கோலமாவு கோகிலா சீக்ரெட்ஸ்



நயன்தாரா ஓகே சொன்னார்... அனிருத்தும் சிவகார்த்திகேயனும் என்னை பறக்க வைக்கிறார்கள்!

‘‘நயன்தாரா மேம்கிட்ட நாம கதையை சொல்லி நடிக்க சம்மதம் வாங்கறதுதான் சிரமம். கதை கேட்டதுமே ‘பண்றேன்... பண்ணலை...’னு  சொல்லிடுவாங்க. இழுத்தடிக்க மாட்டாங்க. அவங்க ஓகே சொல்லிட்டா போதும். வேற எதைப் பத்தியும் நாம கவலைப்பட வேண்டாம். படத்தோட  அடுத்தடுத்த வேலைகளை நம்பிக்கையா கவனிக்கப் போயிடலாம். புராஜெக்ட் ஆட்டோமெடிக்கா டாப் கியர்ல ஸ்டார்ட் ஆகிடும்...’’ ஆச்சரியங்கள்  மின்ன பேசுகிறார் நெல்சன்.

நயன்தாரா நடிக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் அறிமுக இயக்குநர். டெலிவிஷன் மீடியாவில் பதினொரு வருடங்கள் வேலை செய்த  அனுபத்தோடு கோலிவுட்டில்  நுழைந்திருக்கிறார். ‘‘இந்தப் படம் விறுவிறுனு தொடங்கறதுக்கு காரணமே, அனிருத் காட்டின அன்பும் அக்கறையும்தான். அவரோட வெளிநாட்டு மியூசிக் கன்சர்ட்ல நானும் ஒர்க் பண்ணியிருக்கேன். தவிர ‘3’ படத்தில் இருந்தே அவர் நல்ல நண்பர். இப்ப, சிங்கப்பூரில் நடந்த  அவரோட மியூசிக் கன்சர்ட் அப்பதான் என் கதைல நயன்தாரா மேம் நடிக்கப் போற விஷயத்தையே அவர்கிட்ட சொன்னேன்.

ஹேப்பியானவர் ‘படத்துக்கு மியூசிக் நான் பண்றேன்னு அறிவிச்சிடுங்க’னு கேஷுவலா சொல்லிட்டார். திக்குமுக்காடிட்டேன். அதை அதிகரிக்கிற  மாதிரி ‘தயாரிப்பாளர் கிடைச்சிட்டாங்களா நெல்சன்’னு கேட்டார். ‘இனிமேதான் தேடணும்’னு சொன்னதும், ‘இருங்க’னு அவரே ‘லைகா’  ராஜுமகாலிங்கம் சார்கிட்ட பேசி இந்தப் படத்தை தயாரிக்க வச்சார்...’’ நெகிழ்கிறார் நெல்சன்.

அதென்ன ‘கோலமாவு கோகிலா’? அனிருத்தான் ஹீரோவா?

டக்னு கவனம் ஈர்க்க இப்படி டைட்டில் வைக்கலை. இந்தக் கதைக்கு இதுதான் பொருத்தமான தலைப்பு. படம் பார்த்ததும் நீங்களே இதை சொல்வீங்க. அப்புறம், அனிருத் இதுல ஹீரோ கிடையாது. மியூசிக்பண்ணியிருக்கார். சின்ன கேமியோவும் செய்திருக்கார். அவ்வளவுதான். ஆரம்பத்துல பாடல்களே  இல்லாம எடுக்க நினைச்சோம். ஆனா, அனிருத்கிட்ட கதை பத்தி பேசப் பேச மான்டேஜ் ஸாங்ஸ், தீம் மியூசிக்னு பாடல்களுக்கான ஸ்கோப்  வந்துடுச்சு. ‘ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ல ஒரு டார்க் ஷேட் இருக்கே’னு பலரும் கேட்டாங்க.

நயன்தாரா இதுல லோயர் மிடில் கிளாஸ் பொண்ணு. நடுத்தர குடும்பத்தோட பொருளாதார நிலைமைதான் எல்லாருக்குமே தெரியுமே... அவங்க 15  நாட்கள் சந்தோஷமாவும், மீதி 15 நாட்கள் பற்றாக்குறையுடனும் அல்லாடுறவங்க. அப்படியொரு ஃபேமிலி. அதுல மூத்த பொண்ணு நயன்தாரா. அவங்க அம்மா, அப்பானு அந்த குடும்பமே இந்த பொண்ணோட சம்பளத்தை நம்பித்தான் இருக்கு. அப்படிப்பட்ட ஏழைப் பெண்ணுக்கு திடீர்னு 15 லட்ச ரூபாய்  தேவைப்படுது.

எதுக்காக அவ்வளவு பெரிய தொகை? அதுக்கான அவசியம் என்ன? அதை அவங்களால திரட்ட முடிஞ்சதா? அதனால அவங்க எதிர்கொள்ளும்  பிரச்னைகள் என்ன? அதில் இருந்து எப்படி வெளியே வர்றாங்க... இதுதான் லைன். எமோஷனல், த்ரில்லர், காமெடி எல்லாம் இயல்பா வரக்கூடிய  சப்ஜெக்ட் இது. சரண்யா பொன்வண்ணன், ‘பருத்திவீரன்’ சரவணன், ஜாக்குலின், யோகிபாபு, ராஜேந்திரன் தவிர புதுமுகங்கள் நிறைய பேர் சின்னச்  சின்ன கேரக்டர்ஸ் செய்திருக்காங்க. நயன்தாரா காஸ்ட்யூம்ஸை அனுவர்த்தன் வடிவமைச்சிருக்காங்க. ‘இறுதிச்சுற்று’ சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு  பண்றார்.

பி.சி.ஸ்ரீராம் அசிஸ்டென்ட். இந்த கதைக்கு புது லைட்டிங், ஷேட்ஸ் வேணும்னு சொன்னேன். அதே மாதிரி கதைக்கு தேவையான ஒளிப்பதிவைக்  கொண்டு வந்திருக்கார். ‘நயன்தாரா இதுல காது கேட்காத வாய் பேச முடியாத பெண்ணா நடிச்சிருக்காங்களா?’னு சிலர் கேட்கறாங்க. இப்படிப்பட்ட  வதந்திங்க எப்படி பரவுதுனு தெரியலை. அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. நயன்தாராவுக்கு இதுல காது நல்லா கேட்கும். நல்லாவும் பேசுவாங்க.

என்ன சொல்றாங்க நயன்தாரா?

ஆக்ட்டிங்கைப் பொறுத்தவரை அவங்க ப்ரொஃபஷனல். இது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். நம்ம முகத்தை வைச்சே ‘நாம ஏதோ ஸ்ட்ரெஸ்ல இருக்கோம்’னு கண்டுபிடிச்சுடுவாங்க. நம்ம பிரச்னையை அவங்ககிட்ட ஷேர் பண்ணிக்கிட்டா நல்ல தீர்வு கிடைக்கும். ஹெல்பிங் டெண்டன்ஸி  உள்ளவங்க. ‘கோலமாவு கோகிலா’ கதையை சொல்லும்போதே அவங்க ஏழைப் பொண்ணுனு சொல்லியிருந்தேன். ரெண்டு நாட்கள்ல நிஜ ஏழைப்  பொண்ணு மாதிரியே மேக்கப் பண்ணி போட்டோஸ் எடுத்து அனுப்பியிருந்தாங்க.

அந்த இன்வால்வ்மென்ட்தான் அவங்க வெற்றிக்கு காரணம். யோகிபாபு காம்பினேஷனோட மேம் காட்சிகளை ஷூட் பண்றப்ப ஸ்பாட்டே கலகலப்பா  இருக்கும். யோகிபாபு எது சொன்னாலும் டக்குனு சிரிச்சுடுவாங்க. முழுக் கதையும் சீன் பை சீன் அவங்களுக்கு தெரியும். அதனால ஸ்பாட்ல சின்னச்  சின்ன மாற்றங்கள் செய்தாலும் அதை கண்டுபிடிச்சுடுவாங்க. ‘இது இப்படித்தானே’னு எப்பவோ நாம சொன்னதை நினைவுல வைச்சு கேட்பாங்க. அப்படி ஒரு மெமரி பவர் அவங்களுக்கு.

இதுக்கு முன்னாடி நீங்க இயக்கின ‘வேட்டை மன்னன்’ மறுபடியும் வீறுகொண்டு எழுமா?

சிம்பு என் ஸ்கூல்மேட். அப்புறம், அவர் ஹீரோவாகிட்டார். நான், பிஎஸ்சி விஸ்காம் முடிச்சுட்டு டிவி பக்கம் போயிட்டேன். எங்க சேனல் ஷோவுக்கு  ஒரு நாள் சிம்பு வந்திருந்தார். என்னைப் பார்த்தவர் ‘படம் பண்ணலாம் நெல்சன்’னு கூப்பிட்டு ‘வேட்டை மன்னன்’ பண்ண வைச்சார். பாதி படம் ஷூட்  போச்சு. அப்புறம் அது ஏன் தொடரலைனு சரியா சொல்லத் தெரியல.

மறுபடியும் அது ஆரம்பிக்குமாங்கற ஐடியாவும் எனக்கில்ல. நட்புக்கு சிம்பு முக்கியத்துவம் கொடுப்பார். பயங்கரமா அவர் கூட சண்டை போட்டுட்டு  ஆறு மாசம் பொறுத்து ‘ஹாய்’ சொன்னா அவரும் பழசை நினைவுல வைச்சுக்காம ‘எப்படிடா இருக்கே’னு கட்டிப்பிடிச்சு அன்பா நலம் விசாரிப்பார்.  இந்தப் படம் தொடங்கினப்ப கூட கூப்பிட்டு வாழ்த்தினார். இப்பவும் அவரோட டச்லதான் இருக்கேன்.

சிவகார்த்திகேயனுக்கு நீங்க ரொம்ப நெருக்கமான நண்பராச்சே..?

யெஸ். அவரோட குட் புக்ல நானும் இருக்கேன். சினிமாவுல சிவா எவ்ளோ உயரத்துல இருக்கார்னு எல்லாருக்குமே தெரியும். ஆனாலும் சேனல்ல  என்கிட்ட எப்படி பழகினாரோ அதே பழைய சிவாவாதான் இப்பவும் பழகறார். என்கிட்டனு இல்ல, எல்லார்கிட்டேயும் அவர் அப்படித்தான். நான்  டைரக்டரானதுல அவருக்கு ரொம்ப சந்தோஷம். நயன்தாராகிட்ட கதை சொல்லியிருக்கேன்னு சொன்னதும், ‘புரொட்யூசர் கிடைச்சுட்டாங்களா...  இல்லனா நானே தயாரிக்கறேன்’னு சொன்னார்.

படத்துல ‘மொட்டை’ ராஜேந்திரன், யோகிபாபுவுக்கு ஏற்ற ரோல் உண்டு. பேச்சுவாக்குல சிவகார்த்திகேயன்கிட்ட இதை சொல்லியிருந்தேன். மறுநாள்  ‘சிவா தம்பி சொன்னாப்ல. எத்தனை நாள் நடிக்கணும்’னு அவங்க ரெண்டு பேருமே வந்து கமிட்டானாங்க. ‘எந்த ஹெல்ப்னாலும் கூச்சப்படாம  கேளுங்க’னு சொல்லியிருக்கார். படத்தோட வளர்ச்சில சிவாவுக்கு பெரிய பங்கிருக்கு. என்னைச் சுத்தி நல்ல நண்பர்கள் இருக்காங்க. அதனாலதான்  ஒரு டைரக்டரா உங்களுக்கு பேட்டி கொடுத்துட்டு இருக்கேன்!         

-மை.பாரதிராஜா