சரணாகதியே தத்துவத்தின் ஒரு வெளிப்பாடு



ஸ்ரீ கிருஷ்ண அமுதம் - 69 (பகவத்கீதை உரை)

வணக்கம் தெரிவிப்பது என்பது அன்பைக் காட்டும் ஓர் அறிகுறி. எதிர்ப்பட்டு விடுவதால் நிகழும் அனிச்சைச்செயலாக அதை நாம் கருதினோமானால், அது எல்லாவகையிலும் அனிச்சையாகவே போய்விடும், அதாவது செயற்கைத் தன்மை வந்துவிடும். எந்த எதிர்பார்ப்பும், எந்த வேறுபாடும், எந்த ஈகோவும் இல்லாமல் வணக்கம் தெரிவித்தோமானால், கைகள் குவியும். அதே நேரத்தில், நம் முகம் மலரும். அந்த மலர்ச்சியின் நட்பில் எதிர் நபர் மகிழ்வார்.

பதிலுக்கு அவர் தெரிவிக்கும் வணக்கத்தில் புதுப்பொலிவை நம்மால் உணரமுடியும். இப்படி பாரபட்சமற்ற வகையில் வணக்கம் தெரிவிக்க நாம் செய்ய வேண்டியது என்ன? எல்லாம் பகவானுக்கே என்ற அர்ப்பண உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். வணக்கம் செலுத்து பவர், பெறுபவர், மொத்தத்தில் வணக்கம் செலுத்தும் செயல் எல்லாமே பரந்தாமனுக்கே அர்ப்பணம் என்ற மனோபாவம் வளர வேண்டும்.

இப்போது நமக்குள்ளே ஒரு தெய்வீக சாந்த அலை பரவும். அது நம் தேகத்துக்கே ஒரு தேஜஸைக் கொடுக்கும். இந்த தேஜஸ் பலரையும் நம்மிடம் ஈர்க்கும் என்பதைவிட, அவர்களும் இதே சாந்த நிலையை அடைய விரும்பும் நிலைமை உண்டாகும். இப்படி ஓர் அனுபவம் கிட்டவேண்டுமானால், மேற்கொள்ளும் கர்மாவில், அந்தக் கர்மாவை நிறைவேற்றவேண்டிய குறிக்கோளை மட்டுமே நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

இதனைச் சிறு செயலிலிருந்தே ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு நாளின் சிறிய கடமைகளில் இந்த உணர்வை நாம் மேற்கொண்டோமானால், அது எல்லா பெரிய கடமைகளுக்கும் பரவி அவை அனைத்துமே முழுமையாக நிறைவேறும். அவ்வாறு நிறைவேறும் வரை எந்தவகை உணர்ச்சிவசப்படுதலுக்கும் நாம் ஆட்படமாட்டோம்.

சொச்ரேயான் த்ரவ்யமயாத் யக்ஞாஜ்ஞானயக்ஞ: பரந்தப
ஸர்வம் கர்மாகிலம் பார்த்த ஞானே பரிஸமாப்யதே (4:33)

‘‘அர்ஜுனா, உலகியல் பொருட்களால் யக்ஞம் இயற்றி பலன்களைப் பெறுவதைவிட, முற்றிலும் ஞானரூபமான யக்ஞம் மிகவும் மேலானது. ஏனென்றால் எல்லாக் கர்மங்களுமே ஞானத்தில் முற்றுப்பெறுபவைதான்.’’ இந்திரியங்கள் தம் தேவைகள் பூர்த்தியாகாதா என்று ஏங்குகின்றன. ஆனால், அந்தத் தேவைகள் என்றுமே, எந்த அளவினதானாலும் பூர்த்தியாவதில்லை என்பதுதான் உண்மை, அதுவே ஒவ்வொருவரின் அனுபவம். 

இதில் சோகம் என்னவென்றால், தேவைகள் பூர்த்தியாகவே முடியாதனவாக இருப்பதால், எப்போதுமே ஒரு விரக்தி, ஏக்கம், குழப்பம், சோர்வு என்று எதிர்மறை உணர்வுகள் நமக்குள் வியாபிக்க ஆரம்பிக்கின்றன. கடமையாற்றுவது எதற்காக அல்லது யாருக்காக என்ற பயன்படுபொருளைக் கருதாமல் இயல்பாகப் பணியாற்றுவதாக இருத்தல் வேண்டும்.

பணம் சேர்க்கிறோம், பொருள் சேர்க்கிறோம். ஒரு கட்டத்தில் நம் தேவைக்கும் அதிகமாக சேர்க்கிறோம். அதற்குப் பிறகு துக்கப்படுகிறோம். எதற்கு? இன்னும் சேர்க்க வேண்டுமே என்ற வேட்கையாலும், அபிரிமிதமாக உள்ளவற்றைப் பாதுகாக்க வேண்டுமே என்ற பரிதவிப்பாலும்தான். ஏன் இப்படி? எதிர்காலப் பயம்தான் காரணம்.

இப்போதைய வசதிகளும், சுகங்களும் நீடித்திருக்க வேண்டும் என்பதோடு, அதிகரிக்கவும் வேண்டும் என்ற பேராசைதான். அவற்றை அனுபவிக்க மனம் இருக்கும், உடல்நலம் இருக்குமா, ஏன் ஆயுளே இருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கும்போது இந்த வேட்கைக்கு அர்த்தம்தான் என்ன? பணத்தையும், பொருளையும் அடிமையாக்குவது என்பதைப் பலரும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம்.

அதாவது, அவற்றை மிக அதிகளவில் சேகரித்து வைத்துக்கொண்டு அடிமைப்படுத்திவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் அடுத்தவரிடம் இருக்கும் பணமும், பொருளும் நம் கண்களை உறுத்துகின்றன. அவற்றையும் அடைந்து அவற்றையும் நம் அடிமைகளாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பொறாமைக்கு ஆட்படுகிறோம். 

ஆனால், இப்படி எத்தனை பேரிடமிருந்துதான் நம்மால் அவற்றைப் பறித்துக்கொள்ள முடியும்? இந்த அபகரிப்புக்கு முடிவுதான் எது? இந்த அஞ்ஞானத்தின் தகிப்பை நம்மால் தொடர்ந்து தாங்கிக் கொள்ள முடியுமா?

இதைவிட, எந்த அளவுக்கு அவற்றிடமிருந்து நாம் விலகி இருக்கிறோமோ, எந்த அளவுக்கு அவைமேல் ஆர்வம் காட்டாமல் இருக்கிறோமோ, அந்த அளவுக்கு அவை நமக்கு அடிமை என்பதுதானே உண்மை? நாம் விலகிப் போனால், அவை நம்மிடம் விரும்பி வரும். 

அவ்வாறு வருபவனவற்றையும் நாம் நம் தேவைக்கு மட்டுமே ஏற்றுக் கொண்டோமானால் அவை நமக்கு அடிமை. அதைவிட, அவற்றிடமிருந்து நாம் விடுதலை பெறுகிறோம் என்ற நிம்மதிதான் உண்மை. கரங்கள் கூப்பி இறைவனை வேண்டும்போதும், அது ஒரு யாசிப்பாக இருந்து விடாமல் இறைவனை நேசிப்பதாக இருக்குமானால், அந்த நிம்மதி எளிதாகக் கைகூடும்.

நிம்மதியின் விளக்கம் என்ன? ‘இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமே’ என்று தோன்றும்போதே சாப்பிடுவதை நிறுத்தமுடிகிறதா, அங்கே நிம்மதி பிறக்கிறது. பக்கத்து வீட்டுக்காரன் எத்தனை கார் வேண்டுமானாலும் வைத்திருக்கட்டும், நம்மால் நடந்துபோக ஆரோக்கியமான, வலுவான இரண்டு கால்கள் இருக்கின்றன என்ற எண்ணம் தோன்றுகிறதா, அங்கே நிம்மதி உருவாகிறது.
இது மனம் சார்ந்ததுதான் என்றாலும், அத்தகைய எண்ணம் தோன்றக்கூடுமானால், ஏக்கத்தை விளைவிக்கக்கூடிய மனம் காணாமல் போய்விடுகிறது, நிம்மதி மட்டுமே நிலைக்கிறது.

தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரச்னேன ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ்தத்வதர்சின (4:34)

‘‘அந்த ஞானத்தை நீ எப்படி அறிந்துகொள்வாய்? ஏற்கெனவே பூரண ஞானமுடையவரை நீ குருவாக அடைந்து அவர் மூலம் அதனைத் தெரிந்துகொள்ளலாம். அவ்வாறு அடையும் குருவைத் தாள் பணிந்து, அவருடைய கர்மாக்கள் நிறைவேற உறுதுணையாக இருந்து, கேள். கபடமில்லாத, நேர்மை மனத்தினனாக, சேவை மனப்பான்மையுடன் நீ அவரைச் சரணடைந்தாயானால், தான் அறிந்த அந்தத் தத்துவ ரகசியத்தை அவர் உனக்குப் போதிப்பார்.’’ பெரியவர்களுக்கு வணக்கம் செலுத்துவது, மரியாதை நிமித்தமானதுதான். 

அவ்வாறு வணங்கும் நம்மை அவர்கள் கனிவாகப் பார்த்தார்களென்றாலேயே அவர்களுடைய ஆசிர்வாதம் நம் உடலில் இறங்குகிறது என்று அர்த்தம். அவர்களை தண்டனிட்டு அவர்களுடைய பாதங்கள் தொட்டு வணங்குகிறோம் என்றால், நம் அகங்காரத்தை நாம் அவர்களிடம் சமர்ப்பித்து, மனத்தூய்மை பெறுகிறோம் என்று பொருள்.

அடிபணிவது என்பது பெரியவர்களை நாம் உயர்வாக மதிக்கிறோம் என்பதற்காக மட்டுமல்ல, அவர்களுடைய பாத ஸ்பரிசம் நம்மைப் பரிசுத்தவான்களாக ஆக்குவதற்காகவும்தான்.
ஆமாம், எந்த மனதிலிருந்து ஆணவம் அகல்கிறதோ, அந்த மனம் பரிசுத்தமடைகிறது. உயர்ந்தோரை அடி தொழுவது நம் பாரம்பரிய வழக்கமாக இருந்துவருகிறது. நாம் பல கடவுளர்களை வழிபடுகிறோம்.

ஒன்று முதல் பல தலைகள் கொண்ட தெய்வங்கள், ஒன்று முதல் பல கரங்கள் கொண்ட திருவுருவங்கள், பலவகை மனித ரூப அவதாரங்கள், பெண் தெய்வங்கள்… ஆனால், இந்த இறை உருவங்கள் எல்லாவற்றிற்கும் பொதுவான ஒன்று  பாதங்கள். எந்த தெய்வத்துக்கும் பிற உறுப்புகள் மாறுபட்டு இருந்தாலும், பாதங்கள் மட்டும் ஒரே மாதிரியானதாக அமைந்திருப்பது கவனிக்கத் தக்கது.

எந்த மதத்தவர், எந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றுபவர் என்று அறுதியிட முடியாத திருவள்ளுவர், தம் திருக்குறளில், ‘கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனில்’; ‘மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்’; ‘வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல’; ‘தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது’; ‘அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கல்லால் பிறவாழி நீந்தல் அரிது’; ‘கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை’; ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்’; ‘மடியிலா மன்னவன் எய்தும் அடி அளந்தான் தா அயது எல்லாம் ஒருங்கு….’ என்றெல்லாம் இறையடியைப் போற்றுகிறார்.

நம் முதியோர்களைப் பணிவது இறைவனைப் பணிவதற்கு ஒப்பாகும். குடும்பத்தில் நிலவும் இந்த பண்பு, குடும்பத்துக்கு வெளியேயும் பரவி, வயதுக்கும், அனுபவத்துக்கும் கொடுக்கும் மரியாதையாக விரிவடைகிறது. அதேபோல சிறு வயதிலிருந்தே கல்வி பயிற்றுவிக்கும் ஆசானுக்குப் பக்தி பூர்வமான மரியாதை செலுத்துவதாகவும் அமைகிறது. ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்ற சொற்றொடர், வணங்கத் தகுந்தவர்களை வரிசைப்படுத்துகிறது.

இதில் அவரவருக்கான பொறுப்புகளும் மறைமுகமாக வரையறுக்கப்பட்டுள்ளன. தான் ஏற்கும் கருவுக்கு உடல் கொடுத்து வளர்த்து, முழுமையாகப் பெற்றெடுத்து வளர்க்க வேண்டிய பொறுப்பு மாதாவுக்கு. தான் கொடுத்த உயிருக்கு வடிவம் கொடுத்து ஈன்ற தன் மனைவிக்கு நன்றி செலுத்தும் வகையாக அந்தக் குழந்தையைச் சமுதாயத்தில் நல்லோனாக உலவவிடும் பொறுப்பு பிதாவுக்கு.

அந்தக் குழந்தையை சான்றோனாக்கி, அவனுடைய குடும்பத்துக்கும், அவன் சார்ந்துள்ள சமுதாயத்துக்கும், ஏன் இந்த முழு உலகத்துக்குமே அவனைப் பயனுள்ளவனாக்கும் பொறுப்பு குருவுக்கு. இத்தகைய மாதா, பிதா, குரு ஆகிய மூவரையும் அந்தக் குழந்தையுடன் தொடர்புகொள்ள வைக்கும் பொறுப்பு இறைவனுக்கு. 

மாதா, பிதா மற்றும் இறைவன் மூவருக்கும் அந்தக் குழந்தையைப் பொறுத்தவரையில், தாம் படைத்ததால் அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் உண்டு. ஆனால், குருவுக்கு, அவனை நல்ல மாணாக்கனாக, நல்ல குடிமகனாக உருவாக்குவதால் அவருக்குத் தனிப்பட்ட முறையில் எந்த லாபமோ, ஆதாயமோ இல்லை.

அவரால் சரியான அடித்தளமிடப்பட்டு, மிக உயர்ந்தநிலைக்கு வந்த எத்தனை பேர் அவரை நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள், அவருடன் நீடித்த தொடர்பு வைத்துக்கொண்டிருக்கிறார்கள், தன்னுடைய இந்த உயர்நிலைக்கு அடிப்படைக் காரணமான அவருக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்? ஆனால், குரு இதையெல்லாம் எதிர்பார்ப்பதில்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால் அத்தகைய குரு ஒரு ஞானியாகவும் விளங்குகிறாரே, அதனால்தான்! அப்படிப்பட்ட குருவைச் சரணடைந்தால் தத்துவ ரகசியங்களைத் தானாகத்
தெரிந்துகொள்ளலாம் என்று அறிவுறுத்து கிறார் கிருஷ்ணன்.

அதேபோல இறைவனை சரணடைவது என்றால் அவனுடைய பாதத்தில் சிரம் பதித்து, ‘நான்’, ‘எனது’ போன்ற அகங்காரங்களை சமர்ப்பித்து, விடுதலையையும், மனத்தெளிவையும் பெறுவதுதான். உடல் மடித்து, சிரம் தாழ்த்தி வணங்கும்போது நம் அசுர குணங்கள் எல்லாமும் கீழிறங்கி காணாமல் போய்விடுகின்றன. தான் வணங்குபவர் தன்னைவிட மிக உயர்ந்தவர் என்ற எண்ணம் நம் அகந்தையை அழுத்தி நசுக்கி விடுகிறது.

‘பெரியவர்களின் பாதங்களை நம் கை விரல்களால் தொட்டு நாம் வணங்கும்போது, அவர்களுடைய ஞானத்திற்கு மரியாதை அளிக்கிறோம், அவர்களுடைய போதனைகளை நாம் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல உறுதி கொள்கிறோம்,’ என்று அதர்வண வேதம் விளக்குகிறது. அவ்வாறு பாதங்களைத் தொடும்போது இருவரையும் இணைத்து ஒரு சக்தி வட்டம் உருவாகிறது.

தொடுபவர், தொடப்படுபவர் இருவரின் உள் ஆற்றலும் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. இதனால் இரு மனங்கள், இதயங்கள், மூளைகளுக்கும் இடையேயான அண்ட சக்தி அதிகரிக்கிறது. பெரியவர்களிடமிருந்து ஆக்கபூர்வ அதிர்வுகள் நம்முள் இறங்குகின்றன. அதோடு பெரியவர்களின் பாதங்களைத் தொடும் இயக்கமானது யோகா பயிற்சி போன்றது. நம் முதுகெலும்புக்கான பயிற்சி அது!

இன்று நாம் அவ்வாறு வணங்குவதற்கு கௌரவம் பார்க்கிறோம், அல்லது நாமாக, பெரியவர்களைக் குறைவாக மதிப்பிட்டு விடுகிறோம். கல்வி, பதவி, மூத்த உறவு என்ற தகுதிகளையெல்லாம் ஒதுக்கி வைத்தாலும், அவர்களுடைய வயது, அவர்களுடைய அனுபவங்கள், அது அவர்களுக்குக் கற்றுத் தந்திருக்கக்கூடிய பாடங்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தந்தாவது அவர்களை வணங்குதல்தான் சரி. பக்தியைப் பொறுத்தவரை, கோயிலில் வலம் வருகிறோம். நிறைவாகக் கொடிமரத்தடியில் நிலத்தில் மேனி படர சர்வாங்க நமஸ்காரம் செய்கிறோம். இது பக்தியின் ‘சரணாகதி’ தத்துவத்தின் ஒருவெளிப்பாடு.

(கீதை இசைக்கும்)