அதிகரிக்கும் பொன்னுக்கு வீங்கி, தட்டம்மை நோய்கள்... என்ன செய்ய வேண்டும்?



கடந்த ஆறு மாதங்களாகவே இந்தியா முழுவதும் மம்ப்ஸ் எனப்படும் பொன்னுக்கு வீங்கி நோய் அதிகரித்துள்ளது. சமீபமாக கேரளாவிலும், தமிழகத்திலும் இந்நோயின் தாக்கம் கூடியுள்ளது. குறிப்பாக கேரளாவில் ஒரு மினி தொற்றுப் பரவல் போல இந்நோய் பரவி வருகிறது. 
கடந்த மூன்று மாதத்தில் மட்டும் கேரளாவில் 15 ஆயிரத்து 600 மம்ப்ஸ் கேஸ்கள் பதிவாகியுள்ளன. மார்ச் மாதம் மட்டும் 6 ஆயிரத்து 500 கேஸ்கள் பதிவாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை நிறைய பள்ளிக் குழந்தைகளுக்கு இந்நோய் பரவி வருகிறது. மார்ச் மாதம் மட்டும் இங்கே 461 கேஸ்கள் பதிவாகியுள்ளன. இது தெரிய வந்த கணக்கு மட்டுமே. தெரியப்படாமல் வீட்டிலேயே இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமிருக்கலாம். தவிர, சிலருக்கு மீசல்ஸ் எனப்படும் தட்டம்மை நோயும் காணப்படுகிறது. 
இந்நோய்கள் எதனால் வருகின்றன... என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் குழந்தை நலப் பேராசிரியரும், இந்திய குழந்தைகள் நலக் குழுமத்தின் தமிழ்நாடு பிரிவு எடிட்டருமான டாக்டர் டி.ராஜ்குமாரிடம் பேசினோம்.

‘‘இவையெல்லாம் வைரஸால் வரக்கூடிய நோய்கள். பாராமிக்சோ என்கிற வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவை. கண்ணுக்குத் தெரியாத  கிருமி என்பதால் இவை வேகமாகப் பரவிவிடும்...’’ என எச்சரித்தபடி பேச ஆரம்பித்தவர், ஒவ்வொரு நோய்பற்றியும் விவரங்களை அடுக்கினார்.

மம்ப்ஸ் எனப்படும் பொன்னுக்கு வீங்கி

இந்த வைரஸ் உடலுக்குள் புகுந்ததும் சளி, இருமல், காய்ச்சல், தலைவலினு ஆரம்பிக்கும். இருமல் மூலம் மற்றவங்களுக்கு பரவும். இதை ட்ராப்லெட் இன்பெக்‌ஷன்னு சொல்வோம். அதாவது கண்ணுக்குத் தெரியாத சின்ன துகள்கள் மூலம் இன்னொருவருக்கு அந்த வைரஸ் போகும்.இது நுரையீரல் வழியாக ரத்தக்குழாய்களுக்குப் போய் மேற்சொன்ன தாக்கங்களை உண்டாக்கும். பிறகு, கன்னங்களின் பக்கத்துல உள்ள உமிழ்நீர் சுரப்பியைத் தாக்கி அதனை வீங்கச் செய்யும்.

சிலருக்கு இடதுபுறம் வீங்கலாம். சிலருக்கு வலதுபுறம் வீங்கலாம். அல்லது ரெண்டு பக்கமும் வீக்கங்கள் வரலாம். குறிப்பாக, காது மடலுக்கு கீழுள்ள பகுதிகளில் வீக்கத்தால் வலி உண்டாகும்.

பொதுவாக இந்த வீக்கம் ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரை இருக்கும். இந்நோய் 99.99 சதவீதம் எந்தப் பிரச்னையும் செய்யாது. ஆனால், 0.01 சதவீதம் ரொம்ப அரிதாக சிலருக்கு உடலில் கோளாறுகளை ஏற்படுத்தலாம்.

ஒன்று மூளையைத் தாக்கி, மூளைக் காய்ச்சலை உண்டாக்கலாம். ஒருமாதிரி மயக்கமாக வருது, ரொம்ப சோர்வாக இருக்கு என்றால் அது மூளைக் காய்ச்சலுக்கான அறிகுறியாக இருக்கலாம். இரண்டாவது கணையத்தை வீங்கச் செய்யலாம். 

அதாவது குழந்தைக்கு வயிற்றுவலியோ, வாந்தியோ வந்தால் அப்ப கணையம் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

மூன்றாவது, ஆண் குழந்தைகளுக்கு விரைப்பையைத் தாக்கி வீக்கத்தை உருவாக்கலாம். பெண் குழந்தைகளுக்கு கருமுட்டை பையில் வீக்கத்தை ஏற்படுத்தலாம். இவையெல்லாம் ரொம்ப அரிதாக நடக்கக் கூடியவைதான். இருந்தாலும் இந்த அறிகுறிகள் தெரிஞ்சால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

கோடை காலத்தில் ஏன் அதிகரிக்கிறது?

பொதுவாகவே எல்லா வைரஸ்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வந்துபோகும். இதை ஒரு சுழற்சினு சொல்வோம். அந்தப் பருவக் காலத்திற்கு ஏற்ப கூடிக் குறையும். இந்த வைரஸ் அக்டோபர், நவம்பரில் தொடங்கி ஏப்ரல் வரை ஆறுமாத காலங்கள் நீடிக்கும். மே, ஜூன் மாதங்களில் குறைய ஆரம்பிச்சிடும். மார்ச், ஏப்ரலில் உச்சத்தில் இருப்பதால் கோடை காலத்தில் அதிகரிப்பதுபோல் தெரிகிறது. ஆனால், வடஇந்தியாவிலும், கேரளாவிலும் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்தே இந்த மம்ப்ஸ் நோய் அதிகரித்து காணப்படுது.  

பரவுதல்

இருமல், கோழைகள் மூலமாக பரவும். அடுத்து வீக்கம் வந்தபிறகு மூன்று வாரங்களுக்கு அந்த வைரஸ் குழந்தையின் வாயிலும், உமிழ்நீரிலும் இருக்கும். அவர்கள் பேசும்போதும், இருமும்போதும் பரவிட்டே இருக்கும்.இப்ப பெற்றோர் ஒருவாரத்துல வீக்கம் சரியானதும் பள்ளிக்கு அனுப்பிடுறாங்க. அப்ப அந்தக் குழந்தை மற்ற குழந்தைகளுக்கு இந்த வைரஸை பரப்பும். இதனால், நிறைய குழந்தைகள் இந்நோயால் பாதிக்கப்படுறாங்க.

இந்த வைரஸ் ஒருமுறை வந்துவிட்டால் திரும்ப வராது. அதனால், பெரும்பாலும் பெரியவர்களுக்கு இந்நோய் வர்றதில்ல. அவங்க சிறுவயதிலேயே இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பாங்க. அப்படி பாதிக்கப்படாத பெரியவர்களுக்கு இந்நோய் வர வாய்ப்பிருக்கு.  குழந்தைகளுக்கு முதல்முறை என்பதால் அதிகம்பேர்  பாதிக்கப்படுறாங்க. பள்ளிகள் விடுமுறை நேரத்தில் இவர்களின் பரப்பும் விகிதம் குறையும்போது நோயின் தாக்கமும் குறைஞ்சிடும்.

உணவுகள்  

ஊட்டச்சத்தான உணவுகள் கொடுக்கணும். குறிப்பாக காய்கறிகள், கீரைகள், பழங்கள், முட்டை சாப்பிடணும். அப்புறம், நிறைய தண்ணீர் குடிக்கணும். நீராகார உணவுகள் ரொம்ப நல்லது. கூழ், சூப், இளநீர், பழச்சாறு உள்ளிட்டவை அருந்தலாம். ஐஸ் போடாமல் நீர்ச்சத்து இருக்கிறமாதிரி குழந்தைகளைப் பார்த்துக்கிட்டாலே போதும். 

வெகுசீக்கிரம் மீண்டு வந்திடுவாங்க.பொதுவாக, மக்கள் காய்ச்சல் வந்தால் சாப்பாட்டைக் குறைக்கணும்; பத்திய சாப்பாடு மாதிரி சாப்பிடணும்னு எல்லாம் சொல்வாங்க. இந்நோய்களுக்கு அப்படித் தேவையில்ல. வீட்டுச் சாப்பாட்டை எப்போதும்போல் எடுத்துக்கலாம்.

ஆனால், கடை உணவுகளையும், எளிதில் ஜீரணிக்காத உணவு வகைகளையும் தவிர்ப்பது நல்லது. அப்புறம், எந்த வைரஸ் தொற்று வந்தாலும் முதல்ல ஓய்வும் தூக்கமும் அவசியம். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பதன்மூலம் மற்ற குழந்தைகளுக்குப் பரவாமல் தடுக்கலாம்.

மீசல்ஸ் எனப்படும் தட்டம்மை

இதில் தட்டம்மையும் இப்போது சிறிய அளவில் பரவுது. இதுவும் பொது சுகாதார பிரச்னைதான். ஆண்டுக்கு இந்தியாவில் 50 ஆயிரம் குழந்தைகள் தட்டம்மையால் இறக்குறாங்க. நிமோனியா, வயிற்றுப்போக்கு, ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளிட்டவையும் தட்டம்மையால் ஏற்படும்.

இந்நோயின் முதல் அறிகுறி சளி, இருமல், மூக்கு ஒழுகுதல் ஆகியவற்றுடன் காய்ச்சல் வரும். காய்ச்சல் வந்து நான்காவது நாள் உடல் முழுவதும் சிவந்த புள்ளிகள் போல அம்மை வரும். இந்த அம்மை நான்கு நாட்களுக்குப் பிறகே குறையும். இது ரொம்ப வேகமாகப் பரவக்கூடியது. ஒரு குழந்தைக்கு வந்தால் எல்லா குழந்தைகளுக்கும் வந்திடும்.

அதேபோல் இந்த வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தியை குறைச்சிடும். அதனால், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நிமோனியாவோ அல்லது வயிற்றுப்போக்கோ அல்லது கிருமிகள் தாக்கமோ வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கு.உடலில் வைட்டமின்கள் அளவையும் குறைச்சிடும். குறிப்பாக வைட்டமின் ஏ குறைபாடு வரும். இதனால், கண்கள் பாதிக்கப்படும். ரொம்ப அரிதாக மூைளயையும் தாக்கும். அதனால், தட்டம்மை வந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகணும்.

அப்ப மருத்துவராகிய நாங்கள் வைட்டமின் ஏ மாத்திரை கொடுப்போம். தவிர வயிற்றுபோக்கோ, நிமோனியாவோ இருந்தால் அதுக்கேற்ற மருந்துகள் வழங்கி அதை சரி செய்வோம். இல்லனா அந்தக் குழந்தை பெரும் பாதிப்புக்குள்ளாகி அது உயிரிழப்புக்கே வழிவகுக்கலாம்.கடந்த மார்ச் மாசம் மட்டும் தமிழ்நாட்டில் 81 தட்டம்மை கேஸ்கள் பதிவாகியிருக்கு. இந்நோயின் தாக்கம் குறைவுதான். காரணம், நாம் பக்கவாத தடுப்பூசி கொடுத்திட்டு வர்றோம்.

இந்த வைரஸும் அக்டோபர், நவம்பர்ல தொடங்கி ஏப்ரல் வரை இருக்கும். இதற்கான உணவுமுறைகள், தடுப்புவழிகள் எல்லாமே மம்ப்ஸ் மாதிரிதான். ஊட்டச்சத்துள்ள உணவுடன் நீராகாரங்கள் அதிகம் எடுத்துக்கணும்.

ரூபெல்லா

அடுத்து ரூபெல்லானு ஒரு வைரஸ். இதற்கு ஜெர்மன் தட்டம்மைனு பெயர். நம்மூர்ல மணல்வாரி தட்டம்மைனு சொல்வாங்க. இதுவும் சளி, இருமல்ல தொடங்கும். பிறகு, காய்ச்சல் வரும். அடுத்ததாக அம்மை வரும். ஆனால், இது ஒருநாள் வந்திட்டு உடனே போயிடும். அம்மை பார்க்க மணலை வாரித் தூக்கிப்போட்டமாதிரி இருக்கும். அதனாலேயே இதற்கு மணல்வாரி அம்மைனு பெயர்.

இது குழந்தைகளுக்கு எந்த பின்விளைவையும் ஏற்படுத்தாது. ஆனால், கர்ப்பிணி தாய்மார்களுக்கு இந்த மணல்வாரி அம்மை வந்தால் அவங்களுக்கு அபார்ஷன் ஆகலாம். அப்படியில்லனா, பிறக்கும் குழந்தைக்குக் காது கேளாண்மை, கண்பார்வை இழப்பு, இதயத்தில் ஓட்டை, மூளைவளர்ச்சி குன்றி பிறத்தல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதனால்தான் அரசு ரூபெல்லா தடுப்பூசியும் அவசியம்னு பிரச்சாரம் செய்திட்டே வர்றாங்க.

தடுப்பது எப்படி?

இந்நோய்களுக்கென தனியாக ட்ரீட்மெண்ட்கள்னு எதுவும் கிடையாது. இதைத் தடுப்பதற்கான ஒரே வழி தடுப்பூசிதான். MMRனு ஒரு தடுப்பூசி இருக்கு. இதன் விரிவாக்கம் மீசல்ஸ், மம்ப்ஸ், ரூபெல்லா. அதாவது தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ரூபெல்லா. இது மூன்று வைரஸுக்குமாக சேர்த்து போடப்படுகிற தடுப்பூசி.

ஆனால், இந்த எம்எம்ஆர் தடுப்பூசி பல ஆண்டுகளாக தனியார் மருத்துவமனைகள்ல மட்டுமே போடப்பட்டு வருது. அரசு மருத்துவமனைகள்ல இந்த எம்எம்ஆர் கிடையாது. முன்னாடி மத்திய அரசு மீசல்ஸ் தடுப்பூசி மட்டுமே போட்டு வந்தாங்க. இந்திய குழந்தைகள் நலக் குழுமம்தான் மத்திய அரசுகிட்ட தொடர்ந்து இதுகுறித்து வலியுறுத்திக் கொண்டே வந்தது.

அப்படியாக கடந்த ஏழு ஆண்டுகளாக இதுல ரூபெல்லாவும் சேர்த்து எம்ஆர்னு ஒரு தடுப்பூசி போடுறாங்க. ஏன்னா, ரூபெல்லாவினால் கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்படுறாங்க என்பதற்காக சேர்த்தாங்க.

ஆனால், மம்ப்ஸ் நோயால் இறப்பு இல்லனு விட்டுட்டாங்க.இப்ப மத்திய அரசு எம்ஆர் தடுப்பூசிக்குப் பிரச்சாரம் செய்து சிறப்பாக அந்தப் பணியை மேற்கொள்றாங்க. ஆனால், நாங்க இதனுடன் மம்ப்ஸுக்கும் தடுப்பூசியைச் சேர்த்து தனியார் மருத்துவமனைகள் போல எம்எம்ஆர்னு போடச் சொல்லி வலியுறுத்திட்டு இருக்கோம். ஏன்னா, இப்ப மம்ப்ஸ் அதிகரிச்சிட்டே வருது. அதனால் அதனை கட்டுப்படுத்த தடுப்பூசி அவசியம்னு சொல்றோம். இதுக்கு செலவும் அதிகம் பிடிக்காது.

முன்னாடியே சொன்னதுமாதிரி மம்ப்ஸ் வைரஸால் சிலருக்கு மூளை, கணையம் பாதிக்கப்படலாம். அப்புறம் சமீபத்திய ஆய்வுகள்ல மம்ப்ஸால் விதைப்பையும், சினைப்பையும் பாதிக்கப்படுற குழந்தைகள் எதிர்காலத்துல வளர்ந்து திருமணமானபிறகு அவங்களுக்குக் குழந்தையின்மைக்கு வழிவகுக்கும்னு தெரிய வந்திருக்கு. 

இதனால், மத்திய அரசிடம் மம்ப்ஸுக்கும் சேர்த்து எம்எம்ஆர் தடுப்பூசியை அரசு மருத்துவமனைகளிலும் கொண்டு வாங்கனு கேட்குறோம். ஆனால், மத்திய அரசு இதுரை எந்த பதிலும் அளிக்கல. ஒருவேளை எம்எம்ஆர் தடுப்பூசி  கொண்டு வந்தால் மம்ப்ஸ் பாதிப்பும் வருங்காலத்தில் பெரியளவில் இருக்காது.

பேராச்சி கண்ணன்