வாவ் என்ஜினியர்ஸ்!



இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனம் சென்னை ஐஐடி. எப்போதும் புதுமைகளுக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்கும் தொழில்நுட்பக் கழகம். இதில் PALS என்ற பெயரில் செயல்பட்டு வரும் சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பினர் தங்கள் பங்கிற்கும் பொறியியல் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக பல்வேறு விஷயங்களை ஐஐடியுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். 
அதில் ஒன்றாக ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் முன்னெடுக்கும் ‘innoWAH’ நிகழ்வு சிறப்பாக நடந்து முடிந்தது. அதாவது பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் புதுமையான கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்தும் போட்டி இது.

இதில், ‘இன்றைய காலக்கட்டத்தில் நிலைத்த தன்மைக்கான சவால்களுக்கு ஏற்ற ஸ்டார்ட்அப் தீர்வுகள்’ என்பது போட்டியின் கருப்பொருளாக இருந்தது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சுமார் 44 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் பங்கெடுத்தனர். 
இதில் அவர்கள் தங்கள் யோசனைகளை கருத்தாக்கம் செய்து, புதிய கண்டுபிடிப்பு முன்மாதிரிகளை வடிவமைத்திருந்தனர். இறுதியில் மொத்தம் ஆறு தலைப்புகளில் நடந்த போட்டிகளில் 11 கல்லூரிகள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அசத்திய சில மாணவர்களுடன் உரையாடினோம். முதலில், சென்னையைச் சேர்ந்த ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி மாணவர்கள் காலநிலை மாற்றத்தின் பாதிப்பைக் குறைக்க சாதாரண சைக்கிளை எலக்ட்ரிக் சைக்கிளாக மாற்றியிருந்தது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
 ‘‘இதுல பேட்டரியும், டயர் ரிங் காம்போவும் வந்திடும். இந்த செட்அப்பை சைக்கிளில் பொருத்தினால் போதும். அது எலக்ட்ரிக் சைக்கிளாக மாறிடும். இது வேண்டாம் என்றாலும் கழற்றி வச்சிடலாம். பெடல் போட்டுக்கிட்டு வந்திடலாம்னு நினைச்சாலும் செய்யமுடியும். அந்தளவுக்கு இதனை வடிவமைச்சிருக்கோம்.

இது 20 கிமீ தூரம் வரை போகும். பெடல் அழுத்திப் போகும்போது 35 கிமீ தூரம் வரை கிடைக்கும். இதுக்கு 19,000 ரூபாயே செலவானது. சைக்கிளின் முன்பகுதியில் இந்த பேட்டரியை பொருத்தும்படி வடிவமைச்சிருக்கோம். எங்கேனாலும் எடுத்திட்டு போறமாதிரி இருக்கணும்னு செய்திருக்கோம். சைக்கிளின் வேகம் 30 கிமீ. இது நகர்ப் பகுதியில் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும். தவிர, மார்க்கெட் போகவும், அருகில் உள்ள பள்ளியில் தங்கள் குழந்தைகளை விடவும் பயன்படும்...’’ என்றனர் உற்சாகமாக.

இதே கல்லூரியைச் சேர்ந்த இன்னொரு மாணவர் குழுவினர் ‘ஸ்டீயர் பை வயர்’ என்ற தலைப்பில் தங்கள் கண்டுபிடிப்பைக் காட்சிப்படுத்தியிருந்தனர். ‘‘இப்ப பெரிய டிரக் மாதிரியான வண்டிகள் திருப்புவதற்கு ரொம்பக் கஷ்டப்படும் இல்லையா... அவங்களுக்கு இந்த வயர் சிஸ்டம் மூலம் எளிதாக ஸ்டீரிங்கை கையாள இந்த ஸ்டீயர் பை வயர் சிஸ்டத்தை உருவாக்கியிருக்கோம். இந்த சிஸ்டத்தை வச்சால் அதன் செயல்திறன் அதிகமாக இருக்கும். இதனால், வண்டியை எளிதாக பார்க் பண்ணமுடியும். ஒவ்வொரு முறையும் ரிவர்ஸ் எடுத்து பண்ணுவதை தவிர்க்கவும் முடியும்’’ என்றனர்.

இதேபோல சென்னையைச் சேர்நத கேசிஜி தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், குழந்தைகளுக்கான இன்குபேட்டரை ஆட்டோமெட்டிக் சிஸ்டமாக மாற்றியிருந்தனர். ‘‘இப்போதைய சிஸ்டம் மேனுவல் ஆனது. நாங்க ஆட்டோமெட்டிக்காக மாற்றி இதற்கான ஆப்பை ரெடி பண்ணியிருக்கோம். இதனை ஆன் பண்ணினால் போதும். குழந்தையின் ஹார்ட் ரேட், பல்ஸ், ஆக்ஸிஜன், வெப்பநிலைனு எல்லா விவரங்களையும் காட்டும். வெப்பம் கூடினால் மருத்துவர்களுக்கு மெசேஜ் போயிடும்.

அதைப்போல பெற்றோரும் தங்கள் குழந்தையின் உடல்நிலையை ஆப் வழியே தெரிஞ்சுக்கலாம். அதாவது குழந்தையின் உடல்நிலையை எங்கிருந்தும் கண்காணிக்கும்படி உருவாக்கியிருக்கோம்...’’ என்றனர். இதனுடன் மதுரையைச் சேர்ந்த தியாகராஜர் பொறியியல் கல்லூரி மாணவர்கள், விபத்துப் பகுதிகளைக் கண்டறிந்து டிரைவர்களுக்கு அலர்ட் செய்யும்விதமாக பாதை ரட்சகன் என்பதை வலியுறுத்தும்விதமாக ‘BAASHA’ என்ற ஆப்பை உருவாக்கியிருந்தனர்.

இது வண்டிகள் அந்த விபத்துப் பகுதிக்குள் நுழையும்போதே அலர்ட் கொடுத்துவிடும். அதைவிட்டு வெளியேறியதும் அதைக் கடந்துவிட்டதற்கான சமிக்ஞையும் கொடுக்கும்விதமாக செய்திருந்தது வெகுவாக ஈர்த்தது.இதனுடன் இன்னும் சில அலர்ட் விஷயங்களை உருவாக்கி விபத்தில்லா பாதுகாப்பான உலகத்தை படைக்கும்விதமாக வடிவமைத்திருந்தது மாணவர்களின் சிந்தனைத் திறனை வெளிக்காட்டியது.  

இந்நிலையில், PALSன் முதல் தலைவரான அலுமேலுவிடம் பேசினோம். ‘‘PALS என்பது ஐஐடி முன்னாள் மாணவர்கள் மேற்கொண்டிருக்கும் ஒரு முன்முயற்சி. எங்களின் இந்தக் கூட்டமைப்பு பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் கல்வியின் தரத்தை உயர்த்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டது. ஐஐடி மெட்ராஸின் ஆதரவுடன் இந்த உன்னதமான முயற்சியை தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளா முழுவதும் உள்ள பல கல்வி நிறுவனங்களில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வர்றோம்.

ஐஐடி என்கிற சிஸ்டத்துல நிறைய குவாலிட்டி, கன்டென்ட், லேப் உள்ளிட்ட வசதிகள் இருக்குது. அதை அதிக பார்வையாளர்கள்கிட்ட எடுத்திட்டு போகணும்னு நினைச்சோம். அதற்கான ஆதாரமாக இந்தமாதிரியான விஷயங்களை முன்னெடுக்கிறோம். எங்க PALSல் பல கல்லூரிகள் சந்தாதாரர்களாக இருக்காங்க. விருப்பப்படுறவங்க சேரலாம்.

அவங்களுக்கு ஒரு கல்வியாண்டுடன் சேர்ந்து கல்வி, ஆய்வு, இந்தமாதிரி கண்டுபிடிப்புகள், தொழில்முனைவு, லேப் விசிட்னு நிறைய செய்றோம். எங்க முன்னாள் மாணவர்கள் பலர் தொழில்துறையின் தலைமைப் பொறுப்பில் இருக்காங்க. அவங்க மூலமாக மாணவர்களை இண்டஸ்ட்ரிக்கு அழைச்சிட்டுப் போறதும், அதில் வரும் பிரச்னைகளைச் சொல்லி அதற்கு எப்படி தீர்வு காண்பாய்னு சொல்றதும் செய்றோம்.  

இதுல மாணவர்கள், ஆசிரியர்கள்னு ரெண்டு பேருக்குமே கற்றல் செயல்பாடு இருக்கு. ஆசிரியர்களைப் பொறுத்தவரை எப்படி வகுப்பெடுக்கணும், அதில் அவுட்கம் எப்படி பார்க்கணும், இந்தமாதிரியான செயல்பாடுகள் இருக்கும்.  எஞ்சினியரிங் மாணவர்களைப் பொறுத்தவரை இன்னும் சிறந்த மாணவர்களாக மாற்றணும். அவங்களுக்கு அனுபவ அறிவும், வாய்ப்பும் கிடைச்சால் இன்னும் பெட்டராக மாறிடுவாங்க...’’ என்றார் மகிழ்ச்சியாக.

தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் சென்னை ஐஐடி முன்னாள் மாணவியுமான அனுராதா ராமானுஜம், ‘‘இந்தப் போட்டிகள் ஓராண்டாக நடத்தப்படுது. அதாவது எப்படி ஒரு ஐடியாவை யோசிக்கணும் என்பதில் தொடங்கி ஸ்டேட்மெண்டை எப்படி ஃபார்ம் பண்ணணும், அந்தக் கல்லூரி மாணவர்கள் என்ன பண்ண நினைக்கிறார்கள் என்பதுவரை அனைத்தையும் எங்களுக்கு டாக்குமெண்ட்டாக அனுப்பணும்.

அப்படியாக 44 கல்லூரிகளிலிருந்து வந்து கலந்துகிட்டாங்க. இதுல 30 கல்லூரிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. பிறகு, ஒவ்வொரு லெவலாக போட்டிகள் நடத்தி மாணவர்களை இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்தோம். இதுல ப்ரீ ஃபைனலுக்கே 101 மாணவக் குழுவினர் வந்தாங்க. அதுல இருந்து 68 பேர் இறுதிப்போட்டிக்குத் தேர்வானாங்க. இந்த இறுதிப்போட்டியிலும் ஒரே கல்லூரியில இருந்துகூட ரெண்டு குழுவினர் வந்திருக்காங்க.

இந்த மாணவர்களுக்கு நாங்க நிறைய இம்ப்ரூவ்மெண்ட் சொல்லிக் கொடுத்திட்டே இருப்போம். அவங்கள சிறப்பாக செதுக்கி நல்ல பாதையில் அழைச்சிட்டுப் போறது எங்க நோக்கம்.
அதாவது, பொறியியல் மாணவர்களின் திறன், தொழில்நுட்பத் திறமையை வெளிக்கொண்டுவந்து தொழில்துறைக்கு ஏற்றபடி உருவாக்குறோம். அல்லது இதிலிருந்து அவங்களே ஸ்டார்ட்அப் தொடங்கிடுவாங்க. இப்ப இதுலயேகூட சிலர் ஸ்டார்ட்அப் ஆரம்பிச்சிட்டாங்க...’’ என சந்தோஷமாகக் குறிப்பிட்டார்.

இறுதிப்போட்டியின் நிறைவில் சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரி, ஈரோடு வெள்ளாளர் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, ஐதராபாத் கேஜி ரெட்டி பொறியியல் கல்லூரி, திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி, சென்னை எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரி, கோவை கேஐடி, மதுரை தியாகராஜர் பொறியியில் கல்லூரி, வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி உள்ளிட்டவை பரிசுகளை வென்றன.

பேராச்சி கண்ணன்