ஹோம் அக்ரி-40



வீட்டில் தோட்டம் வளர்ப்பது சமுதாயக் கடமை!

மண்ணில்லா விவசாயத்தில் வெற்றி தோல்வியை பாதிக்கக்கூடிய மற்ற காரணிகள் எல்லா விவசாய முறைகளுக்கும் பொருந்தக் கூடியவைதான்.

நாம் பயன்படுத்தும் விதை அல்லது நாற்றுகளின் தரம்; அளிக்கும் ஊட்டத்தின் அளவு மற்றும் தரம்; அதிகப்படியான அல்லது குறைவான வெப்பம்; காற்று, மழை போன்ற தட்ப வெப்ப சூழ்நிலைகள்; நோய் மற்றும் பூச்சிகளின் பாதிப்பு; மற்ற பயிர் வளர்ப்பு முறைகள் போன்றவை செடியின் வளர்ச்சி, ஆரோக்கியம் மற்றும் மகசூலை பாதிக்கின்றன.

இந்த முறை மரபணு மாற்றம் போன்ற இயற்கைக்கு எதிரான முறை அல்ல. இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டே இந்த தொழில் நுட்பம் செயல்படுகிறது. எதிர்கால உணவு உற்பத்தி இதுபோன்ற மண்ணில்லா விவசாய முறைகளைச் சார்ந்தே இருக்கும். இறைச்சிக்கும் இதுபோன்ற தொழில் நுட்பங்கள் ஆராய்ச்சி அளவில் இருக்கின்றன. நமக்குத் தேவையான ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, மீன் இறைச்சி போன்றவற்றையும் தொழிற்சாலைகளில் தயாரிக்கும் தொழில் நுட்பங்கள் ஏற்கனவே தாயாராக இருக்கின்றன.

இந்த திசு மூலம் வளர்க்கும் முறைகளும் ஹைட்ரோபோனிக்ஸ் போல வணிக ரீதியாக ஆவதற்கு இன்னும் நீண்ட நாட்கள் இல்லை.

மாறிவரும் விவசாய முறைகளால் எப்படி நாம் பன்வகைத் தன்மை கொண்ட மருந்தாகும் உணவை மறந்து ஒரு சில காய்கறி, தானியங்களை மட்டும் நம்பி நம் உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டோமோ -அப்படியே இதுபோன்ற தொழில் நுட்பங்கள் வரும்போது நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் வகைகளும், தானியம், காய்கறிகளின் எண்ணிக்கையும் குறையும்.

எப்படி அரிசி, கோதுமை பயன்பாடு அதிகரித்ததால் நாம் சிறு தானியங்களை மறந்தோமோ அதுபோலவே, பல காய்கறிகளின் உபயோகத்தையும் அவற்றின் மருத்துவ குணங்களையும் நாம் மறக்க நேரிடும்.மனிதனின் அடிப்படைத் தேவை உணவு. அதை நாமே உற்பத்தி செய்து கொள்ளும் வாய்ப்பு இருக்கும்போது அதைச் செய்வதும், சந்ததியினருக்கு சொல்லிக் கொடுப்பதும் சமூகத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும்.

நமக்குத் தேவையானதை உற்பத்தி செய்வதற்கான அடிப்படை அறிவு இல்லாத ஒரு சமுதாயத்தை நாம் உருவாக்கக் கூடாது. ஆக நாம் வீட்டுத்தோட்டம் அமைப்பது நமது பொது நல, சமுதாயக் கடமைகளையும் நாம் நிறைவேற்ற ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.வீட்டுத்தோட்டம் அமைப்பதில் உள்ள பலன்களை முன்னரே பார்த்திருக்கிறோம். இந்த முடிவான பகுதியில் வீட்டுத்தோட்டம் அமைப்பது பற்றிய சில முக்கியமான அம்சங்களைப் பார்போம்.

வீட்டுத்தோட்டம் அமைத்து அதைப் பாதுகாப்பது மிகப்பெரிய அளவில் மனச்சோர்வுக்கான மற்றும் மன அழுத்தத்திற்கான தீர்வாக அமையும். இன்றைய இயந்திர வாழ்க்கையில் மன அழுத்தம் இல்லாதவர்களே இல்லை. இன்று நமக்கு பிரதானமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் மன அழுத்தத்தை அதிகப்படுத்தக் கூடியனவாகவே இருக்கின்றன.

நம் நேரத்தை உபயோகமாகவும், பலனுள்ளதாகவும் மாற்ற வீட்டுத்தோட்டம் ஒரு நல்ல மாற்றாக இருக்கும். குழந்தைகளை பயிர் வளர்ப்பிலும் பயிர் பாதுகாப்பிலும் ஈடுபடுத்தும்.

போது ஆக்கபூர்வமான சிந்தனைகளும், நேர்மறை எண்ணங்களும் மேம்படும். குழந்தைகளுடைய தற்கால பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் வாழ்க்கை முறை துரதிர்ஷ்டவசமாக சுயநலப் போக்கையும், வன்முறைச் சிந்தனைகளையும், தான்தோன்றித்தனமான, குறிக்கோளில்லாத வாழ்க்கை முறையையுமே வளர்க்கின்றன.

இந்த எதிர்மறை விளைவுகளுக்கு வீட்டுத் தோட்ட பராமரிப்பு நல்ல தீர்வாக அமைந்து ஆக்க சிந்தனையை மேம்படுத்த உதவியாக இருக்கும்.தோட்டத்தில் நாம் ஈடுபடும் போது உள்ள உடலுழைப்பு உடற்பயிற்சிக்கு ஈடாக அமையும். இந்த உடலுழைப்பு வீணாகாமல் நமக்கும் சமுதாயத்திற்கும் நம் சக்தி பயன்பட்ட மாதிரியும் அமையும்.

இந்த உடலுழைப்பு இயற்கை என்பதால் நாம் பெருமளவில் சோர்வடைவதில்லை. இது வீட்டின் வெளிப்புறம் அமைவதால் சூரிய ஒளியின் பலன்களும் நமது உடலுக்குக் கிடைக்கும்.அண்டை அயலாருடன் பழகுவதற்கான ஒரு வாய்ப்பையும் வீட்டுத்தோட்டம் நமக்குத் தருகிறது. நம் வீட்டில் வளர்க்கும் முருங்கை, லச்சக்கட்டை, காசினிக் கீரை வகைகள் மற்றும் பெரும்பாலான காய்கறிகள் ஒரு குடும்பத்தின் தேவைக்குப் போக அதிகமாகவே இருக்கும். இது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கும்.

சுற்றத்தாருடன் பழகுவது நம் பொதுநல சிந்தனையை மேம்படுத்துவதோடு, மன மகிழ்ச்சியைத் தருவதாகவும் அமைகிறது.

1939லிருந்து 2014 வரை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ‘மனிதனுக்கு மனமகிழ்ச்சியை எது தருகின்றது’ என்ற நீண்ட கால ஆராய்ச்சியில், நாம் எத்தனை பேருடன் நல்ல பழக்க வழக்கம் வைத்திருக்கிறோம் என்பதே நம் மகிழ்ச்சியின் அளவைத்தீர்மானிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

அதன் படி சுற்றத்துடன் நல்ல உறவும், தனிமையில்லா வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள வீட்டுத்தோட்டங்கள் பெருமளவில் உதவியாக இருக்கின்றன. தாவரங்களுடன் பழகுவதும் அவற்றின் வளர்ச்சியைப் பார்ப்பதும் சிறுவர்களுக்கும், முதியவர்களுக்கும் தனிமையைப் போக்க ஓர் எளிதான வழி.

வீட்டுத்தோட்டம் நம்மிடம் இருக்கும் போது சிறு சிறு மருத்துவ குணங்கள் கொண்ட செடிகளை நாம் வளர்க்க வாய்ப்பு கிடைக்கிறது. துளசி, திருநீற்றுப் பச்சிலை, ஓம வள்ளி, நொச்சி, ஆடா தொடா, நில வேம்பு, பிரண்டை, வெற்றிலை, சிறு குறிஞ்சான், முடக்கத்தான் போன்ற சிறு மூலிகைகள் பெரும்பாலான உடல் உபாதைகளுக்கு கை வைத்தியமாக அமைகின்றன.

இதன்மூலம் மருத்துவமனைக்கு செல்வதற்கான தேவை பெருமளவில் குறைகிறது. தனியாக இந்த மூலிகைகளை நாம் வளர்ப்பதற்கான வாய்ப்பு குறைவு. இதுவே வீட்டுத்தோட்டம் இருக்கும் பட்சத்தில் எளிதாக அமைகிறது. சிறு உபாதைகளுக்கு கை வைத்தியம் செய்துகொள்ளாமல் மருத்துவரை நாடுவது என்பது நம்மை நோயாளியாக்கி விடுவதோடு, எதற்கெடுத்தாலும் மருத்துவரை நாடும் ஒரு பழக்கத்தையும் ஏற்படுத்தி விடுகிறது.

இந்த சில மூலிகைகள் வீட்டில் இருக்கின்ற காரணத்தினாலேயே நாம் இவைகளை பயன்படுத்தும் சூழ்நிலைக்கு ஆளாகி, பின் பழக்கமாகி, பின் நாம் ஆரோக்கியமான உடலை பாதுகாத்துக்கொள்ள ஏதுவாகிறது.

ஆரோக்கிய உணவு நமக்கு ஊட்டம் தருவதுடன் நம் உடலிலுள்ள கழிவுகளை வெளித்தள்ளுவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. கழிவுகளை வெளித்தள்ளுவது என்பது நம் உடல் நலத்தை பாதுகாப்பதில் ஒரு பேரம்சமாகும்.

எந்த அளவுக்கு நாம் ஒரு உணவில் உள்ள வைட்டமின், தாதுக்கள் போன்ற சத்துகளை கவனிக்கிறோமோ அந்த அளவுக்கு உணவுப்பொருளின் கழிவு நீக்கும் தன்மையை கவனிப்பதில்லை.

உணவிலுள்ள நார்ச்சத்தும் மற்ற சில உட்பொருட்களும் நம் உடலில் சேரும் கழிவுகளை நீக்கி எல்லா அங்கங்களையும் சுத்தம் செய்கின்றன. ஆனால், இந்த அம்சத்தை நாம் கவனிப்பதில்லை. வீட்டுத்தோட்டம் இருக்கும் பட்சத்தில் நாம் உண்ணும் நஞ்சில்லா உணவு, குறைவான அளவாகவே இருந்தாலும், பெருமளவில் நமது உள் உறுப்புகளை சுத்தமாகவும் ஆரோக்கியமானதாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

நாமே விளைவித்த கீரைகளும் காய்கறிகளும் சந்தையில் கிடைக்கும் பொருட்களைவிட பன்மடங்கு வேறுபட்டவை, தரமானவையாகவே இருக்கக்கூடியவை. எப்படி வீட்டுச் சாப்பாடு கடை சாப்பாட்டைக் காட்டிலும் வேறுபட்டதோ, அப்படிப்பட்டதுதான் இதுவும். வீட்டில் வளர்க்கும் போது ஒரு சில செடிகளுக்கு கொடுக்கும் கவனமும், ஊட்டமும், ஆதரவும் நிச்சயமாக வணிக ரீதியாக வளர்க்கும் செடிகளுக்கு கிடைக்காது.

இந்த விளைபொருட்கள் நமக்கு கொடுக்கும் பலன்களை சந்தைப் பொருட்கள் கொடுக்காது. இதற்கு மிக முக்கியமான காரணம் நுகர்வோராகிய நாம் விவசாய விளைபொருட்களுக்கு சரியான விலை கொடுக்கத் தயாராக இல்லை என்பதுதான். ஆக, குறைந்த விலைக்கும் அல்லது சந்தை விலைக்கும் நிலைமைக்கும் ஏற்றவாறே விவசாயி உற்பத்தி செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார். இந்தக் காரணங்களாலேயே நமக்கு தரமான பொருள் கிடைக்காமல் போகிறது.

ஆரோக்கியமான உணவு நம் உடல் நலத்துக்கும், மன நலத்துக்கும், சமூக நலத்துக்கும் பிரதானமானது. வீட்டுத்தோட்டம் அமைத்து பராமரிக்கும்போது நம் உடலையும், குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் மட்டுமல்லாமல் ஒரு சமுதாயக் கடமைையயும் செய்கிறோம் என்ற திருப்தியோடு வாழமுடியும்.

இந்தத் தொடர் உங்களின் வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான முயற்சியிலும், விவசாயம் குறித்து அறிவு பெறுவதற்கான முயற்சியிலும் உதவியிருக்கும் என்று நம்புகிறேன். வாசகர்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி!

(சுபம்)

மன்னர் மன்னன்