இங்கண் (எண்கண்) பிரமீஸ்வரம்



இந்தியத் திருநாட்டில் திருக்கோயில்களின் சுவர்க்கபூமியாக விளங்குவது தமிழ்நாடாகும். அதிலும் குறிப்பாகப் பொன்னி எனும் காவிரிநதி லட்சக்கணக்கான வாய்க்கால்களாகவும் கண்ணிகளாகவும் கிளைவிட்டு நீர்வளம் பெருக்கும் சோழநாட்டில் பல்லாயிரக்கணக்கான கற்கோயில்கள் திகழ்கின்றன.

அவை ஒவ்வொன்றும் குறைந்தபட்சம் 1200 ஆண்டுகால வரலாற்றுச் செல்வங்களைத் தன்னகத்தே சுமந்த வண்ணம் இன்றும் காட்சி தருகின்றன. அங்கு திகழும் தெய்வத் திருமேனிகளும், கலைமிகு சிற்பங்களும், கல்வெட்டுகளும், செப்பேடுகளும், ஓவியங்களும் இன்னபிறவும் அந்தந்த பகுதியில் வாழ்ந்த மக்களின் கலாச்சார வரலாற்றை நமக்குக் காட்டிடும் சான்றுகளே. அவற்றை நாம் முறையாக அறியும்போது மட்டுமே உண்மை புலப்படும். சில நேரங்களில் ஒரு கோயிலுக்கு சிறப்பு கூட்டுவதாகக் கருதி நம் மக்களால் புனையப்படும் கற்பனைக் கதைகள் பாமர மக்களிடம் நிலைபெற்றுவிடுகின்றன. உண்மை வரலாறு விலகியே நின்றுவிடுகின்றது. அவ்வகையில் திருவாரூர் மாவட்டம் குடவாயில் வட்டம் எண்கண் கோயிலின் வரலாறுதனை இனிக் காண்போம்.

எண்கண் எனும் இவ்வூரினை கும்பகோணம் - திருவாரூர் நெடுஞ்சாலையிலுள்ள அரசவனங்காடு எனும் ஊரிலிருந்து பிரியும் கிளைச்சாலை வழியும் தஞ்சாவூர் - திருவாரூர் நெடுஞ்சாலையில் உள்ள முகந்தனூரிலிருந்து பிரியும் கிளைச்சாலை வழியும் அடையலாம். முள்ளியாறு என திருஞானசம்பந்தர் குறிப்பிடும் வெட்டாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது.

எண்கண் எனக் குறிப்பிடப்பெறும் இவ்வூரின் பெயரில் உள்ள ‘ண்' என்ற மூன்று சுழிகளையுடைய ஒற்றெழுத்து (மெய் எழுத்து) குறிப்பிடத்தக்கதாகும். அருணகிரிநாதர் இவ்வூர் திருக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் மீது ஒரு திருப்புகழ் பாடியுள்ளார். ‘‘சந்தனந்தி” எனத் தொடங்கும் அப்பாடலின் ஈற்றடியில் ‘‘இந்திரன் பதம்பெற அண்டர்தம் பயம் கடிந்த பின்பு எண்கண் அமர்ந்து இருந்த பெருமாளே” எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே, அவர் வாழ்ந்த பதினைந்தாம் நூற்றாண்டில் இவ்வூருக்கு எண்கண் என்ற பெயரே திகழ்ந்தது என்பது உறுதி.

அதற்கு முன்பு பதினான்காம் நூற்றாண்டு முழுவதும் தமிழகம் ஒரு இருண்ட காலத்தைச் சந்தித்தது. வடபுலத்திலிருந்து (தில்லி) வந்த கொள்ளையர்களின் சூறையாடல்களும், அவர்களே எழுபது ஆண்டுகாலம் மதுரையைத் தலைமை இடமாகக்கொண்டு தமிழகத்தைக் கைப்பற்றியதும் ஆகிய காலநிலையில் கோயில்கள் சூறையாடப்பெற்றன. கோயில்கள் சார்ந்த அனைத்தும் முடங்கின. பூசைகள் முட்டுப்பாடுற்றன.

தேவாரம், பிரபந்தம் போன்றவை உறங்கின. ஆடல், பாடல், விழாக்கள் அனைத்தையும் மக்கள் மறந்தனர். விஜயநகரப் பேரரசன் குமாரகம்பணனின் தென்நாட்டுப் படை எடுப்பிற்குப் பின்பே (மதுரா விஜயம்) வைதீக சமயம் மீண்டும் துளிர்விட்டு தழைக்கலாயிற்று. அக்காலகட்டத்தில் அழிந்த கோயில்கள் போக எஞ்சியவை மீட்டுருவாக்கம் பெற்றன.

ஒரு நூறாண்டு காலம் அனைத்தையும் மறந்திருந்த நம் மக்களுக்கு கோயில்கள்பால் நாட்டம் ஏற்பட பல பெரியவர்கள் முயன்றனர். ஒவ்வொரு தலத்திற்கும் சுவையான கதைகளைக் கூறி மக்களைக் கோயில்கள் பால் ஈர்த்தனர். அப்போது எண்கண் எனும் இத்தலத்தில் உள்ள சிவாலயத்திற்காக இருவேறு கதைகளைப் புனைந்தனர். அவற்றில் ஒரு கதை மக்களை வெகுவாக ஈர்த்ததால் அதுவே நிலைபெற்றதோடு இவ்வூர் பற்றிய உண்மையான பழம் வரலாறு மறையலாயிற்று. இக்கட்டுரை வாயிலாக உண்மை வரலாற்றை மீட்டெடுக்க முயல்வோம்.

சங்ககாலம் தொடங்கி மாமன்னன் இராஜராஜசோழன் காலத்திற்கு முன்பு வரை ஊர்களும் சிற்றூர்களும் ஒரு நாடு எனும் பிரிவு அல்லது கூற்றம் என்ற பகுப்பிற்குள்தான் அடங்கியிருந்தன. நாட்டைத் துல்லியமாக அளந்து (சர்வே) அதனை வளநாடு என்றும் அதனுள் பல நாடுகளை அல்லது கூற்றங்களை வகுத்து அவை ஒவ்வொன்றிலும் பல ஊர்களையும் அதன் உட்கிராமங்களையும் (பிடாகை) அடக்கி நில அளவைப் புத்தகங்களில் பதிவு செய்தனர். இவ்வாறு ஆட்சி நிருவாகத்தை முதன்முதலில் மேற்கொண்டவன் மாமன்னன் இராஜராஜ சோழனாவான். பின்பு முதற்குலோத்துங்க சோழன் காலத்திலும் இப்பணி தொடர்ந்தது.

இராஜராஜ சோழன் பிரித்த வளநாடுகள் பலவற்றிற்கு தன் சிறப்புப் பட்டப் பெயர்களையே சூட்டினான். அவ்வாறு அவன் பிரித்த வளநாடு
களுள் ஒன்றுதான் சத்திரிய சிகாமணி வளநாடு என்பதாகும். அவ்வள நாட்டில் இங்கண் நாடு என்ற உட்பிரிவு இருந்தது. அவன் ஆட்சிக்காலத்திலேயே பின்னாளில் இங்கண்நாடு அருமொழிதேவ வளநாட்டிற்குள் இடம்பெற்றது என்பதை இராஜராஜனின் கல்வெட்டுக்களும் இராஜேந்திர சோழனின் கல்வெட்டுக்களும் எடுத்துரைக்கின்றன. பின்னர் குலோத்துங்க சோழன் காலத்தில் நாட்டு அளவை செய்தபோது இங்கண் நாடு குலோத்துங்க சோழவளநாட்டில் இடம்பெற்றது என்பதை சாசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.

சோழமண்டலத்து வளநாட்டுப் பிரிவின் பெயர்கள் மாற்றம் பெற்றாலும் இங்கண் நாட்டில் ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட ஊர்களும் அவற்றின் பிடாகைகளும் (சிறு கிராமங்களும்) அப்படியேதான் திகழ்ந்திருந்தன. இங்க நாட்டின் தலைமை இடமாக இருந்த பேரூர்தான் இங்கண் என்பதாகும். தற்போதைய எண்கள் என்ற அவ்வூரில் இரு சோழர்கால சிவாலயங்கள் கருங்கற்கோயில்களாகத் திகழ்கின்றன. ஒரு கோயிலின் பெயர் திருவிண்சாருடைய மகாதேவர் கோயில் என்றும் மற்றொரு கோயிலின் பெயர் பிரமீஸ்வரம் என்றும் அங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுவதோடு அவ்வூர் பெயர் இங்கணாட்டு இங்கண் என்றே அனைத்துக் கல்வெட்டுக்களும் கூறுகின்றன.

பதிமூன்றாம் நூற்றாண்டு இறுதிவரை நமக்குக் கிடைக்கும் தமிழ்நாட்டு கல்வெட்டுச் சாசனங்கள் அனைத்தும் இவ்வூரினை இங்கண் என்றே கூறுகின்றன. மேலும், இவ்வூருக்கு சோழர் காலத்தில் இங்கணாட்டு இங்கணான பவித்திரமாணிக்க சதுர்வேதிமங்கலம் என்ற மற்றொரு பெயரும் இருந்தது என்பதை அச்சாசனங்களே குறிப்பிடுகின்றன.

இங்கண் என்று இருந்த பழம்பெயர் இருண்ட இடைக்காலத்திற்குப் பிறகு எண்கண் என மருவி இன்றளவும் விளங்கி வருகின்றது. பிரமீஸ்வரம் என்ற பழங்கோயில் திருப்பணி பெற்றபோது விஜயநகர அரசர்கள் மூலவர் (பிரமபுரீஸ்வரர்) கோயில் அர்த்த மண்டபத்தில் மயில்மீது அமர்ந்த முருகப்பெருமானை வள்ளி தேவசேனா வுடன் பிரதிட்டை செய்து அம்மூர்த்தத்திற்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்தனர். அதன்பின்பே அங்கு அருணகிரியார் வந்து பாடியுள்ளார். அவர்தம் திருப்புகழில் ஊரின் பெயரினை எண்கண் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் பிற்காலத்தில் சிக்கல், எட்டுக்குடி, எண்கண் ஆகிய மூன்று சிவாலயங்களையும் ஒருவகை முருகன் ஆலயங்களாக இணைக்க ஒருவர் முனைந்து அதற்கென ஒரு கதையையும் புனைந்துள்ளார். சிக்கல் கோயிலில் முருகனின் சிலையை வடித்த சிற்பி அது அழகுடையதாக அமைந்தமையால் அதனினும் சிறந்த ஒன்றை தான் இனி வடிக்கக்கூடாது என்று முடிவு எடுத்து தன் கட்டை விரல்களை அவரே வெட்டிக்கொண்டாராம்.

பின்பு எட்டுக்குடியில் அவர் சிலை வடித்தபோது அது சிக்கல் திருமேனியைவிட அழகுடையதாக அமைந்ததால் அதனினும் சிறந்த ஒன்றை தான் படைக்கக்கூடாது என தன் இரு கண்களையும் அவரே குருடாக்கிக் கொண்டாராம். பின்பு இங்கு வந்து மீண்டும் ஒரு சிலை வடித்தபோது கையில் உளிபட்டு இரத்தம் தெறித்து அவர் கண்களில் விழ கண்பார்வை ஏற்பட்டதாம். உடனே அச்சிற்பி “என் கண் கொடுத்த முருகா” எனக் கூறியதால் இத்தலம் என் கண் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது என்பதே அவர் கூற்றாகும்.

இதனை அடிப்படையாகக் கொண்டு மற்றொருவர் சிற்பி தானே தன் உறுப்புக்களை சிதைக்கவில்லை என்றும், சோழமன்னன் அவ்வாறு செய்ததாகவும் குறித்துள்ளார். இவைகளை ஒப்புக்கொள்ளாத மற்றொருவர் இவ்வூர் இறைவன் பெயர் பிரம்மபுரீஸ்வரர் பிரமனுக்கு ஈசன் அருள் புரிந்ததாகவும், நான்முகனான பிரமனுக்கு எட்டுக்கண்கள் உள்ளதால் எண்கண் என இவ்வூர் பெயர் பெற்றது எனத் தல வரலாறு கூறியுள்ளார். தவறான புனைகதைகள் கூறப்பெறுவதால் சில நேரங்களில் நம் மரபுப் பெருமை சிதைந்துவிடுகின்றது.

தமிழ்நாட்டு வேந்தர்கள் எவரும் சிற்பிகளுக்கு ஊறு செய்ததில்லை. மாறாக, தாங்கள் எடுத்த கோயில்களில் அவர்களுக்கு சிலை அமைத்து பீடும் பெயரும் எழுதி பெருமைப்படுத்தி யுள்ளனர். சோழப் பேரரசி செம்பியன் மாதேவியார் தன் கணவர் கண்டராதித்த சோழர் பெயரில் எடுத்த திருநல்ல முடைய மகாதேவர் கோயிலில் (கோனேரிராஜபுரம் கோயிலில்) தன் உருவச்சிலையை வைக்காமல் அக்கோயிலை கட்டுவித்தவர் உருவச்சிலையை வைத்து அதற்கு மேலாக  “திருக்கற்றளி எடுப்பித்த ஆலத்தூருடையான் சாத்தன் குணபத்தனான ஹரசரணசேகரன் இவர். பட்டங்கட்டினபேர் ராஜகேசரி மூவேந்த வேளார் இவர்” எனக் கல்வெட்டும் பொறித்துள்ளார். இவ்வாசகத்தைப் படிப்பவர் ஒவ்வொருவரும் நம் மரபுப்பெருமையால் தலைநிமிர்ந்து நிற்கலாம்!

சோழர்கால இங்கணான தற்போதயை எண்கண் சிவாலயம் பிரமபுரீஸ்வரர் கோயில் என அழைக்கப்பெற்றாலும் அதன் பழம்பெயர் பிரமீஸ்வரம் என்பதாகும். கிழக்கு நோக்கிய இராஜகோபுரமும், தெற்கு நோக்கிய மற்றொரு திருவாயிலும் உடைய இக்கற்றளியில் மூலவராக சிவலிங்கமும் முன்மண்டபத்தின் வடபால் அம்பிகையின் கோயிலும் அமைந்துள்ளன சிவாலயங்களுக்குரிய பரிவாரங்கள் திகழ ஒரே திருச்சுற்றுடன் இவ்வாலயம் விளங்குகின்றது. தெற்கு வாயிலுக்கு எதிரே முருகப்பெருமான் திகழ்கின்றார்.

பழமையான இக்கோயிலுக்கு செல்வோர் அங்கு கோஷ்ட தெய்வங்களாக விளங்கும் தட்சிணாமூர்த்தி, இடபத்துடன் நிற்கும் உமையொருபாகன், பிரமன், துர்க்கை ஆகிய முற்காலச் சோழர் படைப்புக்களை அவசியம் கண்டு தரிசிக்க வேண்டும். இவ்வாலயம் சென்று பிரமபுரிசரையும் மயில் மீதமர்ந்த முருகப்பெருமானையும் தரிசிக்கும் அன்பர்கள் இங்கண் எனும் பழம்பெயர் அறிவதோடு அதே ஊரில் திகழும் திருவிண்சாருடைய மகாதேவர் திருக்கோயிலுக்கும் செல்லுங்கள். அங்கு உறையும் பெருமானையும் அங்கு திகழும் சோழமன்னர்கள் பலரும் வெட்டுவித்த இருபத்தைந்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களையும், சிற்பங்களையும் கண்டு மகிழ்வதோடு நம் மரபுப் பெருமையினையும் நிச்சயம் உணர்வீர்கள்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்