ரகசிய விதிகள்



அட்டகாசத் தொடர்

-சுபா

வக்கீல் ராகவானந்தம் தடுக்கப் பார்த்தபோதும், இன்ஸ்பெக்டர் துரை அரசன் அவரை அலட்சியம் செய்து தீபக்கின் அம்மாவை அன்புடன் நோக்கினார்.

ராகவானந்தம் அடுத்து அந்த அம்மாளின் அருகில் வந்து, “அம்மா, நீங்க போய் ரெஸ்ட் எடுங்க...” என்று சொல்லிப் பார்த்தார். துரை அரசன் அவரைத் திரும்பிப் பார்த்து முறைத்தார். ‘‘நீங்க ஏன் சார் டென்ஷனாகறீங்க..? அவங்க நோயாளினு நீங்களே சொல்றீங்க..! ஏதோ என்னைப் பார்த்து அவங்களுக்கு ஒரு தொடர்பு இருக்கறதா நினைக்கறாங்க. யூனிஃபார்ம் போட்டாலும், நானும் ஒரு தாய்க்கு மகன்தான் சார்.

மனிதாபிமான அடிப்படையிலகூட இவங்ககிட்ட நான் பேசக் கூடாதா..?” வக்கீல் குறுக்கிட்டதை அந்த அம்மாள் அலட்சியம் செய்தாள். துரை அரசனின் கையைப் பிடித்து இழுத்துப் போய் தன் கட்டிலில் அமர்த்தினாள். அவரே எதிர்பாராத நேரத்தில் சட்டென அவர் மடியில் தலை வைத்துக்கொண்டாள். துரை அரசன் விறைப்பான காக்கி உடுப்புக்குள் தான் நெகிழ்ந்து போவதை உணர்ந்தார். அந்த நரைத்த கூந்தலை அமைதியாக வருடிக் கொடுத்தார்.

“நான் உங்க மகனைப் பார்க்க வந்தேன்மா..!” “தீபக் இங்கதான் இருந்தான்... இப்பதானே வந்து என்னைப் பார்த்துட்டுப் போனான்..!” என்றாள், தனது கண்களைப் படபடவென்று சிமிட்டியபடி. அவளுடைய கன்னத்தில் ஒரு மருவும், அதிலிருந்து விறைப்பாக ஒரு முடியும் துல்லியமாகத் தெரிந்தன. தீபக்கின் பி.ஏ. தர்மதுரை பதற்றமாக அருகில் வந்தான். “இன்ஸ்பெக்டர்! எங்க தீபக் சார் இந்த வீட்ல இருக்கறவங்கள்லகூட யாரையும் தன் அம்மாகிட்ட நெருங்க விட மாட்டாங்க. இது சரியில்லை! நீங்க ஏதாவது சொல்லிட்டு அங்கேயிருந்து எழுந்திருங்க...” என்று படபடத்தான்.

துரை அரசன் அவன் பக்கம் திரும்பினார். “தீபக் தர்மசேனா நேத்தே ஆஸ்பத்திரில அட்மிட் ஆயிட்டதா நீங்க சொன்னீங்க. இன்னிக்குக்கூட இங்க இருந்ததா இவங்க சொல்றாங்க. கண்காணிச்சிட்டிருந்த போலீஸ் பொய் சொல்லுதா..? நீங்க பொய் சொல்றீங்களா..? இல்ல, இவங்க பொய் சொல்றாங்களா..?” “இவங்க சொல்றதை எல்லாம் எடுத்துக்க முடியாது. இவங்களுக்கு ஞாபகமறதி அதிகம்...” இந்த விவாதங்களைக் காதில் வாங்காதவளாக, “ரத்னம்... அம்மாலாம் நல்லா இருக்காங்களா..?” என்று அந்த அம்மாள் துரை அரசனைக் கேட்டாள்.

துரை அரசன் அவளுடைய தலையை மெல்ல வருடிக் கொடுத்தார். “உங்க பேரென்னம்மா..?” “உங்கம்மாவுக்குத் தெரியும். நீ மறந்துட்டியா..? சொர்ண திலகம்...” என்றாள் அவள். “உங்க கணவர் பேரு ஞாபகம் இருக்கா..?” “அதெப்படி மறக்கும்..? குமாரசாமி...” என்று சொல்கையில் அவள் முகத்தில் சிறு வெட்கம். “ஓ! நீங்க பொறந்த தேதி நெனைவிருக்கா..?” “இன்ஸ்பெக்டர், எதுக்கு அவங்ககிட்ட விசாரணை பண்றீங்க..?” என்று ராகவானந்தம் பேச்சின் குறுக்கில் நுழைந்தார்.

அந்த அம்மாள் தலையை நிமிர்ந்து, “எங்களை டிஸ்டர்ப் பண்ணாத!” என்று கண்டிப்பான குரலில் அவரைப் பார்த்துச் சொன்னாள். “எனக்கு அஞ்சு வயசு இருக்கும்போதுதான் இந்தியாவுக்கு சுதந்திரம் கெடைச்சுது. நான் பொறந்தது, ஆகஸ்ட் ஆறு, 1942...” “நன்றிம்மா...” என்ற துரை அரசன், “ஒரு போன் பண்ணிக்கறேம்மா...” என சொன்னபடி சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாருக்கு போன் செய்தார். “நான் சொல்ற தேதியைக் குறிச்சுக்கங்க... அதுல தேதியோ, மாசமோ, வருஷமோ முதல்ல வர்ற மாதிரி மாத்தி மாத்தி நம்பர் காம்பினேஷன் போட்டுப் பாருங்க... கோல்டு ஸ்டோரேஜ் ரூம் கதவைத் திறக்க முடியுதான்னு ட்ரை பண்ணுங்க!” என்றார்.

“ஓகே சார்...” என்றார் சுகுமார், மறுமுனையில் உற்சாகமாகி. வக்கீல் ராகவானந்தம் பதறுவது கண்கூடாகத் தெரிந்தது. “சுகுமார்... பக்கத்துல ஒரு வீடியோகிராஃபரை வெச்சுக்கங்க. நாம வைக்கற ஒவ்வொரு அடியும், வீடியோவுல தெளிவாப் பதிவாகணும். சட்டத்தை மீறி எதுவும் செஞ்சதா நாளைக்குப் பிரச்னை வரக் கூடாது...” “சரி, சார்...” துரை அரசன் போனை அணைத்துவிட்டு, அந்த அம்மாளின் கன்னத்தை வருடி, “இந்த வீட்டை சுத்திப் பார்த்துட்டு வரேன்மா...” என்றார்.

“சரி, ரத்னம்... இது உன் வீடு மாதிரி!” என்று அவள் எழுந்துகொண்டாள். நந்தினி தவிப்போடு அவளுடைய அத்தை மகன் ஜெயசூர்யாவின் எதிரில் அமர்ந்திருந்தாள். ஜெயசூர்யாவுக்கு உயரமான முருங்கைக்காய் போன்ற மெலிதான தோற்றம். அவனுடைய விரல்கள் கம்ப்யூட்டரை இயக்குவதற்காகவே வளர்க்கப்பட்டவை. அவன் மூளை கம்ப்யூட்டரின் மென்மொழிகளை எழுத்தெழுத்தாகப் பிரித்துப் புரிந்துகொள்வதற்காகவே தயார் செய்யப்பட்டது.

விஜய் அனுப்பியிருந்த ஃபோல்டர்களை பென் டிரைவில் கொடுத்து, நந்தினி அவனை சவாலுக்கு இழுத்திருந்தாள். “பாஸ்வேர்டு என்னனு கேக்குது... யாருக்கும் தெரியாது... இந்த ஃபோல்டரைத் திறக்க முடியுமா..?” “முடியாதுனு ஒரு வார்த்தையே என் அகராதில கெடையாது...” என்று தலையைச் சிலிர்த்துக்கொண்டான் ஜெயசூர்யா. “இதை யார் ஹேண்டில் பண்ணாங்கனு ஏதாவது க்ளூ குடுக்க முடியுமா..?” “அமெரிக்காவுல ரகசியமா வெச்சிருந்த ஃபைல்ஸ்... வெச்சிருந்தவன் பேரு, பத்ரி!” “Badri-யா... Bhadri-யா... இல்ல, Badhri-யா..?” என்று ஜெயசூர்யா எழுத்துகளை மாற்றி மாற்றிக் கேட்டான்.

“ஏய், அதெல்லாம் எனக்குத் தெரியாது!” “ஓகே... வெயிட்!” என்று ஜெயசூர்யா படபடவென்று கீ போர்டைத் தட்ட ஆரம்பித்தான். நந்தினி, கொட்டாவி விட்டுக்கொண்டு அவனருகில் அமர்ந்திருந்தாள். இன்ஸ்பெக்டர் துரை அரசன் அந்த இயற்கை ஓவியத்தை நகர்த்தினார். ஓவியத்தின் பின்னால் சுவரில் பதிந்து, ஒளிந்திருந்த இரும்பு லாக்கர் கண்ணில் பட்டது. அந்த லாக்கருக்கும் நம்பர் காம்பினேஷன் கொண்ட பூட்டு இருப்பதை கவனித்தார். இன்ஸ்பெக்டர் துரை அரசன் தன்னுடன் வந்திருந்த அதிகாரிகளை அழைத்தார்.

“இந்தப் பூட்டுக்கு சீல் வைங்க... போலீஸ் பர்மிஷன் இல்லாம இதைத் திறக்கக் கூடாது! வக்கீல் சார், உங்க முன்னிலைலதான் எல்லாம் செய்யறோம்... ஓகே?” ராகவானந்தம் எல்லாம் தன் கைமீறிப் போவதை கவனித்தபடி நாற்காலியில் அமர்ந்திருந்தார். சான் ஃப்ரான்சிஸ்கோ. அதிகாலை... பத்ரிக்கு விழிப்பு வந்தது. சட்டென்று எழுந்தான். தலை லேசாக வலித்தது. விஸ்கியின் தாக்கம் என்று உணர்ந்தான்.

தலைமாட்டில் இருந்த தன் தோல் பையை எடுத்துக்கொண்டு சோஃபாவிலிருந்து இறங்கினான். காலைக் கீழே பதித்ததும், ஏதோ உறுத்தியது. குனிந்து பார்த்தான். சோஃபாவுக்கு அடியில் பாதி ஒளிந்திருந்த பென் ட்ரைவின் முனை! ‘அடடா, இது கீழே விழுந்துவிட்டதா..?’ என்று அதை எடுத்து, தோல் பையில் பத்திரப்படுத்தினான். உள்ளறையில் உறங்கிக்கொண்டிருந்த விஜய்யை எழுப்பினான். “ஏம்ப்பா! நான் தூங்கிட்டாகூட, நீ எழுப்பி வீட்டுக்குப் போகச் சொல்லியிருக்கலாம், இல்ல..?” “தூங்கியிருந்தா சொல்லலாம்... போதைல மயக்கமாகிக் கிடக்கறவங்ககிட்ட எப்படிச் சொல்ல முடியும்..?” என்றான் விஜய், கண்களைக் கசக்கியபடி.

“இந்த பென் ட்ரைவ் எப்படி வெளிய வந்தது..?” “அதான் பை விழுந்து, எல்லாம் சிதறிச்சே... நீங்க பொறுக்கி எடுத்துக்கிட்டீங்களே..!” “சரி... இன்னிக்கு வேற ஒருத்தரை பதினோரு மணிக்கு மேல நாம பார்க்கப் போறோம். ரெடியா இரு... நான் வீட்டுக்குப் போய் குளிச்சுட்டு வந்துடறேன்...” என்று பத்ரி புறப்பட்டுப் போனான். பென் டிரைவில் இருந்ததை காப்பி செய்துகொண்டு, அதை பத்ரி கண்டெடுக்கும் இடத்திலேயே போட்டு வைத்தது நல்லதாகப் போயிற்று என்று நினைத்துக்கொண்டு விஜய் எழுந்தான்.

இன்ஸ்பெக்டர் துரை அரசன், தேடலில் தனக்குக் கிடைத்த ஆவணங்களை வரிசைப்படுத்திக் குறித்து வக்கீலிடம் பட்டியலை ஒப்படைத்தார். சுலபமாகத் திறக்க முடியாத சில அறைகளுக்கும், அலமாரிகளுக்கும் சீல் வைத்தார். புறப்படலாம் என்று முடிவு செய்தபோது, தீபக் தர்மசேனாவின் அம்மா இருந்த அறைக்குப் போனார். “அம்மா, நான் உங்களை மறுபடியும் வந்து சந்திப்பேன்... உங்ககூட நிறைய நேரம் பேசணும்... இப்ப கொஞ்சம் அவசர வேலையாப் போக வேண்டியிருக்கு...” என்று அன்பான குரலில் சொன்னார்.

நர்ஸை நகர்த்தி அந்த அம்மாள் தலையை உயர்த்திப் பார்த்தாள். ஆசையுடன் புன்னகைத்தாள். “எப்ப வந்தாலும், என்னைப் பார்க்காம போகாத! வீட்ல மாலினியையும், ராஜு குட்டியையும் விசாரிச்சேன்னு சொல்லு..!” “சரிம்மா...” என்று துரை அரசன் விடைபெற்றார். மருத்துவமனை. இன்ஸ்பெக்டர் துரை அரசன், மருத்துவருக்கு எதிரில் அமர்ந்திருந்தார். மருத்துவ நண்பர், “தீபக் தர்மசேனாவை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணாதீங்க... ஹார்ட் வீக்கா இருக்கு!” என்று சொன்னார். ஒரு செவிலியை அழைத்து, தீபக் தர்மசேனா இருந்த தனியறைக்கு இன்ஸ்பெக்டரைக் கூட்டிப் போகச் சொன்னார்.

தீபக் தர்மசேனா கட்டிலில் ஒருக்களித்துப் படுத்தார். “வாங்க இன்ஸ்பெக்டர்! என்ன தப்பு பண்ணினேன்னு  என்னை கண்காணிக்க ஏற்பாடு பண்றீங்க... எதுக்கு இந்த விசாரணை?” “பெரிய பிரச்னை எதுவும் இருக்கக்கூடாதுனுதான் நானும் ஆசைப்படறேன், தீபக் சார். உங்க கோல்டு ஸ்டோரேஜ்ல இருக்கற லாக்கர் ரூமைத் திறக்க அனுமதி வாங்கி வந்திருக்கேன். அதுக்கான நம்பர் உங்களுக்குத்தான் தெரியும்னு சொன்னாங்க...” “மீன்களை ஸ்டாக் பண்ற ரூமை எதுக்கு நான் போலீஸுக்குத் திறந்து காட்டணும்..?”

“சந்தேகத்தின் பேர்ல நாங்க சில கேள்விகள் கேட்க முடியும். உண்மையான பதில்கள் சொல்ல வேண்டியது உங்க பொறுப்பு, கடமை! நீங்க நல்லா இருந்தா உங்களையே கூட்டிட்டுப் போய் திறக்கச் சொல்வேன். அட்லீஸ்ட் அந்த லாக்கர் கதவுக்கான நம்பர் என்னனு சொல்லுங்க!” “அதை நான் ஞாபகத்துல வெச்சிக்கல... வீட்ல ஒரு இடத்துல குறிப்பா எழுதி வெச்சிருக்கேன். நான் நேரடியா வந்தாதான் அதை எடுக்க முடியும்...” என்றார் தீபக் தர்மசேனா.

இன்ஸ்பெக்டர் துரை அரசன் சற்றே பொறுமையிழந்தார். “நீங்க நேரத்தைக் கடத்தலாம், நாளைக் கடத்தலாம். ஆனா, உங்க குற்றத்துலேர்ந்து தப்பிக்க முடியாது. எவ்வளவு வருஷம் ஆனாலும், உங்ககிட்டேர்ந்து உண்மைகளை வாங்கற வரைக்கும் போலீஸ் உங்க நிழலாதான் இருக்கும்...” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, சப் இன்ஸ்பெக்டர் சுகுமாரிடமிருந்து போன் வந்தது.

“சார், நீங்க சொன்ன தேதில வருஷத்தை மொதல்ல போட்டு முயற்சி பண்ணின நம்பர் காம்பினேஷன் வேலை செய்யுது... ஸ்டோரேஜ் ரூம் பூட்டைத் திறக்க முடியுது!” “எக்ஸலன்ட்! வீடியோ எடுத்திட்டே உள்ள போங்க... நானும் வந்து சேர்றேன்...” என்றார் துரை அரசன். “உங்க அம்மாவோட பொறந்த தேதியை நம்பர் லாக்கா வெச்சிருப்பீங்கனு யூகிச்சேன்... கரெக்டா இருக்காம்!” என்று தீபக் தர்மசேனாவிடம் சொல்லிவிட்டு துரை அரசன் எழுந்தார். தீபக் தர்மசேனா அதிர்ந்து பார்த்தார்.

அதே மருத்துவமனை. தலைமை மருத்துவரின் போன் ஒலித்தது. “தீபக் தர்மசேனாகிட்ட குடுங்க...” என்று கனமான குரல் வந்தது. மருத்துவர், அறை வாசலில் இருந்த காவலர்களைத் தாண்டி தீபக்கின் அறைக்குள் நுழைந்தார். போனை தீபக் தர்மசேனாவிடம் கொடுத்தார். “நான்தான் பேசறேன்..!” என்றது எதிர்முனை. தீபக் தர்மசேனா உடனே விறைத்தார். பேசியது குணாளன் என்று அவருக்கு உடனடியாகப் புரிந்தது. “டாக்டர், போன் பேசிட்டு நானே கூப்புடறேன்...” என்றார்.

மருத்துவர் வெளியேறியதும், “சொல்லுங்க...” என்றார், போனில். “போலீஸ் லாக்கர் ரூமைத் திறந்து உள்ள நுழைஞ்சாச்சு... அடுத்தது, உன்னை அரெஸ்ட் பண்ணுவாங்க!” என்றது, குணாளனின் குரல். “எனக்கு என்ன நடந்தாலும், உங்க பேரை நான் சொல்ல மாட்டேன்...” என்று தீபக் உறுதியளிக்கும் குரலில் சொன்னார். “அது எனக்குத் தெரியும். அதுக்கு முன்னால, போலீஸை திசை திருப்ப சில விஷயங்கள் நீ செய்யணும்...” “சொல்லுங்க...” “ஏற்கனவே அரவமணி நல்லூர் நடராஜரை கொள்ளை அடிச்சபோது சந்தேகத்துல மாட்டின விஜய், இப்போ சான் ஃப்ரான்சிஸ்கோல இருக்கான். அவன், டாம் பெக்கர் அப்படின்னு ஒருத்தரைப் பார்த்துப் பேசியிருக்கான்.

அவரோட செல்ஃபி எடுத்துட்டிருக்கறான். அந்த செல்ஃபி போட்டோ இப்ப உனக்கு வந்து சேரும். அந்த போட்டோவை போலீஸ்ல காட்டு... விஜய்தான் சிற்பங்களைக் கொள்ளையடிக்கறதுக்கு உனக்குத் துணை போறவன்னு அடிச்சு விடு! ‘இப்பகூட அமெரிக்காவுக்கு அந்த பிசினஸ் பேசத்தான் போயிருக்கான்’னு சொல்லு... ஆதாரமா அந்த போட்டோவைக் காட்டு!

போலீஸ் அவனைப் பிடிக்கட்டும்... தோண்டட்டும்... துருவட்டும்... விசாரிக்கட்டும்... அந்த நேரத்துக்குள்ள இந்த சிக்கல்லேர்ந்து நீயும், நானும் எப்படி தப்பிக்கலாம்னு என் லாயர் முடிவு செய்வாரு. எதுக்கும் நீ முன் ஜாமீன் வாங்கிடு!”குணாளன் சொல்வதை தீபக் முழு கவனத்துடன் கேட்டார்.

 (தொடரும்...)

ஓவியம்: அரஸ்