உறவெனும் திரைக்கதை



ஈரோடு கதிர்

கடலுக்கடியிலும் நிலம்தான்! வாழ்க்கைப் பயணத்தில் நாம் சார்ந்திருக்கும், கடந்துவரும் அனைத்துமே நம் வாழ்வின்  குறிப்பிடத்தகுந்த அங்கங்களாய் மாறிவிடுகின்றன. வாழ்க்கையெனும் மேடையில் தவிர்க்கவியலாத கதாபாத்திரங்களான நட்புகள், உறவுகள், தொழில், பதவிகள், சொத்து, அந்தஸ்து, வாகனங்கள் உள்ளிட்டவற்றில் ‘நிலம்’ மிக வலுவான கதாபாத்திரம். நூறு வருடங்களில் தங்கத்தின் விலை சுமார் ஆயிரம் மடங்கு மட்டுமே உயர்ந்திருக்கும் நிலையில், நிலத்தின் விலை சுமாராக லட்சக்கணக்கான மடங்கு உயர்ந்துள்ளது என யோசிக்கையில், நிலத்தின் வீம்பான வளர்ச்சி மிகப்பெரிய மிரட்சியை ஏற்படுத்துகின்றது.

எதையும் விட நிலத்திற்கு எதிராக மிக மோசமான அளவிற்குத்  தன் மதிப்பைத் தொடர்ந்து பணம் இழந்து வந்திருக்கின்றது. ஆழ்ந்து யோசிக்கையில், நிலம் தொடர்பான விஷயங்களில் பணத்தைவிட அடிப்படை குணங்களும், அறமும், மனிதமும் கூட பெருமளவில் மதிப்பை இழந்திருக்கின்றன. தமிழகத்தையும், கர்நாடகாவையும் இணைக்க மேற்குத் தொடர்ச்சி மலை வழியே சில நெடுஞ்சாலைகள் உண்டு.

அவ்வழிகளில் பூர்வகுடி மக்கள் வசிக்கும் கிராமங்கள் உண்டு. சமநிலத்தைவிடச் செம்மையான தட்பவெப்பம், சுத்தமான காற்று, குறிப்பிடத் தகுந்த அளவிலான மழை, இந்த கிராமங்களின் அடையாளம். அந்தத் தட்பவெப்பமே அக்கிராமங்கள் தம் கூறுகள் அனைத்தையும் தொலைத்து வேற்றுப் பகுதி மக்கள் புழங்கும் ஒரு பகுதிக்கான ஒப்பனைகளைப் பூசிக்கொள்ளக் காரணமாயிருக்கிறது. அந்தக் கிராமங்களின் வேர்களாகவும், கிளைகளாகவும் இருந்த அந்த மண்ணின் பூர்வகுடிகள் இப்போது எங்கே, என்ன செய்கிறார்கள் எனும் கேள்விகளுக்கு பதில் தேட யாருக்கு தைரியம் இருக்கின்றது?

யாரும் எங்கும் நிலம் வாங்க இங்கு உரிமையுண்டு. முதலீடு, வியாபார உத்திக்காக அப்படியான நிலமொன்றை வாங்குவது எவ்வகையிலும் கடினமான காரியமில்லை. பழங்குடிகளின் மடியாய் இருக்கும் வனம் சார்ந்த இடங்களைத் தட்டிப் பறிப்பது எளிதான ஒன்று. அரசாங்கமே அதை விதவிதமாய் நிகழ்த்துகிறது.

கருங்குரங்கு காட்டெருமை
கவரிமான் யானை பூனை
புலி சிறுத்தை முயல் நரி
புணர்ந்து புள்ளகுட்டியீன்று
தனதாய் வாழ்ந்த வனத்தை
தகரத்தில் பறையடித்து
வெடி போட்டு
தீ மூட்டி ஓடவிரட்டி
செடிகளைச் சிதைத்து
மரங்களை முறித்து
வெட்டித் தோண்டி
பெயர்த்துப் புரட்டி
மேடுபள்ளம் நிரவி
எல்லைக்கல் நிறுத்தி
யாம் சமைத்த எம் பூமியிது...
இத்தனை காலம் பிழைத்த
எம் நிலங்களை விட்டோட
எண்ணிக்கையிலடங்காக்
காரணங்கள் இல்லை
ஓடிச்செத்த ஒரு சினை மானோ
கதறலோடு கருகிய
காட்டெருமைக் கன்றோ
கடைசி மூச்சில் உதிர்த்த
ஒற்றைச் சாபம் போதும்!

இந்த  தட்டிப் பறித்தலுக்கு உறுதுணையாய், அந்த நிலத்தைச் சார்ந்தவர்களே இருப்பதுதான் நகைமுரண். வனத்திற்குள் இருந்து பணத்தின் போதையறிந்த ஒரு கோடரிக் காம்பு புறப்படும். பண போதையில் அறம் மறந்துபோகும், தறிகெட்ட ஆட்டமும் கூடும். பருத்து உயர்ந்து நிற்கும் மரங்கள்தோறும் தன் கூர்மையைப் பாய்ச்சும். தம் மக்களின் பூர்வீக அடையாளத்தை, வேர்களை விற்கத் தூண்டுவோரும், விற்பனைகளில் தரகு வேலை செய்வோரும் கற்றுக்கொள்ளும் பணம் சார்ந்த புது மொழி, அலாதியான போதையையும், மின்னல் போன்று நம்பிக்கை வெளிச்சத்தையும் காட்டுபவை.

சீண்டப்படாமல் கிடந்த நிலச்சரிவுகள், விளைச்சல் பூமிகள்  கையகப்படுத்தப்பட்டு, அங்கு ஓய்வு மாளிகைகள் எழும்புகின்றன. ஓய்வெடுக்கக் கொண்டாட்டமாய் வரும் நகரத்து மக்கள், புதிதானதொரு வாழ்க்கை முறையை அங்கிருக்கும் மனிதர்களுக்குப் பரிசளித்துவிட்டுச் செல்கின்றனர். வனத்துறையின் கெடுபிடிகள், காட்டு விலங்குகளின் நெருக்கடிகள் உள்ளிட்டவற்றில் உழன்ற மக்கள், தெரிந்தோ தெரியாமலோ தங்கள் நிலங்களை விற்றுவிட்டு, அங்கேயே அடிமைகளாக, கூலிகளாகத் தங்களைத் தகவமைத்துக் கொண்டுள்ளதையும் காண
முடியும்.

இன்றைய பிரமாண்டமான கொச்சி, சிறு நகரமாகத் தன்னை வைத்திருந்த காலம். அங்கு ‘கம்மாட்டிப்பாடம்’ என்ற அழகிய நிலமுண்டு. பசுமை பூத்துக்கிடக்கும் அப்பூமியில் செடியாய்க் கிளைத்தவர்கள் கிருஷ்ணனும், கங்காதரனும். எதற்கும் அஞ்சாதவனும் கங்காவின் அண்ணனுமான பாலன் அவர்களின் நாயகனாகவும், தன் காரியங்களைச் சாதித்துக்கொள்ள அவர்களைப் பயன்படுத்தும் ‘ஆசான்’ சுரேந்திரன் அவர்களின் வழிகாட்டியாகவும் அமைகின்றனர்.

பெருநகரத்தின் விளிம்பில் விதிக்கப்படும் வாழ்க்கை போலவே இவர்களுக்கும் வாழ்க்கை ஒடுக்கப்பட்டதாய், ஏழ்மை சூழ்ந்ததாய், வம்பு தும்புகள் நிறைந்ததாய், வன்முறை படர்ந்ததாய் அமைந்து போகின்றது. கம்மாட்டிப்பாடத்துப் பிள்ளைகள் வளர்கிறார்கள். ‘கம்மாட்டிப்பாடம்’ நிலம் அவர்களைவிட வேகமாய்த் தன்னைப் பெருநகரமாய் வளர்த்துக்கொள்ள முற்படுகிறது. சுரேந்திரனுக்காக எதையும் செய்யும் பாலன், பாலனுக்காக எதையும் செய்யும் கிருஷ்ணன்-கங்கா உள்ளிட்ட இளைஞர் படை என காலம் தன் அத்தியாயங்களில் அதிரடிகளை எழுதத் துவங்குகிறது.

வாழ்க்கை அவர்களைச் சாராயம் கடத்தவும், அடிதடியில் இறங்கவும், உச்சகட்டமாக கொலை செய்யவும்கூட அனுமதிக்கிறது. வாலிப முறுக்கில் மிளிரும் பாலன், எவரையும் தனியொருவனாய் அடித்து வீழ்த்தும் பலசாலியாய்த் திகழ்கிறான். ஒரு சந்தர்ப்பத்தில் கங்காவைக் காப்பாற்றும் பொருட்டு போலீஸ்காரர் ஒருவரைக் கொலை செய்துவிட்டு சிறை செல்கிறான் கிருஷ்ணன். தன்னை பெருநகரமாக்கும் பயணத்தில், நகரம் ஒவ்வொரு படி முன்னேறும்போதும், நகரத்தின் விளிம்பில் இருக்கும் மனிதர்களையும், அவர்களின் வாழ்வையும் காவு வாங்குகிறது. பசுமையில் வறட்சி விதைக்கப்படுகிறது.

பாதைகளில் நெருக்கடிகளை நிறுவுகிறது. அங்கிருக்கும் மனிதர்களின் விரல் கொண்டே அங்கிருக்கும் மனிதர்களின் கண்ணைக் குத்துகிறது. முதலாளியின் அடியாட்களாய் மாறும் அதே மண்ணின் பிள்ளைகள், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்காகத் தம் உறவுகளையே நிலத்தை விட்டு விரட்டியடிக்கிறார்கள். ‘உறவுகள் முக்கியமில்லை, காசு கொட்டுவோரே முக்கியம்’ என உரத்துச் சொல்கிறார்கள். பெட்டிக்கடையில் தொடங்கி, சாராயத்தில் தொடர்ந்து, தொழிற்சாலைகள் நிர்மாணித்து, கட்டுமானத் தொழிலுக்குள் கொடி நாட்டும் ‘ஆசான்’ சுரேந்திரனின் சாம்ராஜ்யம் விரிவடைகிறது. பணம் பணத்துடன் புணர்ந்து தன் பலத்தைப் பெருக்குகிறது.

பாலனின் மனபலமும் உடல்பலமும் அசைக்கமுடியாத உச்சத்தை எட்டுகிறது. உச்சியை அடைந்தால் மறுபக்கம் இறங்கித்தானே ஆகவேண்டும். பாலன் வீழ்த்தப்படுகிறான். அதற்காக பாலனின் வழித்தோன்றல்கள் பழிவாங்குகிறார்கள், பழி வாங்கப்படுகிறார்கள். தங்களின் ஆதர்சமாய் இருந்த  முதலாளி, அவருடைய தேவைக்கு மட்டும்தான் தங்களை நாடுவார் என்பதையும் காலம் அவர்களுக்கு உணர்த்துகிறது.

பெருநகரம் கொச்சி பளிச்சிட்டு நிற்கிறது. உயர்ந்தோங்கிய அடுக்கக மனைகள் நகரத்தை கவர்ச்சிகரமாக அழகூட்டுகின்றன. பளிச்சிடும் விளக்குகள் இரவைப் பகலாக்குகின்றன. வளர்ச்சி எனும் செயற்கைக்கோள் கழற்றிவிடும் தீர்ந்த எரிபொருள் கலனாய், கம்மாட்டிப்பாடங்களின் ஓர் உதாரணமாய் அத்தனை சிதைவுகளையும் கங்கா சந்திக்கிறான். கிருஷ்ணன் காதலை இழந்து, குடும்பத்தைத் துறந்து, நட்புகளைத் தொலைத்து,  கம்மாட்டிப்பாடத்தைவிட்டு வெகு தூரம் பயணிக்கிறான்.

மின்னும் பெருநகரம் எனும் பெருமரத்தின் கிளைகள் மகிழ்வும், நம்பிக்கையும் ஊட்டக்கூடியவை. வேர்களில் மட்டும் சொல்ல முடியா ஊனமும், காயங்களும், வாதைகளும் மௌனமாய் மிஞ்சியிருக்கின்றன. மலையாளத்தில் 2016 மே மாதம் வெளியான ‘கம்மாட்டிப்பாடம்’ திரைப்படத்தை, வெறும் கற்பனையான கதையென்றெல்லாம் கடந்து போய்விட முடியாது. ஒன்றைச் சிதைத்து அதிலிருந்து வளர்ச்சியடைந்த எல்லாவற்றிற்குமான பொது வரலாறு அது. பேராசையால், அறியாமையால், வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டு சொகுசு நகரங்களின் காலடியில் மூழ்கிக்கிடக்கும்  ஆன்மாக்களின் ஓங்கார மௌனம் அது.

மனிதர்கள் மாறுவதைப் போலவே, மனிதர்கள் வாழும் நிலமும் தொடர்ந்து மாற்றங்களைச் சந்திக்கின்றது. அந்த நிலங்கள் தம்மை ஒருபோதும் தன்னியல்பு மற்றும் வடிவத்தோடு இருக்க அனுமதிப்பதில்லை. வெப்பம், குளிர், மழை, வறட்சி, காற்று ஆகியவை நிகழ்த்தும் தாக்கங்களைவிட ‘வளர்ச்சி’ எனும் மாயைக்குள் ஆட்பட்டு தனக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் தாக்கம் அசாதாரணமானது. அந்தத் தாக்கம் தமக்கு ஒவ்வாததாக இருப்பினும், நிலம் அதை மௌனமாய் விழுங்கப் பழகிக்கொள்கிறது.

தம் அடையாளம் சிதைவதை உணர்ந்தும், மனிதர்கள் திணிக்கும் மாற்றத்தை நிலம் தொடர்ந்து அனுமதிக்கின்றது. மாறிக்கொண்டிருக்கும் நிலம் தன் அசுரப்பசிக்கு இடைவிடாது தீனி கேட்கிறது. தேர்ந்தெடுத்த மனிதர்களின் வாழ்க்கையை இரையாக்கி, தன் வேரின் அடியில் உரமாய் இட்டுக்கொண்டு கொழுக்கிறது. மனிதர்களின் ஆயுட்காலத்திற்கும், உருவாக்கங்களுக்கும், கனவுகளுக்கும் நிபந்தனைகள் உண்டு. நிலத்திற்கு நீடித்த நிபந்தனைகள் ஏதேனும் உண்டா என்ன? கடலுக்கடியிலும் நிலம்தான்!

மாறிக்கொண்டிருக்கும் நிலம் தன் அசுரப்பசிக்கு இடைவிடாது தீனி கேட்கிறது. தேர்ந்தெடுத்த மனிதர்களின் வாழ்க்கையை இரையாக்கி, தன் வேரின் அடியில் உரமாய் இட்டுக்கொண்டு கொழுக்கிறது.

இதை வெறும் கற்பனையான கதையென்றெல்லாம் கடந்து போய்விட முடியாது. ஒன்றைச் சிதைத்து அதிலிருந்து வளர்ச்சியடைந்த  எல்லாவற்றிற்குமான பொது வரலாறு அது.

(இடைவேளை...)

ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி