உலகை வாட்ச் பண்ணினார்... டைம் ஒர்க் அவுட் ஆனது!



இன்று ஆயிரக்கணக்கான பிராண்டுகளில் வாட்ச்சுகள் கிடைக்கின்றன. கையில் வாட்ச் கட்டாத ஒருவரைப் பார்ப்பதே அரிது. அந்தளவுக்கு ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது வாட்ச். 
விதவிதமான ஸ்டைல்களில், ஏராளமான அம்சங்களுடன் கிடைக்கும் இந்த வாட்ச்சுகளின் விலை சில நூறு ரூபாய்களிலிருந்து கோடிகள் வரை நீள்கின்றது. மட்டுமல்ல, இதயத்துடிப்பின் அளவு, தூங்கும் நேரம், நடக்கும் தூரம்... என உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் ஸ்மார்ட் வாட்ச்சுகள் கூட வந்துவிட்டன.

இத்தகைய வாட்ச்சுகளுக்கு வித்திட்ட நிறுவனங்களில் முதன்மையானது, ‘லூன்ஜின்’. விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பிடித்தமான வாட்ச் பிராண்ட் இது. உலகின் பழமையான வாட்ச் பிராண்டுகளில் இதுவும் ஒன்று. ஒரு கூரையின் கீழ் வாட்ச்சை உருவாக்கிய சுவிட்சர்லாந்தின் முதல் நிறுவனம் மற்றும் உலகின் முதல் வணிக முத்திரையைக் கொண்ட வாட்ச் பிராண்டும், ‘லூன்ஜின்’தான்.

தவிர, பெரும்பாலான சுவிஸ் வாட்ச் பிராண்டுகள் மற்றும் ஆடம்பர பிராண்டுகளின் பெயர்களில் ஒரு பொதுத்தன்மை இருக்கும். அதாவது நிறுவனத்தை உருவாக்கியவரின் பெயரையே பிராண்டுக்கும் வைத்திருப்பார்கள். 
இதில் ‘லூன்ஜின்’ மட்டுமே விதிவிலக்கு. ஆம்; நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட புதிதில் வாட்ச் தயாரிப்பதற்காக ‘எஸ் லூன்ஜின்’ எனும் ஊரில் தொழிற்சாலையை நிறுவினார்கள். அந்த ஊரின் மீதான மதிப்பை வெளிப்படுத்தும்விதமாக ‘லூன்ஜின்’ என்றே பிராண்டின் பெயரையும் வைத்துவிட்டனர். இன்று 200வது வருடத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது, ‘லூன்ஜின்’. இப்பிராண்டின் கதை கடிகார வரலாற்றில் ரொம்பவே முக்கியமானது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வந்த ஒரு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த வாட்ச் மேக்கர், அகஸ்ட் அகாசிஸ். வழக்கறிஞர்களான ஹென்றி ராய்குல் மற்றும் ஃப்ளோரியன் மோரலுடன் இணைந்து, செயின்ட் ஐமெர் எனும் இடத்தில் 1832ம் வருடம் வாட்ச் தயாரிக்கும் நிறுவனத்தை நிறுவினார் அகஸ்ட். 

இந்நிறுவனத்தின் பெயர், ‘ராய்குல் ஜுயுன் அண்ட் சை’. அப்போது பணக்காரர்கள் மற்றும் அரச குடும்பத்தினர்கள் மத்தியில் மட்டுமே பாக்கெட் வாட்ச்சுகள் பிரபலம். அத்துடன் இந்த வாட்ச்சுகளை வாங்குவதற்கான பணம் அவர்களிடம் மட்டுமே இருந்தது.

அகஸ்டின் நிறுவனமும் பாக்கெட் வாட்ச்சுகள் தயாரிப்பில் இறங்கியது. முன்பே அகஸ்டின் நிறுவனத்துக்குப் போட்டியாக ஏராளமான நிறுவனங்கள் பாக்கெட் வாட்ச்சுகளைத் தயாரித்து வந்தன. அதனால் பிசினஸ் பெரிதாக இல்லாமலும், நஷ்டமும் ஏற்படாமல் சமநிலையில் சென்றது. பெரிய அளவில் வளர்ச்சி ஏதும் இல்லை. அதனால், 1846ம் வருடம் அகஸ்டிடம் நிறுவனத்தை ஒப்படைத்துவிட்டு, ஹென்றியும், ஃப்ளோரியனும் ஒதுங்கிக் கொண்டனர். தனி ஒருவராக நிறுவனத்தை வழி நடத்த முடியாமல் திணறினார் அகஸ்ட்.  

சில வருடங்கள் கழித்து, தனது சகோதரனின் மகனான எர்னெஸ்ட் ஃபிரான்சிலோனை பிசினஸுக்குள் கொண்டு வந்தார். எர்னெஸ்ட் ஒரு பொருளாதார நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய ‘லூன்ஜினி’ன் வளர்ச்சிக்கு ஆணிவேராக இருந்தவர், எர்னெஸ்ட்தான். 

எர்னெஸ்ட் பிசினஸுக்குள் நுழைந்ததுமே, முதல் வேலையாக பாக்கெட் வாட்ச்சுகளின் வடிவத்தை மாற்றினார். அப்போது சந்தையில் கிடைத்த பாக்கெட் வாட்ச்சுகளின் வடிவங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தன. நேரத்தைப் பார்ப்பதற்குத்தானே என்று யாருமே வாட்ச்சின் வடிவத்தில் கவனம் செலுத்தவில்லை.

வடிவத்தில் மாற்றங்களைச் செய்து, வாட்ச்சுக்குக் கவர்ச்சியான தோற்றத்தைக் கொடுத்தால் சந்தையைத் தன்வசப்படுத்தலாம் என்று திட்டமிட்டார் எர்னெஸ்ட். சாவி போன்ற வடிவமைப்பில் இருந்த பாக்கெட் வாட்ச்சை கிரீடம் போல மாற்றியமைத்தார். எர்னெஸ்ட் நினைத்ததுபோலவே நடந்தது. 

ஆம்; பாக்கெட் வாட்ச்சுகளுக்கான ஆர்டர்கள் குவிந்தன. இன்னொரு பக்கம் அகஸ்டுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை எர்னெஸ்ட்டிடம் கொடுத்துவிட்டு, ஓய்வு எடுத்துக்கொண்டார் அகஸ்ட்.

ஆர்டர்களுக்கு ஏற்ப வாட்ச்சுகளை உற்பத்தி செய்வதற்கு போதுமான இடம் இல்லை. உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக, 1867ல் எஸ் லூன்ஜின் எனும் ஊரில் புதிதாக ஒரு தொழிற்சாலையை நிறுவினார் எர்னெஸ்ட். ‘லூன்ஜின்’ எனும் பிராண்டில் வாட்ச்சுகளைத் தயாரிக்க ஆரம்பித்தார். 

பாக்கெட் வாட்ச்சுகளில் ஏதாவது புதுமையை செய்ய முடியுமா என்ற தாகத்துடனே இருந்தார் எர்னெஸ்ட். இதற்காக திறமை வாய்ந்த எஞ்சினியரான ஜாக்குவெஸ் டேவிட்டை வேலைக்கு எடுத்து, தொழில்நுட்ப இயக்குனர் என்ற பதவியில் அமர்த்தி, புதிய தொழிற்சாலையைக் கவனிக்கும் பொறுப்பையும் கொடுத்தார்.

1876ல் அமெரிக்காவில் உலகளவிலான தொழிற் கண்காட்சி நடந்தது. புகழ்பெற்ற பல வாட்ச் நிறுவனங்களும் இதில் கலந்துகொண்டன. அமெரிக்காவில் உள்ள வாட்ச் மேக்கர்களிடமிருந்து புதிய ஐடியாக்களையும், உத்திகளையும் தெரிந்து கொள்வதற்காக டேவிட்டை அந்தக் கண்காட்சிக்கு அனுப்பினார் எர்னெஸ்ட். 

அந்தக் கண்காட்சியின் மூலம், தான் அறிந்துகொண்டதை 108 பக்கங்களில் எழுதி, ஓர் ஆவணம் போல கொண்டு வந்தார் டேவிட். இன்றும் வாட்ச் மேக்கிங் வரலாற்றில் பொக்கிஷமாகக் கருதப்படுகிறது அந்த ஆவணம்.

அமெரிக்காவின் வாட்ச் தயாரிப்பு நிறுவனங்களுடன் போட்டி போட வேண்டுமானால் நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று எர்னெஸ்ட்டுக்கு ஆலோசனைகளை வழங்கினார் டேவிட். புதிய லோகோவுடன் ‘லூன்ஜின்’ வாட்ச்சுகள் அறிமுகமாகின. 

1880களிலும் மற்ற வாட்ச் பிராண்டுகளைப் போல ‘லூன்ஜினு’ம் பிரத்யேகமாக பாக்கெட் வாட்ச்சுகளை மட்டுமே தயாரித்தது. அப்போது பெரும்பாலான மக்களுக்கு நேரத்தைச் சொல்வதற்கான முதன்மை வழியாக இருந்தது பாக்கெட் வாட்ச்சுகள் மட்டுமே. 1900ல் எர்னெஸ்ட் மரணமடைய, அவரது வாரிசுகளின் கைகளுக்கு நிறுவனம் வந்தது.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில்தான் கைக்கடிகாரத் தயாரிப்பில் இறங்கியது, ‘லூன்ஜின்’. குறிப்பாக முதல் உலகப்போரின்போது இராணுவ வீரர்களுக்கு கைக்கடிகாரங்களை விநியோகம் செய்தது. பாக்கெட்டுக்குள் கையைவிட்டு கடிகாரத்தை எடுத்து நேரத்தைப் பார்த்துக்கொண்டிருந்த இராணுவ வீரர்களுக்கு, வெறுமனே ஒரு பார்வையில் நேரத்தைக் காட்டிய கைக்கடிகாரங்கள் வியப்பை அளித்தது. போருக்குப் பின் கைக்கடிகாரத் தயாரிப்பில் மட்டுமே முழுக்கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தது, ‘லூன்ஜின்’. ஐம்பதுகளில் உலகின் முதன்மையான கைக்கடிகார தயாரிப்பாளராகத் தன்னை தகவமைத்துக்கொண்டது இந்த பிராண்ட்.

குதிரைப் பந்தயம், மலைச்சரிவு பனிச்சறுக்கு, டென்னிஸ், ஃபார்முலா ஒன்  உட்பட நாற்பது விதமான பணக்காரர்களின் விளையாட்டுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறது ‘லூன்ஜின்’. இந்த விளையாட்டுத் தொடர்பு பிராண்டின் வளர்ச்சிக்கும், வாடிக்கையாளர்களைக் கண்டுபிடிக்கவும் ‘லூன்ஜினு’க்கு உதவுகிறது.

1970களில் ‘யார் மெலிதான வாட்ச்சை உருவாக்குவது’ என்று சுவிஸ் வாட்ச் நிறுவனங்களிடையே கடுமையான போட்டி நிலவியது. 1979ல் ‘Feuille D’or’ என்ற மாடலில் 1.98mm அளவுகொண்ட மெலிதான வாட்ச்சை அறிமுகப்படுத்தியது ‘லூன்ஜின்’. இன்றும் தொழில்நுட்பத்தின் முக்கிய சாதனையாக இந்த வாட்ச் பார்க்கப்படுகிறது. மட்டுமல்ல, 2mm என்ற மெலிதான அளவுக்கும் குறைவான அளவில் தயாரிக்கப்பட்ட உலகின் முதல் வாட்ச்சும் இதுவே.

கடந்த ஐம்பது வருடங்களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஏராளமான மாடல்களில் கைக்கடிகாரங்களை அறிமுகப்படுத்திவிட்டது ‘லூன்ஜின்’. ஐஸ்வர்யா ராய், கேத் வின்ஸ்லெட், ஜெனிஃபர் லாரன்ஸ் போன்ற புகழ்பெற்ற நடிகைகள் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த வரை இதன் வாடிக்கையாளர்கள்.

இன்று வருடத்துக்குக் குறைந்தபட்சம் 15 லட்சம் கைக்கடிகாரங்களைத் தயாரிக்கிறது ‘லூன்ஜின்’. நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட இடத்திலேயே, அதன் தலைமைச் செயலகம் இயங்கி வருகிறது. 

இதுவரைக்கும் ஐந்து கோடிக்கும் அதிகமான கைக்கடிகாரங்களைத் தயாரித்திருக்கிறது ‘லூன்ஜின்’. ஒவ்வொரு கடிகாரத்தைப் பற்றிய தகவல்களும், வரலாறும் ‘லூன்ஜினி’ன் பெட்டகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. இதன் விலை ரூ.80 ஆயிரத்திலிருந்து ஆரம்பிக்கிறது.

த.சக்திவேல்