மகளிர் மனநலம் காப்போம்… ஹேப்பி வுமன்ஹுட்!



மனநல சிகிச்சைகள் என்னென்ன?

மனப்பதற்றம், மன அழுத்தம் என மிதமான அளவில் பிரச்னை இருக்கும்போது மனநல மருத்துவரிடமோ, உளவியல் நிபுணரிடமோ செல்ல வேண்டும். இந்த நிலையில் தெரபி, கவுன்சலிங் மூலமே அந்தப் பிரச்னையை சரி செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். தெரபிகளில் பல வகை உள்ளன.பிரச்னை கொஞ்சம் தீவிரமடைந்தாலோ, தீவிர நிலையில்தான் மருத்துவரிடம் செல்ல நேர்ந்தாலோ அவர்களுக்கு மருந்துகள் கொடுப்பது அவசியம். மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிலருக்கு மாதக் கணக்கில், வருடக்கணக்கில் எடுத்துக்கொள்ளும் நிலைகூட வரலாம். காய்ச்சல் போல் உடனடியாகக் குணமாகிவிடும் என நினைக்கக் கூடாது. உரிய மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக்கொள்ளும் மருந்தை மருத்துவர் கூறும் வரை நிறுத்தக் கூடாது. பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாக, மருந்தின் அளவை அதற்கு ஏற்றாற்போல் குறைத்து, பிறகு நிறுத்த வேண்டும்.மருந்துகளுடன் சேர்ந்த தெரபியும் சிலருக்கு வழங்கப்படும். இவை அனைத்துமே நோய்க்கு நோய் மாறுபடும். நோயின் தீவிரத்தை வைத்தே உரிய சிகிச்சை முறை தேர்வு செய்யப்படுகிறது.

மனப்பிரச்னை உடையவர்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும்?

மனப்பிரச்னை உள்ளவர்களைக் குணப்படுத்துவதில் மூன்று முக்கியப் பகுதிகள் உண்டு. ஒன்று, அவர்களுக்குத் தரப்படும் மருத்துவரின் சிகிச்சை. சிகிச்சையில் மருந்துகள், தெரபி அனைத்தும் அடங்கும். இரண்டாவது, நோயாளியின் ஒத்துழைப்பு. அதாவது, தெரபிகளுக்கு தவறாமல் வருவது, உரிய மருந்தை எடுத்துக்கொள்வது போன்றவை. மூன்றாவது, குடும்பத்தின் ஒத்துழைப்பு. இது மிகவும் முக்கியமானது.

மனப்பிரச்னை உடையவரைப் பற்றி அவரின் குடும்பத்தினர் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். அவருடைய பிரச்னை என்ன என்பது குறித்து சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அவரை கண்ணியமாக நடத்த வேண்டும். வாய் வார்த்தையாக, தவறுதலாகக்கூட ‘லூசு, மென்டல்’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. இது அவர்களை மிகவும் காயப்படுத்தும். பெற்றோர் இதைப் புரிந்துகொண்டு சரியாக நடந்துகொண்டாலும், சில நேரங்களில் சகோதரனோ, சகோதரியோ விளையாட்டாக, போகிற போக்கில் ஏதாவது சொல்லிவிட வாய்ப்புள்ளது.

எனவே, குடும்பத்தில் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். அவர் சரியாக மருந்து எடுத்துக்கொள்கிறாரா எனக் கவனிப்பது, தெரபிக்கு அழைத்துச் செல்வது என உறுதுணையாக இருக்கவும்.மிகவும் தீவிரமான மனநோயுடன் இருப்பவர்களைப் பார்த்துக்கொள்வது கடினமான பணி. அவர்களுக்குத் தொடர்ச்சியான கண்காணிப்புத் தேவை. அதுமட்டுமல்லாமல் தவறாமல் அவர்களுடைய மருந்துகளை எடுத்துக்கொள்ள வைப்பது மிக அவசியம். ஒன்றிரண்டு நாட்கள் மருந்து எடுக்காமல் விட்டாலே அவர்களின் நடவடிக்கைகளில் பிரச்னை இருக்கும். அவர்களைப் பராமரிப்பதில், பராமரிப்பவர் அழுத்தத்துக்கு உள்ளாக வாய்ப்புள்ளது (Caregiver Burnout). இந்தச் சூழல்களையெல்லாம் மனதில் கொள்ள வேண்டும்.

மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கையை உடைத்துக்கொள்வது, காலை உடைத்துக்கொள்வது, சுவரில் மோதுவது எனத் தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்ள வாய்ப்புண்டு. சில நேரங்களில் தற்கொலை வரைகூட போகலாம். `சைக்கோசிஸ்’ (Psychosis) போன்ற தீவிர மனப்பிரச்னை இருப்பவர்களுக்கு, தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே தெரியாது. அவர்கள் அடுத்தவர்களை அடிப்பது, காயப்படுத்துவது என இருப்பார்கள். அதற்கு ஏற்றாற்போல கவனம் கொடுத்து அவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

குடும்பத்தின் பங்கு என்ன?

பெண்களின் மனநலத்தில் குடும்பத்துக்குப் பெரும் பங்கு இருப்பதாகப் பல ஆய்வுகள் கூறுகின்றன. குடும்பத்தில் பெண்களுக்கு தாய், தாரம், மருமகள் எனப் பல பொறுப்புகள் உண்டு. ஆண்களுக்கும் இதே போன்ற பொறுப்புகள் உண்டு என்றாலும், வார இறுதியில் ஓய்வெடுத்துக்கொள்ள பெரும்பாலான ஆண்களுக்கு அவகாசம் உண்டு. ஆனால், பெண்களின் அகராதியில் ஓய்வு என்பது இல்லாத ஒன்று. வார நாளோ, வாரக் கடைசியோ அவர்களின் பணி எப்போதும் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும். ஓய்வில்லாத இந்தச் சூழல் அவர்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்கும்.

குடும்பத்தினரின் அன்புக்கு, கவனத்துக்கு ஏங்கும் இல்லத்தரசிகள் பலர். எத்தனையோ சோகங்களையும் அவமானங்களையும், புறக்கணிப்புகளையும் சந்தித்தாலும் அத்தனையையும் தங்களுக்குள் புதைத்துக்கொண்டு, குடும்பத்துக்காகத் தொடர் ஓட்டம் ஓடிக்கொண்டிருக்கும் பெண்களை குடும்பங்கள் உதாசீனப்படுத்தாமல் உரிய அன்பும் அங்கீகாரமும் கொடுக்க வேண்டும்.

பல வீடுகளில் பெண்களுக்குத் தங்கள் வலியைப் பகிரக்கூட யாரும் இருப்பதில்லை. எனவே, குடும்பத்தினர் பெண்களின் குறைகளைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். அதுவே அவர்களின் மன இறுக்கத்துக்கு பெரிய வடிகாலாக அமையும். மிக முக்கியமாக, தன் கணவர் தன்னோடு இருக்கிறார், தனக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்ற எண்ணமே பெண்களுக்கு மனதளவில் மிகுந்த பலத்தைக் கொடுக்கும். ஏதேனும் மனநலப் பிரச்னை இருந்தால் அதை விரைவிலேயே கண்டுபிடித்துவிடுவது சிகிச்சையை எளிதாக்கும்.

வீட்டில் தாயோ, மனைவியோ, சகோதரியோ முகவாட்டத்துடனோ, சோகமாகவோ காணப்பட்டால் தவறாமல் காரணத்தை விசாரிக்க வேண்டும். குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிடுவது, வெளியில் எங்காவது செல்வது போன்றவை இறுக்கங்களைத் தளர்த்த உதவும்.ஒரு பெண் படித்தால், அந்தக் குடும்பமே படித்தது போல என்று கூறப்படுவதைப் போல, ஒரு பெண்ணின் மனநலம் ஆரோக்கியமாக இருப்பதும் அவர் குடும்பத்தில் பிரதிபலிக்கக்கூடியது. பெண்களின் மனநலனில் கணவர் மற்றும் கணவர் வீட்டினரின் பங்கு மிக முக்கியமானது. அதேபோல தன் மனநலனைப் பேணு வதில் அந்தப் பெண்ணுக்கும் சமமான பங்குண்டு.

குடும்பம், குழந்தைகள் என எப்போதும் ஓடாமல் தங்களைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். தங்களுக்கு என ‘மீ டைம்’ ஒதுக்கிப் பிடித்த விஷயங் களைச் செய்ய வேண்டும். பிரச்னைகளைத் தேடி இழுத்துப் போட்டுக் கொள்ளாமல், நிம்மதியையும் சந்தோஷத்தையும் மட்டுமே நாட வேண்டும்.

குழந்தை வளர்ப்பு முறைகள்!

குழந்தையின் மனநலனைப் பேணிக் காப்பதில், அம்மாவும் அப்பாவும் மேற்கொள்ளும் குழந்தை வளர்ப்பு முறைக்கு பெரும்பங்கு உண்டு. அதில் பல வகைகள் உண்டு. அது குறித்த வழிகாட்டல் இங்கே...‘அதாரிடேரியன்’ (Authoritarian): இந்த வகை பேரன்டிங்கில் ஒழுக்கத்தை ஏற்படுத்த தண்டனைகளைப் பயன்படுத்துவார்கள். குழந்தைகளுக்கு இன்னும் சிறப்பான வழியில் எப்படிச் செயல்பட வேண்டும் எனக் கற்றுத்தருவதை விடுத்து, அவர்களைத் தங்கள் தவற்றுக்கு வருந்த வைப்பதிலேயே குறியாக இருப்பார்கள்.

‘அத்தாரிடேட்டிவ்’ (Authoritative): குழந்தைகளின் பழக்க வழக்கங்களை மேம்படுத்துவதில் அதிக கவனத்தையும் நேரத்தையும் செலவிடுவார்கள்.நல்ல நடவடிக்கைகளுக்குப் பாராட்டுவது, பரிசு கொடுப்பது என அவர்களின் பழக்க வழக்கங்களை பாசிட்டிவ்வாக மேம்படுத்துவார்கள். அத்தாரிடேட்டிவ் முறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் நல்ல மனநலத்துடன் வளர்வதோடு, வளர்ந்த பின்பும் தங்கள் எண்ணங்களை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்கள்.

‘பெர்மிஸிவ்’ (Permissive): பெற்றோர் போல் நடந்துகொள்ளாமல் நண்பர்களைப் போல் இருப்பார்கள். குழந்தைகளிடம் நன்றாகப் பேசிப் பழகும் ஆர்வத்தில், அவர்களின் தவறான செயல்களைக் கண்டிக்க மறந்துவிடுவார்கள். இப்படி வளரும் குழந்தைகள் பழக்க வழக்கங்களில் பல பிரச்னைகளை சந்திப்பார்கள்; மற்றவர்களின் கூற்றை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அன்இன்வால்வ்டு (UnInvolved): குழந்தை வளர்ப்பில் பெரிதாக அக்கறை இல்லாதவர்களாக இந்த வகைப் பெற்றோர்கள் இருப்பார்கள்.

அதிக வேலை, பெற்றோரின் மனநல பாதிப்புகள், உடல்நலக் குறைபாடுகள் போன்றவை இந்த கண்டுகொள்ளாத தன்மைக்குக் காரணமாக இருக்கலாம்.இவற்றில் ‘அத்தாரிடேட்டிவ்’ முறையில் குழந்தைகளை வளர்ப்பது, குழந்தை - அம்மா - அப்பா மூவரின் மனநலனுக்கும் சிறப்பாக அமையும்.

- லயா

மனநலனைப் பேண வழிகள்...

மனநலம் குறித்த தவறான நம்பிக்கைகளை உடையுங்கள்!

மனநலம் மற்றும் மனநலப் பிரச்னைகள் குறித்த பல தவறான தகவல்கள் நம்மிடையே உள்ளன. இதை உடைக்க நாம் தயாராக இருக்க வேண்டும். உடல் சார்ந்த பிரச்னைகளை இயல்பாகக் கையாள்வதுபோல, மனம் சார்ந்த பிரச்னைகளையும் கையாள வேன்டும். அதை ஏற்று சிகிச்சைக்குச் செல்லும் சூழல் இன்னும் இங்கு ஏற்படவில்லை. ‘எனக்கு மனநலப் பிரச்னை எதுவும் இல்லை’ என்று மறுக்கக் கூடாது. தாமாகவே முன்வந்து மருத்துவரை அணுக வேண்டும்.

உடல் ஆரோக்கியம் மிக முக்கியம்!

உடலுக்கும் மனதுக்கும் மிகப் பெரிய தொடர்பு உண்டு. இரண்டும் நன்றாக இருக்க வேண்டியது ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்குத் தேவை. எனவே, உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கான வழிகளைப் பின்பற்ற வேண்டும். ஆரோக்கியமான உணவுகள், தேவையான அளவு தூக்கம் என்ற நடைமுறைகளைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

தன் நலத்தைப் பேணுதல்!

தன்னுடைய நலத்தைப் பற்றி யோசிப்பது சுயநலம் கிடையாது. அதை முதன்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய நாளில் வாழுங்கள்!

நடந்து முடிந்ததைப் பற்றி யோசிப்பது சோகத்தை அதிகமாக்குவதோடு, இதை இப்படி செய்திருக் கலாமோ, அப்படி செய்திருக்கலாமோ என குற்ற உணர்வை அதிகமாக்கும்.
எதிர்காலத்தில் என்ன உள்ளது என்பது யாருக்கும் தெரியாத நிலையில் அதைப் பற்றியும் அதிகம் யோசிக்காமல், இன்றைய நாளில் கவனத்தை வையுங்கள். அது உங்கள் மனம் தேவையற்றதை நினைத்துக் கலங்குவதைத் தடுக்கும்.