தீபிகா படுகோன் என் படத்தில் நடிப்பதை விரும்பவில்லை... ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் இசை வேண்டுமென்று உறுதியாக இருந்தேன்...



ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி Exclusive பேட்டி

இன்று உலகம் முழுக்கவே ஈரானிய திரைப்படங்கள் கொண்டாடப்படுகின்றன. காரணம், அதன் தரம். இத்தனைக்கும் பட்ஜெட் அளவிலும் சரி... தொழில்நுட்ப அளவிலும் சரி... ஈரானிய திரையுலகம் ரொம்பவே சிறியது. ஆனாலும் பிரமாண்ட படங்களுக்கு பெயர்போன ஹாலிவுட்டுக்குக் கூட இல்லாத பெருமை ஈரானிய படங்களுக்குக் இருக்கிறது. அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ஈரானிய திரையுலகின் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் மஜித் மஜிதி. இவரது ‘சில்ட்ரன்  ஆஃப்  ஹெவன்’, ‘த கலர் ஆஃப் பேரடைஸ்’, ‘பாரன்’, ‘த வெல்லோ ட்ரீ’, ‘த சாங் ஆஃப் ஸ்பேரோஸ்’ உள்ளிட்ட படங்களை உலக சினிமா ஆர்வலர்கள் புனிதமாக கொண்டாடுகிறார்கள். மொழி தெரியாத ஊரில் திரையிடப்பட்டாலும் சாதாரண மக்கள் கூட இவர் படங்களைப் பார்த்து கசிந்துருகுகிறார்கள்.

ஏனெனில் இவர் இயக்கிய திரைப்படங்கள் மனிதர்களின் மேன்மை உணர்வை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் கயமைகளையும், நன்மைகளையும் சமமாக வெளிப்படுத்துவதில் கைதேர்ந்தவர். இவ்வளவு புகழுக்கு சொந்தக்காரரான மஜித் மஜிதி, இப்போது ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படம், இந்தியாவை மையமாகக் கொண்டது! மும்பையில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது! ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்! ஆச்சர்யமான விஷயமல்லவா? அந்த வியப்புடனேயே மஜித் மஜிதியை சந்தித்தோம்.

ஈரானை மட்டுமே களமாகக் கொண்டு ஈரானிய படங்களை மட்டுமே எடுத்துக் கொண்டிருந்த உங்களுக்கு இந்தியாவை வைத்து படம் எடுக்க வேண்டுமென்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். உலகத்தில் எங்கு இருந்தாலும் கதைக்களத்தின் இடம்தான் மாறுமே தவிர மனிதர்களுடைய அடிப்படை உணர்வுகள் மாறாது. ஈரானில் ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டுமே கதைக்களமாக வைத்து படத்தை இயக்குவதை விட இந்தியா மாதிரியான பன்முக கலாசாரம் கொண்ட ஓர் இடத்திலிருந்து இக்கதையை சொல்லலாம் என்று தோன்றியது. அவ்வளவுதான்.

நீங்கள் பார்சியில் மட்டுமே உரையாடுகிறீர்கள். ஆங்கிலத்தை தவிர்க்கிறீர்கள். அப்படியிருக்கும் போது உங்களுக்குக் கொஞ்சமும் அறிமுகமில்லாத இந்தியில் படம் எடுத்தது சிரமமாக இல்லையா?
இதிலென்ன சிரமம் இருக்கிறது? ஒரு படத்தின் அடிப்படையான விஷயம், அந்தப் படத்தின் கதையும் கதாபாத்திரங்களும்தான். இவ்விரண்டையும் உருவாக்கி வார்த்தெடுத்தபின் அந்தப் பாத்திரத்தை உள்வாங்கி வெளிப்படுத்தக் கூடிய நடிகர்களைத் தேர்வு செய்கிறேன். இது சரியாக அமைந்துவிட்டால் போதும். நடிக்கும்போது அவர்களுடைய முகபாவங்களிலிருந்தோ அல்லது அவர்களுடைய உடல்மொழியிலிருந்தோ எனக்குத் தேவையானதை அவர்கள் தருகிறார்களா இல்லையா என்பதை அளவிடுவேன். இவை இரண்டும் வெளிப்படுத்தாத எதையும் மொழி வெளிப்படுத்தப் போவதில்லை. எனவே இந்தியில் படமெடுத்தது வித்தியாசமாகவோ அம்மொழி தடையாகவோ இல்லை. தவிர மொழிபெயர்ப்பாளர்கள் படப்பிடிப்பு முழுதும் உடன் இருந்துகொண்டே இருந்தார்கள்.

ஈரானிய படங்களில் பெரும்பாலும் நீங்கள் அமெச்சூர் நடிகர்களையே பயன்படுத்துகிறீர்கள். இப்போது இந்த இந்திப் படத்திலும் அமெச்சூர் நடிகர்களையே பயன்படுத்தியிருக்கிறீர்கள். இரு நாட்டு அமெச்சூர் நடிகர்களுக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன?
ஒன்றுமே இல்லை! முன்னரே சொன்னது போல் எப்போதுமே என் படத்தில் நடிப்பவர்களை நான் அப்படத்தின் கதாபாத்திரங்களாக மட்டும்தான் பார்க்கிறேன். அமெச்சூரா இல்லையா என்றெல்லாம் பிரிப்பதில்லை. உங்கள் வினாவுக்கான விடையை இப்படி அளிக்க விரும்புகிறேன். ஈரானிலும் இந்தியாவிலும் பாத்திரத்தை உள்வாங்கிக் கொண்டு நடிப்பவர்கள் இருக்கிறார்கள்! வித்தியாசம் தெரியவில்லை!

நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். ஆனால், இப்படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனை நடிக்க வைக்க நீங்கள் விரும்பியதாகவும் டெஸ்ட் ஷூட் கூட நடைபெற்றதாகவும் அதன் பிறகு அவரை நீங்கள் நீக்கி விட்டதாகவும் சொல்கிறார்களே..?
இதில் ஒன்று மட்டுமே பொய். அதாவது தீபிகா படுகோனை நடிக்க வைக்க விரும்பினேன் என்பது! உண்மையில் இந்தியாவை மையமாக வைத்து நான் படமெடுப்பது தெரிந்ததும் அவராகவே நடிக்க ஆர்வத்துடன் முன்வந்தார். அதே அளவுக்கு எனக்கும் ஆர்வம் இருந்தது என்று சொல்ல முடியாது. ஏனெனில் அவர் இந்தியாவில் புகழ்பெற்ற நடிகை. அப்படிப்பட்டவர் என் படத்தில் நடிக்கும்போது அது அவர் படமாகத்தான் தெரியும். என் படமாகத் தெரிகிறதா இல்லையா என்பது பெரிய விஷயமல்ல.

ஆனால், என் கதாபாத்திரம் தெரியாது. நடிகை தீபிகா படுகோனைத்தான் மக்கள் பார்ப்பார்கள். இந்தக் காரணத்துக்காகவே அவர் என் படத்தில் நடிப்பதை நான் விரும்பவில்லை. தவிர, படப்பிடிப்பில் அவரைப் பார்க்க கூட்டம் கூடும். கூட்டம் எனக்கு ஆகாது. இதெல்லாம்தான் காரணம். ஒன்றை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். தீபிகா என்றில்லை... எந்த புகழ்பெற்ற நடிகர்களும் என் படத்தில் நடிப்பதை நான் விரும்புவதில்லை. உங்கள் பார்வையில் அமெச்சூர் நடிகர்களாகத் தெரிபவர்களே எனக்குப் போதும்!

உங்களது திரைப்படங்கள் பெரும்பாலும் மனித உணர்வுகளின் மேன்மையைச் சொல்பவை. எனவே அடர்த்தியான மவுனங்களோ அல்லது இயல்பான ஓசைகளோ தவிர இசைக்கென்று பெரிய முக்கியத்துவம் வழங்க மாட்டீர்கள். ஆனால், இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். ஏன்..?
இந்தியச் சூழலைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற இசையைத் தரக்கூடிய வல்லமை நிறைந்த ஒருவர் என்னுடன் பணியாற்றினால் நன்றாக இருக்கும் என நினைத்து ரஹ்மானை அணுகினேன். படத்தின் தொடக்கத்தில் வரும் அந்த ராப் பாடல் என் முக்கிய கதாபாத்திரத்தின் மன ஓட்டத்தை எளிதில் சொல்லி விடும் வகையில் அமைந்ததற்கு ரஹ்மானின் இசையே காரணம்.

உங்கள் திரைப்படத்தில் இந்தி மொழியைத் தவிர தமிழிலும் நிறைய வசனங்கள் வருகின்றன. கதை நடப்பது மும்பையில் என்பதால் இந்தி உரையாடல்கள் என்பது சரி. ஆனால், தமிழையும் பயன்படுத்தியதற்கு என்ன காரணம்? ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்பதால் தமிழை கையாண்டீர்களா?
இல்லை. இந்தக் கதையின் நாயகனாக வரும் இளைஞனின் கதாபாத்திரம் இந்தி பேசும். முக்கியமான கட்டத்தில் நாயகன் இன்னொரு கதாபாத்திரத்தைச் சந்திக்க வேண்டும். அப்போது இருவரும் இயல்பாக உரையாடிக் கொள்ள முடியாத அளவுக்கு அக்கதாபாத்திரம் வேறொரு மொழியைப் பேச வேண்டும். இது கதையின் போக்கு. இச்சூழலில் தொடர்பற்ற இருமொழிகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தேடியபோது தமிழ் மொழியை பலரும் நினைவுபடுத்தினார்கள். புராதனப் பெருமையும், வரலாறும் தமிழுக்கு உண்டு என்பதாலும், இந்தியிலிருந்து அம்மொழி வேறுபட்டது என்பதாலும் தமிழைத் தேர்ந்தெடுத்தேன்.                          

- துபாயிலிருந்து ஆசிப்மீரான்