Must Watch



ஹார்ட் ஆஃப் த ஹன்டர்

‘நெட்பிளிக்ஸின்’ டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஆங்கிலப் படம் ‘ஹார்ட் ஆஃப் த ஹன்டர்’. திறமையான ஹிட்மேன் ஜுகோ. பணத்துக்காக மற்றவர்களைக் கொலை செய்வதில் அவனுக்கு சுத்தமாக விருப்பமில்லை. ஹிட்மேன் வேலையை விட்டுவிட்டு அமைதியாக வாழ விரும்புகிறான். இந்நிலையில் ஒரு கொலையை செய்வதற்கான வேலை வருகிறது. இந்த வேலையை மட்டும் முடித்துவிட்டு ஹிட்மேன் வேலைக்கு ஓய்வு அளித்துவிட முடிவு செய்கிறான். ஆனால், கடைசி வேலையில் சொதப்பிவிடுகிறான்.

கொலை செய்வதில் நடந்த சொதப்பல் நல்லது என்று நினைத்து ஹிட்மேன் வேலையிலிருந்து ஓய்வு எடுக்கிறான். வருடங்கள் ஓடுகின்றன. மனைவி, குழந்தை, பிசினஸ் என்று ஜுகோவின் வாழ்க்கை அமைதியாகச் செல்கிறது. எதிர்பாராதவிதமாக ஜுகோவின் நெருங்கிய நண்பனுக்கு ஒரு பிரச்னை ஏற்படுகிறது.

இதில் முக்கியமான அரசியல் புள்ளிகள் எல்லாம் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். பழையபடி ஹிட்மேனாக மாறினால் மட்டுமே நண்பனைக் காப்பாற்ற முடியும். ஆனால், ஜுகோவிற்குப் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிப்போக விருப்பமில்லை. நண்பனைக் காப்பாற்ற ஜுகோ என்ன செய்கிறான் என்பதே மீதிக்கதை. அரசியலும், ஆக்‌ஷனும் கலந்த ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மண்ட்லா டூபே.  

ஆப்ரஹாம் ஓஸ்லர்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலைக் குவித்த மலையாளப்படம், ‘ஆப்ரஹாம் ஓஸ்லர்’. இப்போது ‘ஹாட் ஸ்டாரி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.
காவல்துறையின் உயர் பதவியில் இருப்பவர் ஆப்ரஹாம் ஓஸ்லர். அவரது மனைவியும், மகளும் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். இந்தக் கொலைகளைச் செய்த வினீத்தைப் பிடித்து விசாரிக்கின்றனர்.

போதைப் பொருள் வழக்கில் வினீத்தைக் கைது செய்திருக்கிறார் ஓஸ்லர். பழிவாங்குவதற்காக ஓஸ்லரின் மனைவியையும், மகளையும் கொலை செய்ததாக ஒப்புக்கொள்கிறான் வினீத். கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் உடலை வெட்டி காட்டுக்குள் வீசிவிட்டதாகச் சொல்கிறான் வினீத். போதையில் இருந்ததால் உடலை வீசிய இடத்தை துல்லியமாகச் சொல்ல முடியவில்லை என்கிறான். உடைந்து போகிறார் ஓஸ்லர். தூக்கமின்மைக்கும், மனப்பிரமைக்கும் ஆளாகிறார்.

மூன்று வருடங்கள் கழித்து சீரியல் கில்லரைப் பிடிக்கும் வேட்டையில் இறங்குகிறார். விறுவிறுப்பாகிறது திரில்லிங் திரைக்கதை. சீரியல் கில்லர், காவல்துறை விசாரணையை மையமாக வைத்து நிறைய படங்கள் வந்துவிட்டன. அவற்றிலிருந்து வித்தியாசம் காட்டுகிறது இந்தப்படம். படத்தின் இயக்குநர் மிதுன் மானுவேல் தாமஸ்.

ஏ வாடன் மேரே வாடன்

சுதந்திரப் போராளிகளைப் பற்றி நிறைய படங்கள் வந்திருக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க பெண் போராளியைப் பற்றிய இந்திப் படம்தான் ‘ஏ வாடன் மேரே வாடன்’.
‘அமேசான் ப்ரைமி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. இருபதுகளில் சூரத்தில் பிறக்கிறார் உஷா மேத்தா. ஐந்து வயதான சிறுமியாக இருந்தபோதே காந்தியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. எட்டு வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொள்கிறார்.

உஷாவின் தந்தை பிரிட்டிஷ் அரசின் கீழ் நீதிபதியாக இருந்தார். அதனால் மகளது போராட்டத்துக்கு அவரால் இணங்கிப் போக முடியவில்லை. உஷாவின் தந்தை ஓய்வு பெற்ற பிறகு, மும்பைக்கு குடிபெயர்ந்தது உஷாவின் குடும்பம். அப்போது உஷாவுக்கு வயது 12 தான். சுதந்திரப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபட ஆரம்பித்தார். காந்தியின் கொள்கைகளும், போராட்டங்களும் உஷாவின் மீது மிகுந்த தாக்கங்களை உண்டாக்கின.

காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி போராடினார் உஷா. இதன் முக்கியப் பகுதியாக 1942ம் வருடம் மக்களை ஒன்றிணைப்பதற்காக ஒரு வானொலி நிலையத்தை ஆரம்பித்தார். இப்படியான உஷாவின் போராட்டத்தை சுவாரஸ்யமாக விவரிக்கிறது படத்தின் திரைக்கதை. இப்படத்தின் இயக்குநர் கண்ணன் ஐயர்.

அனாடமி ஆஃப் ஏ ஃபால்

ஆஸ்கர், கேன்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேலான விருதுகளை அள்ளிய ஃபிரெஞ்ச் மொழிப்படம் ‘அனாடமி ஆஃப் ஏ ஃபால்’.  ‘அமேசான் ப்ரைமி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. ஒரு மலைப்பகுதியில் மகன் டேனியல் மற்றும் கணவர் சாமுவேலுடன் வாழ்ந்து வருகிறார் நாவலாசிரியர் சாண்ட்ரா. ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வேலை செய்து வருகிறார் சாமுவேல். பார்வைக் குறைபாடு உள்ள ஒரு குழந்தை, டேனியல்.

சாண்ட்ராவை நேர்காணல் செய்வதற்காக அவரது வீட்டுக்கு ஒரு பெண் வருகிறார். அப்போது வீட்டின் மாடியில் இருந்து சத்தமாக இசைக்கருவியை வாசிக்கிறார் சாமுவேல். அதனால் நேர்காணலைத் தள்ளிப்போடுகிறார் சாண்ட்ரா. இன்னொரு பக்கம் நாயின் வழிகாட்டல் துணையோடு நடைபயணம் சென்றிருக்கிறான் டேனியல். அவன் திரும்பி வரும்போது மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்து கிடக்கிறார் சாமுவேல்.

இது கொலையா தற்கொலையா..? ஒருவேளை சாண்ட்ராவே  சாமுவேலை கொலை செய்திருப்பாரோ, பார்வைக் குறைபாடு உள்ள டேனியல் எப்படி சாட்சி சொல்வார்... போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறது திரைக்கதை. படத்தின் பெரும்பகுதி விசாரணையாக இருந்தாலும் கூட சுவாரஸ்யமாக செல்கிறது திரைக்கதை. படத்தின் இயக்குநர் ஜஸ்டின் டிரைட் என்ற பெண்.

தொகுப்பு: த.சக்திவேல்