பாலைவனத்துல ஷூட் பண்ணினது பெரிய சவாலா இருந்துச்சு...



A to Z விளக்குகிறார் ஒளிப்பதிவாளர் சுனில்

இந்திய சினிமா இப்போது மலையாள சினிமாவைத்தான் உற்றுப் பார்க்கிறது. ‘பிரம்மயுகம்’, ‘மஞ்சுமல் பாய்ஸ்’, ‘பிரேமலு’ என சமீபத்தில் வெளியான மலையாளப் படங்களின் பெரும் வெற்றி இந்தியத் திரையுலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வரிசையில் கடந்த வாரம் வெளியான ‘ஆடுஜீவிதம்’ பான் இந்திய சினிமாவாக வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிருத்விராஜ், அமலாபால், ஏ.ஆர்.ரஹ்மான், பிளஸ்சி என ஜாம்பவான்கள் இடம் பெற்ற அதில் ஒளிப்பதிவாளர் சுனிலுக்கும் முக்கிய பங்கு உண்டு.

கேரளாவின் வனப்பு, அரபு தேசத்தின் பாலைவனம் என இருவேறு உலகத்தையும் ரசனையோடு படம்பிடித்து தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தியவர்.‘‘பிளஸ்சி சாருக்கு எல்லாமே தெரியும். அவர் ஜீனியஸ். ஆனாலும் எனக்குப் போதுமான சுதந்திரம் கொடுத்த அற்புதமான படைப்பாளி...’’ என தன்னுடைய இயக்குநரைப் புகழ்கிறார் சுனில். சென்னையில் விளம்பரப் பட ஷூட்டில் இருந்த சுனிலிடம் பேசினோம்.

கேமரா மீது எப்போது காதல் பிறந்தது?

சென்னையில் டிஜிட்டல் ஃபிலிம் மேக்கிங் கோர்ஸ் முடிச்சதும், கலரிஸ்ட்டாக என்னுடைய சினிமா பயணத்தை ஆரம்பித்தேன். அப்போது சினிமாவை விட விளம்பரத் துறையில்தான் என்னுடைய கவனம் இருந்துச்சி. அப்படி விளம்பரத் துறையில் சில காலம் பிசியா இருந்தேன். இப்பவும் பிசியா இருக்கிறேன். சமீபத்தில் சிம்பு நடிச்ச விளம்பரப் படத்துக்கும் நான்தான் ஒளிப்பதிவாளர்.

சினிமாவில் என்னுடைய முதல் படம் ‘கம்மாரு சம்பவம்’. ஐந்து ஜானர்களைக் கொண்ட அதன் கதை விஷுவலா படமாக்குவதற்கான ஆர்வத்தையும் சவாலையும் தூண்டியது.
இரண்டாவது படத்தை வெயிட் பண்ணி பண்ணலாம்னு இருந்தேன். அப்படி வந்ததுதான் ‘ஆடுஜீவிதம்’. இந்தப் படத்துக்காக மட்டுமே ஆறு வருடங்கள் டிராவல் பண்ணினேன். நடுவுல பிருத்விராஜ் நடிச்ச இன்னொரு படத்துக்கும் கேமரா பண்ணினேன்.

‘ஆடுஜீவிதம்’ படத்துல என்ன மாதிரி சவால்கள் இருந்துச்சு?

ஒவ்வொரு கேமராமேனும் இந்த மாதிரி ஒரு படத்தில் வேலை செய்யணும்னு காத்திருப்பாங்க. எனக்கு அந்த வாய்ப்பு அமைஞ்சது. வாழ்க்கையில் ஒரு முறைதான் இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கும்.படத்தோட இரண்டாவது பாதியில் பிருத்விராஜ், கோகுல் உட்பட மூணு பேர்தான் இருப்பாங்க. அதை சுவாரஸ்யமாகவும் சொல்லணும். 

அதே சமயம் பாலைவனத்தை அழகியலோடும் சொல்லக் கூடாது.பாலைவனம் எனும்போது அது கடினமான எண்ணத்தையும் தரணும். அத்துடன் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் விதமாகவும் இருக்கணும். அதுதான் பெரிய சவாலா இருந்துச்சு. க்ளைமாக்ஸில் ஹீரோ நான்கைந்து நாட்கள் பாலைவனத்தில் நடந்தபிறகுதான் நகரத்துக்குச் செல்லும் வழியை வந்தடைவார்.

லைட்டிங்கைப் பொறுத்தவரை காலையில் ஒரு மாதிரியும், மதியத்தில் ஒரு மாதிரியும், இரவில் ஒரு மாதிரியும் மாறும். இது எதுவும் ஸ்கிரிப்ட் பேப்பரில் இருக்காது. காலைக் காட்சி எடுக்கும்போது இரண்டு மணி நேரம்தான் அதற்கான லைட்டிங் இருக்கும். அதனால் அடுத்த நாள் மீண்டும் அதே  காட்சியைத் தொடர்வோம். அப்படி ஒரு சீக்வென்ஸ் எடுக்கவே பல நாட்கள் பிடிக்கும். அப்படி பாலைவனக் காட்சிகளை மட்டுமே மூன்று மாதங்கள் எடுத்தோம்.  

இதில் என்ன கஷ்டம் என்றால் ஆர்டிஸ்ட் மேக்கப், காஸ்டியூம் ஒரே மாதிரி இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. டிராவல் படம் என்பதால் ஆர்டிஸ்ட்டோட எனர்ஜி லெவல் காலையில் உற்சாகமாகவும், மதியம், மாலை என்று வரும்போது உற்சாகம் குறைந்தும் காணப்படும். 

ஆனாலும், ஆர்டிஸ்ட் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.படத்தில் பிருத்விராஜுக்கும் ஆடுகளுக்கும் உணர்வுபூர்வமான கனெக்‌ஷன் இருக்கும். ஆடுகளிடம் ஆக்‌ஷன் சொல்லி வேலை வாங்க முடியாது. அப்படி ஆடுகளின் அசைவுகளை கவனித்து படமாக்குவதில் நிறைய சவால் இருந்துச்சு.

ரெயின் எஃபெக்ட் காட்சிக்காகவும், மணல் குன்றுகளை உடைக்கவும், பிரம்மாண்டமான கிரேன்களை கொண்டு வருவதற்காகவும் புல்டோசர் கொண்டு வந்து நாங்களே பாலைவனத்தில் வழியை ஏற்படுத்தினோம்.

சில சமயம் மணல் குன்றுகள் ஒரே மாதிரியாகவும் இருக்காது. காத்தடிச்சதும் குன்றுகள் களைந்துவிடும். மறுபடியும் கன்டினியூட்டிக்காக அதே மலைக் குன்றுகளை தேடிப் பிடித்து படமாக்கினோம். பாலைவனத்தில் என்ன வெளிச்சம் கிடைச்சதோ அதைவெச்சு படமாக்கினோம்.

கேமராமேன் என்ற முறையில் வேறு என்ன பொறுப்புகள் இருந்துச்சு?

படத்துல டயலாக் கம்மி. அது தெரியாதளவுக்கு ஆடியன்ஸை எங்கேஜ்டா வெச்சிருக்கணும். மூவரின் பயணத்தையும் சலிப்புத் தட்டாதளவுக்கு சொல்லணும். ஹீரோவுடைய உணர்வுகளையும், வேதனையையும் குளோஸ் அப், வைட் ஷாட் மூலமாகவும் சொல்ல வேண்டிய கட்டாயம் இருந்துச்சு.

பாலைவனப் பகுதியில் ஷூட் பண்ணும்போது அந்த இடங்களில் பழக்கப்பட்ட ஸ்டெடி கேம் ஆபரேட்டர்களை கூப்பிட்டு  வந்தோம்.பாந்தம் ஷாட் எடுப்பதற்காக பெரியளவிலான புரபெல்லர், ஹெலிகாப்டர் என பல வழிகளை ப்ளான் பண்ணினோம். அது எதுவும் கைகொடுக்கவில்லை.

பாலைவனத்தைப் பொறுத்தவரை மார்ச், ஏப்ரல் என இரண்டு மாதங்கள்தான் படப்பிடிப்பு நடத்துவதற்கு சரியான காலநிலை.மற்ற சமயங்களில் அதிக வெப்பம், அதிக குளிர் இருக்கும். வெப்பக் காலத்தில் மணலில் தப்பித் தவறியும் கால் வைக்க முடியாது. ஒருவழியா, நேச்சுரலா  எப்போ புயல் வருமோ அப்போ எடுத்தோம். ஆனால், அந்த மாதிரி சமயங்களில் கேமரா, லென்ஸ் கொடுக்க அவுட்டோர் யூனிட்ல தயங்கினாங்க.

ஏனெனில், முதல் ஷெட்யூலில் கேமரா, லென்ஸ் சேதமானது. அடுத்த ஷெட்யூலுக்கு ஸ்பேர் கேமராவுடன்தான் போனோம்.பிருத்விராஜ் மீது விழும் புழுதி எல்லாமே இயற்கை புயலில் எடுக்கப்பட்ட காட்சிகள். 

அப்படி ரியலா எடுத்த காட்சிகளில் லென்ஸ் சேதமாகிவிட்டது. ஹீரோ சாலையைப் பார்க்கும் காட்சியைத்தான் அதிகமா ரிஸ்க் எடுத்து எடுத்தோம். பாம்பு காட்சிகளையும் லைவ்வா எடுத்தோம். பாலைவனத்தில் பாம்பு, நரி, தேள் போன்ற ஜீவராசிகளின் அச்சுறுத்தலும் இருந்துச்சு. இறைவன் அருளால் எந்தவித ஆபத்துமில்லாமல் படப்பிடிப்பை முடிச்சோம்.

கதை படிச்சதும் விஷுவலா என்ன தோணுச்சு?

இது மாதிரி படம் பண்ணணும்னுதான் காத்திருந்தேன். ரெஃபரன்ஸ் எடுக்கிற மாதிரி எந்தப் படமும் இல்லை. ராஜீவ் மேனன் சார் பாலைவனத்தில் விழும் ஹெவி லைட்டை
கட் பண்ணுவதற்கு எந்த மாதிரி ஃபேப்ரிக் யூஸ் பண்ணலாம்னு சில ஆலோசனைகளைச் சொன்னார்.லைட்டிங்கைப் பொறுத்தவரை ஃபுல் மூன் வெளிச்சத்தில்தான் எடுத்தோம். பாலைவனத்தில் நிலா வெளிச்சம் அதிகமாகவே கிடைக்கும். அந்த வகையில் பாலைவனத்தில் என்ன லைட்டிங் கிடைச்சதோ அதை மட்டுமே யூஸ் பண்ணினோம்.

பிருத்விராஜுடன் வேலை செய்த அனுபவம் எப்படி?

பிருத்விராஜ் கடுமையான உழைப்பையும், அர்ப்பணிப்பையும் கொடுத்தார். அவர் மாதிரியே மற்ற ஆர்டிஸ்ட்டுகளும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். நஜீமாக இருக்கும்போது பிருத்விராஜ் ரொம்ப வெளிப்படையாக இருப்பார். அந்தக் கேரக்டருக்காக கடும் ‘டயட்’டில் இருந்தார். அதனால் ‘கேரக்டருக்கான மூட்ல இருக்கும்போது பசியில் எதாவது வார்த்தையை விட்டுட்டா தப்பா எடுத்துக்காதீங்க’ன்னு முன்கூட்டியே சொல்லிவிடுவார்.

அப்படி அவர் பலமுறை சத்தம் போட்டிருக்கிறார். நாங்களும் அதை தவறாக நினைக்கவில்லை. நஜீம் கேரக்டருக்காக  2018ல் வெயிட் போட்டு 98 கிலோ எடையுடன் இருந்தார். க்ளைமாக்ஸில் அப்படியே 38 கிலோ குறைச்சிட்டார்.

இயக்குநர் பிளஸ்சி?

மாஸ்டர் ஆஃப் கிராப்ட்மேன். சினிமா டெக்னிக் அதிகமா தெரிஞ்சவர். ரஹ்மான் சாரும் இன்வால்வாகி ஒர்க் பண்ணினார். சில இசைக் கருவிகளை புதுசா வாங்கி, கத்துக்கிட்டு பின்னணி மியூசிக் பண்ணினார்னு கேள்விப்பட்டேன். ரசூல் பூக்குட்டி சாரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். மினியேச்சர் செட் முன்னாடி டீம் முழுவதையும் நிற்கவெச்சு படத்தோட எல்லா காட்சியையும் விளக்கிச் சொன்னார் பிளஸ்சி சார். அது எல்லோருடைய மனசுலயும் அப்படியே நின்னுபோச்சு.

பிளஸ்சி சார் இந்தப் படத்தை எடுக்கணும்னு 2008லேயே ஐடியா வெச்சிருந்தார். அந்த டைம்ல அவர் படங்களுக்கு நான்தான் கிரேடிங் பண்ணுவேன். அப்போதே இந்தப் படத்தை எடுத்திருந்தால் நான் கேமராமேனா ஒர்க் பண்ணியிருக்க முடியாது. அவர் படங்களுக்கு கலரிஸ்ட்டா இருந்த நான் பின்னாட்களில் கேமராமேனாக மாறியதெல்லாம் ஆச்சர்யம்.

யாரெல்லாம் பாராட்டினாங்க?

கமல்ஹாசன், மணிரத்னம், ராஜீவ்மேனன், ரவி கே சந்திரன் என தமிழ் சினிமாவின் பல ஆளுமைகள் படம் பார்த்துவிட்டு பாராட்டினார்கள்.

உங்களுக்கு யாருடைய ஒளிப்பதிவு பிடிக்கும்?

சந்தோஷ் சிவன். அவருடைய லென்சிங், குளோஸ் அப் கம்போஸிங் பிடிக்கும்.

விளம்பரப் பட உலகிற்கும், சினிமாவுக்கும் என்ன வித்தியாசம்?

சினிமா ஈஸின்னு சொல்லலாம். ஒரு நாளில் விளம்பரப் படத்தை 25 ஷாட்ல முடிக்கணும். அடுத்த நாள் ஷூட் இருக்காது. நாலு ஷாட் ஒரு மூடிலும் அடுத்த நாலு ஷாட் இன்னொரு மூடிலும் கவனிச்சுப் பண்ணணும். சினிமாவுல சுதந்திரம் நிறைய கிடைக்கும். பெரிய நடிகர்கள் படம் என்றால் கொஞ்சம் கால அவகாசமும் கிடைக்கும். அந்தவகையில் சினிமா ஈஸி, விளம்பரங்கள் கஷ்டம்.

எஸ்.ராஜா