சஸ்பென்ஸ்



‘‘அந்த குட்டைப் பாவாடை பெண்ணை பாத்தியா ராம்? ரொம்ப அசிங்கமா இல்லை?’’ - தான் காதலிக்கும் ராமைக் கேட்டாள் வசந்தி. ‘‘ஆபாசம் நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்கு. எனக்கு அவள் டிரஸ் ஆபாசமா தெரியலை...’’ - ராம் முகத்தைத் திருப்பி வசந்தியிடம் சொன்னான். ‘ராமை நம்பிக் காதலிக்கலாம். அவருக்கு சபல புத்தி இல்லை...’ வசந்தி மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.

‘‘ராம், உங்க ஆபீஸ் ரேணுகா அவள் லவ்வரோட காரில் போறாங்க. பாக்கல?’’ - வசந்தி கேட்டாள். ‘‘பார்த்தேன்! உன்னை என் பைக்கில் வைத்துக் கூட்டிக்கொண்டு போகத்தான் ஆசை. என் இடுப்பை கட்டிப்பே இல்லை?’’ - சிரித்தபடி சொன்னான். ‘‘ராமுக்கு பொறாமை இல்லை. அவனை காதலிப்பதைத் தொடரலாம்’ - வசந்தி மனதில் உறுதி செய்தாள்.

வசந்தியின் மொபைல் அடித்தது. எடுத்துப் பேசினாள். ‘‘வசந்தி நியூஸ் பாத்தியா? காதல் தோல்வியில் ஒரு பெண் ஆறாவது மாடியில் இருந்து குதிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டாளாம்...’’ - ராமு சொன்னான். ‘‘பார்த்தேன்! அவள் கோழை... காதலுக்காக  உயிரையா விடுவாள்? ஸ்டுப்பிட்’’ என்று கத்தினாள். ‘வசந்தியை நம்பலாம்... தற்கொலை செய்துகொள்ள மாட்டாள்...’ - ராமு மனதை தைரியப்படுத்திக்கொண்டு பேசுவதைத் தொடர்ந்தான். ‘‘நம்ம காதல் என் அப்பா-அம்மாவுக்குப் பிடிக்கலை... என்னை மறந்துவிடு வசந்தி!’’ என்று சொல்லிவிட்டு மொபைலை அணைத்தான்.

-எஸ்.ராமன்