சபதங்கள்



புது வருடம்னா பாஞ்சாலி சபதம் ரேஞ்சுக்கு ஏதாவது சபதம் ரிலீஸ் பண்ணியாகணும்னு சபதம் போடற சமுதாயத்துக்கு சபதம் பற்றி ஆலோசனை சொல்லியே தீரணும்னு சபதம் எடுத்திருப்பதால்... இதைப் படிங்க!

அறிவுரை சபதம்!
அழைப்பு இல்லாமல் எதிராளியிடம் அள்ளித் தெளிப்பதற்காகவே நிறைய ஆளுங்க (நாமதான் ப்ரோ..!) அறிவுரை மூட்டையோட திரிஞ்சுக்கிட்டு இருக்காங்க. பலமுறை பல ஆசாமிகளிடம் அடிபட்டு அசடு வழிந்தாலும், டோன்ட் கேர் மாஸ்டராக தாடி வளர்க்கும் நண்பரிடம் ‘காதலிக்கிற ஃபிகரு கைவிட்டால் தாடி வளர்க்க அதுதான் ட்ரிகரு... காதல்னா ஓடணும் காத தூரம்... இல்லைன்னா இப்படித்தான் முகத்திலே ஏற்றிக்கணும் பாரம்’னு ரைமிங்கா அறிவுரை அம்புகளை விட்டால், அங்கு அமைதி நிலவும்னு எதிர்பார்ப்பது ரொம்ப தவறு பாஸ்!

ஒண்ணு, எதிராளியின் கைபட்டு அறிவுரையாளரின் முகம் திரும்பும். இல்லைன்னா, வெறுப்பில் எதிராளியின் முகம் திரும்பும். இந்த மாதிரி அதிகப்பிரசங்கித்தனமான அறிவுரைகளால் நட்பு பாலங்கள்ல விரிசல் விழும். பேச்சு வார்த்தை அகலும். ஸோ, சமூக நோக்கோடு இம்மாதிரி அதிகப்பிரசங்கி அறிவுரைகளை நிறுத்தியாகணும்னு புது வருட சபதம் போடலாம். சபத ரிலீஸை மிஸ்டு கால் மூலம் தெரிவித்தால், செஃல்போன் கம்பெனி நன்றிக் கடனாக, பத்து ரூபாய்க்கு இலவச ரீசார்ஜ் வழங்கலாம். இதுவும் அதிகப்பிரசங்கி அறிவுரைதானோ?!

அரியர்ஸ் கிளியரன்ஸ் சபதம்!
‘அரியர்ஸ் இல்லாதவன் ஆண் பிள்ளை இல்லை...’ என்ற காலேஜ் மொழிக்கு மாறாக, ‘கணக்கில் வந்த, வராத அரியர்ஸ் அனைத்தையும் ஒரே செமஸ்ட்டரில் க்ளியர் செய்யப்போகிறேன்...’ என்று அவசர சபதம் எடுத்துட்டு, அந்த சபதத்தையே அரியர்ஸாக வைப்பதைவிட, ‘அரியர்ஸை படிப்படியாக குறைப்பேன்’னு, மாடிப்படியில் உட்கார்ந்துக்கிட்டு மையமா ஒரு சபத அறிவிப்பை வெளியிட்டா குடும்பத்துல ஒற்றுமை நிலவும்! இல்லைன்னா, ‘படி... படி’னு வார்த்தை அம்புகளைத் தொடுத்து மன நிம்மதியைக் குலைக்க பாட்டி முதல் பணிப்பெண் வரை குடும்பத்துல கும்பலா தாக்குவாங்க. உஷார்!

கெட்ட பெயர் குறைப்பு சபதம்!
‘வீட்டில் மனைவிக்கு உதவியாக இருந்து, நல்ல பெயர் எடுப்பேன்...’னு அவசரப்பட்டு சொல்லிடாதீங்க! மாறா ‘கெட்ட பெயர் பட்டியல் நீளுவதை தவிர்க்க பாடுபடுவேன்’னு சொல்லுங்க. ஏன்னா, என்னதான் கழுதையா உழைச்சாலும் (அப்படித்தான் அவுங்க உங்களை நினைச்சுக்கிட்டு இருக்காங்க!)  மனைவிகிட்ட எந்த கணவனாலும் நல்ல பெயர் வாங்கவே முடியாது.

பத்தாம்பசலி, அசடு, சாமர்த்தியம் பத்தாது, அம்மா கோண்டு, பாசமலர், இடிச்சபுளி, மூளை காலி, இளிச்சவாயன், கேட்பார் பேச்சை கேட்கும் கைப்புள்ளனு அவங்க கொடுக்கிற பட்டப்பெயர்களைக் குறைக்கத்தான் நம்மால முயற்சிக்க முடியும்! ஆனா, ஒண்ணு. அவ்வளவு சுலபத்துல இதுல வெற்றி பெற முடியாது. அதனால ‘இந்த சபதம் நிறைவேறும்னு கனவு காண்பதை நிறுத்துவேன்’னு சைடுல சபதம் செஞ்சுடுங்க!

சப்தமில்லா சப்(ப)தம்!
சமாதியோ... சுவரோ... சபதம் செய்யறதா நினைச்சு ஓங்கி அடிச்சா கை உடையும். சுவர் விரிசலடையும். அப்புறம் புத்தூர்ங்கிற பெயர்ல சந்துக்கு சந்து இருக்கிற டுபாக்கூரை தேடி ஓடணும். இல்லைனா மாவுக்கட்டு போட்டு நடமாடணும். அதனால ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா’னு கத்தி சபதம் போடாம மனசுக்குள்ள லைட்டா முணு முணுத்துக்கறதுதான் இப்ப டிரெண்டுனு எவனும் யோசிக்காத சபதத்தை போட்டுட்டு நடையைக் கட்டலாம். இப்படி செஞ்சா ஒருத்தன் காதுலயும் விழாது. ‘நானா சபதம் செஞ்சேன்’னு கெத்தா பின்னாடி கேட்கவும் முடியும்!

டைரி சபதம்!
‘டைரி எழுத ஆரம்பிப்பேன்’னு எடுக்கற சபதம் சத்தியமா ஒர்க் அவுட் ஆகாது. தப்பித்தவறி டைரி எழுதினா அது சேகர் ரெட்டி கணக்காதான் நாறும். அதனால ‘டைரி கேட்டு யார் முன்னாடியும் தலை சொறிய மாட்டேன்’னு சபதம் எடுக்கலாம். இதன் மூலமா அழுத்திச் சொறிவதால் தலை முடி கொட்டி, தலை சொட்டையாவது நிக்கும். தலைமுடி வளர, பச்சை புள்ளையாய் ஏமாந்து வாங்கி தலையில் தேய்க்கும் ஆப்பிரிக்க காட்டு தைலங்களுக்கான செலவுகள் குறையும். பல் இளிச்சு நிற்கிறப்ப ‘உங்க டூத் பேஸ்ட்டுல உப்பு இருக்கா... மிளகாய் இருக்கா’னு எந்த நடிகையும் மைக்கை நீட்டி அதிகாரமா கேட்கற அவமானங்கள்ல இருந்து தப்பிக்கவும் இதைவிட்டா வேற வழி இல்ல!

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்
இந்த மாதிரி சபத ஐடியாக்களுக்கு தடை கொண்டு வருவோம்னு மட்டும் யாரும் சபதம் போட்டுடாதீங்க... அப்புறம் அஞ்சு பக்கங்களுக்கு காமெடிங்கிற பெயர்ல எங்களால ஜல்லி அடிக்க முடியாது

- எஸ்.ராமன்