கல்யாணத்துக்குப் பிறகு வர்ற காதல்தான் உண்மையான காதல்!



ராதா சொல்லும் மேரேஜ் சீக்ரெட்ஸ்

கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்ந்தாலே ‘கூட்டுக் குடும்பம்’ என சொல்ல ஆரம்பித்துவிட்டது உலகம். தினம் தினம் திருமண உறவுகள் கசப்போடு முறிந்துகொண்டிருக்கும் சூழலில், ஒரு சினிமா பிரபலமாக இருந்து கொண்டு 25 வருடங்கள் கடந்து திருமண நாளைக் கொண்டாடுவது என்பது எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. அந்த கிஃப்ட் அமையப் பெற்ற அதிர்ஷ்டசாலி, ‘அலைகள் ஓய்வதில்லை’ ராதா. திருவனந்தபுரத்தில் தனது 25வது திருமண விழா, ஓணம் பண்டிகை என கலர்ஃபுல் விழாக்களில் பங்கேற்று மும்பை திரும்பிக் கொண்டிருந்தவரிடம் பேசினோம். எதையுமே மனதில் இருந்து பேசுவது ராதாவின் ‘ஸ்பெஷல்’.  

‘‘ஒவ்வொரு ஓணம் பண்டிகைக்கும் குடும்பத்தோட கேரளாவில் இருக்கற சொந்த ஊருக்குப் போயிடுவோம். எல்லாரும் ஒண்ணா ஓணத்தைக் கொண்டாடுவோம். இந்த வருஷம் டபுள் ட்ரீட். என்னோட 25வது வருஷ திருமண நாளை கிராண்டா கொண்டாடியிருக்கேன். பசங்க எல்லாரும், ‘இந்தக் காலத்தில 25 வருஷம் கொண்டாடுறது சிம்பிளான விஷயம் கிடையாது’னு சொல்லி, விழாவுக்கு ரெடியானாங்க. அது உண்மைதான்.

கணவன் - மனைவி உறவுங்கறது  ரெண்டு பேர் மட்டுமே சம்பந்தப்பட்டது இல்லையே! திருமணம் என்பது ரெண்டு பெரிய குடும்பங்கள் இணையற பந்தம்.  அத்தனை பேரின் உணர்வுகளையும் அர்த்தம் புரிஞ்சுக்கிட்டு அனுசரிச்சுப் போகணும். அப்படி ஒரு பந்தம் திருமண லைஃப்ல இருக்கு. என் கல்யாணம் கூட இவ்வளவு கிராண்ட் இல்லை. குடும்பம், உறவுகள், நட்புகள், கலையுலக, அரசியல் பிரபலங்கள்னு எல்லாருமே வந்திருந்து எங்களை ஆசீர்வதிச்சாங்க. விழாவில் என்னோட கல்யாண ஆல்பங்கள், என் குழந்தைகள் பிறந்ததில் இருந்து வளர்ந்தது வரை உள்ள புகைப்பட ஆல்பங்கள், மேக்கப், கலர்ஃபுல் காஸ்ட்யூம்ஸ், ஈவென்ட்ஸ்னு எல்லாமே கிராண்டா பண்ணி பசங்க அசத்திட்டாங்க.

என் குருநாதர் பாரதிராஜா, காவ்யா மாதவன், தோழி சுஹாசினினு நான் நேசிக்கற எல்லாருமே வந்திருந்து வாழ்த்தினது மறக்கமுடியாத மொமன்ட். பாரதிராஜா சார், 13 வருஷத்துக்குப் பிறகு எங்க வீட்டு ஃபங்ஷனுக்கு வந்திருந்து வாழ்த்தினதில் ரொம்ப சந்தோஷம்’’ - நெகிழ்கிறார் ராதா.

‘‘எப்படி இருக்கு மும்பை வாழ்க்கை?’’
‘‘அடி தூள்ள்ள்! இங்கே யாரையும் யாருக்கும் தெரியாது. ஆனா, யாருக்கு எப்ப உதவி தேவையோ அவங்களுக்கு அப்போ கொஞ்சமும் தயங்காம உதவுறது இந்த ஊரோட ஸ்பெஷல். நாளைக்கு எப்படி இருக்குமோங்கற கவலை எதுவும் இல்லாம இன்னிக்கு சந்தோஷமா இருக்கறதுதான் இங்கே முக்கியம்.’’ 

‘‘தமிழ் சினிமாவில் ராதாவுக்கு தனி இடம் உண்டு. உங்க மகள்கள் கார்த்திகாவும், துளசியும் உங்களை மாதிரி பெயர் வாங்கலையே?’’
‘‘சினிமா ரொம்ப மாறிடுச்சு. கார்ப்பரேட் சிஸ்டம் வந்திடுச்சு. நான் ஒரே வருஷத்துல பதினைஞ்சு படங்கள்கிட்ட நடிச்சிருக்கேன். இப்போ சூப்பர் ஹீரோயினா இருந்தா கூட வருஷத்துக்கு நாலஞ்சு படங்கள்தான் கொடுக்க முடியும். திறமையான இயக்குநர்கள், கதைகள், கேரக்டர்கள் எனக்கு அமைஞ்சது. என் மகள்களும் பெரிய படங்கள் பண்ணியிருக்காங்க. சினிமா தவிர, படிப்பிலும் சிறந்து விளங்குறாங்க. அவங்க என் அளவுக்கு பெயர் எடுக்கலையேன்னு வருத்தம் எதுவும் இல்லை. எல்லாருக்குமே நேரம் அமையணும். அவங்க ரொம்ப சின்னப் புள்ளைங்க. இன்னும் வயசு இருக்கு. நேரம் வரும்போது எல்லாம் தானாக அமையும்...’’

‘‘உங்க கணவர் எப்படி இருக்கார்?’’
‘‘ரொம்ப நல்லா இருக்கார். நான் ஹீரோயினா உச்சத்துல இருந்த காலத்திலேயே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அரேஞ்ஜ்டு மேரேஜ்தான். கல்யாணத்துக்குப் பிறகு வர்ற காதல்தான் உண்மையான காதல்னு நம்புறேன். கேரளாவில்தான் அவங்க அம்மாவும், அப்பாவும் இருக்காங்க. அவர் பெயர் ராஜசேகர் நாயர்னாலும் அந்த கிராமத்துல எல்லாரும் அவரை ‘மணி’ன்னுதான் கூப்பிடுவாங்க. வந்த இடத்தை இன்னும் மறக்காமல் இருக்கார். அந்தப் பண்பு ரொம்ப பிடிச்சிருக்கு. கார்த்திகா, விக்னேஷ்,  துளசினு பசங்க எல்லாருமே எங்க மேல ரொம்ப பாசமா இருக்காங்க. பிள்ளைங்கள நல்லா படிக்க வச்சு, நல்லபடியா வளர்த்திருக்கேன். அதுல எனக்கு சந்தோஷம் உண்டு. கார்த்திகா டிகிரி முடிச்சிருக்கா. மகன் விக்னேஷ், ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடிச்சிட்டார். அடுத்து எம்.பி.ஏ. படிக்கப் போறார். துளசி காலேஜ் செகண்ட் இயர் கம்ப்ளீட் பண்ணிட்டா!’’

‘‘பிரியதர்ஷன் - லிஸி, விஜய் - அமலாபால், சௌந்தர்யா ரஜினி - அஸ்வின் என திரையுலக பிரபலங்களின் விவாகரத்து இப்போ சாதாரணமாகிடுச்சு. உங்க திருமண வாழ்க்கையின் சக்சஸ் சீக்ரெட் என்ன?’’
‘‘என்னை விட முப்பது வருஷம், ஐம்பது வருஷம்னு திருமண நாள் கொண்டாடுறவங்க நிறைய பேர் இருக்காங்க. எல்லா இடத்திலும்தான் விவாகரத்து நடக்குது. அவங்க சினிமா பிரபலமாக இருந்தா மீடியாவில ஃபோகஸ் ஆகிடுது. என்னோட சீக்ரெட்ஸ்னு பெருசா எதுவும் இல்ல. நான் நானாக எப்போதும் இருப்பேன். அவர் அவராக எப்போதும் இருப்பார். சின்னச் சின்ன உரசல்கள் வந்தாலும், அடுத்த நிமிஷமே உண்மையை புரிஞ்சுக்கிட்டு சமாதானம் ஆகிடுவோம்.

பரஸ்பரம் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போனாலே எந்தப் பிரச்னையும் இருக்காது. பொறுமை ரொம்ப அவசியம். என் திருமண வாழ்க்கைனு மட்டுமில்ல, சுஹாசினி மாதிரி என் தோழிகளின் லைஃபும் நல்லபடியா அமைஞ்சிருக்கு. அதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். சினிமாவில் நான் ஹீரோயினா மட்டும்தான் இருந்தேன். ஆனா, லைஃப்ல பொறுப்பான மனைவி, குழந்தைகளுக்கு நல்ல அம்மா, மாமியாருக்கு நல்ல மருமகள், வீட்டு நிர்வாகி, குடும்ப நிறுவனங்கள்ல பாஸ்... இப்படி ஒரு நாள்ல எவ்வளவோ பொறுப்புகள் இருக்கு. இதுதான் வாழ்க்கை!’’

- மை.பாரதிராஜா