துப்பாக்கி சுடுதலில் தங்கம் குவிக்கும் தயாரிப்பாளர்!



சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ‘2டி என்டர்டெயின்மென்ட்’டின் இயக்குநர் + இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன். 20 வருடங்கள்  அட்வகேட் அனுபவத்தோடு திரைத்துறைக்கு வந்திருப்பவர். ஹாபியாக தொடங்கிய துப்பாக்கி சுடுதலை ஸ்போர்ட்ஸ் ஆக்கி, அதில் கோல்டு மெடல்  குவித்து வரும் நேஷனல் சாம்பியன். ராஜசேகரின் மகள் உத்ராவும் ஆக்‌ஷன் இளவரசிதான். இளம் ரைஃபிள் சாம்பியன்! ‘‘நாலு தலைமுறையா நாங்க  அட்வகேட் ஃபேமிலி. மூணு தலைமுறையா துப்பாக்கி சுடுதலில் கோல்டு மெடல் ஜெயிக்கறோம்..!’’ சிரித்த முகமாகப் பேச ஆரம்பிக்கிறார் ராஜசேகர்.

‘‘பூர்வீகம் சிவகங்கை. இப்பவும் அங்க ஒரு மேல்நிலைப்பள்ளி எங்களுக்கு இருக்கு. சென்னைல செட்டிலாகி முப்பது வருஷங்களாச்சு. என்  முழுப்பெயரே ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன்தான். கொள்ளுத் தாத்தா எங்க ஃபேமிலியோட முதல் அட்வகேட். எங்க தாத்தா நீதிபதியா இருந்தார்.  தவிர, டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராவும் பதவி வகிச்சார். அப்பா கற்பூர சுந்தரபாண்டியன் ஐஏஎஸ் ஆபீசர். எனக்கு வினோதினி, நிவேதிதானு ரெண்டு  தங்கைங்க. அப்பா, எம்ஜிஆர் முதல்வராக இருந்தப்ப செய்தித்துறைல செகரெட்டரியாகவும்; ஜெயலலிதா ஆட்சில இணை செயலாளராகவும்; திமுக  ஆட்சில இந்து அறநிலையத்துறைலயும் இருந்தார்.

2008லதான் அவங்க ரிடையர் ஆனாங்க...’’ என்று சிரிக்கும் ராஜசேகர், தனக்கும் சூர்யாவுக்குமான நட்பைக் குறித்து விவரித்தார். ‘‘சிவகுமார் அங்கிள்  பையன்கள் சூர்யா, கார்த்தி; பாரதிராஜா அங்கிள் பையன் மனோஜ்; ‘சிறுத்தை’ சிவானு சின்ன வயசுல என்னை சுத்தி இருந்தவங்க பூரா சினிமா  ஃப்ரெண்ட்ஸ்தான். எல்லாருமே எதிரெதிர் வீடுகள். நான் எட்டாவது படிக்கிறப்ப சூர்யா ஆறாவது படிச்சிட்டிருந்தார். நாங்க ரெண்டு பேருமே  ஆளுக்கொரு சைக்கிள்ல தெரு முழுக்க ரவுண்டு அடிப்போம். பாதி வயசு வரைக்கும் சிவகுமார் அங்கிள் வீட்லதான் வளர்ந்தேன். என்னையும் ஒரு  பையனா நினைச்சு பார்த்துப்பாங்க.

சிவகுமார் அங்கிள் சினிமாவுல பீக்ல இருந்தப்ப கூட சூர்யாவும் கார்த்தியும் ஸ்கூல் பஸ்லதான் போவாங்க. அதே மாதிரி எங்கப்பா ஐஏஎஸ் ஆபீசரா  இருந்தாலும் என்னையும் பஸ்லதான் அனுப்புவார். வீட்ல கார், பைக் எல்லாம் இருக்கும். ஆனாலும் எங்களுக்கு கொடுக்க மாட்டாங்க. இப்படி மிடில்  கிளாஸாதான் வளர்ந்தோம். காலேஜ் ஃபைனல் இயர்லதான் போனாப் போகுதுனு கார் கொடுத்தாங்க. அதுவும் எப்படி? சிவகுமார் அங்கிள் சூர்யாவுக்கு  ஒரு பழைய ஃபியட் வண்டியையும், எனக்கு எங்க வீட்ல 1968 மாடல் வெரி ஓல்டு அம்பாசிடர் காரையும் பிஎம்டபுள்யூ கொடுக்கிறா மாதிரி தந்தாங்க!  அப்ப கடுப்பா இருந்தது.

இப்ப நினைச்சுப் பார்த்தா, பணத்தோட மதிப்பும் மத்தவங்களுக்கு மரியாதை கொடுக்கற பண்பும் எங்களுக்கு வந்ததே அப்படி நாங்க  வளர்ந்ததுனாலதான்னு புரியுது...’’ என்ற ராஜசேகர் தில்லி உச்சநீதிமன்றத்திலும் வழக்கறிஞராக இருந்தவர். ‘‘அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நான்  அட்வகேட் ஆகணும்னு ஆசை. சென்னைல சட்டப்படிப்பு. அப்புறம் ஹைகோர்ட்ல ப்ராக்டீஸ். கிட்டத்தட்ட இருபது வருஷங்கள் ப்ராக்டீஸ்  பண்ணிட்டிருந்தேன். அதுல நாலு வருஷங்கள் வனத்துறையோட அரசு வழக்கறிஞர் பணி. பிறகு கலால் மற்றும் சுங்கத்துறைல மூணு வருஷங்கள்  சட்ட ஆலோசகர். அப்புறம்தான், சுப்ரீம் கோர்ட். அங்க ரெண்டு வருஷங்கள்.

இந்த சமயத்துலதான் சூர்யா ‘2டி என்டர்டெயின்மென்ட்’ தொடங்கப் போறது பத்தி பேசினார். அடுத்த நொடியே, ‘அதை நான் பார்த்துக்கறேன் சூர்யா’னு  சொன்னேன். அவர் அதை நம்பவே இல்ல. இத்தனை வருஷ வழக்கறிஞர் வேலையை விட்டுட்டு வருவேன்னு அவர் நினைக்கலை.  கலாய்க்கறேன்னுதான் நினைச்சார். ‘உங்க சினிமா ஃபங்ஷனுக்கு வர்றப்ப மேடைல பலரும் விருது வாங்கறதை பார்ப்பேன். அதேமாதிரி எனக்கும்  வாங்க ஆசை’னு கண்சிமிட்டினேன். சிரிச்சுகிட்டே ‘வெல்கம்’னு கைகொடுத்தார்! சர்வீஸ் எக்ஸாம்ஸ் எழுதி அரசு வேலைல சேர எனக்கு  விருப்பமில்லாம போனதுக்கு காரணமே அடிக்கடி டிரான்ஸ்ஃபர் தொல்லை அங்க இருந்ததுதான்.

தமிழகம் முழுக்க பதினொரு பள்ளிகள்ல படிச்சேன்! தொடர்ந்து ஒரு வருஷம் எந்த ஸ்கூல்லயும் படிச்சதில்ல. ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ்னு சொல்லிக்க  யாருமே இல்லாம போனதுக்கு இதெல்லாம் காரணம்...’’ என்றவரின் டாபிக் மறுபடியும் சூர்யா பக்கம் திரும்பியது. ‘‘ஃபங்ஷன்ல மேடையேறி அவார்ட்  வாங்கணும்னு விரும்பின என் ஆசை சீக்கிரமாவே நிறைவேறிடுச்சு. ‘36 வயதினிலே’வுக்காக முதன்முறையா மேடையேறி அவார்டு வாங்கினேன்.  அப்புறம் ‘24’க்காக ரெண்டு தேசிய விருதுகள். ‘What you think you become... I believe that...’னு உணர்ந்தேன். சூர்யாகிட்ட நிறைய  விஷயங்கள் பிடிக்கும். நேர்மை அவர் பலம். ஸ்டிரைட் ஃபார்வர்டா இருப்பார்.

மத்தவங்களுக்கு உதவுற குணமும், கடின உழைப்பும் அவர் குணங்கள். சின்ன வயசுலயே, நடிகர் மகன்னு சொல்லிக்க கூச்சப்படுவார். ரசிகர்களுக்கு  ரொம்பவே மதிப்பு கொடுப்பார். எல்லார்கிட்டயும் பணிவும் எளிமையுமா பழகுவார். அதைத்தான் நானும் ட்ரை பண்ணிட்டிருக்கேன்...’’ என்ற ராஜசேகர்,  துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் வந்தது பற்றி பேச ஆரம்பித்தார். ‘‘எங்க அப்பாவும் கன் ஷூட்ல மெடல்கள் நிறைய வாங்கியிருக்கார். அவர்,  புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரா இருந்தப்ப விஜயகுமார் ஐபிஎஸ், அங்க மாவட்ட எஸ்பி-யா இருந்தார். அப்பாவும் அவரும் நல்ல நண்பர்கள். நான்  ஆறாவது படிக்கிறப்ப அப்பாவோட புதுக்கோட்டை ரைஃபிள் கிளப் போனேன்.

அங்கதான் விஜயகுமார் சாரை பார்த்தேன். ரைஃபிள் ஷூட்ல அப்பாவும் சாம்பியன்தான். ஆனாலும் கன் ஷூட்ல எனக்கு ரோல் மாடல் விஜயகுமார்  சார்தான். அப்பா துப்பாக்கி சுடுதல் போட்டிகள்ல நிறைய பங்கேற்பார். தொடர்ந்து ரைஃபிள் கிளப்ல ப்ராக்டீஸ் பண்ணுவார். நானும் கூடப் போவேன்.  அங்கதான் சிவந்தி ஆதித்தன் அங்கிள் பழக்கமானாங்க. அங்க நடந்த ஒரு போட்டில புதுக்கோட்டை ராஜா ராஜகோபால் தொண்டைமான் முன்னிலைல  அப்பா ஜெயிச்சார். அந்த போட்டியைப் பார்க்கப் போன நான், ரைஃபிள் ஷூட்ல சேர்ந்தேன். அந்த வருஷமே சப்-ஜூனியர் பிரிவுல சில்வர் மெடல்  வாங்கினேன். இதுதான் நான் வாங்கின முதல் மெடல்.

அப்புறம் அப்பாவுக்கு செகரெட்டரியா புரொமோஷன் கிடைச்சது. சென்னைக்கு வந்தோம். இங்க இருந்த ரைஃபிள் க்ளப்ல சேர்ந்தேன். 1997னு  நினைக்கறேன். நான் ப்ராக்டீஸ்ல இருக்கிறப்ப ஒருநாள் சிவந்தி ஆதித்தன் அங்கிள் அங்க வந்தாங்க. என்னைப் பார்த்ததும் சிரிச்சுகிட்டே பக்கத்துல  வந்தார். தன் ஃப்ரெண்டோட மகன் என்பதால் என்மேல அவருக்கு அன்பு அதிகம். ‘என்னப்பா... இன்னும் நேஷனல்ல கலந்துக்காம இருக்க? உடனே  பெயரைக் கொடு’னு சொன்னதோட கோவைல நடந்த தேசிய போட்டில என்னை பங்கேற்க வைச்சார்.

அது ஏர் ரைஃபிள் கேட்டகரி. அதுல சில்வர் மெடல் கிடைச்சது. கன் ஷூட்டைப் பொறுத்தவரை முதல்ல ஏர் ரைஃபிள்லதான் பயிற்சி பண்ண  வேண்டியிருக்கும். அடுத்து ‘.22’ (பாயின்ட் டூடூ) ரைஃபிள். அப்புறம் 300 மீட்டர்ஸ் பிக் போர். இதெல்லாம் முடிச்ச பிறகுதான் ஷாட் கன் (இரட்டைக்  குழல் துப்பாக்கி) தொட முடியும். இதுலதான் ஃபிளையிங் டார்கெட் உண்டு. அதை ஸ்கீட் ஷூட்டிங்னு (skeet shooting) சொல்வாங்க. கொஞ்சம்  கடினமான கேட்டகரி இது. இதுல உள்ள சூட்சமங்களை எனக்கு கத்துக் கொடுத்தவர் புதுக்கோட்டை ராஜா. ஸ்கீட் ஷூட்டிங்ல தமிழ்நாடு சார்பா  இப்பவும் தொடர்ந்து ஆடிட்டிருக்கேன்.

அப்பாவும் அம்மாவும் என்னை போட்டி போட்டு ஆதரிச்சாங்க. போட்டிக்கு பத்து நாட்களுக்கு முன்னாடிலேந்தே கண்ணுக்கு நல்லதுனு தினமும் அம்மா  சாந்தா பாண்டியன் பொன்னாங்கண்ணிக் கீரை ஜூஸ் தருவாங்க! ஏர் ரைஃபிள்ல ஜெயிச்சதும் ராணுவம் நடத்துற பிக் போர் (300 மீட்டர்) சாம்பியன்ஷிப்  போட்டில கலந்துகிட்டு ஒரு தங்கமும் ஒரு வெண்கலமும் ஜெயிச்சேன். இந்தியாவுலயே முதல் முறையா 1988ல சென்னைல டபுள் ட்ராக் போட்டி  நடந்தது. தேசிய அளவிலான அந்தப் போட்டில நான் சிவிலியன் பிரிவுல கலந்துகிட்டேன். தங்கம் வாங்கினேன்.

அதே பிரிவுல ஆர்மி சர்வீசஸ் கேட்டகரில இப்ப ஒலிம்பிக்குல தங்கம் வாங்கின ஆர்.வி.எஸ்.ரத்தோர் ஜெயிச்சார்! நேஷனல்ல நாம கலந்துக்கிட்டு 95  சதவிகிதத்துக்கு மேல ஸ்கோர் எடுத்தா, reknownedshotனு சர்டிபிகேட் கிடைக்கும். அது இருந்தா வெளிநாட்டு துப்பாக்கி களையும்,  தோட்டாக்களையும் வரி இல்லாம இறக்குமதி பண்ணிக்க முடியும். அப்படித்தான் நான் வாங்கறேன். இப்ப அப்பாவோட வெப்பன்ஸையும் (துப்பாக்கி)  சேர்த்து வீட்ல மொத்தம் 15 துப்பாக்கிங்க இருக்கு...’’ என்று சொல்லும் ராஜசேகருக்கு இரு மகள்கள்.

‘‘லவ் மேரேஜ். மனைவி சரண்யா, டாக்டர். ஸ்பைஸ் ஜெட்ல தலைமை மருத்துவ அதிகாரி (சிஎம்ஓ). காலேஜ் ஃபைனல் இயர்ல வீட்ல கார்  கொடுத்ததும், சரண்யாவை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்! ஆறு வருஷ காதலுக்குப் பிறகு ரெண்டு பேர் வீட்லயும் சம்மதிச்சாங்க. மகள்கள் உத்ரா,  அந்த்ரா. ரெண்டு பேரும் ஸ்கூல் படிக்கறாங்க. மூத்தவ உத்ராவும் ரைஃபிள் சாம்பியன். நிறைய மெடல்கள் வாங்கிக் குவிக்கறாங்க. அவங்களுக்கு  இதுல ஆர்வம் இருக்கற விஷயமே எனக்கு லேட்டாதான் தெரியும். வீட்டுல இருக்கிறப்ப உத்ராவை ஏர் ரைஃபிள் ப்ராக்டீஸ் பண்ண வச்சிருக்கேன்.  போட்டி களுக்கு போறப்ப கூட்டிட்டுப் போவேன்.

ஆனா, அவங்களுக்கும் இதுல ஆர்வம் இருக்குனு ஷூட் அப்பதான் தெரிஞ்சது. ‘12 வயதோருக்கான ஸ்டேட் மீட் போட்டில கலந்துக்கறியா’னு  தயக்கத்தோட கேட்டேன். ஏன்னா, ஷாட் கன் வெயிட் அதிகம். ரிகொயலும் இருக்கும். ஷூட் பண்றப்ப வெயிட் பின்நோக்கி வந்து ரிகொயல் நம்  ஷோல்டரை அழுத்தும். ஆனா, உற்சாகத்தோடு உத்ரா, ‘என்னால முடியும்’னு ரெடியானாங்க. திருச்சில உள்ள ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ்  கிளப்புக்கு வேர்ல்டு சாம்பியன் ட்ராக் ஷூட்டர் மானல் ஜீத்ஜிங் வந்திருந்தார். அங்க அவர்கிட்ட பத்து நாட்கள் கோச்சிங் கொடுத்தோம்.

அப்புறம் ஸ்டேட் மீட்ல பங்கேற்று, ட்ராப் அண்ட் டபுள் ட்ராப்னு ரெண்டுல 6 மெடல்கள் 2017ல ஜெயிச்சாங்க! சின்னவ அந்த்ரா, கராத்தேல ஜூனியர்  சாம்பியனா கலக்கறாங்க. மியூசிக்லயும் அவங்களுக்கு ஆர்வம் அதிகம்...’’ என்ற ராஜசேகரிடம், ‘2டி’யில் கதை சொல்ல வரும் அறிமுக  இயக்குநர்களிடம் எதிர்பார்க்கும் தகுதிகள் பற்றி கேட்டால், சிரிக்கிறார். ‘‘நான் ‘2டி’ல இயக்குநரானதும் செஞ்ச முதல் வேலை எல்லாத்தையும்  சட்டபூர்வமாக்கினதுதான். எங்க படத்துல ரெண்டே ரெண்டு நாட்கள் நடிக்கற ஆர்ட்டிஸ்டா இருந்தாலும் அவங்களுக்கும் முறைப்படி அக்ரிமென்ட்  உண்டு.

அதே மாதிரி பண நடவடிக்கைகளை வங்கி காசோலைகளா கொடுக்கறோம். ‘2டி’ல தயாராகிற படங்கள் ஃபேமிலிக்கு பிடிச்ச பொழுதுபோக்கு  சினிமாவா... நல்ல மெசேஜ் இருக்கிற படமா இருக்கணும். பவுண்டட் ஸ்கிரிப்ட் வைச்சிருக்கறவங்ககிட்டதான் கதைகள் கேட்கறோம். கதை ஓகே  ஆனதும் மொத்த ஸ்கிரிப்ட்டும் கைல இருக்கறதால ஷெட்யூல் பிளானிங், பட்ஜெட்னு எல்லாமே எந்த சிக்கலும் இல்லாம பண்ண முடியுது. நானும்  சூர்யாவும் ஒருதடவ ஃபிளைட்ல போனப்ப எங்க பக்கத்து சீட்ல மதுரைல இருந்து வந்த ஓர் அம்மா உட்கார்ந்திருந்தாங்க. ‘36 வயதினிலே’ பார்த்துட்டு  தன் வீட்டு மொட்டை மாடில அவங்களும் தோட்டம் போட்டிருக்காங்களாம்! கேட்டப்ப எங்களுக்கு சந்தோஷமா இருந்தது...’’ என்கிறார் ராஜசேகர்.

இதுல கார்த்தி!


துப்பாக்கி சுடுதல் தவிர, ராஜசேகரின் ஹாபி லிஸ்ட்டில் wild photographyயும் உண்டு. அவரது வைல்டு போட்டோகிராபி கம்பேனியன், கார்த்தி. சமீபத்தில் மூணாறு பக்கம் உள்ள அடர்ந்த காடுகளுக்கு இருவரும் சென்று போட்டோ எடுத்திருக்கிறார்கள்!

-மை.பாரதிராஜா
படங்கள்: கார்த்திகேயன் ஏ.கே.