முதன் முறையாக தமிழ் சினிமாவில் யாளி விலங்கு!



கஜானா  சீக்ரெட்ஸ்!

‘‘டைனோசர், கிங்காங், காட்ஸில்லா என ஹாலிவுட் படங்களில் ஆதிகால விலங்குகள் பலவும் கிராபிக்ஸில் உயிற்பெற்று இன்று வரை பில்லியன்களில் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால், நம் ஆதிகால விலங்கான யாளியை நாம் இதுவரை எந்தப் படத்திலும் பார்த்ததில்லை. அதை இந்தப் படத்தில் சாத்தியப் படுத்தியிருக்கோம்...’’ உற்சாகமாகப் பேசுகிறார் ‘கஜானா’ படத்தின் இயக்குநர் பிரபாதிஸ் சாம்ஸ். ‘‘எனக்கு இது இரண்டாவது படம். இதற்கு முன்பு ஒரு படம் செய்தேன்.

அடிப்படையிலே நான் ஒரு பிஸினஸ் மேன். சினிமா ஆர்வம் காரணமாக இந்தத் துறை. விஸ்காம் படிச்சேன். அதனுடைய விளைவும் சேர்ந்து சினிமாவையும் என்னுடைய இன்னொரு கரியரா மாத்திக்கிட்டேன். இந்தப் படத்தை தயாரித்திருப்பதும் நான்தான். என்னுடைய கோ-டைரக்டர் விகாஸ் சப்போர்ட்டாக இருந்தார்...’’ என்னும் பிரபாதிஸ் சாம்ஸ் படத்தின் கதை மற்றும் நடிகர்கள் குறித்து விளக்கமாகப் பேசினார்.

‘‘1000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அரசர் ஒருவருடைய புதையுண்ட கஜானா... அதைத் தேடி சிலர் காட்டுக்குள் பயணிக்கிறாங்க. அந்தப் பயணத்தில் அவங்க சந்திக்கற சுவாரஸ்யமான நிகழ்வுகள், அமானுஷ்யங்கள், திகிலான விலங்குகள் எல்லாம் தாண்டி கஜானாவைக் கண்டுபிடித்தார்களா என்பதுதான் கதை. ‘இண்டியானா ஜோன்ஸ்‘, ‘நேஷனல் டிரஷர்’ படங்கள் பாணியிலேயே சுவாரஸ்யமா இருக்கும். படம் முழுக்க காட்டு வழிப் பயணம்தான். அதனால் கோடை விடுமுறைக்கு ஏத்த மாதிரியான விஷுவல் படத்தில் நிறைய இருக்கு.

வேதிகா தொல்பொருள் ஆராய்ச்சியாளரா நடிச்சிருக்காங்க. அவங்களுக்கு ஜூனியர் சப்போர்ட்டராக ‘டாக்டர்’ பட பிஜோர்ன் சுர்ராவ் நடிச்சிருக்கார்.  உடன் யோகி பாபு சார் காமெடியும் நல்லா வந்திருக்கு. இனிகோ பிரபாகர் ஒரு கல்லூரி மாணவரா நடிச்சிருக்கார். இவங்க இல்லாம வில்லன்கள் கேங் மாதிரி சாந்தினி, மொட்டை ராஜேந்திரன், வேலு பிரபாகரன், சென்றாயன் நடிச்சிருக்காங்க...’’ என்றவர் யாளி விலங்கை காட்சிப்படுத்திய விதம் குறித்து பல சுவாரஸ்யங்களைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘கோயில் தூண்களில் பிரம்மாண்டமா, கம்பீரமா நிற்பது இந்த யாளி விலங்குகள்தான். ஒரு காலத்தில் நிச்சயமா இந்த யாளி விலங்குகள் வாழ்ந்திருக்கு. அதனாலதான் இன்னைக்கும் நம் கோயில்களில் சிலைகளா பார்க்கறோம். யானையும், சிங்கமும் இணைந்ததைக் காட்டிலும் பெரிதான தோற்றம் கொண்டதுதான் இந்த யாளி. மொத்தம் மூணு விதமான யாளிகள் இருக்கு. சிம்ம யாளி, மகர யாளி, யானை யாளி. ஒரு சில கோயில்களில் தலை திரும்பிய சுருள் யாளிகளையும் கூட பார்க்கலாம்.

நம் கோயில்களில் அதிகம் காணப்படுவது சிம்ம யாளிதான். இந்த யாளிகள் குறித்து நிறைய ஆய்வுகள் செய்தோம். அரசர்கள் காலத்திலே அவங்க கஜானாக்களைப் பாதுகாக்கத்தான் இந்த யாளிகளை வைத்திருந்ததா கதைகள் இருக்கு. அப்படியான யாளி இங்கேயும் அந்த கஜானாவைப் பாதுகாத்தா எப்படி இருக்கும்ன்னு ஒரு கற்பனை. வெளிநாட்டில் யாளிக்கான ஒலிக்கலவையை செய்து கொடுக்கச் சொன்னா காட்ஸில்லா ஒலியாதான் கொடுத்தாங்க.

திரும்ப நாங்க பிரத்யேகமா சிங்கமும், யானையும் சேர்ந்து குரல் கொடுத்தா எப்படி இருக்குமோ அந்த ஒலியைக் கொடுக்கச் சொல்லி கேட்டு உருவாக்கினோம். இந்த யாளி உருவாக்கத்துக்கே ரெண்டு வருடங்கள் ஆனது.

 ‘மறக்குமா நெஞ்சம்’ படத்தின் சினிமாட்டோகிராபர் கோபி துரைசாமியும் இன்னொரு ஒளிப்பதிவாளரா வினோத் ஜேபியும் சேர்ந்து ஒளிப்பதிவு செய்திருக்காங்க. ‘கொலையுதிர் காலம்’, ‘யானும் தீயவன்’ உடன் நிறைய தெலுங்கு படங்களில் இசையமைப்பாளராக வேலை செய்த அச்சு ராஜாமணி படத்துக்கு இசை.

எஸ்.ஜே.சூர்யா சாருடைய ‘இசை’ பட எடிட்டர் கே.எம்.ரியாஸ் இந்தப் படத்துக்கு எடிட்டிங் செய்திருக்கார். படத்துக்கு பலமே கிராபிக்ஸ்தான். ஜெய் பிரகாஷ், ஆதி ரெண்டு பேரும் கிராபிக்ஸ் வேலைகள் செய்து கொடுத்தாங்க...’’ என்றவர் படம் எப்படிப்பட்ட அனுபவத்தைக் கொடுக்கும் என்பதையும் சொன்னார்.

‘‘நிச்சயமா குழந்தைகள் உற்சாகமாகக் கொண்டாடி பார்ப்பாங்க. அதற்கேற்ப படத்தில் நிறைய கிராபிக்ஸ் விலங்குகள், சுவாரஸ்யமான டிராவல், காமெடி எல்லாமே இருக்கு. குடும்பமா சேர்ந்து பார்க்க நல்ல படமா இருக்கும். இதன் 2ம் பாகம் இருக்கா இல்லையா என்பதை நீங்க படம் முடிவில் தெரிஞ்சிக்கிட்டா இன்னும் சர்ப்ரைஸா இருக்கும்...’’ புன்னகைக்கிறார் பிரபாதிஸ் சாம்ஸ்.

ஷாலினி நியூட்டன்