Ktv பார்த்து சினிமா ஆசை வந்தது!



சினிமாவில் 12 ஆண்டுக் காலமாக வெற்றிகரமான நடிகையாக பயணம் செய்து வருகிறார் சஞ்சனா நடராஜன். அழுத்தமான கதாபாத்திரங்களை இவர் தேடுகிறாரா, இல்லையென்றால் இவரைத் தேடி வருகிறதா எனுமளவுக்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘போர்’ போன்ற படங்களில் இவருடைய நடிப்பு பேசப்பட்டது. இப்போது பா.இரஞ்சித் தயாரிக்கும் ‘பாட்டில் ராதா’ படத்தில் நடித்துள்ளார்.

நடிகையாகணும்னு எப்ப தோணுச்சு?

மனசைத் தொட்டு சொல்றதா இருந்தால் அப்படியொரு எண்ணமில்லாமதான் இருந்தேன். அப்பா, அம்மா, நான் என நாங்க ரொம்ப சின்ன ஃபேமிலி. சின்ன வயசுலேர்ந்தே ‘கே’ டிவியில் நிறையப் படங்கள் பார்ப்பேன். அது நான் சினிமாவுக்கு வர கனெக்‌ஷனா இருந்துச்சு. 
ஒரு படம் பார்த்தபிறகு அந்தக் கதை, கேரக்டர் என அலசி ஆராய ஆரம்பிச்சுடுவேன்.
அப்பா சிஏ படிக்கச் சொன்னார். நான் புக் பக்கமே போகாத மாதிரி ‘விஸ்காம்’ல சேர்ந்தேன். அந்த ஆர்வத்துல அப்படியே சினிமாவுக்கு வந்துட்டேன்.

இப்ப என்ன படம் பண்றீங்க?

பா.இரஞ்சித் தயாரிப்பில் தினகர் இயக்கும் ‘பாட்டில் ராதா’. அதுல முந்தைய படங்களைவிட வித்தியாசமான கேரக்டர். அதே சமயத்துல அந்தக் கேரக்டரை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டிருப்போம். நம்ம வீட்டுப் பக்கத்துல, இல்லைன்னா நம்ம வீட்ல அந்த மாதிரிப் பொண்ணைப் பார்க்கலாம்.
‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘போர்’ படத்துல என்னுடைய கேரக்டரை அதிகமா கனெக்ட் பண்ண முடியாது. ‘ஜிகர்தண்டா’வுல பழங்குடிப் பெண்ணா வந்தேன். அந்தக் கேரக்டரை நடைமுறை வாழ்க்கையில் அவ்வளவா பார்க்க முடியாது. ‘போர்’ படத்திலும் அப்படித்தான் இருக்கும்.

‘பாட்டில் ராதா’ நம்ம எல்லாருக்கும் நெருக்கமான கேரக்டர். இயக்குநர் தினகர் ஸ்கிரிப்ட் சைட் ஸ்ட்ராங்கா இருப்பார். ஷூட் போறதுக்கு முன்னாடி பெண்களின் பார்வையிலிருந்து அந்தக் கேரக்டரை எப்படியெல்லாம் பார்க்க முடியும்னு எனக்கான சுதந்திரத்தையும் கொடுத்தார். நான், குரு சோமசுந்தரம், ஜான் விஜய் என எங்க மூணு பேரைச் சுத்தி நடக்கும் கதை.

மற்ற மொழிகளில் கூப்பிடுகிறார்களா?

மலையாளத்தில் ‘டிக்கி டாகா’னு ஒரு படம் பண்ணியிருக்கிறேன். அதுல போலீஸ் ஆபீசர் கேரக்டர். ஆக்‌ஷன் கலந்த க்ரைம் படம். தெலுங்கிலும் அழைப்பு வந்திருக்கு.

சஞ்சனாவுக்கு அழுத்தமான வேடங்கள் அதிகமா வருவதுபோல் தெரிகிறதே?

அப்படியெல்லாம் கிடையாது. ‘ஜிகர்தண்டா’வில் பாவப்பட்ட பெண்ணா வந்திருப்பேன். படத்துல நீங்கபார்த்ததைவிட இன்னும் பரிதாபத்தை ஏற்படுத்துற மாதிரி சில காட்சிகள் இருந்துச்சு. அதையெல்லாம் பார்த்திருந்தா கேரக்டருக்காக பொண்ணு எப்படியெல்லாம் வருத்திக் கொண்டு நடிச்சிருக்கிறார்னு ஆச்சர்யப்பட்டிருப்பீங்க.

சினிமாவுல ஸ்டீரியோடைப் கேரக்டரை அவாய்ட் பண்ண முடியாது. அதிர்ஷ்டவசமா எனக்கு அப்படியொரு வாய்ப்பு அமையவில்லை. படத்துக்குப் படம் வித்தியாசமான கேரக்டர் தர்றாங்க.
அதுமட்டுமல்ல, எல்லாமே நான் கதை கேட்டு தேர்வு செய்யும் கேரக்டர்கள். வர்ற எல்லாப் படத்திலும் கேரக்டர் அழுத்தமா இருக்கும்னு சொல்ல முடியாது. எனக்கு எது பிடிச்சிருக்கிறதோ அதைப் பண்ணுகிறேன்.

எஸ்.ஜே.சூர்யாவை நடிப்பு ராட்சசன்னு சொல்கிறார்கள். அவருடன் நடிச்ச அனுபவம் எப்படியிருந்துச்சு?

ரெண்டு மூணு விஷயத்துல அந்தப் படத்தை என்னால மறக்க முடியாது. 2013ல நான் காலேஜ் படிச்சிட்டிருந்தேன். அப்போது தனியார் தொலைக்காட்சி நடத்திய ‘தமிழ் பேசும் கதாநாயகி’ என்ற நிகழ்ச்சியில கலந்துக்கிட்டேன். அந்த நிகழ்ச்சிதான் சினிமாவுக்கான தொடக்கமா இருந்துச்சு. எனக்கு சினிமா பேக்ரவுண்ட் எதுவும் கிடையாது.

அதுல எஸ்.ஜே.சூர்யா சார் போட்டியாளர்களுக்கு டிரைனிங் கொடுத்தார். ஜான் விஜய் சார் அந்த நிகழ்ச்சியோட தயாரிப்பாளர். அடுத்த பத்து வருஷத்துல ‘ஜிகர்தண்டா’வுல எஸ்.ஜே.சூர்யா சார் ஜோடியா நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. அது மறக்க முடியாத தருணமா இருந்துச்சு.

எஸ்.ஜே.சூர்யா சாரை ரசிகையாப் பார்த்து வளர்ந்த நான் ஒருகட்டத்துல அவருக்கு ஜோடியா நடிச்சதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்.அதையும் தாண்டி அந்தப் படத்துல என்னுடைய கேரக்டர், கதைக்களம் எல்லாமே புதுசா இருந்தாச்சு. என்னுடைய போர்ஷன் ஒரு மாசத்துக்கு மேல நடந்துச்சு. கடும் குளிர், மலைப் பகுதி, டல் மேக்கப் என ஒரு நடிகைக்கு அவ்வளவு எளிதா அமையாத வாய்ப்பு அது.

கார்த்திக் சுப்புராஜ் டைரக்‌ஷன் பத்தி சொல்லத் தேவையில்லை. தொடர்ந்து அவருடன் ‘ஜெகமே தந்திரம்’ பண்ணினேன். அந்த சமயத்துலதான் ‘போர்’, ‘பாட்டில் ராதா’ படங்களோட ஷூட்டும் நடந்துச்சு. ஒரு நாள் மலையில், ஒரு நாள் பாண்டிச்சேரில, ஒரு நாள் சென்னையில் என பிசியா ஓடிக்கொண்டிருந்த அந்த அனுபவத்தை மறக்கவே முடியாது.

உங்களை அதிகமா பாதிச்ச நடிகர் யார்?

அப்படி குறிப்பிட்டு ஒரு நடிகர், நடிகையைச் சொல்ல முடியாது. எல்லோரிடமும் ஒவ்வொரு குவாலிட்டி இருக்கும். காளிதாஸ் ஜாலியான பெர்சன். அவரும் ஜாலியா இருப்பார், மத்தவங்களையும் ஜாலியா வெச்சுப்பார். அவர் சீரியஸா இருந்து நான் பார்த்ததில்லை. அர்ஜுன் தாஸ் தனக்கு வந்த கதைகள், சினிமா என பல விஷயங்கள் பேசுவார்.

எஸ்.ஜே.சூர்யா சாரிடமிருந்து நிறைய விஷயங்களை கத்துக்கலாம். அவர் டைரக்‌ஷன் பண்ணிய படங்கள், இப்போது நடிக்கும் படங்களுக்காக எப்படி கதைத் தேர்வு செய்கிறார் என்று பல அனுபவங்களைப் பேசுவார்.வித்தியாசமான நடிகர்களுடன் வேலை செய்வது நல்ல அனுபவம். ஒவ்வொருவருடனும் பத்து நாள் வேலை செய்யும்போது யார் நல்லா டான்ஸ் ஆடுகிறார், யார் டயலாக்கை பிச்சு உதறுகிறார் என்று தெரிந்துவிடும்.அர்ஜுன் தாஸ் நல்லாப் பாடுவார். அந்த வகையில் எல்லோருமே டேலன்ட்டட் பெர்சன்ஸ்.

சினிமா எப்படியிருக்கு..?

எதுவும் மாறல. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி என்ன எதிர்பார்ப்புடன் கதை கேட்டேனோ அதேமாதிரிதான் இப்பவும் கதை கேட்கிறேன். கதை கேட்கும்போது
எந்தளவுக்கு சமரசம் பண்ணிக்க முடியும்னு பார்ப்பேன். ஏனெனில், என்னை நான் ஸ்கிரீனில் பார்க்கும்போது இந்தக் கேரக்டரை வேறு யாராவது பண்ணியிருந்தா பெட்டரா இருந்திருக்குமேன்னு யோசனை வந்துடக் கூடாது. 

நான் அப்படி ஃபீல் பண்ண ஆரம்பிச்சுட்டேன்னா பார்க்கிறவங்களும் அப்படியே ஃபீல் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க.அதனால முதல் அம்சமா என்னால் அந்தக் கேரக்டருக்கு நியாயம் செய்ய முடியுமா என்று பார்ப்பேன். அடுத்து அந்தக் கேரக்டர் கதையில் எந்தளவுக்கு தாக்கத்தைக் கொடுக்கும்னு நினைச்சுப் பார்ப்பேன்.

சும்மா வந்துட்டுப் போற கேரக்டர் தற்போதைக்கு நல்லாயிருக்கும். பிற்காலத்தில் அதைப் பார்க்கும்போது ரொம்ப அபத்தமா தெரியும். கதைக்கும், கேரக்டருக்கும் கனெக்ட் இருக்கணும்.
அந்தப் பார்வையுடன்தான் படம் தேர்வு செய்கிறேன்.

சினிமா வாய்ப்பு எளிதாக இருக்கிறதா அல்லது போராட்டமாக இருக்கிறதா?

எல்லாருக்குமான இடம் இங்கு இருக்கிறது. அதே சமயம் வாய்ப்பு என்பது தொடர்ச்சியா வரவும் செய்யாது. நமக்கு வரும் வாய்ப்பை எப்படி யூஸ் பண்றோம் என்பதைப் பொறுத்துதான் அடுத்த வாய்ப்பு.வாய்ப்பு வந்துட்டே இருக்கும், வேணும்னா நடிக்கலாம் இல்லைன்னா விட்டுடலாம் என்ற நிலைமை இங்கு யாருக்கும் கிடையாது என்றுதான் நான்  நினைக்கிறேன்.

என்னைச் சுற்றி இருக்கும் நடிகைகள் அல்லது நான் கவனிக்கும் நடிகைகள் என எல்லோருடைய வாழ்க்கையிலும் போராட்டம் இருக்கிறது. இப்போது தியேட்டர், ஓடிடி என சினிமாவின் முகம் மாறியுள்ளது. தியேட்டரில் வெளியாகி ஹிட் அடிக்கிற மாதிரி ஓடிடியில் வெளியாகும் படங்களும் பேசப்படுகிறது.

வெப் சீரீஸ், சினிமா என எது வேண்டுமானாலும் பண்ணலாம் என்ற சுதந்திரம் இருக்கு. படத் தேர்வு என்பது ஆர்ட்டிஸ்ட்டுகளிடம் உள்ளது. கதை, கேரக்டர் வேணும்னா அதுக்கு கண்டிப்பா டைம் வேணும். எத்தனையோ படங்கள் வந்தாலும் சில படங்களின் கேரக்டர்தானே பேசப்படுகிறது. படம்தான் வேணும்னா ரெகுலரா நடிப்பதற்கான வாய்ப்பு வந்து கொண்டே இருக்கும்.

உங்களுக்கான பலத்தை யாரிடமிருந்து எடுப்பீர்கள்?

என்னிடமிருந்துதான். என்னை நானே உற்சாகப்படுத்தினால்தான் தொடர்ந்து முன்னேறிச் செல்ல முடியும். மத்தவங்களிடமிருந்து பலத்தை எடுப்பதா இருந்தால் அவங்களைச் சார்ந்தே வாழணும்.பயணம், அன்றாட வேலை என எதுவாக இருந்தாலும் அதை நானே செய்கிறேன். என் வேலையை இன்னொருவர் செய்வார் என்ற நிலைமை இருந்தால் அதுல நான் இருக்க மாட்டேன்.

எஸ்.ராஜா