COFFEE TABLE



சன்னி அலறல்! 
கோலிவுட்டை விட பாலிவுட்டில்தான் ஷூட்டிங் பிரேக்குகளில் கலகலப்பும், கலாட்டாக்களும் அதிகம் போலிருக்கு. படப்பிடிப்பு இடைவெளியில் ரிலாக்ஸ் மூடில் ஸ்கிரிப்ட் பேப்பரை படித்துக்கொண்டிருந்தார் சன்னி. அப்போது சன்னியின் குழுவைச் சேர்ந்த ஒருவர் விளையாட்டாக அவரின் மேல் பாம்பை விட்டெறிய அதிர்ச்சியில் ஜர்க் ஆகி அலறியிருக்கிறார். இந்த ஜாலி கலாட்டாவை வீடியோவாக தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார் சன்னி. வழக்கம் போல அதையும் வைரலாக்கி அழகு பார்த்துள்ளனர் அவரது ரசிகர்கள்.

கூகுள் மினி ஸ்பீக்கர்
சில வருடங்களாகவே கூகுளின் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தரம் சார்ந்து முதலிடத்தில் உள்ளன. மட்டுமல்ல, புதிய கேட்ஜெட்களை அறிமுகம் செய்வதில் கூகுளே முன்னோக்கிச் செல்கிறது. அந்த வகையில் இந்த மாதம் ‘கூகுள் ஹோம் மினி’ என்ற புதிய ப்ளூடூத் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. உயர்தரமான பேஸ், வேகமான செயல்திறன் மற்றும் ஸ்மார்ட் சவுண்ட் சிஸ்டத்துடன் சிறிய சோப்பு டப்பா அளவில் இதை வடிவமைத்துள்ளனர். பட்டன், டச் ஸ்கிரீன் கிடையாது. ஒலியைக் கூட்ட, குறைக்க அதன் இடது மற்றும் வலது ஓரங்களை தட்டினால் போதும். விலை ரூ.2999.

படுகொலை செய்யப்படும் பத்திரிகையாளர்கள்!
உலகளவில் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுவது அதிகரித்திருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியளிக்கிறது மனித உரிமைக்கான அமைப்பு ஒன்று. அண்மையில் பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டது பெரிய அதிர்வை இங்கே உண்டாக்கியது. 2016ம் வருடத்தில் மட்டும் இந்தியாவைச் சேர்ந்த 16 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். உலக அளவில் பிரேசில், கொலம்பியா, பிலிப்பைன்ஸுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக கொலைகள் நடந்துள்ளன. 1992ம் ஆண்டிலிருந்து இதுவரைக்கும் இந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 41. உலகளவில் 2016ல் மட்டும் 191 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது நம்மை தலைகுனிய வைக்கிறது.

சீனப்பெண்களின் அடையாளம்
பாரம்பரிய கலை, மரபு, பண்பாட்டை இளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதில் சீனாவை மிஞ்சுவதற்கு ஆட்களில்லை. அதற்காக தனித்தனியாக வகுப்புகளும், நிகழ்வுகளும் அங்கே அரங்கேறுகின்றன. அப்படியொன்றுதான் ‘பெண்களுக்கு அறநெறிகளைக் கற்பித்தல்’ என்ற நிகழ்வு. இதில் நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். ஆனால், இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பெரும் விமர்சனத்துக்கும், கண்டனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது. காரணம், ‘‘பெண்கள் அதிகம் பேசக்கூடாது. வீட்டு வேலையை மட்டும் பார்க்க வேண்டும். ஆண்களுக்கு கீழ்ப்பணிந்து நடக்க வேண்டும். இதுதான் சீனப்பெண்களின் அடையாளம்...’’ என்று ஆசிரியை ஒருவர் நிகழ்வில் போதனை செய்திருப்பதுதான்.‘இது அறநெறியை கற்பித்தல் அல்ல; அடிமைமுறையை கற்பித்தல்!’ என்று எதிர்ப்பு கமெண்ட்கள் குவிகின்றன.

அசத்தும் 2D & 3D
ஸ்வீடன் நாட்டு கிராபிக் டிசைனரான ஆன்ட்ரியாஸ் வானர்ஸ் டெட்டின் ‘2டி, 3டி’ டிசைன்கள் சமூக வலைத்தளங்களில் டன் கணக்கில் லைக்ஸை அள்ளி வருகிறது. அரை வட்ட வடிவ சக்கரம் ஒன்று ஒரே இடத்தில் நிற்காமல் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதன் இடைவெளியில் லாவகமாக நுழைந்து ஆடும் பெண்டுலம் கிராபிக்ஸ் விளையாட்டை, டெட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, ஒரே நாளில் வைரலாகிவிட்டது. அவரின் மற்ற டிசைன்களும் அமோக வரவேற்பை குவித்துள்ளன. ஃபேஸ்புக்கின் ‘Bored panda’ பக்கத்தில் அவரது கிராபிக் வீடியோவை ரசிகர் ஒருவர் தட்டிவிட, பத்து லட்சம் பேர் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.

- குங்குமம் டீம்