7 ஆண்டுகளுக்கு முன்பு வரை தனித்து விடப்பட்ட தீவு... இன்று பரபர சுற்றுலாத் தலம்!



செயிண்ட் ஹெலினா... இந்தப் பெயரைப் பார்த்ததுமே ஒரு புனிதரின் பெயர் என்று தோன்றும். அது உண்மையும்கூட. இது ஒரு புனிதரின் பெயர்தான். ஆனால், இது அந்தப் புனிதரைப் பற்றிய கதையல்ல.தென்அமெரிக்காவிற்கும், ஆப்ரிக்காவிற்கும் இடையில் தென் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு மிகச்சிறிய தீவு செயிண்ட் ஹெலினா. இதைவிட மனதில் நிற்கும்படி சொல்ல வேண்டுமானால் மாவீரன் நெப்போலியன் பிரிட்டிஷாரால் நாடு கடத்தப்பட்ட தீவு இதுவே.

இங்குதான் அவர் மரணித்தார். அவர் புதைக்கப்பட்ட இடமும் இந்தத் தீவிலேயே உள்ளது.இந்தத் தீவை உலகில் மிகவும் தனித்துவிடப்பட்ட தீவு என்றே அழைக்கின்றனர். அந்தளவுக்கு தொலைதூரத்தில் பெருங்கடலின் நடுவே பல்வேறு காலநிலைகளை சுமந்தபடி அமைந்த தீவு இது. 
இந்தத் தீவின் மேற்புறத்தில் அசென்ஷன் என்ற தீவும், கீழ்ப்புறத்தில் டிரிஸ்டன் டா குன்ஹா என்ற தீவும் உள்ளன. இவை செயிண்ட் ஹெலினா தீவின் பகுதிகளாக உள்ளன. ஆனால், மேற்புறம், கீழ்ப்புறம் என்றதும் அருகருகே இருப்பவை என நினைக்க வேண்டாம். ஒவ்வொரு தீவும் ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவுகள் கொண்டது.

கடந்த 2017ம் ஆண்டு வரை இந்தத் தீவிற்குச் செல்ல வேண்டுமானால் ஐந்து இரவுகளைக் கப்பலில் கடக்க வேண்டும். ஆம். தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனிலிருந்து இந்த செயிண்ட் ஹெலினா தீவிற்கு, பிரிட்டிஷ் ராயல் மெயில் கப்பல் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரத்தில் புறப்படும். அதில் பயணித்துதான் இந்தத் தீவினை அடைய முடியும். கிட்டத்தட்ட 3,100 கிமீ தூரம். 

ஆனால், 2017க்குப் பிறகு இந்நிலைமை மாறியது. காரணம், அங்கு விமான நிலையம் திறக்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் விமானங்கள் வரத் தொடங்கியதும் செயிண்ட் ஹெலினா புத்துயிர் பெற்றது.  

இதனுடன் அதிவேக இணைய வசதியும் அங்கு கொண்டு வரப்பட, புதுவாழ்வை நோக்கி நடைபோடத் தொடங்கியது இத் தீவு.  இப்போது சுற்றுலாவும் இந்தத் தீவில் வேகமெடுத்துள்ளது என்பதுதான் ஹைலைட். ஒவ்வொரு ஆண்டும் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இங்கு வந்து செல்கின்றனர்.இந்தத் தீவில் மொத்தம் 4,500 பேர் வசிக்கின்றனர். 

இவர்கள் இங்கே வசிப்பவர்கள் என்பதைவிட தங்களை செயிண்ட்ஸ் என்றே சந்தோஷமாக அழைத்துக் கொள்கின்றனர். இதன் தலைநகராக ஜேம்ஸ்டவுன் நகர் உள்ளது. பிரிட்டிஷின் கட்டுப்பாட்டில் இந்தத் தீவு இருப்பதால் இத்தீவின் மன்னராக சார்லஸ் உள்ளார்.கவர்னராக நைஜல் பிலிப்ஸ் என்பவர் இருக்கிறார். 2021ம் ஆண்டுதான் முதல்வர் பதவி உருவாக்கப்பட்டது. அப்படியாக முதல் முதல்வராக பொதுத் தேர்தல் மூலம் ஜூலி தாமஸ் என்ற பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

*வரலாறு என்ன?

இந்தத் தீவினை 1502ம் ஆண்டு போர்ச்சுக்கல் கமாண்டன்ட் ஜோவா டா நோவா தெற்காசியாவிலிருந்து லிஸ்பன் நகர் நோக்கிச் செல்லும் வழியில் கண்டறிந்தார். இவர்தான் ரோமப் பேரரசின் பேரரசியான ஹெலினா ஆஃப் கான்ஸ்டான்டினோபிளின் பெயரை இத்தீவிற்கு சூட்டினார்.ஆனால், இதிலும் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது, இத்தீவினை ஸ்பானியர்களே முதலில் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படுகிறது. இருந்தும் 1502 முதல் 1613 வரை போர்த்துக்கீசியர்களின் கப்பல்கள் இத்தீவிற்கு வந்ததாக தரவுகள் உள்ளன.

அவர்கள்தான் கால்நடைகள், பழ மரங்கள் மற்றும் காய்கறிகளை இறக்குமதி செய்து, தேவாலயம் ஒன்றையும், இரண்டு வீடுகளையும் கட்டினர். போர்ச்சுக்கலில் இருந்து இந்தியா நோக்கி செல்லும் கப்பலில் யாராவது உடல்நிலை பாதிக்கப்பட்டால் இந்தத் தீவில் இறக்கிவிட்டுச் செல்வார்கள். அடுத்ததாக வரும் கப்பல் அவர்களை போர்ச்சுக்கல் அழைத்துச் சென்றுவிடும். அப்படி ஒரு தளமாக போர்த்துக்கீசியர்கள் இத்தீவினை வைத்திருந்தனர்.

இவர்களைப் பின்தொடர்ந்து வணிகத்திற்கு வந்த பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து லிஸ்பன் திரும்பும் வழியில் இவர்களைத் தாக்கினர். பின்னர் டச்சுக்காரர்களும் இவர்களைத் தாக்கினர். இதனால் இந்தத் தீவிலிருந்து போர்த்துக்கீசியர்களும், ஸ்பானியர்களும் வெளியேறினர். 

அவர்கள் மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் கடற்கரையைப் பயன்படுத்தினர். தொடர்ந்து டச்சுக்காரர்களும் இந்தத் தீவில் ஆர்வம் காட்டவில்லை. காரணம், அவர்கள் தென்னாப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையில் தங்கள் காலனியை உருவாக்கிக் கொண்டனர்.

1657ல் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி செயிண்ட் ஹெலினாவை ஆட்சி செய்ய ஆரம்பித்தது. கோட்டையும், வீடுகளும் எழுப்பப்பட்டன. பின்னர் இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் நினைவாக கோட்டைக்கு ஜேம்ஸ் ஃபோர்ட் என்றும் அதைச் சுற்றி உருவான நகருக்கு ஜேம்ஸ்டவுன் என்றும் பெயரிடப்பட்டது. பிரிட்டிஷார் குடியிருப்புகளை உருவாக்கினர். 

அடிமைகளாக அழைத்து வரப்பட்டவர்களும் அங்கு குடியமர்த்தப்பட்டனர். ஒருகட்டத்தில் ஆண்டுக்கு 1000 கப்பல்கள் அங்கு வந்துசெல்லும்படி இருந்தது. மது, பெண்கள் எனத் தள்ளாடியது செயிண்ட் ஹெலினா.

பிறகு வந்த கவர்னர் இவற்றை ஒழித்து, மரங்கள் நடுதல், மருத்துவமனை கட்டுதல், நகரை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டார்.

1774ம் ஆண்டு செயிண்ட் ஜேம்ஸ் சர்ச்சும், கவர்னர் குடியிருப்பான ப்ளான்டேஷன் ஹவுஸ் 1791ம் ஆண்டும் கட்டப்பட்டன. மேற்கு ஆப்ரிக்காவிலிருந்து 27 ஆயிரம் அடிமை மக்களை இத்தீவிற்கு அழைத்து வந்தனர். 1839க்குப் பிறகுதான் அங்கு அடிமைத்தனம் ஒழிக்கும் சட்டம் இயற்றப்பட்டது.

*நெப்போலியன்

1815ல் நடந்த வாட்டர்லூ போரில் மாவீரன் ‘நெப்போலியன் போனபார்ட்’ கைதுசெய்யப்பட்டு இத்தீவிற்கு நாடு கடத்தப்பட்டார். அங்குள்ள லாங்வுட் ஹவுஸில் சிறைவைக்கப்பட்டார். அது பெரிய பங்களா என்றாலும் ஆரோக்கியமற்றதாக இருந்தது. ஒருகட்டத்தில் அவரின் உடல்நிலை மோசமாகி 1821ல் மறைந்தார்.

ஜெரனியம்ஸ் பள்ளத்தாக்கில் அவர் புதைக்கப்பட்டார். பிறகு 1840ல் நெப்போலியனின் எச்சங்களை ஃபிரான்ஸ் அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிரிட்டிஷ் அரசு அவர்களிடம் ஒப்படைத்தது. பாரீஸில் அவருக்கு பெரிய கல்லறை கட்டப்பட்டது தனிக்கதை. இருந்தும் இன்றும் செயிண்ட் ஹெலினாவில் அந்தக் கல்லறை இருக்கிறது. அவர் சிறை வைக்கப்பட்ட லாங்வுட் ஹவுஸும் உள்ளது. இதனை பார்வையிடவும் நிறைய பேர் செயிண்ட் ஹெலினாவிற்குச் சுற்றுலா வருகின்றனர்.

இதுமட்டுமல்ல. செயிண்ட் ஹெலினாவில்தான் பெருமைக்குரிய உலக கின்னஸ் சாதனை படைத்த ஜோனாதன் என்ற ஆமையும் உள்ளது. இதன் வயது 192. கவர்னர் குடியிருப்பான ப்ளான்டேஷன் ஹவுஸின் முற்றத்தில் வாழ்கிறது இந்த ஆமை. 1832ல் பிறந்த இந்த ஆமை நிறைய இளவரசர்களையும், இளவரசிகளையும், கவர்னர்களையும், மக்களையும் கண்ட ஒன்று. இதனைக் காணவும் பலர் இந்தத் தீவிற்கு வந்து செல்கின்றனர்.

7 சதுர மைல் பரப்புள்ள இந்தத் தீவில் உலகில் வேறெங்கும் காணப்படாத 500க்கும் மேற்பட்ட தாவர மற்றும் பூ இனங்களும் உள்ளன. பெரிய திமிங்கலங்களையும் அருகில் பார்க்கலாம். டயானா பார்க் எனும் டிரெக்கிங் இடமும் உள்ளது. இன்னும் சில டிரெக்கிங் இடங்களுக்கும் டிரெக்கர்ஸ் போய்வருகின்றனர். அத்துடன் காஃபிக் கொட்டைகளுக்கு பெயர்போன இடமாகவும் திகழ்கிறது.

நெப்போலியன் இந்தக் காஃபியைப் புகழ்ந்ததாக அவரின் இறப்பிற்குப் பின் ஒரு செய்தி பாரீஸில் பரவி இதன் புகழை அதிகரித்தது. இப்போதும் ஆன்லைனில் காஃபிக் கொட்டைகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. அரிதான பொருட்கள் கொண்ட மியூசியம், 699 படிகள் உள்ள ஜேக்கப் லேடர், பழைமையான கட்டடங்கள் என பார்ப்பதற்கு நிறைய விஷயங்கள் செயிண்ட் ஹெலினாவில் உள்ளன. தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் மற்றும் கேப்டவுனிலிருந்து இத்தீவிற்கு நேரடி விமானப் போக்குவரத்தும் செய்யப்பட்டுள்ளது.

பேராச்சி கண்ணன்