சிசேரியன் டேட்டா!



-ரோனி

அதிர்ச்சிகரமான அந்தச் செய்தியை தேசிய குடும்பநல மற்றும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை (NHFS) தெரிவிக்கிறது.

விஷயம் இதுதான்: அண்மைக் காலமாக தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் குழந்தை பிறப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் அரசு மருத்துவமனைகளில் சிசேரியன்கள் வெகுவாக குறைந்துள்ளன! 2015 - 16ம் ஆண்டுகளில் மட்டும் தனியார் மருத்துவமனைகளில் 40.9% சிசேரியன்கள் நடைபெற்றுள்ளன. 2005 - 06ல் தனியாரில் நடைபெற்ற சிசேரியன்களின் வளர்ச்சி 27.7%.

அதேசமயம் அரசு மருத்துவமனையில் சிசேரியன்களின் அளவு 15.2% (2005 - 06) ஆக இருந்து 11.9% (2015 - 16) ஆக குறைந்துள்ளது. அதாவது நகரிலுள்ள அரசு மருத்துவமனைகளில் 19.9% சிசேரியன்களும், கிராமத்தில் 9.3% சிசேரியன்களும் நடைபெறுவதாக அரசு சுகாதாரத்துறை ஆய்வு தெரிவிக்கிறது. மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சி 78.9% அதிகரித்துள்ளது மகிழ்ச்சிதான்.

ஆனால், அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை கருவிகளின் பற்றாக்குறையே மக்கள் தனியார் மருத்துவமனைக்குச் செல்லக் காரணம் என்பது வேதனையான விஷயம். 2015ம் ஆண்டின் கணக்குப்படி இந்தியாவில் இயங்கி வரும் அரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கை 25,308. ஏறக்குறைய இதே அளவு அல்லது இதைவிட குறைவாகத்தான் தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை இருக்கின்றன என்பது உபரித் தகவல்.