தமிழ் சினிமாவில் என்னை troll செய்கிறார்கள்!



தில் ராஜு Open Talk

பாட்டு வேணுமா பாட்டு... இருக்கி!
டான்ஸ் வேணுமா டான்ஸ்... இருக்கி!
ஃபைட்டு வேணுமா ஃபைட்டு... இருக்கி!
- இப்படி மேடையில் கலகல பேச்சால் இன்று வரை டிரெண்டிங்கில் இருக்கிறார் ‘வாரிசு’ படத்தின் தாயாரிப்பாளர் தில் ராஜு.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் அடுத்து ‘த ஃபேமிலி ஸ்டார்’ படம் ரிலீஸ் ஆன உற்சாகத்தில் இருந்தவரிடம் சில கேள்விகளை அடுக்கினோம்.
52 வயதிலும் எப்படி இவ்வளவு ஃபிட்டாக இருக்கிறீர்கள்?குடும்பச் சூழல், சாப்பாட்டு முறைகள்தான் காரணம். ஒரு வயதுக்கு அப்பறம் நமக்கு நாமளே சில கட்டுப்பாடு
களை விதிச்சிக்கணும். நேரத்துக்கு தூங்கி, நேரத்துக்கு சாப்பிட்டாலே ஆரோக்கியம்தான். என்னைக் காட்டிலும் ஃபிட்டாக இருந்தவர்கள் என்னுடைய தாத்தா, அப்பா. கட்டுப்பாடான வாழ்க்கைதான் காரணமென நான் நினைக்கிறேன்.

 குறைந்த பட்ஜெட்டில் நல்ல படங்கள் வருடத்திற்கு இரண்டு மூன்றாவது கொடுக்கலாமே!நிச்சயம் கொடுப்பேன். காரணம், சென்ற வருடம் ‘பலகம்’ படம் கொடுத்த வெற்றியை என்னால் மறக்க முடியாது. 
பட்ஜெட் குறைவு. ஆனால், படத்திற்கு கிடைத்த வரவேற்பும், விருதுகளும் அதிகம். நல்ல லாபமும் கொடுத்தபடம் அது.

இன்னும் நிறைய சின்ன பட்ஜெட்டில் நல்ல படங்கள் கொடுக்கணும். ஒரு தயாரிப்பாளரா எவ்ளோ பிரம்மாண்டமான படம் எடுத்தேன் என்கிறதைத் தாண்டி எவ்வளவு நல்ல படம் கொடுத்தேன் என்பதுதான் கடைசியில் நிற்கும்.

அதிக கலாய்ப்புகளையும், விமர்சனங்களையும் சந்தித்த தயாரிப்பாளர் நீங்கள்... எதிர்மறை கலாய்ப்புகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

விஜய் சார் என்னிடம் சொன்ன ஒரு விஷயம், ‘தமிழ் நாட்டில் எத்தனையோ தயாரிப்பாளர்கள் இருந்தாலும் ஃபேமஸ் தயாரிப்பாளர் நீங்கள்தான்’! இந்த வார்த்தைகள் அவரே சொன்னது.
எனக்கு தமிழ் பேசத் தெரியும். ஆனால், வாக்கியமாக அமைத்துப் பேசத் தெரியாது, புரிதலும் குறைவுதான். என்ன சொன்னால் ரசிகர்கள் உற்சாகமாவாங்க என நினைத்து சொன்னேன். அதுவே டிரெண்டாகிடுச்சு.  

என் வாழ்க்கையிலே நெகட்டிவ் எண்ணங்களுக்கு அனுமதியே கிடையாது. அதிலும் இந்த டிரோல் செய்த மக்கள் வெறும் 0.1% தான். இது எந்த வகையிலும் என்னை பாதிக்காது. இந்த கலாய்களை நினைத்து வருந்த நான் எதுவும் தவறாக சொல்லவே இல்லையே! நான் அடுத்தடுத்து வாழ்க்கையிலே நகர்ந்து போயிட்டே இருப்பேன்.

தெலுங்கிலும் கூட நிறைய படங்கள் தியேட்டரில் ஓடுவதில்லையே? என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

சினிமாவிற்கு மக்கள் அதிகம் செலவு செய்ய தயக்கம் காட்டத் துவங்கிட்டாங்க. மேலும் பெருகிவிட்ட மல்டிபிளக்ஸ் கலாசாரத்தால் டிக்கெட் விலை குறைந்தாலும் கூட பார்க்கிங், ஸ்நேக்ஸ் என பெரும் செலவு செய்ய வேண்டிய நிலை இருக்கு. மேலும் நான்கு வாரங்களில் படங்கள் ஓடிடியில் வெளியாவதும் ஒரு காரணம். குறைந்தது 10 வாரங்களாவது இடைவேளை கொடுத்தால்தான்... படத்தைக் காண இரண்டரை மாதங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய அவசியத்தை உண்டாக்கினால்தான் தியேட்டரில் வெளியாகும் படம் ஓடும்.

தெலுங்கில் ஹீரோக்களின் சம்பளத்தை அதிகமாக மாற்றியதே நீங்கள்தான் என்கிற கருத்து இருக்கிறதே?

ஒரு தயாரிப்பாளராக என்னைப் பொருத்தவரை மார்க்கெட்தான் முக்கியம். அடுத்து கதை முக்கியம். அதைத் தாண்டி ஹீரோவிற்கான மார்க்கெட் பொருத்துதான் சம்பளம்.
எந்த வருமானமும் வராம நாம சம்பளம் மட்டும் கொடுக்க முடியுமா என்ன? நானும் இங்கே பணம் செய்ய வந்தவன்தான். அதனால் எதையும் யோசிக்காமல் சம்பளம் நிர்ணயம் செய்ய மாட்டேன். மற்ற தயாரிப்பாளர்களும் அப்படித்தான் என நம்பறேன்.

ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படம் குறித்து ஒரு எக்ஸ்க்ளூசிவ்..? அப்புறம் உங்களின் தயாரிப்பில் அடுத்தடுத்த படங்கள் பற்றி சொல்லுங்க..?

‘இந்தியன் 2’ படத்தின் இடைவேளை தருவாயில் நானும் ஷங்கரும் பேசி முடிவு செய்த படம்தான் ‘கேம் சேஞ்சர்’. ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில் ரிலீஸ்க்கு காத்திருக்கு. இடையில் சில காரணங்களால் தாமதமாச்சு. இப்போ படம் முடிஞ்சு ஒரு சிங்கிள் பாடலும் கூட வெளியாகி நல்ல வியூஸ் போயிருக்கு. பான் இந்திய படமாக 5 மொழிகளில் ‘கேம் சேஞ்சர்’ வெளியாகவிருக்கு.

‘கீத கோவிந்தம்’ ஹிட் காம்போ விஜய் தேவரகொண்டா - பரசுராம் கூட்டணியிலே ‘த பேமிலி ஸ்டார்’ படம் வெளியாகியிருக்கு. தமிழ், தெலுங்கில் போன வாரமும், இந்த வாரத்தில் இந்தியிலும் இப்படம் வெளியாகவிருக்கு. அடுத்து நிதினுடன் ‘தம்முடு’ படம். சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அல்லு அர்ஜுனின் ‘ஐகான்’, ரவி தேஜாவின் படமும் கூட ஆரம்பிச்சு ப்ரீ - ப்ரொடக்‌ஷன் வேலைகள் நடந்திட்டு இருக்கு. மேலும் சில படங்கள் பேச்சு வார்த்தையில் இருக்கு. தற்சமயம் அதிகாரபூர்வமா அதுபத்தி சொல்ல முடியாது.

ஷாலினி நியூட்டன்