நிறைய நிஜ சம்பவங்களின் தொகுப்புதான் பரியேறும் பெருமாள்!



‘‘ராம் சார்கிட்டே 12 வருஷங்கள் உதவி இயக்குநராக இருந்திருக்கேன். பிறந்து, வளர்ந்தது மாதிரின்னு சொன்னால் சரியாயிருக்கும். சினிமாவில் ஓர் ஆளுமையா நிற்கிறது, கிரியேட்டிவ்வாக முயல்வது, நினைச்சதை செய்து, நினைச்சதை எடுத்து அதற்கு வருகிற பிரச்னைகளை சந்திப்பது எல்லாத்தையும் அவர்கிட்டே இருந்துதான் கத்துக்கிட்டேன். ஒரு கலைஞனோட வாழ்க்கை எப்படிப்பட்டதுன்னு புரிபட அவர் காரணமா இருந்திருக்கிறார். வறுமை, சமூகம், கோபம், நுணுக்கம் அத்தனையையும் அவர் வசமிருந்தே தெரிஞ்சுகிட்டேன்.

சினிமாவிற்காக காத்திருந்து, காத்திருந்து அப்பாவும், பையனும் மாதிரி சேர்ந்து வளர்ந்திருக்கோம். பிரசன்டேஷனில்தான் எல்லாம் இருக்குன்னு சொல்லிக் கொடுத்திருக்கார். ‘பரியேறும் பெருமாள்’ என் மூச்சுக்காத்தை ஊதி எடுத்த படம். வாழ்க்கை, இயல்புகள், மனநுட்பங்கள், பிரச்னைகள்னு நிஜமுகம் காட்டியிருக்கேன். ‘கற்றது தமிழி’ன் போது வந்தவன், ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’ வரைக்கும் முடிச்சுக் கொடுத்திட்டுத்தான் வந்தேன்.’’ யதார்த்தமாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ். எழுத்தாளராகவும், கவிஞராகவும் வலிமையாக அறியப்பட்டவர்.

டிரைலர், பாடல்கள்னு படம் வேறு வடிவத்தில் வருவது மாதிரி இருக்கு..?
அப்படி ஒரு நினைப்பை கொடுத்ததற்கும், பகிர்ந்ததற்கும் நன்றி. ‘பரியேறும் பெருமாள்’ நிறைய நிஜ சம்பவங்களின் தொகுப்பு. நாம் இன்றைக்கும் முகத்தை மூடிக் கொள்கிற அல்லது முகத்தைத் திருப்பிக் கொள்கிற, கண்டும் காணாமல் போய்க் கொண்டிருக்கிற, பார்க்காதது மாதிரி மறைத்துக் கொள்கிற நிஜ சம்பவங்களின் தொகுப்பு. நாம் நிறைய விஷயங்களைப் பத்தி மனசுக்குள்ளே கேள்வி கேட்டுக்கிறோம், சங்கடப்படுகிறோம். அதைப்பற்றி யார்கிட்டேயாவது மனசு விட்டுப் பேசலாம்னு தோணும். ஒருத்தனுக்கு தப்புன்னு தோன்றது, இன்னொருத்தனுக்கு சரின்னு படுது. ‘பிழைக்கத் தெரியாதவன்’னுஎப்படியாவது பிழைக்கத் தெரிஞ்சவன் சொல்றான். யாரையும் நம்ப முடியலை. அல்லது யார் சொல்றதை நம்புறதுனும் புரியலை.

மீடியாக்கள் அதிகமாகி விட்டது. அவன் ஒரு தகவல் சொல்றான், இவன் ஒரு தகவல் சொல்றான். பாதிக்கப்படுபவனும் புகார் சொல்றான், பாதிப்பை ஏற்படுத்திக் கொடுத்தவனும் புகார் கொடுக்கிறான். எல்லா சம்பவங்களும் இங்கே குழப்பம் தருது. யாராவது உண்மையை உரக்கச் சொல்ல மாட்டார்களான்னு தோணுது. இந்த ‘பரியேறும் பெருமாள்’ உண்மையைப் பேசுவான். உண்மையைக் கேட்டுக் கொள்கிற மனநிலையோடு வந்தால் அவன் உண்மையைச் சொல்வான். அலட்டிக்காமல், முகத்திற்கு நேராகப் பேசுவான். எதிரியாக இல்லாமல் நண்பனாகப் பேசுவான். அப்பா, அம்மா, மனைவி, காதலி, நெருங்கிய நண்பன் மாதிரி அவனோடு முகம் கொடுத்து பேசலாம்.

வாழ்ந்துகிட்டு இருக்கிற வாழ்க்கையைப் பேசுவான். தமிழ்ச் சமூகத்தின் நலனில் மட்டுமே ஞாபகமாக இருப்பான். குழப்பாமல் தெளிவாகப் பேசுவான். இன்னிக்கும் சிரியா பிரச்னையைப் பத்தி அறிய கூகுளில் அதிகம் தேடினது தமிழ் மக்கள்தான்னு ஒரு சர்வே சொல்லுது. பெரும் துயர்களில் தமிழர்கள் எப்பவும் பங்கு பெறுகிறார்கள். அவர்களிடம் உண்மையைக் கொண்டு போய்ச் சேர்ப்பான் இந்த ‘பரியேறும் பெருமாள்’. அவன் மண்ணுக்குள் இருக்கிற வேர். முட்டி மோதி வெளியே வந்து மரமாக வளர்ந்து நிற்பான். அவன் ஒரு நம்பிக்கைக்குறி. அனாயாசமாக குதிரையேறி பாய்ச்சலில் வருகிறவன். உண்மை எப்பவும் அழகானது என்றால் அதன் பதிவும் அவ்விதம்தான்.


இதில் கதிர் மிகவும் பக்குவமடைந்த இடத்திற்கு வந்த மாதிரி தெரிகிறது...

பிரமாதமான பையன். பெரும் ஹீரோவாக ஆகணும்னு மனதில் கருத்து வைக்காமல் தமிழ் சினிமா நம்மையும் திரும்பிப் பார்க்கணும்னு ஆசைப்படுகிறவன். ஏற்கனவே ‘மதயானைக் கூட்டம்’, ‘கிருமி’னு பளிச்னு தனியாகத் தெரிஞ்ச பையன். தெக்கத்தி முகம். அவன் வாழாத வாழ்க்கையை, பரிச்சயமில்லாத உலகை வாழ்ந்து பார்க்கணும்னு ஆசைப்பட்டான். இதை ஒரு போட்டியாக எடுத்துக்கிட்டு, சிறப்பான இடம் பிடிக்கணும்னு இறங்கிட்டான். இதை ஒரு பிடியாக வைச்சுக்கிட்டு நானே அவனை இரக்கமில்லாமல் வேலை வாங்கிட்டேன். அவனுக்கு என் மேல கோபம் இருக்கலாம். ஆனால், அப்படி இல்லைங்கிறது அவன் தொடர்ந்து அன்பு பாராட்டுவதில் புரிந்தது.

ஆனந்தியும் இதில் வித்யாசப்படறாங்க...
யதார்த்தமாகவும், தெரிஞ்ச முகமாகவும் இருக்கணும்னு விரும்பினேன். நான் பெண்களை கவர்ச்சிங்கிற ஒற்றை அம்சத்திற்காக உபயோகப்படுத்துவதில்லை. அவங்க ஷூட்டிங் வந்திட்டு, அங்கே கூடியிருக்கிற ஜனங்கள், வீடு, இடம்னு புரிஞ்சுக்கிட்டு நிறைய கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. கதை பொய் கிடையாது, நிஜத்திற்குள் ஒரு கதை இருக்குனு அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு. அதற்குப் பிறகு அவங்க சினிமாவில் நடிக்கிற மாதிரி நடிக்கலை. பாத்திரத்தின் இடம் புரிந்து, அர்த்தம் தெரிஞ்சு நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. படத்தில அவங்க அமைதியாக வாழ விரும்பும் கேரக்டர். அவங்க மகிழ்ச்சியாக இருந்தாங்களாங்கறது கதை. அந்த எளிமையான முகம் இன்னும் அருமையாக இருக்கு. எனக்கு இன்றைக்கு அவரை திரையில் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சி.


பா.ரஞ்சித் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இன்னும் முழு வீச்சில் இருப்பாரே..?
எனக்கு முதல் படத்தில் சந்தோஷ் நாராயணன் அதிகம். ரஞ்சித்தினால்தான் அவர் வந்தாலும், வந்ததும் உற்சாகமாகிட்டார். அவரே தேர்ந்தெடுத்துத்தான் படம் பண்றார். இந்த ஊர் மக்களுக்கான இசை, இவங்க பாட்டுன்னு ஒரு வட்டத்திற்குள் வந்திடாமல் எல்லோரும் கொண்டாட்டமாக ரசிக்கிற மாதிரி இசையை கொண்டு வரணும்னு ஆசைப்பட்டேன். படத்தை முடிச்சிட்டு காண்பித்தால், அவர் ரொம்பவே சந்தோஷமாகிட்டார். ஒரு சின்ன படத்தை பெரிய அளவுக்கு கொண்டு போகிற வித்தை அவருக்கு அமோகமாக வருது.

பா.ரஞ்சித் உங்களுக்கு தயாரிப்பாளராக அமைஞ்சதும் ஒரு நல்ல விஷயமில்லையா?
என்னை அவர் முன்னமே ஓர் எழுத்தாளராக அறிந்திருந்தார். அதுவும் ஒரு சௌகரியம். என் இலக்கு, தமிழ்ப் பரப்பில் இயங்கிய விதம் அவருக்கு பிடிச்சுப் போயிருக்கணும். இங்கே ஒரு பெரிய இயக்குநரை நீங்க எளிதில் சுலபமாக சந்திக்கக்கூட முடியாது. ஆனால், ரஞ்சித் அண்ணன் எப்பவும் எளிதில் கிடைப்பார். பேசவும் முடியும். எப்படியாவது உங்களுக்காக சிறு நேரமாவது ஒதுக்க அவரால் முடியும். அதுவே பெரிய சுதந்திரம். அதுவே போதுமானது. கதையைச் சொன்னதும், ‘சொன்னது மாதிரியே கருத்து சிதையாமல்,

நோக்கத்திலிருந்து திசை திரும்பாமல், சுதந்திரமாக இருந்து எடுத்துக் கொடு’னு சொல்லிட்டுப் போயிட்டார். நம்ம அப்பா, அம்மா கைக்காசை எடுத்துக் கொடுத்திட்டு, ‘எக்கேடு கெட்டுப் போனாலும் நீ நினைச்ச மாதிரி படத்தை எடுத்துட்டுவா’ன்னு சொல்வாங்களே... அப்படி இருந்துச்சு. மறுபடியும் ரீஷூட் போகாமல், ‘சரியாக எடுத்திட்டு வந்திருக்கே’னு சொன்னார். அண்ணன், முகத்தில் திருப்தி மின்னியது. அதை தமிழ் மக்களிடமும் எதிர்பார்க்கிறேன்.

- நா.கதிர்வேலன்