகவே நீங்கள் கேட்டுப் பாருங்கள். மதுவுக்கு அடிமை என்ற நிலையில் இருந்து உங்களை மீட்பதற்கான காரணங்கள் உங்களுக்கே புலப்படும்’’ என்கிற கல்லீரல் மாற்று சிகிச்சை நிபுணர் ஹரிக்குமார், மதுப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான மருத்துவ வழிமுறைகளையும் விளக்குகிறார்.

‘‘ஒரு விதமான பறத்தல் நிலை, ரிலாக்ஸ் என்பது தாண்டி நம்மைச் சூழும் அத்தனை பிரச்னைகளுக்குமான தீர்வை மதுவிடம் தேடும்போது அதன் ஆழங்களில் தொலைந்து போகிறோம். பின்னர் உறவுகள், நண்பர்கள், சமூகம் என நம்மைக் கொண்டாடியவர்கள் வெறுக்கும் இடத்தை நாம் அடைந்து
விடுகிறோம். இது மதுவினால் ஒருவருக்கு உண்டாகும் சமூக இழப்புகள்.

இதையும் தாண்டி அவர்களது உடல் பலவிதமான பிரச்னைகளை சந்திக்கிறது. இதனால் உண்டாகும் உடல் நலக் குறைபாடுகள் தீர்க்க முடியாத நோய்களின் இருப்பிடமாக மதுப்பழக்கம் உள்ளவரை மாற்றும்.

உள்ளுறுப்புக்களையும் இந்த மதுப்பழக்கம் அதிகபட்சமாக பாதிக்கிறது. குடிப்பழக்கம் உள்ளவர்கள் அன்லிமிட்டட் என்ற எல்லையைத் தொடும்போது பிரச்னையும் துவங்கும். ஒவ்வொரு முறை குடிக்கும் போதும் அதிகளவில் குடிப்பது அல்லது குறுகிய காலத்தில் அதிகளவு மது குடிப்பது என்ற நிலையை எட்டும் எவரின் கல்லீரலுக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்படும்.

இன்றைய காலகட்டத்தில் Party-யில் மட்டும் என்று இந்த மதுப்பழக்கம் இயல்பாகத் துவங்குகிறது. இந்த பார்ட்டியின் விளைவாக அதிகளவிலான இளைஞர்கள் மதுப்பிரியர்களாக மாறிவிடுகின்றனர். இவர்கள் துவக்கத்தில் குறைவாகக் குடித்தாலும், நாளடைவில் அதிகளவு மது குடிக்கின்றனர். அவர்களின் வயதும், வாழ்க்கைச் சூழலும், பொறுப்புக்களும் கூடக் கூட அதிகப்படியாக மதுக்குடிப்பது அதிகரிக்கிறது.

விழாக்களில் குடிப்பதும் அதிகப்படியான குடிப்பழக்கத்திற்கு வழி வகுக்கிறது. இதில் அதிகளவிலான நண்பர்கள் கலந்து கொள்வதால் ஒவ்வொருவரும் அதிகளவில் குடிக்கின்றனர். பொழுதுபோக்கிற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் குடிப்பதற்கு சமூகரீதியாக முக்கியத்துவமும் இப்போது அளிக்கப்படுகிறது.

உடன் இருப்பவர்கள் இது போன்ற விழாக்களில் குடிக்கும் போது அருகில் இருப்பவர்களின் ஆசைகளும் தூண்டப்படுகிறது. இதில் மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், விழாக்காலங்களில் குறுகிய நேரத்தில் அதிகளவு மது குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது கல்லீரல் வீக்கத்துக்கு வழி வகுக்கும். இதனால் 50 சதவீத இறப்பு உண்டாகிறது.

குடிப்பழக்கத்தால் இதயம், நுரையீரல் மற்றும் மூளை போன்ற உறுப்புக்களும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. அதிகக் குடிப்பழக்கம் உள்ளவர்களின் இதயத் துடிப்பு சராசரியான நிலையில் இருந்து ஒழுங்கற்ற இதயத்துடிப்பு நிலைக்கு மாறும். இதன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்புக்கு வழிவகுக்கும்.

அதிகக் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு மூளையில் ரத்தக்கசிவு உண்டாகலாம். இதன் காரணமாக உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். நுரையீரல் ஆஸ்பிரேஷன் நிமோனியா(Aspiration pneumonia) என்னும் ஒரு நோயை உண்டாக்குகிறது. இது பாதி தூக்கத்திலிருக்கும் நிலை மற்றும் உணவுப் பொருட்கள் மற்றும் செரிமானச் சாறுகள் ஆகியவை உணவுக்  குழாய் வழியாக வந்து நுரையீரல் நிமோனியாவைத் தூண்டுகிறது.

ஒவ்வொரு துளி மதுவும் கல்லீரல் மற்றும் உடலின் உறுப்புக்களுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கும். ஒருமுறை மது நம் உடலுக்குள் வந்துவிட்டால், அதை உடல் நச்சு மூலக்கூறாக கருதுகிறது. பொதுவாக உடலின் சாதாரண வளர்சிதை மாற்றத்தில் எத்தனால் (எத்தில் ஆல்கஹால்) ஈடுபடுவதில்லை என்பதால் அதை வெளியேற்ற உடல் முயற்சி செய்யும். இதன் காரணமாக உடலில் உள்ள மூலக்கூறுகள் பாதிக்கப்படுகின்றன.

கல்லீரல் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. அதிகளவில் மதுக்குடிப்பதால் கல்லீரலை பாதிப்பதுடன் ரத்த ஓட்டத்தில் அதிகளவிலான எத்தில் ஆல்கஹால் கலந்து மூளையில் தவறான விளைவுகளை ஏற்படுத்துவதுடன் உடலின் பிற உறுப்புக்களிலும் ஆபத்தை ஏற்படுத்தும். குடிப்பழக்கத்தால் ஏற்படும் ஆல்கஹால் ஹெப்படைட்டிஸுக்கு எந்தவித சிகிச்சையும் இல்லை.

ஆனால், அதற்கான சிகிச்சையானது அதன் அறிகுறிகளைக் குறைக்கவும், நோய் மேலும் மேலும் அதிகரிக்காமல் தடுக்கவும், மதுக்குடிப்பதை நிறுத்துவதே இதற்கான ஒரே சிகிச்சை முறை ஆகும். கல்லீரலில் ஏற்படும் வடுவானது நிரந்தரமாக இருக்கும். ஆனால் கல்லீரல் சில பிரச்னைகளை சரி செய்யும். அதற்கான சிகிச்சை, முடிந்தவரை கல்லீரலை இயல்பான செயல்பாட்டிற்கு கொண்டு வரும்.’’

செய்ய வேண்டிய மாற்றம்

வழக்கமாக மதுக்குடிக்கும் ஒருவருக்கு ஊட்டச்சத்துக்குறைபாடு இருந்தால், வைட்டமின் சத்துக்கள் உள்ள உணவு மற்றும் சிறப்பான உணவு முறை ஆகியவை உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களின் சமநிலையை சரி செய்ய உதவும். கார்டிகோஸ்டீராய்டு மற்றும் பென்டாக்சிபைலின் போன்ற மருந்துகள் கல்லீரல் அழற்சியை குறைக்க உதவும்.

மிகவும் ஆபத்தான நேரங்களில் கல்லீரல் மாற்று சிகிச்சை மட்டுமே உயிர் வாழ்வதற்கான வாய்ப்பாக இருக்கும். இருப்பினும் கல்லீரல் தானம் அளிப்பவரை கண்டுபிடிக்கும் நடைமுறை மிகவும் சிக்கலானதாக இருக்கும். மதுக்குடிப்பதைக் குறைத்தல், மது குடிப்பதில் கட்டுப்பாட்டைக் கடைபிடித்தல், அதை முழுமையாக நிறுத்துதல் ஆகியவையே இதற்கான சிறந்த வழியாகும்.


- யாழ் ஸ்ரீதேவி