சஸ்பென்ஸ்



‘‘உன்னை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை ஹைடெக்கா இருக்கார். பாங்க் அக்கவுன்ட் முதல் டாக்ஸி புக்கிங் வரை எல்லாத்துக்கும் மொபைல் ஆப் வச்சுருப்பதைக் காட்டினார். சமையல் ரெசிபியில் ஆரம்பிச்சு, கேம்ஸ் வரை தனக்கு தன் பிள்ளை பல ஆப்களைப் போட்டு வாழ்க்கையை எளிமையாகவும், இனிமையாகவும் ஆக்கியிருப்பதை அவரோட அம்மா பெருமையா சொன்னாங்க. நல்லா சம்பாதிப்பதோடு, சொந்த வீடும் இருக்கு. உனக்கு சம்மதம்னா, நிச்சயத்துக்கு தேதி குறிச்சுடலாம்’’ - லீலா தன் மகள் ஷீலாவிடம் ஆவலோடு கேட்டாள். ‘‘ஒரு நாள் டைம் கொடுங்கம்மா’’ என்று சஸ்பென்ஸ் வைத்தாள் ஷீலா.

மறுநாள் சஸ்பென்ஸை உடைத்து விளக்கினாள். ‘‘மனைவியை ரகசியமாக கண்காணிப்பதற்கு உதவும் புதிய ஆப்ஸ். புதிதாகத் திருமணமானவர்களுக்கு பேருதவியாக இருக்கும். இந்த ஆப்பை இயக்குவதற்கு, லிங்க்கை க்ளிக் செய்யவும்’னு அவருடைய மொபைலுக்கு கம்ப்யூட்டர் உதவியோட செய்தி அனுப்பினேன்.

நான் கற்பனையாக உருவாக்கிய இந்த ஆப்பில் அவருக்கு நாட்டம் இருப்பதற்கு அடையாளமாக அந்த லிங்க் க்ளிக் செய்யப்பட்டிருப்பதை என் கம்ப்யூட்டரில் பார்க்க முடிந்தது. அதிலிருந்து, அவர் சந்தேகப் பேர்வழி என்று அறிய முடிந்தது. என்னதான் வெளியே ‘ஹைடெக்காக’ இருந்தாலும், மனைவியை சந்தேகப்படும் ‘லோடெக்’ மனசு கொண்டவரை திருமணம் செய்துகொண்டால், வாழ்க்கை வைரஸ் நிரம்பியதாகி விடும்’’ என்றாள் ஷீலா. 

-எஸ்.ராமன்