ஜி.எஸ்.டி A to Z
-இளங்கோ கிருஷ்ணன்
ஜி.எஸ்.டி. என்பது என்ன? சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Service Tax) என்பதன் சுருக்கம். இது நாளை முதல் (ஜூலை 1) மத்திய அரசால் இந்தியா முழுவதும் அமுலாக உள்ளது. இப்போது மத்திய, மாநில அரசுகளால் வசூலிக்கப்படும் வரிகள் எவை? பொதுவாக, ஓர் அரசு நேர்முக வரி (Direct Tax), மறைமுக வரி (Indirect Tax) என இருவகையான வரிகள் வசூலிக்கும்.
 இதில் நேர்முக வரி என்பது ஒருவர் ஈட்டும் வருமானத்தில் இருந்து நேரடியாக வசூலிக்கப்படுவது. உதாரணம் வருமான வரி. மறைமுக வரி என்பது ஏதேனும் ஒரு பொருளை அல்லது சேவையை நுகரும்போது அந்தப் பொருளின் விலையுடன் சேர்ந்து வசூலிக்கப்படும். உதாரணம் உற்பத்தி வரி என்னும் கலால் வரி, விற்பனை வரி, சேவை வரி, சுங்க வரி போன்றவை.
ஜி.எஸ்.டி. யின் நோக்கம் என்ன? மறைமுக வரியை ஒரே வரிவிதிப்பாக மாற்றுவது தான். அதாவது, ஒரு பொருள் உற்பத்தியாகும்போது விதிக்கப்படும் உற்பத்தி வரி, விற்பனை செய்யப்படும்போது விதிக்கப்படும் விற்பனை வரி, தொழில் சார்ந்த சேவைகளுக்கு விதிக்கப்படும் சேவை வரி, ஏற்றுமதி இறக்குமதியின்போது விதிக்கப்படும் சுங்கவரி போன்ற அனைத்தையும் நீக்கிவிட்டு ஒரே வரிவிதிப்பாக ஏற்படுத்தப்பட்டுள்ளதுதான்
 ஜி.எஸ்.டி. இதன் அறிமுகத்தால் நீங்கும் பழைய வரி விதிப்புகள் எவை எவை? மத்திய கலால் வரி, சேவை வரி, மத்திய, மாநில வணிக வரிகள், உணவு வரி, கேளிக்கை வரி, நுழைவு வரி, கொள்முதல் வரி, ஆடம்பர வரி, விளம்பர வரி உள்ளிட்ட மேலும் சில உள்ளூர் வரிகள் நீங்கக்கூடும்.
எப்படி செயல்படும்? இந்தியாவில் நிகழும் வணிக நடவடிக்கைகளான விற்பனை, விற்பனைப் பொருட்களின் ட்ரான்ஸ்ஃபர், கொள்முதல், லீஸ், பொருட்கள் அல்லது சேவைகள் இறக்குமதி, வணிகம் சார்ந்த சேவைகள், கான்ட்ராக்டுகள் போன்றவற்றின் மீது ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆகிய இரண்டுமே இந்த வரி விதிப்பை நிர்வகிக்க உள்ளன.
எனவே, ஜி.எஸ்.டி மத்திய ஜி.எஸ்.டி எனப்படும் CGST மாநில ஜி.எஸ்.டி எனப்படும் SGST என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது, ஒரு பொருள் ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகி அதே மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்டால் வரியின் ஒரு பகுதி மத்திய அரசுக்கும் இன்னொரு பகுதி மாநில அரசுக்கும் செல்லும்.
உதாரணமாக ,1000 ரூபாய் மதிப்பு உள்ள ஒரு பொருள் தமிழகத்தில் உற்பத்தியாகி தமிழகத்திலேயே விற்கப்படும்போது, அதன் மீதான வரி 5% என வைத்துக்கொண்டால் ரூ.50 வரியாக வசூலிக்கப்பட்டு ரூ.25ஐ மத்திய அரசும் மறுபாதியை மாநில அரசும் வைத்துக்கொள்ளும். ஒரு பொருள் ஒரு மாநிலத்தில் உற்பத்தியாகி இன்னொரு மாநிலத்தில் விற்பனை செய்யப்பட்டால் IGST என்ற ஒரே வரியாக விதிக்கப்பட்டு அந்த வருவாய் மத்திய அரசுக்குச் செல்லும். பிற்பாடு அந்த வரியில் ஒரு பகுதியை விற்பனை செய்யப்படும் மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கும்.
உதாரணமாக ,மேலே சொன்ன அதே பொருள் தமிழகத்தில் உற்பத்தியாகி வேறு மாநிலத்துக்கோ யூனியன் பிரதேசத்துக்கோ விற்பனை செய்யப்படுகிறது எனில் ஐ.ஜி.எஸ்.டி 5% மொத்தத்தையும் மத்திய அரசே வசூலித்துக் கொள்ளும். அதாவது ரூ.50 மத்திய அரசின் பாக்கெட்டுக்கே செல்லும். பிற்பாடு மத்திய அரசு அதில் ஒரு பகுதியை விற்பனையான மாநிலத்துக்குத் தரும்.
மாநிலங்களுக்கு இடையிலான விற்பனையில், பொருள் உற்பத்தியாகும் மாநிலத்துக்கு வரி செல்லாதா? செல்லாது. அதுதான் ஜி.எஸ்.டியில் முக்கியமான விஷயம். ஏனெனில் ஜி.எஸ்.டி. என்பது விற்பனை செய்யப்படும் மாநிலத்தை அடிப்படையாகக் கொண்ட வரி விதிப்பு முறை. இதனால், மாநிலங்களுக்கு இடையிலான விற்பனையில் விற்கும் மாநிலத்துக்கு வரி வருவாய் இருக்காது. இது ஒரு பிரச்னைதான். குறிப்பாக, தமிழகம் போன்ற தொழில்சார் மாநிலத்துக்கு பாதிப்புதான்.
ஜி.எஸ்.டியில் வரி விதிப்பு எப்படி இருக்கும்? 0, 5, 12, 18, 28 ஆகிய சதவிகிதங்கள் பொருளுக்குத் தகுந்தபடி இருக்கும் என்று சொல்கிறார்கள். விலைஉயர்ந்த கற்களுக்கு 0.25% சிறப்பு வரியும், தங்கத்துக்கு 3% சிறப்பு வரியும் இருக்கும் என்கிறார்கள். சிகரெட், மது போன்ற லாகிரி வஸ்துகளுக்கு கூடுதல் செஸ் வரிவிதிப்பும் இருக்கக்கூடும்.
யார் தலைமை யில் இயங்கும்? இதை வசூலிப்பதற்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் என்று ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக (Chairman) நிதியமைச்சர் இருப்பார். நாடு முழுதும் உள்ள மத்திய அரசுக்குச்சொந்தமான கலால் மற்றும் சேவை வரி அலுவலகங்கள், சுங்கவரி அலுவலகங்கள், மாநில அரசுக்குச் சொந்தமான வணிக வரி அலுவலகங்கள் ஆகியவை மூலம் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெறும்.
யார் ஜி.எஸ்.டி. கட்ட வேண்டும்? நீங்கள் ஒரு வணிகர் அல்லது தொழில் முனைவோர் என்றால் ஜி.எஸ்.டி. குறித்து விரிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், இது ஒரு வகை விற்பனை வரி. அதே சமயம் வணிகம் செய்யும் அனைவரும் ஜி.எஸ்.டி. வரி கட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறிய அளவில் தொழில் செய்வோர்க்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வருடத்துக்கு 20 லட்சங்களுக்குள் விற்பனை (Turnover) உள்ள வணிகர்கள் தொழில் முனைவோருக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இரண்டு மாநிலங்களுக்கு இடையில் விற்பனை பரிவர்த்தனை செய்பவர்களுக்கும், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பவர்களுக்கும் மேலும் சிலருக்கும் ஆண்டு விற்பனைத் தொகை எவ்வளவு இருந்தாலும் ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு இல்லை.
பழைய வணிக வரியில் இருந்த மதிப்புக்கூட்டு வரி விதிப்பு முறை (VAT) இதிலும் உண்டா? நிச்சயம் உண்டு. உதாரணமாக ஒருவர் 1000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை உற்பத்தி செய்து விற்கிறார் எனில் அதன் வரி ஐந்து சதவிகிதமான ரூ.50ஐ சேர்த்து ரூ.1050 ஆகப் பெற்றுக்கொண்டு வரித்தொகை ரூ.50ஐ அப்படியே அரசுக்குக் கட்ட வேண்டியது இல்லை. அந்தப் பொருளை உற்பத்தி செய்யும் போது வாங்கிய மூலப்பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியைக் கழித்துக்கொண்டு எஞ்சிய தொகையைக் கட்டினால் போதும். இதை Input Tax Credit என்பார்கள். உற்பத்தியாளர் என்று இல்லை, வாங்கி விற்பவர்களுக்கும் இந்த இன்புட் டேக்ஸ் கிரிடிட் முறை பொருந்தும்.
பழைய வரி முறைகளுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்? பழைய வரி விதிப்பு முறைகளில் ஒருவர் ஒரு பொருளை உற்பத்தி செய்து, விற்கும்போது உற்பத்தி வரி, விற்பனை வரி எனத் தனித்தனியாக வசூல் செய்து தனித்தனி அரசு அலுவலகங்களில் நமூனா தாக்கல் செய்து வரி கட்ட வேண்டும். இந்த முறையில் ஜி.எஸ்.டி., என்ற ஒற்றை வரியை மட்டும் வசூல் செய்து கட்டினால் போதும். பொருளை வாங்கி விற்கும் வணிகர்களுக்கு மாநிலங்களுக்கு இடையே விற்கும்போது இருக்கும் ‘சி’ ஃபார்ம் கொடுக்கும் அவஸ்தைகள் இருக்காது.
மத்திய, மாநில அரசுகளுக்கு இதனால் என்ன நிகழும்? மத்திய அரசைப் பொருத்தவரை நாடு முழுதும் ஒரே வரி விதிப்பு முறை அமுலாக்கப்படுவதால் நிர்வாகம் ஓரளவு எளிதாகும். ஒவ்வொரு பொருளின் விற்பனையிலும் வரித்தொகை மத்திய அரசுக்குக் கிடைப்பதால் அதற்கு வரி ஆதாயம் அதிகரிக்கும். ஆனால், சுங்கவரித்துறை, கலால் வரித்துறை போன்ற வேறு வேறு அலுவலகங்களை இணைத்துச் செயல்படுத்த வேண்டியது அதன் முன் உள்ள பெரிய சவால்.
மேலும், இந்தப் புதிய வரி விதிப்பால் ஏற்பட உள்ள பொருட்களின் விலையேற்றமும் ஒரு முக்கியமான பிரச்சனை. மாநில அரசுகளைப் பொருத்தவரை வரி வசூல் மத்திய அரசின் கைகளுக்குச் சென்றுவிடுவதால் நிதி இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும். வரி வருவாயைப் பொருத்தவரை மாநில அரசு என்பது இனி வரியை வசூலித்துத் தரும் ஒரு இடைநிலை அமைப்பு மட்டுமே. இதனால் ஏற்படும் நிதி இழப்பை சமாளிப்பது என்பது, தொழில்வளம் மிக்க மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு கடுமையான சவால்தான்.
விலையேற்றம் இருக்குமா? ஜி.எஸ்.டி. அமுலாக்கப்பட்டால் பழைய வரி விதிப்புகளில் இருந்து கிடைக்கும் வரி வருவாய்க்கு இணையாக வருமானம் இருக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் விரும்பும். இதனால், பல பொருட்களுக்கும் விலை உயர்வு இருக்கவே செய்யும் என்கிறார்கள். அதேநேரம், அத்தியாவசியப் பொருட்கள், அடிப்படைத் தேவையான பொருட்களில் பெரிய விலையேற்றங்கள், மாறுதல்கள் இருக்காது என்றும் சொல்கிறார்கள்.
|