சீர்



‘‘ஐயாவை கும்பிட்டுக்கம்மா... உன் கண்ணாலத்தை நடத்தி வச்ச குலசாமி இது!’’ - கண் கலங்கக் கூறினான் துரை. கடன் வாங்கியும் பெண்ணைக் கரை சேர்க்க முடியாத தவிப்பில் இருந்த துரைக்கு கணிசமாய் உதவி செய்து, திருமணத்தை நடத்திக் கொடுத்தார் நடேசன். ‘‘எம் பொண்ணு வாழ்க்கைல வௌக்கு ஏத்தி வெச்சீங்க. ஐயாவோட பொண்ணு, புள்ளையெல்லாம் நூறாண்டு சந்தோஷமா வாழணும்’’ என நெகிழ்ந்த துரையின் குடும்பத்துக்கு அவர் மௌனமாய் விடை கொடுத்தனுப்பவும், பார்த்துக் கொண்டிருந்த மனைவி பங்கஜத்தால் பொறுக்க முடியவில்லை.

‘‘ஏங்க! காதல் கல்யாணம் செஞ்சிட்டு ஓடிப் போன உங்க பொண்ணுக்கு சொத்து எதுவும் மிச்சம் இருக்கக்கூடாதுன்னுதானே, ஊருக்கெல்லாம் எடுத்துக் குடுக்கறீங்க. இது இந்த மாசம் நீங்க நடத்தின மூணாவது கல்யாணம்’’ - விசும்பலில் அவள் குரல் தேய்ந்தது. ‘‘பைத்தியம்! உன் பொண்ணுக்கு காசும் பணமுமா வேணும்? எவனோ ஒருத்தனை நம்பி, தெரியாத ஊருக்குப் போயிருக்கிற அவளுக்கு நிறைய ஆசிதான் தேவை. அவன் என்ன சொன்னான் பாத்தியா?

உன் பொண்ணு சந்தோஷமா, நூறாண்டு வாழணும்னு! அந்த ஆசியைத்தான் அவளுக்கு சீரா சேர்த்துட்டு இருக்கேன். இந்த காசை வச்சி அந்த வாழ்த்தை வாங்கிட்டு இருக்கேன். இது  அவள காப்பாத்தாதா?’’- வேதனையின் விலாசமாய் வந்த அச்சொற்களில் தந்தையின் பரிசு மேலோங்கியிருந்தது.

-மல்லிகா குரு