நான்கு கரங்களோடு அம்பிகை



வணக்கம் நலந்தானே!

லலிதா சஹஸ்ரநாமத்தில் இரு நாமங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்று சதுர்பாஹூ ஸமன்விதா, இன்னொன்று உத்யத்பானு ஸஹஸ்ராபா. இதில் உத்யத்பானு ஸஹஸ்ராபா என்கிற நாமத்தில் அம்பாள் தன்னுடைய முதல் கிரணங்களை, தன்னுடைய சொரூபத்தை பக்தனுக்கு காட்டுகின்றாள். 

தன்னுள் தன் மனதைத்தாண்டி இருக்கும் அப்பேற்பட்ட பெருஞ்சக்தியை ஜீவன் தரிசிக்கின்றான். அப்படி வெளிப்பாடு கொண்டருளும் அம்பிகையானவள், இங்கு உருவத்தோடு காட்சி தருகின்றாள்.

அந்த உருவங்கள்கூட நம் மனம் என்கிற நிலையில் வைத்து புரிந்து கொள்வதற்குத்தான் இந்த நாமாவே அமைந்துள்ளது. இங்கு சதுர்பாஹூ என்பது நான்கு கரங்களோடு அம்பாள் காட்சி தருவதை காட்டுகின்றன. இவ்வாறு தேவதா மூர்த்திகளை கரங்களோடு காட்டுவதை சிற்ப சாஸ்திரங்கள் வியப்பாகப் பேசுகின்றன. 

ஏனெனில், இந்த நான்கு கரங்களின் பின்னால் உள்ளது அனைத்துமே தத்துவச் சுரங்கங்கள்தான்.நான்கு கரங்களும் நான்கு திசைகள். கிழக்கு மேற்கு, வடக்கு, தெற்கு என்று அந்த பரந்த திசையின் வியாபகத்தை வெளிப்படுத்துகின்றன.

மேலும், வணங்கக் கூடிய இந்த மனிதனை விட வணங்கப்படும் சக்தியானது அதிக சக்தியோடு திகழ்கின்றன என்பதையும் காட்டுகின்றன. நான்கு கரங்களோஅல்லது நான்கிற்கும் மேற்பட்ட கரங்களோடு அம்பாளை நாம் வணங்குகின்றோம். அத்தனை கரங்களும் சக்தியினுடைய சர்வ வல்லமையையும், விதம்விதமான ஆயுதங்களையும் குறிக்கின்றன. இறைவனுடைய எல்லா ரூபங்களுக்கும் இது பொருந்தும்.

பகவத்கீதையை உபதேசிக்கும்போது பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இந்த மூன்றையுமே காண்பித்துக் கொடுக்கின்றார். விஸ்வரூப தரிசனத்தின்போது பரம் என்கிற நிலையை காண்பிக்கிறார். அர்ஜுனன் அதை தரிசித்து விட்டு திகைத்துப்போய் போதும்… போதும்… இது எனக்கு வேண்டாம் என்று கூறுகிறார். 

நீ எனக்கு நண்பனாக இரு. அதுவே எனக்கு போதும் என்கிறான். திவ்யம் எனும் நான்கு கைகள் கொண்ட விஷ்ணுவாக... சங்கு, சக்கரம், கதா, பத்மத்தோடு காட்சி தருகின்றார். அப்போதும்கூட அர்ஜுனன் வேண்டாம் என்கிறான். என்னோடு நன்றாக பேசக்கூடிய என் நண்பனாக வா என்கிறான். அப்போதுதான் மானுஷம் என்கிற மனித ரூபத்தில் குருவாக வந்து உபதேசம் செய்கின்றார்.

இப்படிப்பட்ட நிலைகளை நாம் கொஞ்சம் புரிந்து கொண்டோமானால் சதுர்பாஹு சமன்விதா என்கிற பெயரானது திவ்யம் என்கிற நிலையைக் குறிப்பதாகும். இப்போது இந்த நாமத்தில் இன்னொரு முக்கியமான விஷயமும் உள்ளது. 

இந்த நான்கு கரங்களும் மேலேயுள்ள விஷயங்களை சேர்த்து விளக்கினாலும், உள்ளர்த்தமாக அந்த நான்கு கரங்களும் அம்பிகையின் படைத் தலைவிகளான அஸ்வாரூடா, ஸம்பத்கரீ, மந்தரிணீ, வாராஹீ போன்ற தேவிகளையும் முக்கியமாக குறிக்கின்றன. மேலும், ஆங்காங்கு எழுந்தருளியிருக்கும் அம்பிகையின் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் என்று லலிதா சஹஸ்ரநாமம் நமக்கு வழிகாட்டுகின்றது.

கிருஷ்ணா

(பொறுப்பாசிரியர்)