செக்கச் சிவந்த வானம்
மா ஃபியா டானின் மூன்று மகன்களின் வாரிசு உரிமைப் போராட்டமே ‘செக்கச் சிவந்த வானம்’.சென்னை மாநகரத்தையே ஆட்சி செலுத்துகிறார் பிரகாஷ்ராஜ். உடன் இருப்பவராக அரவிந்த்சாமி. வெளிநாட்டில் இயங்கும் அருண் விஜய். காதலியோடு இருக்கும் சிம்பு. கூடவே அரவிந்த்சாமியின் பள்ளிக் கால சிநேகிதன் விஜய் சேதுபதி, காவல்துறையில் சஸ்பெண்ட் ஆகி மறுஉத்தரவுக்குக் காத்திருக்கிறார். இதற்கிடையில் பிரகாஷ்ராஜ் கொல்லப்படும் முயற்சியில் மயிரிழையில் தப்பிக்க, யார் காரணமானவர்கள் எனத் தேட... அவர்களுக்குள் இருக்கும் அதிகாரப் போட்டி உச்சமடைகிறது.
 இறுதியில் என்ன நடந்தது என்பதே அதிரடி கிளைமேக்ஸ்.திரும்பி வந்திருக்கிறார் மணிரத்னம். ஸ்டைலாக எப்படி ஒரு டான் வாழ்க்கையைச் சொல்வது என கச்சித திரைக்கதை படைக்கிறார். அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், பிரகாஷ்ராஜ் என பெருங்கூட்டத்தை வைத்துக்கொண்டு அத்தனை சமமாக பாகங்களைப் பிரித்துக் கொடுத்து வேலை வாங்குகிற தினுசில் அனுபவம் பேசுகிறது. அரவிந்த்சாமி தன்னை அறிமுகப்படுத்தியவரிடம் ஒப்புக்கொடுத்திருக்கிறார். சதா கோபமும், பதற்றமும், காதலும், அதிகாரமுமாகத் திரிவதில் நடிப்பிடங்கள் தாமாக நிகழ்கின்றன. அதிதியுடன் ரொமான்ஸில் உயிர்த்துடிப்பு. இறுதியான நேரத்தில், தழுதழுக்கும் குரலில், தளும்பி வாழ்க்கையின் நிலையாமையைப் பேசுவது கிளாஸ்.
அப்பா சுடப்பட்ட வேளையில் ‘நான் வரணுமா’ என்று இரண்டே வார்த்தை சொல்லி நின்று யோசிக்கும் சிம்பு... வாவ்... ரொம்ப நாள் ஆச்சு பாஸ்!இதிலும் வேட்டையாடி விளையாடியிருக்கிறார் விஜய் சேதுபதி. படத்தின் நகைப்பிடங்களில் பொருந்தி நின்றிருக்கிறார். அருண் விஜய் துபாயின் ஒப்பந்தங்களை உருவெடுக்கிற நறுவிசில், நேர்த்தியில் பின்னியெடுக்கிறார்.ஆக கூலாக, கணவரைக் காக்கும் ஜோதிகா. அதிதியின் வீட்டிற்கு திடீர் விசிட் அடிக்கும் இடங்கள், சூழலுக்கேற்ற வசனங்கள் ஈர்க்கின்றன. ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இன்னும் இடம் கொடுத்திருக்கலாம். பெரிய அலட்டல், உருட்டல் இல்லாமல் பிரகாஷ்ராஜ் கிளாஸ். தியாகராஜன் கவனம் ஈர்க்கிறார்.
 குடும்பத்தின் பெருந்தலைகள் செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்காமல் அவர்களது உயிருக்கு மட்டுமே போராடுகிறார்கள் மனைவி மார்கள். அவர்கள் எச்சரிக்கையாக இருக்க ஆங்காங்கே இன்ஸ்பெக்டர் கவிதா பாரதி மட்டும் எச்சரிக்கிறார்.ஏ.ஆர்.ரஹ்மானின் ‘பூமி பூமி’ பாடல் ஃப்ரெஷ். கேட்கக் கேட்க இனிக்கிறது. பரபரப்பும், சிறு அமைதியும் தேவைப்படும் இடங்களில் தகுந்தாற்போல் தாளமிடும் அழகு அவ்வளவு பொருத்தம். முன்னும் பின்னும் இத்தனை பேரோடு பரந்து விரியும் படத்தை கத்தரியில் நளினமாக்கிய கர் பிரசாத் சிறப்பு. தொடக்கம் முதல் இறுதி வரையில் சீராக நம்மை பக்குவத்தில் வைத்திருக்கிறது சந்தோஷ் சிவனின் கேமரா. துடைத்து எடுத்த மாதிரி அத்தனை பிரேம்களிலும் பாலிஷ்.வானம் சிவப்பது அஸ்தமனத்திலும் உதயத்திலும். இவை இரண்டும் கிளைமாக்ஸுக்கு பொருந்துகின்றன!
-குங்குமம் விமர்சனக்குழு
|