தெளிவு பெறுஓம்



உண்மையான பக்தி எப்படியிருக்கும்?

பதில்: பகவானைப் பார்க்கத் தவிக்கும். அவன் தரிசனம் கிடைக்காவிட்டால் துடிக்கும். குலசேகர ஆழ்வார் ஸ்ரீரங்கநாதரைக் காணத் துடிக்கிறார்.
‘‘திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப்
பொன்னி
திரைக்கையால் அடிவருடப் பள்ளி
கொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டு
கொண்டு
என் கண்ணிணைகள் என்று
கொலோ
களிக்கும் நாளே
 - என்று கதறிப் பாடுகிறார்.

இந்தப் பக்திக்குக் கட்டுப்படுகிறான் பகவான். ஒரு கதை;ஒரு ஊரில் பரம வைஷ்ணவ பக்தன். அவனுக்கு பத்ரி நாராயணனைச் சேவிக்க ஆசை. பயணச் செலவுக்குத் தினமும் உண்டியலில் காசு சேமிக்க ஆரம்பித்தான். இதற்கிடையில், அவனுக்குத் திருமண ஏற்பாடு நடந்தது. திருமணச் செலவுக்கு உண்டியல் பணம் உதவியது. மீண்டும் உண்டியலில் பணம் சேமிக்க ஆரம்பித்தான். அவனுக்கு இரண்டு மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். செலவுக்கு உண்டியல் உதவியது.

பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி திருமணம், பேரன், பேத்தி எனக் காலம் கழிந்தது. இனி வேறு வேலை இல்லை. உண்டியல் பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினார். சில மாதங்கள் நடந்து பத்ரிநாத் வந்தடைந்தார். கோயில் வாசலில் வந்து நிற்க, பட்டர் நடை சாத்த, சரியாக இருந்தது.இனி ஆறு மாதங்களுக்குப் பிறகு நடை திறக்கப்படும் எனக் கூற, முதியவர் அதிர்ந்தார்.

‘‘அய்யா தயவு செய்யுங்கள். வெகுதூரம் நடந்து வந்திருக்கிறேன். அடுத்த ஆறு மாதம் இருப்பேனோ தெரியாது. ஒரு முறை அவனை சேவித்துவிடுகிறேன்.’’ என கண்ணீர்விட்டு அழ. பட்டரோ அசைவதாக இல்லை. 

விதிப்படி மூடிய நடை திறக்கப் படாது எனக் கூறி நகர்ந்தார். அனைவரும் இறங்க, இருட்டத் தொடங்கியது. அப்போது, ஒரு சிறுவன் அங்கு வருகிறான். அவன் அந்த முதியவரிடம், ‘‘என்ன தனிமையில் சிந்தனை. இங்கு ராத்திரி இருக்கக் கூடாதே. நீங்கள் மற்றவர்களோடு போகவில்லையா? எனக் கேட்க. இவர் தன் கதை சொன்னார்.

சிறுவன், ‘‘சரி வாருங்கள். நான் தங்கியுள்ள குகை உள்ளது அங்கு வந்து உணவருந்தி, பிறகு பேசிக் கொள்ளலாம்’’ எனக் கூறி அவரை அழைத்துச் சென்றான். அவருக்கு உணவளித்து ``தாத்தா உறங்குங்கள் எல்லாம் நல்ல தாகவே நடக்கும் எனக் கூறிச் சென்றான். முதியவரும் பக்தியோடு நாமஸ்மரணம் செய்துவிட்டு உறங்கினார். 

பொழுது விடிந்தது, கிழவனோ குகையை விட்டு வெளியே வந்தார், கோயில் திறந்துள்ளது. கூட்டமோ ஏராளம். பட்டர் ஆறு மாதம் ஆகும் என்றார். நடை திறக்கப்பட்டு உள்ளதே? என பட்டரிடம் சென்று கேட்டார். ‘‘சாமி கோயில் திறக்க ஆறு மாதம் ஆகும் என்றீர்கள். இப்ப மறுநாளே திறந்து இருக்கிறீர்களே’’ என்று கேட்க, பட்டரோ யோசித்தார்.

அடடா... இந்த முதியவர் ஆறு மாதங்களுக்கு முன்பு நடை சாத்திய நேரத்தில் வந்தவர் ஆயிற்றே... என நினைத்து “முதலில் நாரயணனை வணங்கிவிட்டு வாருங்கள்’’ என கூற இவரும் உள்ளே சென்றார். அங்கே நாராயணன் அந்த சிறுவனாகக் காட்சி தந்தான். இதுதான் உண்மையான பக்தி. உண்மையான பக்திக்கு ஆற்றல் அதிகம்.

?நல்ல தூக்கம் வர என்ன செய்ய வேண்டும்?
 - சு.அறிவழகன், தேனி.

பதில்: துக்கம் இல்லாவிட்டால் தூக்கம் வரும். துக்கம் எதனால் வரும்? கவலைகளினால் வரும். ஆனால், யோசித்துப் பாருங்கள், பல கவலைகள் காரணமற்றவை. சில கவலைகள் வருவதற்கு நாமே காரணம். நடந்ததைப் பற்றிய கவலையை விட்டுவிட்டு நடக்கப்போவதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் கொள்ளுங்கள். நல்ல தூக்கம் வரும்.
``சென்றதினி மீளாது, மூடரே!

நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும்
குழியில் வீழ்ந்து குமையாதீர்!
சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பிவாரா’’.

 -  என்ற மகாகவியின் வாக்கை மனதில் கொள்ளுங்கள்.
புதிய சிந்தனைகள் வரும். உடல் உற்சாகம் பெறும். செயல் வெற்றி பெறும்.  

?  நிம்மதிக்கு என்ன வழி?
 - செல்வக்குமார், துறையூர்.

பதில்: நிம்மதிக்கு வழி நம்பிக்கை. யானையின் பலம் என்பது தும்பிக்கையில் இருப்பதைப் போல, மனிதனின் பலம் நம்பிக்கையில் உள்ளது. நம்பி “கை” தொழுவதுதான் நம்பிக்கை. இந்த நம்பிக்கை துரோபதிக்கு இருந்தது. கஜேந்திர ஆழ்வானுக்கு (யானை) இருந்தது. பிரகலாதனுக்கு இருந்தது. நமக்கும் இருக்க வேண்டும்.

``நாளைப் பொழுது என்றும் நமக்கென
வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில்
காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க  
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப்
போல’’  
 - என்ற கண்ணதாசனின் வரிகளை நினைவில் கொள்ளுங்கள்.

? பகவானிடம் நாம் சென்று வழிபடுவது எதற்காக?
 - முத்துலட்சுமி, திருவனபுரம்.

பதில்: பெரும்பாலும் காமியார்த்த பிரார்த்தனை, அதாவது ஏதாவது ஒன்றைக் கேட்பதுவே வழிபாடாக இருக்கிறது. அதுவும் ஒரு படி எலுமிச்சைச் சாதம் பிரசாதமாகத்  தந்துவிட்டு, ஆயிரம் மடங்கு கேட்கிறோமே என்று யாரும் நினைப்பதில்லை. ஒரு சின்ன குறுஞ்செய்தி சில தினங்களுக்கு முன் என் கைபேசியில் வந்தது. ஒருவன் பிச்சை எடுக்கிறான். அவனுக்கு என்ன சொல்கிறோம். ‘‘ஏன், பிச்சை எடுக்கிறாய்? கை கால் நன்றாகத்தானே இருக்கிறது.

உழைத்துச் சாப்பிட வேண்டியதுதானே’’ என்று கேட்கிறோம். பகவானிடம் நாம் சென்று அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்கும் போதுபகவானும், ‘‘உனக்கு எல்லாவற்றையும் தந்திருக்கிறேனே, நீ ஏன் அந்த இந்திரியங்களையும் அறிவையும் வைத்துக் கொண்டு முயற்சித்து உனக்கு வேண்டியதைப் பெறக்கூடாது’’ என்று தானே கூறுவார். இப்படி யாரும் நினைப்பதில்லையே! என்று அந்த குறுஞ்செய்தியில் இருந்தது. அது உண்மைதானே!

? பணத்தின் பலத்தை எதிர்த்து நிற்க யாரால் முடியும்? எனவேதானே எல்லோரும் பணம் பணம் என்று பறக்கிறார்கள்?
 - கனகதுர்கை, சென்னை.

பதில்: பொதுவாக, இந்தக் காலத்தில் பணம்தான் பலமாக இருக்கிறது. பணத்தைத்தான் பலமாக நினைக்கவும் செய்கிறார்கள். ஆனால், அது உண்மையான பலம் அல்ல. அதில் ஊடுருவிய ஒரு அச்சம் இருக்கும். ஆனால், உண்மையான சாது - சன்யாசிகளால் பணத்தின் கவர்ச்சியையும், பலத்தையும் எதிர்த்து நிற்க முடியும். அப்படி நின்றும் இருக்கிறார்கள்.
நாடாளும் மன்னன் ஒரு துறவியிடம் கேட்டான்;

‘‘உங்களுக்கு என்ன வேண்டும்?
சொல்லுங்கள் தருகிறேன்’’.
துறவி சிரித்துக்கொண்டே கேட்டார்.
‘‘உனக்கு என்ன வேண்டும்? எதற்காக
வந்திருக்கிறாய்?’’
பணத்தின் பலம் தோற்ற இடம் இதுதான்.

? தர்மம், சட்டம் இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
 - பிரேமா.ஆர்.சிதம்பரம்.

பதில்: தர்மமாக உள்ளதெல்லாம் சட்டமாக இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. காரணம், சட்டத்தை நாம்தான் இயற்றுகின்றோம். தேவைப்பட்டால் நமக்கு ஏற்றதுபோல் மாற்றிக் கொள்கிறோம். ஆனால், தர்மம் என்பது என்றைக்கும் மாறாது. உதாரணமாக, ஒருவர் தன்னுடைய மகனை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு சிகிச்சைக்காக அவசரமாக   உங்களிடம் ஆயிரம் ரூபாய் கேட்கிறார். உங்களிடம் நிறைய பணம் இருக்கிறது, ஆனால் நீங்கள் ஏதோ காரணத்தினால் மறுத்துவிடுகின்றீர்கள்.

பணம் கிடைக்காத அவர் வருத்தத்தோடு போகிறார். சரியான நேரத்தில் பணம் கிடைத்து மருந்து வாங்க முடியாததால், அவருடைய மகன் இறந்துவிடுகின்றான். இப்பொழுது ‘‘நீ ஏன் பணம் தரவில்லை?’’ என்று அவர் சட்டத்தின் முன் உங்களை நிறுத்த முடியாது. காரணம், பணம் தர வேண்டும் என்று சட்டம் கிடையாது. ஆனால், நிறைய பணம் வைத்துக் கொண்டு, ஆபத்தில் நீங்கள் உதவவில்லை அல்லவா! எனவே தர்மப்படி அந்த பாவம் உங்களைச் சேரத்தானே செய்யும். அது ஏதாவது ஒரு ரூபத்தில் உங்கள் வாழ்க்கையில் எதிரொலிக்கத்தானே செய்யும்.

? உண்மையைவிடப் பொய்யை அதிகம் சொல்கிறார்கள்? இன்னும் சொல்லப் போனால் பொய்யை விரும்புகின்றார்கள், என்ன காரணம்?
 - ஜி.எஸ்.ரவிராஜ், நுங்கம்பாக்கம்.

பதில்: பொய்யில் உள்ள சுவைதான் காரணம். உண்மை என்பது பல நேரங்களில் சுடும். கசக்கும். அதை நாம் ஏற்றுக் கொள்ள விரும்புவது கிடையாது. ஒரு அறிஞர் சொன்னார்; உண்மை என்பது அறுவை சிகிச்சை போல, வலிக்கும். ஆனால், நோயைக் குணப்படுத்தும். பொய் என்பது வலி நிவாரணி மருந்து போல, அது தற்காலிகமாக வலியை மறக்கச் செய்யும். ஆனால், மிக மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். நாம் பெரும் பாலும் அறுவை சிகிச்சைகளைவிட தற்காலிகமான வலி நிவாரணிகளைத்தான் விரும்புகின்றோம்.

தேஜஸ்வி