இறைவன் நம் குடும்ப உறுப்பினரே!



ஆன்மிகக் கொண்டாட்டங்களில் வழக்கமான பிரசாதங்கள் தயாரிப்பது என்பது நம் தொன்றுதொட்டு வரும் பாரம்பரியம். கொள்ளுப்பாட்டி,  பாட்டி காலத்திலிருந்து சம்பிரதாயமாக நாம் பின்பற்றி அவர்கள் பெயரிட்ட பிரசாதங்களைத் தயாரித்து வருகிறோம். பிரசாதங்கள்  மட்டுமல்லாமல் பொதுவான சமையல் உணவு வகைகளையும் நாம் இப்படித்தான் தயாரித்து வருகிறோம். ஆனால், பரம்பரை மாற மாற  அந்தத் தயாரிப்புகளின் மூலப்பொருட்களும் புதுத்தோற்றம் கொண்டு விடுகின்றன. உதாரணமாக வெல்லத்தால் செய்யப்பட்ட  தின்பண்டங்களை சர்க்கரையால் செய்ய ஆரம்பித்தோம். அதேபோல பச்சரிசி கொண்டு செய்யப்பட்ட புலவு, பிரியாணி போன்றவற்றை  பாஸ்மதி அரிசிகொண்டு செய்து புது மணம், புது சுவை கொடுத்து குடும்பத்தினரை புதுச் சுவைக்கு அடிமையாக்கி வருகிறோம். அசைவ  உணவுப் பொருட்களின் பெயரில் சைவ உணவுவகைகளைத் தயாரிக்கிறோம். உதாரணம்: சாப்ஸ், குருமா, கோபி-65, இன்னும் புதிது  புதிதாக..!

இதே பாணியில் இறைவனுக்கு நாம் சம்பிரதாயமான நிவேதனப் பொருட்களைத் தயாரித்தாலும் அவற்றிலும் புதுமை புகுத்தவிழைகின்றோம்.  காரணம், இறைவனை நம் குடும்பத்து உறுப்பினராகவே நாம் கருதுவதால்தான்! ஆமாம், அதனால்தான் நமக்குப் பிடித்த, நம் ருசிக்கு உகந்த  பொருட்களை நாம் தயாரிப்பதோடு இறைவனுக்கும் படைக்கிறோம். அந்த வகையில்தான் நமது ஆன்மிகம் இதழ் ஒவ்வொன்றிலும்  புதுமையானநிவேதனங்களைச் சொல்கிறோம்; தயாரித்து இறைவனுக்கு அர்ப்பணித்து, நாமும் உண்டு, சந்தோஷப்படுகிறோம். சரி, இந்த  இதழில் என்னென்ன நிவேதனங்களைப் பார்க்கலாம்?

கத்தரிக்காய் பச்சடி

என்னென்ன தேவை?

ஒரு பெரிய கத்தரிக்காய் - 250-300 கிராம்,
ஒரு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது,
பச்சைமிளகாய் - 4-6,
தக்காளி - 2,
பொடித்த இஞ்சி - சிறு துண்டு,
பொடித்த மல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
வறுத்துப் பொடித்த சீரகத்தூள் - ½ டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஒரு பெரிய கத்தரிக்காயை எடுத்து துடைத்து அதன் மேல் சிறிது எண்ணெயை தடவி, எல்லாப் பக்கமும் தோல் கறுக்கும்வரை அடுப்பில்  வைத்துச் சுடவேண்டும். கத்தரிக்காய் சொத்தை இல்லாமல் பார்த்து செய்ய வேண்டும். பின் ஆறியதும் தோலை உரித்து விட்டு, கழுவி  இரண்டாக வெட்டி சுத்தப்படுத்தி மசித்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து பாதி வெங்காயத்தை வதக்கி இத்துடன்  பாதி தக்காளி, பச்சைமிளகாய், உப்பு, மசித்த கத்தரிக்காய், இஞ்சி சேர்த்து வதக்கி இறக்கவும்.

குறிப்பு: பரிமாறும்போது பச்சை மல்லி, தக்காளி, சீரகத்தூள், வெங்காயம் தூவி பரிமாறவும்.

ரவா லட்டு

என்னென்ன தேவை?

ரவை - 2 கப்,
சர்க்கரை - 1 கப்,
துருவிய தேங்காய் - 1/4 கப்,
உடைத்த முந்திரி - 1 டேபிள்ஸ்பூன்,
நெய் - ேதவைக்கு,
ஏலக்காய்த்தூள் - சிறிது.

எப்படிச் செய்வது?

ரவையை மிதமான தீயில் நிறம் மாறாமல் வறுக்கவும். சர்க்கரையை நன்கு பொடிக்கவும். ரவையை சர்க்கரையுடன் சேர்த்து ஒரு சுற்று சுற்றி  எடுக்கவும். இரண்டையும் ஒரு பாத்திரத்தில் ேபாட்டு முந்திரியை உடைத்து சிறிது நெய்யில் வறுத்து சேர்க்கவும். பிறகு ரவை, சர்க்கரையை  சிறிது லேசாக வறுக்கவும். அதிகம் சூடு செய்யக் கூடாது. உடனே நெய்யை சூடு செய்து இந்த கலவையில் சேர்த்து, தேங்காய்,  ஏலக்காயையும் சேர்க்கவும். கலவை சூடாக இருக்கும் போதே சிறிய லட்டுகளாக பிடிக்கவும். ஆறியதும் பதப்படுத்தவும்.

வெந்தய தயிர் சாதம்

என்னென்ன தேவை?

பச்சரிசி - 1 கப்,
தண்ணீர் - 3 கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
வெந்தயம் - 1 டீஸ்பூன்,
கடுகு - ½ டீஸ்பூன்,
பச்சை மிளகாய் பொடித்தது - 2,
கறிவேப்பிலை - சிறிது,
முந்திரி - அலங்கரிக்க,
புளிப்பில்லாத தயிர் -  தேவைக்கு.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அரிசியை நன்கு குழைய வேக வைத்து அதில் உப்பு சேர்த்து சூடாக வைக்கவும். ஒரு கடாயில்  தேவையான எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் சேர்த்து சிவக்க தாளித்து இத்துடன் பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து  தாளித்து சூடாக இருக்கும்போதே தாளிப்பை சேர்த்துக் கிளறவும். சாதம் மிதமான இருக்கும்போது தயிர், முந்திரி சேர்த்து கிளறி உடனே  சூடாக பரிமாறவும். இந்த சாதத்தை சூடாகத்தான் பரிமாற வேண்டும். பொரித்த வெந்தய வாசத்துடன், மிகவும் மணமாகவும், ருசியாகவும்  இருக்கும்.

குறிப்பு: இது ஓர் ஆந்திர ஸ்பெஷல் உணவு, சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்.

வெந்தய தயிர் சாதத்திற்குதொட்டுக் கொள்ள வெஜிடபிள் கறி


என்னென்ன தேவை?

உருளைக் கிழங்கு, நூல்கோல், டர்னிப், தக்காளி, கோஸ், பச்சைப் பட்டாணி, பிராக்கோலி, வெங்காயம், பீன்ஸ், கேரட் மற்றும்  விருப்பமான காய்கறிகள் அனைத்தும் சேர்ந்து ஒரு  கிண்ணம்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது - தலா 1 டீஸ்பூன்,
கரம் மசாலா - ½ டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
மிளகுத்தூள், மல்லித்தழை - சிறிதளவு.

எப்படிச் செய்வது?

காய்கறிகளை ஒரே அளவில் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து  நிறம் மாறும் வரை வதக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கிய பின் இஞ்சி, பூண்டு விழுது வதங்கியதும் மஞ்சள், உப்பு, கரம் மசாலா,  மிளகாய், மிளகுத்தூள் ேசர்த்து வதக்கி காய்கள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மிதமான தீயில் சமைக்க வேண்டும். காய்கள் முக்கால் பதம்  வெந்ததும் மிதமான தீயில் வதக்கவும். மேலும் காய்கள் நறுக் என்றும் உதிர் உதிராகவும் இருந்தால் சுவையான வெந்தய சாதத்திற்கு நன்றாக  இருக்கும். மல்லித் தழை தூவி காய்கறிகளை இறக்கி சூடாகப் பரிமாறவும்.

தொகுப்பு: ஆர்.வைதேகி