ரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர்



கே.என்.சிவராமன் 21

ஓவியம்: ஸ்யாம்


சிம்ம விஷ்ணுவின் காலத்திலேயே காஞ்சிக்குப் போடப்பட்டிருந்த பெருஞ்சாலையில் கரிகாலன் தனது வண்டியை மற்ற பொதி  வண்டிகளோடு இணைத்துச் செலுத்தியதில் இருந்து பல்லவபுரம் வரும் வரை யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.சாளுக்கியப் புரவி வீரர் பலர் அடிக்கடி அந்தப் பெருஞ்சாலையில் விரைந்துகொண்டிருந்ததையும், புரவி கட்டிய ரதங்கள் பலவும்  எதிர்த்திசையில் உருண்டுகொண்டிருந்ததையும் கவனித்தான்.என்னதான் மாறுவேடத்தில் இருந்தாலும் தன்னையும் சிவகாமியையும் பொதி  வண்டி வணிகர்கள் ஊன்றிக் கவனித்தால் கண்டுபிடித்துவிடுவது எளிதென்பதையும், அப்படிக் கண்டுபிடித்து அவர்கள் தனக்கு அதிக  மரியாதை காட்ட ஆரம்பித்தால் தன் வேடம் கலைந்துவிடும் என்பதையும், அப்புறம் அவ்வப்போது சாலையில் உலாவும் சாளுக்கிய  வீரர்கள் தன்னைச் சிறை செய்வது சர்வ சுலபம் என்பதையும் புரிந்துகொண்டான்.

தவிர புலவர் தண்டியின் அந்தரங்க ஒற்றரான காபாலிகன் வேறு மாறுவேடம் அணியாமல் சுய உடையில் இருப்பதிலும் ஆபத்து இருப்பது  அவனுக்குத் தெரிந்தே இருந்தது.என்றாலும் காபாலிகனை சுய உடையில் இருக்க வைப்பதில் அனுகூலமும் ஓரளவு பாதுகாப்பும்  இருந்ததால் கரிகாலன் அந்த நிலையை மாற்ற இஷ்டப்படவில்லை. ஏனெனில் புலவர் தண்டியின் ஒற்றர்தான் இந்தக் காபாலிகன் என்பது  சாளுக்கியர்களில் வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். மற்றவர்களுக்கு வெறும் காபாலிகன்தான். அவரவர் மத அடையாளங்களுடன்  அவரவர் பவனி வரும் உரிமை எல்லா மன்னர் காலத்திலும் இருந்தது. சாளுக்கியர்கள் அதில் கைவைக்கவில்லை என்பதை இதற்குள்  கரிகாலன் உணர்ந்திருந்தான்.

காஞ்சிக்குச் செல்லும் பெரும் சாலையில் இடையிடையே அதிகக் காவல் இருந்து கொண்டிருந்ததைக் கவனித்த கரிகாலன், வண்டிக்குள்  இருப்பவர்களை எச்சரித்தான். ‘‘இரவின் முதல் ஜாமத்தில் நாம் காஞ்சியின் கிழக்கு வாயிலை அடைவோம். அதற்கு சற்று முன்பாகவே  எச்சரிக்கையுடன் இருங்கள். நமது வண்டியை சாளுக்கிய வீரர்கள் நிறுத்தினால் யார் யார் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பது  தெரியுமல்லவா..?’’ ‘‘தெரியும். நான் வாயே திறக்க மாட்டேன். மெளனமாக இருப்பேன்!’’ என்றாள் சிவகாமி. தலையசைத்த கரிகாலனின்  மனதில் சில நாழிகைகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் நிழலாடின.குரங்குகளை முன்வைத்து வனத்தில் சாளுக்கிய வீரர்களை  அலைக்கழித்த கரிகாலனும் சிவகாமியும் திட்டமிட்டபடி காட்டின் தென்மேற்கு மூலையில் சந்தித்தார்கள். வீரர்கள் யாரும் தங்களைப்  பின்தொடரவில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு வனத்தை விட்டு வெளியே வந்தவர்களை காபாலிகன் வரவேற்றான்!

யாரை எதிர்பார்த்தாலும் புலவர் தண்டியின் அந்தரங்க ஒற்றரான காபாலிகனை அவர்கள் இருவருமே எதிர்பார்க்கவில்லை!திகைத்துப் போய்  நின்றவர்களை வணங்கிய காபாலிகன், தன் மடியில் இருந்த ஓலையை எடுத்துக் கொடுத்தான்.பிரித்துப் படித்துப் பார்த்த கரிகாலனின்  முகமும் சிவகாமியின் வதனமும் திகைப்பில் ஆழ்ந்தன.‘‘காபாலிகரே... இது...’’ என பேச ஆரம்பித்த கரிகாலனை இடைமறித்தான்  காபாலிகன்.‘‘மன்னிக்கவேண்டும் கரிகாலரே... எதுவும் சொல்ல உத்தரவில்லை. உடனே உங்கள் இருவரையும் காஞ்சிக்கு வருமாறு புலவர்  தண்டி அழைத்திருக்கிறார். ஓலையில் இருக்கும் விவரங்கள் தொடர்பான தெளிவை அவர் விளக்குவார்...’’‘‘ஆனால்...’’‘‘இங்கு நாமிருக்கும்  ஒவ்வொரு கணமும் ஆபத்து கரிகாலரே... எப்பொழுது வேண்டுமானாலும் சாளுக்கிய வீரர்கள் நம்மைச் சூழ்ந்து கொள்வார்கள்...’’‘‘புரிகிறது  காபாலிகரே... ஆனால், தற்சமயம் எங்களிடம் புரவி இல்லையே...’’

‘‘அவசியமில்லை கரிகாலரே... வணிகர் வேடத்தில் நாம் பொதி வண்டியில் செல்லப் போகிறோம். வண்டி, அருகிலிருக்கும் கிராமத்தில்  மறைவாக இருக்கிறது...’’இதன் பிறகு துரிதமாக அவர்கள் கிராமத்தை அடைந்து வண்டி யில் ஏறியதும், வண்டிக்குள் இருந்த வணிகர்களின்  உடைகளை அணிந்து தங்கள் தோற்றத்தை கரிகாலனும் சிவகாமியும் மாற்றிக் கொண்டதும், காஞ்சிக்குச் செல்லும் பெருவழிச் சாலையை  அடைந்து வணிகப் பொதி வண்டிகளுடன் இரண்டறக் கலந்ததும், இதனையடுத்து காஞ்சியை அவர்கள் நெருங்கியதும் கரிகாலனின்  மனதுக்குள் நிழலாடின.திரும்பத் திரும்ப ஓலையில் இருந்த விஷயம்தான் அவன் மனதை ஆக்கிரமித்தன.சட்டென்று அவன் இடுப்பை  சிவகாமி கிள்ளினாள். சுயநினைவுக்கு வந்த கரிகாலன், திரும்பிப் பார்க்காமல் ‘‘என்ன...’’ என்றான்.

‘‘சோதனைச் சாவடி...’’ முணுமுணுத்தாள்.கரிகாலன் பதில் சொல்லாமல் புன்னகைத்தான்.ஒவ்வொரு வண்டியாக சோதனை செய்து  காஞ்சிக்குள் விட்ட சாளுக்கிய வீரர்கள், கரிகாலன் ஓட்டி வந்த பொதிவண்டியை நெருங்கினார்கள். எவ்வித எதிர்ப்பையும் காண்பிக்காமல்  அவர்கள் சோதனை செய்ய முழுஒத்துழைப்பையும் கரிகாலன் கொடுத்தான்.ஒன்றுக்கு இருமுறை அவர்கள் வண்டியை பரிசோதித்த வீரர்கள்,  ‘‘ம்... செல்லலாம்...’’ எனக் கட்டளையிட்டார்கள்.இதனைத் தொடர்ந்து பயணப்பட்ட பொதி வண்டி, காஞ்சியை நெருங்கியது. தென்பட்ட  காட்சியில் தன் மனதை கரிகாலன் பறிகொடுத்தான்.முதலாம் ஜாமம் முடிந்து வெண்மதி காஞ்சி மாநகருக்கு நிலவாடை  போர்த்தியிருந்ததால் மனத்தைக் கவர்ந்துவிட்ட அம்மாநகரின் எழிலிலும் பெருமையிலும் நிகரிலா வரலாற்றிலும் புராணத்திலும்  இலக்கியத்திலும் இதயத்தைப் பறிகொடுத்து விட்ட கரிகாலன், சில கணங்கள் அப்படியே மெய்மறந்து நின்றான்.

புலவர் தண்டியின் அந்தரங்க ஒற்றரான காபாலிகனின் எச்சரிக்கையைக் கூட அவன் பொருட்படுத்தவில்லை.தொண்டைமான் இளந்திரையன்  காலத்தில் திருவெஃகாவுக்கு அப்புறம் இருந்த காஞ்சி மாநகர் பல்லவர் காலத்தில் நாற்புறங்களிலும் பெரிதும் படர்ந்துவிட்டதையும், பெரு  மதில்களாலும் அகழிகளாலும் பலப்பட்டுவிட்டதையும், தெய்வாலயங்களாலும் சமண மடங்களாலும் சிறப்புற்றிருப்பதையும் எண்ணிப்  பார்த்தான்.இத்தனையும் பல்லவர்கள் சாதனை என்பதால் பெருமிதப்பட்டுக் கொண்டான். அந்நகருக்கு இணை உலகத்தில் வேறு எங்கும்  கிடையாது என்று மனத்துக்குள் சொல்லிக்கொண்டான்.உண்மையில் அவன் எண்ணத்தை வடமொழியும் தென்மொழியும் தீந்தமிழும்  ஒப்புக்கொள்ளவே செய்தன.

‘நகரேஷு காஞ்சி’ என காளிதாசனாலும்; ‘கல்வியில் கரையிலாத காஞ்சி நகர்’ என அப்பர் சுவாமிகளாலும் சிறப்பிக்கப்பட்டதும்;  ‘கச்சிப்பேடு’ என்னும் நெடுங்கொடிகள் தழுவப்பட்ட குறுகிய கால்களை உடைய காஞ்சி மரங்கள் நிறைந்ததால் காஞ்சிபுரம் என்றும்  ஆதிகாலத்திலிருந்தே பிரசித்தி உள்ளதும்; ஸ்கந்த புராணத்திலும் மோகினி தந்திரத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டதும்; புராணப்படி பாரதத்தின்  புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக இருப்பதும்; கி.மு.5ம் நூற்றாண்டில் புத்த பகவானே வந்து சமய உண்மைகளை உரைத்ததால் பெரும்  பேறு பெற்றதும்; பிரளயஜித், சிவபுரம், விஷ்ணுபுரம், திருமூர்த்திவாசம், பிரமபுரம், தண்டகபுரம், கன்னி காப்பு... எனப் பல பெயர்களால்  புராணங்களால் அழைக்கப்பெற்றதுமான காஞ்சியின் பெருமைகளை எல்லாம் எண்ணிப் பார்த்த கரிகாலன், ‘இல்லை... இல்லை...  இம்மாநகருக்கு இணை ஏதுமில்லை...’ என தனக்குள் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டான்.

அவனது வண்டி சென்ற பாதைக்குப் பக்கத்தில் மிக உயரமாக எழுந்திருந்த காஞ்சியின் பெருமதில்களையும், அதன் மேற்பகுதியில்  எரிந்துகொண்டிருந்த பெரும் பந்தங்களையும், சஞ்சரித்துக் கொண்டிருந்த சாளுக்கிய வீரர்களையும் பார்த்து ‘எந்த எதிரியும் நுழைய முடியாத  இந்த நகரத்துக்குள் சாளுக்கியரை அனுமதித்து விட்டாரே பல்லவ மன்னர் பரமேஸ்வரவர்மர்...’ என்று நினைத்து பெருமூச்சு விட்டான்.அப்பொழுதும் பல்லவ மன்னரை நொந்துகொள்ளவில்லை. போரின் வெறியில் காஞ்சியின் சிற்பச் செல்வங்களும் மற்றைய சிறப்புகளும்  பெருஞ்சோலைகளும் அழிக்கப்படாமல் இருப்பதற்காக அவர் செய்த தியாகத்தை எண்ணி மகிழவே செய்தான்.முதல் ஜாமம் முடிந்து  இரண்டாம் ஜாமம் தொடங்கிவிட்ட அந்த வேளையிலும் காஞ்சி மாநகர் விழித்துக் கொண்டுதான் இருந்தது.எங்கும் சாளுக்கிய வீரர்களின்  நடமாட்டம் இருந்து கொண்டிருந்தாலும் ஆங்காங்கிருந்த வீடுகளில் வீணை போன்ற நரம்புத் தந்திகளுள்ள வாத்தியங்களின் இசை  ஒலிகளும் பரத்தையர் இல்லங்களில் நாட்டியம் பழகும் அழகு மங்கையரின் காற்சலங்கை ஓசைகளும் காதில் விழுந்து கொண்டிருந்தன.

அவ்வப்பொழுது அவனது வண்டிக்கு எதிரிலும் பக்கங்களிலும் சாளுக்கிய வீரர்களின் ரதங்கள் வந்து போய்க் கொண்டிருந்தாலும் வணிகர்  வண்டிகளின் சஞ்சாரமும் கூடவே இருந்து கொண்டிருந்தது.இரவு ஏறிவிட்டதை முன்னிட்டு மக்கள் நடமாட்டம் அதிகமில்லை என்றாலும்  நீண்ட நேரம் இரவில் அலுவல் புரியும் பணியாட்கள் பலர் வேலை முடிந்து இல்லங்களுக்கு விரைந்து கொண்டிருந்தனர்.இதையெல்லாம்  கண்ட கரிகாலன், சாளுக்கிய மன்னர் அத்தனை ஆக்கிரமிப்பிலும் மக்களின் சாதாரண வாழ்க்கையைக் கெடுக்காமல் வைத்திருப்பதை  எண்ணி அவரைப் பாராட்டவும் செய்தான்.‘சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தனும் நல்ல ரசிகராக இருக்க வேண்டும். இல்லையேல் படை  ஆக்கிரமிப்பில் எந்த நகரமும் அச்சத்திலும் அதனால் ஏற்படும் பயங்கர அமைதியிலும் அல்லவா சிக்கிக் கிடக்கும்!’ என்று தனக்குள்  சொல்லிக் கொண்டான்.

இத்தனையிலும் ஆங்காங்கு அணிவகுத்துப் புரவிகளில் நின்று கொண்டிருந்த இராக் காவலரின் எச்சரிக்கையைப் பார்த்த கரிகாலன், எந்த கணத்திலும் தனது வண்டி நிறுத்தப்படலாம் என்பதையும் உணர்ந்தே இருந்தான்.இருப்பினும் காபாலிகன் ஆட்சேபித்த அபாயப்  பாதை வழியே வண்டியைச் செலுத்தினான்.அதை மீண்டும் எதிர்த்துப் பேச முற்பட்ட காபாலிகன், ‘‘திருவெஃகாவுக்குப் போக  வேண்டுமானால் கிழக்குக் கோட்டை வாயிலிலிருந்து நேர் கிழக்கேயுள்ள பெருஞ்சாலையில் செல்ல வேண்டும்!’’ என்று கூறினான்.‘‘ஆம், காபாலிகரே!’’ ஒப்புக் கொண்டான் கரிகாலன்.‘‘அப்படியானால் ஏன் மதிலோரமாகத் தெற்கே செல்கிறீர்கள்..?’’‘‘தெற்குச் சாலைக்  கோடியில் கொல்லர் விடுதிகள் இருக்கின்றன அல்லவா..?’’‘‘ஆம்!’’‘‘அங்குள்ள ஆயுதப் பட்டறைகளைத் தாண்டினால் ஆயுதக் கொட்டடி  இருக்கிறது!’’‘‘ஆம்...’’‘‘அங்கு உங்களை எல்லாம் இறக்கி விடுகிறேன்...’’

‘‘இறக்கி விட்டால்..?’’‘‘நீங்கள் ஆயுதக் கொட்டடிக்கு அருகிலிருக்கும் அரண்மனைச் சத்திரத்தில் தங்கலாம்!’’இதைக் கேட்ட காபாலிகன்  அதிர்ந்தான். ‘‘அரண்மனையின் தென்பகுதிச் சத்திரம் இப்பொழுது சாளுக்கிய வீரர்கள் கண்காணிப்பில் இருக்கிறது!’’அந்த வியப்பைக்  கவனித்தாலும் அதை லட்சியம் செய்யாத கரிகாலன், ‘‘அங்கு சிவகாமியை யாருக்கும் தெரியாது. என்றாலும் இப்பொழுது அவள்  மாறுவேடத்தில் இருப்பதால் சாளுக்கிய வீரர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியாது. நீங்கள் அங்கு தைரியமாகத் தங்கலாம். சத்திரக்  காவலன் உங்களைக் கவனித்துக் கொள்வான். உங்களை எப்படிக் காப்பது என்பது அவனுக்குத் தெரியும்!’’ என்றான்.காபாலிகன் தீவிர  யோசனையில் இறங்கினான். ‘‘கரிகாலரே... இது பெரிய விஷப் பரீட்சை. சாளுக்கியரால் சதா கண்காணிக்கப்படும் பொதுச் சத்திரத்திற்கு  சிவகாமியை அழைத்துச் செல்வது பெரும் அபாயம்...’’

‘‘அபாயத்தை சிவகாமி சமாளித்துக் கொள்வாள்...’’‘‘அப்படியானால் நீங்கள்..?’’ அதுவரை அமைதியாக இருந்த சிவகாமி வாயைத்  திறந்தாள்.‘‘புலவரைச் சந்தித்துவிட்டு வருகிறேன்!’’‘‘அதெப்படி இவ்வளவு காவலையும் மீறி உங்களால் அவரைச் சந்திக்க முடியும்..?’’‘‘நான் காஞ்சியின் மைந்தன் சிவகாமி... இங்குள்ள ஒவ்வொரு இடமும் எனக்குத் தெரியும்...’’‘‘மறுக்கவில்லை கரிகாலரே... ஆனால்,  மேலை ராஜவீதியை நீங்கள் தாண்டுவது கஷ்டமல்லவா..? உங்களை அடையாளம் கண்டு மக்கள் வாழ்த்தொலிகளை எழுப்பத்  தொடங்கினால் விபரீதமாகி விடுமே...’’ காபாலிகனின் குரலில் பதற்றம் வெளிப்பட்டது.‘‘அஞ்சாதீர் காபாலிகரே! ஒருவரும் காணாமல்  என்னால் ராஜவீதிக்குள் நுழைய முடியும்!’’ கண்களில் திட்டம் விரிய கரிகாலன் சொற்களை உதிர்த்தான்.அதேநேரம், ‘‘பத்து பேர்  அரண்மனையின் தென்பகுதி சத்திரத்துக்குச் சென்று சிவகாமியைக் கைது செய்யுங்கள்! இன்னும் பத்து பேர் ராஜவீதிக்குச் சென்று  கரிகாலனைச் சுற்றி வளையுங்கள்!’’ என உத்தரவு பிறப்பித்துக்கொண்டிருந்தார் சாளுக்கியர்களின் போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபர்!

(தொடரும்)