திருட்டு



ஜீப்பிலிருந்து இறங்கி வந்த சந்தானத்திடம் ஹோட்டல் ஓனர் சங்கர், ‘‘வாங்க சார், இவன்தான் நான் சொன்ன பாபு’’ என்றார். புதிதாக வேலைக்குச் சேர்ந்த சப்ளையர் பையன் பாபு, இவர் கழற்றி வைத்திருந்த சட்டைப் பாக்கெட்டிலிருந்து 2 ஆயிரம் ரூபாயைத் திருடி விட்டானாம். ‘‘கேட்டா இல்லைங்கிறான். ஆனால் பணம் இவனைத் தவிர வேறு யார்கிட்டேயும் போகலை’’ என அடித்துச் சொன்னார். பாபுவோ, ‘‘நான் திருடலை. தயவுசெய்து என்னை வேலையை விட்டுத் தூக்கிடாதீங்க’’ என கெஞ்சினான். சந்தானம் அவன் கண்களைப் பார்த்தார். அவை உண்மை பேசின. ‘‘இவன் கண்டிப்பா உங்க பணத்தை எடுக்கல.

நீங்க நல்லா விசாரிங்க. நான் சொல்றதுல உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா, அந்தப் பணத்தை நான் தர்றேன்’’ என்றபடி பாக்கெட்டில் கைவிடப் போனவரை சங்கர் தடுத்து, ‘‘நான் நம்பறேன் சார்’’ என்றார். பல நாட்கள் கடந்து, வேறொரு ஹோட்டலில் பாபுவைப் பார்த்தார் சந்தானம். ‘‘அவ்வளவு சொல்லியும் உன்னைய வேலையை விட்டு தூக்கிட்டானா அவன்?’’ என்றார்.

‘‘இல்ல சார்! நானாதான் நின்னுட்டேன். பணத்தை வேறொரு ஆள்தான் எடுத்தார்னு முதலாளிக்கு தெரிஞ்சிடுச்சு. நான் திருடலைன்னு நிரூபிச்சாச்சு. அப்புறம் நான் ஏன் அங்க இருக்கணும்? அன்னிக்கு நான் கெஞ்சுனதுகூட, என்னை வேலையை விட்டு தூக்கிட்டா இதை நிரூபிக்க முடியாம போயிடுமேங்கற பயத்துலதான் சார்’’ என்றான் பாபு. எதுவும் பேசாமல் நின்றார் சந்தானம்.
 

-வி.அங்கப்பன்