பரியேறும் பெருமாள்



தமிழ் சினிமா பெருமிதம் கொள்ள மீண்டும் ஒரு படம் ‘பரியேறும் பெருமாள் BABL’எளிய மனிதர்களின் பிரியங்களை சாதியும்,  மனிதர்களின் நாகரீகக்கேடும் எப்படி குதறிப்போடுகின்றன என்பதை மனவிசாலத்துடன் சொல்லியதற்கே அறிமுக இயக்குநர் மாரி  செல்வராஜுக்கு பூங்கொத்து. எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிற அவசியம் இல்லாமல், நம்மிடமும் மனம் பதறும் கேள்விகளை முன்  வைக்கிறார். சாதியை எறிந்துவிட்டு அடுத்த தலைமுறை அடுத்த அடி எடுத்து வைக்காதா என்பதை கனத்த மனத்துடன் முன்வைக்கும்  நிமிடங்கள் நுட்பமானது. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த கதிர் திருநெல்வேலி சட்டக்கல்லூரிக்குப் படிக்க வருகிறார். ஆங்கிலம்  ேபாதாமல், மாணவி ஆனந்தி அவருக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதோடு, கதிரின் வெளிப்படையான சுபாவத்திற்கும், அப்பழுக்கற்ற  அப்பாவித்தனத்திற்கும் மனம் தருகிறார்.

ஆதிக்க சாதியில் பிறந்த ஆனந்தியின் தந்தையும், சுற்றமும் மனம் பதறுகிறார்கள். அதற்குப்பிறகு கதிருக்கு ஏற்படுகிற நிகழ்வுகள்,  ஆனந்தியுடனான பிரியத்தைத் தொடர முடிந்ததா என்பதே மனதை உலுக்கி எடுக்கும், கேள்வி களைச் சுமத்தும் கிளைமேக்ஸ். பரியேறும் பெருமாளாக கதிர். நிச்சயமாக அவருக்கு அற்புதமான படம். குக்கிராமத்திலிருக்கிற உடல் மொழியும் அனல் தெறிக்கும்  கிராமத்து தெருக்களில் புகுந்து புறப்படுகிற அழகுடன் அபாரம். தன் செல்லம் கருப்பியை தண்டவாளத்தில் கட்டியிருப்பதைப் பார்த்து  கால்கள் தடதடக்க ஓடிவரும், தடுமாறினால் ஒரு பைசாவிற்கு தேறாத அந்த நெடிய ஓட்டம் இதுவரை காணாதது. ஹேட்ஸ் ஆஃப் கதிர்!ஆனந்தி சூட்டிகையும், காதலுமாக ரசிக்க வைக்கிறார்.

கண்ணை மூடியபடியே கதிரிடம் காதல் சொல்லும் காட்சி நம் மனசைத் திறக்கிறது. தன் தகப்பனையும் கதிரையும் சந்திக்க  வகைசெய்துவிட்டு, தூரமிருந்து பாவனைகளால் கதிரை இயக்கும் விதம் அருமை.யோகிபாபுவிடம் ஒளிந்திருந்த குணச்சித்திரம்  காணக்கிடைக்கிறது. இவரையும் ஞாபகத்திலிருந்து பிரிக்க முடியவில்லை. கொஞ்சம் பெண் தன்மையோடு உள்ள கூத்துக்கலைஞரான  அப்பாவை வேட்டியை உரிந்து ஓடவிட்டு சிரிக்கும் அதிகார வர்க்கத்தின் சிரிப்பு பதைக்க வைக்கிறது.

அந்தோணிதாஸ் பங்கேற்கும் கூத்துக் காட்சி... ஆஹா! உயிர் எடுக்கும் அந்தப் பெரியவரின் பார்வையே பயம் ஏற்படுத்துகிறது.கிராமத்தின்  இடுக்குகளில் இஞ்ச் இஞ்சாகப் பயணமாகும் தரின் கேமரா, மாற்றுக் குறையாமல் கல்லூரியிலும் அற்புதமாக நடை பதிக்கிறது. சந்தோஷ்  நாராயணனின் இசையில் கவிஞர்களின் வார்த்தைகள் உரம் சேர்க்கின்றன. ‘கருப்பி கருப்பி’ பாடல் மனசை அறுத்து உருவிப்போட்டு  விடுகிறது. மாரி செல்வராஜின் வசனங்கள் பேச்சு மொழியில் பிரமாதப்படுத்திய உண்மைகள்.நம் மண்ணையும், மக்களையும் பேசுகிறது.  அதனாலேயே இது நமக்கான சினிமா!          

-குங்குமம் விமர்சனக்குழு