பிரசாதங்கள்



* கலந்த மாவு களி

என்னென்ன தேவை?

சிறுதானிய மாவு செய்ய

கம்பு, ராகி, சாமை - தலா 1 கப்,
வெந்தயம் - 2 டீஸ்பூன்,
சுக்கு - 25 கிராம்.

அனைத்து பொருட்களையும் மிஷினில் கொடுத்து நைசாக இல்லாமல் கரகரப்பாக பொடி செய்து கொள்ளவும்.

களி செய்ய

அரைத்த சிறுதானிய மாவு - 1 கப்,
பனங்கருப்பட்டி அல்லது வெல்லம் - 1 கப்,
தண்ணீர் - 3 கப்,
நெய் அல்லது நல்லெண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?


கடாயில் வெல்லம், சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து 2 கொதி வந்ததும் இறக்கி வடித்து, மீண்டும் அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும். அதனுடன் 4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய், மாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவி நன்கு கிளறி, சிறு தீயில் வைத்து மூடி போட்டு 10 நிமிடம் வேகவிடவும். நடுநடுவே கிளறி விடவும். நன்கு வெந்து கையில் ஒட்டாத பதம் வந்ததும், மீதியுள்ள நல்லெண்ணெய் சேர்த்து இறக்கி உருண்டைகள் பிடித்து பரிமாறவும். விரும்பினால் பொடித்த பாதாம் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

* ஆப்பக்க போண்டா

என்னென்ன தேவை?

மைதா மாவு, அரிசி மாவு, தயிர் - தலா 1 கப்,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
சீரகம் - சிறிது,
கடலை மாவு, ரவை - தலா 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
சோடா உப்பு - 1 சிட்டிகை,
முந்திரி - 8,
பொரிக்க எண்ணெய், கறிவேப்பிலை - சிறிது.

எப்படிச் செய்வது?

தயிரில் ரவை, சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து 5 நிமிடம் ஊறவைத்து, பின் எண்ணெயை தவிர மீதியுள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக போண்டா மாவு பதத்திற்கு கலந்து 10 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு மீண்டும் கலந்து சூடான எண்ணெயில் சிறு சிறு போண்டாவாக போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும். தேவையானால் காரத்திற்கு பச்சைமிளகாய் சேர்க்கலாம்.

* கம்பு கேழ்வரகு மோர்க்கூழ்

என்னென்ன தேவை?

கம்பு மாவு, கேழ்வரகு மாவு - தலா 1 கப்,
ரவையாக உடைத்த குதிரைவாலி அரிசி - 1/2 கப்,
மோர் - 2 கப்,
பொடியாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் - 1/2 கப்,
பச்சைமிளகாய் - சிறிது,
உப்பு - தேவைக்கு,
வறுத்த மோர்மிளகாய் - 4.

எப்படிச் செய்வது?

மாவை முதல்நாள் இரவே தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். மறுநாள் அரிசி ரவையை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, ஊறிய அரிசி ரவையை சேர்த்து வேகவிடவும். ரவை பாதி வெந்ததும் கரைத்த மாவு, உப்பு போட்டு கிளறவும். இரண்டும் சேர்ந்து நன்றாக வெந்ததும் இறக்கி ஆறவிடவும். பின் அதனுடன் மோர், வெங்காயம், பச்சைமிளகாய், தண்ணீர் சேர்த்து கரைத்து மோர்மிளகாய், காய்கறி குழம்புடன் பரிமாறவும்.

* கலந்த காய்கறி மொச்சை கறி

என்னென்ன தேவை?

சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு, கீரைத்தண்டு - தலா 1 துண்டு,
வாழைக்காய் - 1/2 துண்டு,
அவரைக்காய் - 8,
கத்தரிக்காய், சேப்பங்கிழங்கு - தலா 4,
முருங்கைக்காய் - 1,
வெங்காயம், உருளைக்கிழங்கு - தலா 2,
வேகவைத்த மொச்சை, புளிக்கரைசல் - தலா 1 கப்,
மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், உப்பு - தேவைக்கு.

தாளிக்க

நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

காய்கறிகளை ஒரே அளவு துண்டுகளாக நறுக்கி வேகவிடவும். காய்கள் வெந்ததும், மொச்சை, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு கிளறி பச்சைவாசனை போனதும் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும். அனைத்தும் சேர்ந்து குழம்பு பதத்திற்கு வந்ததும், கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கறியுடன் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி களி, சாதத்துடன் பரிமாறவும். விரும்பினால் தேங்காயை அரைத்து சேர்க்கலாம்.

* க்ரீமி பழக்கலவை

என்னென்ன தேவை?

நறுக்கிய பேரீச்சம்பழம், செர்ரி, பைனாப்பிள், மாம்பழம், வாழைப்பழம், கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, ஆப்பிள், பலாப்பழம், மாதுளை முத்துக்கள் அனைத்தும் சேர்த்து - 1/2 கிலோ

அலங்கரிக்க

முந்திரி, திராட்சை, பாதாம் - தேவைக்கு, தேன் - 1/2 கப்.

எப்படிச் செய்வது?

அனைத்துப் பழங்களையும் ஒரே அளவில் வெட்டி தேன், உடைத்த நட்ஸ் வகைகளை சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும். விருப்பமான பழங்கள் சேர்த்தும் செய்யலாம்.

* மில்லட் ஸ்வீட் களி

என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு - 1/2 கப்,
குதிரைவாலி அரிசி - 1 கப்,
வெல்லத்தூள் - 3/4 கப்,
நெய் - தேவைக்கு,
கிராம்பு - 2,
முந்திரி - 8,
ஏலக்காய் - 4,
காய்ந்ததிராட்சை - 10.

எப்படிச் செய்வது?

வெல்லத்துடன் 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து இறக்கி வடித்துக் கொள்ளவும். குக்கரை சூடாக்கி பாசிப்பருப்பைச் சேர்த்து மிதமான தீயில் வைத்து வாசனை வரும்வரை வறுத்து, அதனுடன் கழுவி சுத்தம் செய்த குதிரைவாலி அரிசி, 3 கப் தண்ணீர் ஊற்றி 3-4 விசில் விட்டு வேகவிடவும். குக்கரை திறந்து அரிசி, பருப்பு இரண்டும் நன்கு வெந்ததும், வெல்லக் கரைசலை ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கவும். நெய்யில் கிராம்பு, முந்திரி, ஏலக்காய், காய்ந்த திராட்சை தாளித்து கலவையில் கொட்டி கலந்து பரிமாறவும்.