தல புராணம்



திருவல்லிக்கேணியும், பார்த்தசாரதி கோயிலும்...

‘‘திருவல்லிக்கேணியில் வசித்த ஒருவன் வேறு வீடு போக வேண்டும் என்றாலும் திரும்பத் திரும்பத் திருவல்லிக்கேணிக்கே வந்துவிடுவான். அவனுக்கு இந்த உலகத்திலேயே வேறெந்த இடமும் மனதுக்குகந்ததாக இருக்காது. அப்படி என்ன இந்த திருவல்லிக்கேணி சந்துகளில் சொக்குப்பொடி இருக்கிறது?’’

- திருவல்லிக்கேணி பற்றி ‘ஒரு பார்வையில் சென்னை நகரம்’ எனும் நூலில் இப்படி வேடிக்கையாக எழுதுகிறார் எழுத்தாளர் அசோகமித்திரன். உண்மையில், அங்கு வசிப்பவர்களுக்கு மட்டுமல்ல, வெளியூர்களில் இருந்து வந்து அங்குள்ள மேன்ஷன்களில் தங்கி வேலை தேடும் இளைஞர்களோ, படிக்கும் கல்லூரி மாணவர்களோ கூட அங்கிருந்து நகரமாட்டார்கள்.

உணவில் தொடங்கி போக்குவரத்து வரை சகல வசதிகளும் நிறைந்த ஓர் இடம் என்பதால்! அதனால்தானோ என்னவோ மகாகவி பாரதியும் திருவல்லிக்கேணியில் தன் வாழ்க்கையைக் கழித்துள்ளார். திருவல்லிக்கேணி எனப் பெயர் வரக் காரணம் பார்த்தசாரதி கோயில் குளமே! அல்லிப் பூக்களால் நிறைந்த கேணியே (குளம்) திருவல்லிக்கேணியானது. ஆனால், ஆங்கிலேயர்களின் நாக்குச்சுழியால் ‘டிரிப்ளிகேன்’ என்றாகி இன்று அநேக சென்னைவாசிகள் அழைக்கும் பெயராகிப் போனது.

அந்தக்காலத்தில் மயிலாப்பூரின் புறநகர்க் கிராமமாக இருந்த திருவல்லிக்கேணி. ‘மயிலை திருவல்லிக்கேணி’ என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள் வந்தபிறகு வளர்ச்சி கண்டு தனித்துவமிக்க ஊராக மிளிர்ந்தது. திருவல்லிக்கேணி அருகே ‘கூவம் நதி’ ஓடியதால் அந்நதி திருவல்லிக்கேணி நதி என்றும் அழைக்கப்பட்டது.

இங்குள்ள பார்த்தசாரதி கோயில், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 108 திவ்ய தேசங்களில் 61ஆவதாகக் கருதப்படும் இக்கோயில் ஆழ்வார்களால் பாடல் பெற்ற ஸ்தலம். கோயில் எப்போது கட்டப்பட்டது என்கிற விவரங்கள் சரியாகத் தெரியவில்லை.ஆனால், பல்லவர் காலக் கல்வெட்டு ஒன்று கோயில் கருவறையின் நுழைவில் உள்ளது. இது கி.பி.808ம் வருடம் தந்திவர்மன் காலத்தில் கோயிலுக்கு வழங்கப்பட்ட தானத்தைக் குறிக்கிறது. இதனால், கோயில் இதற்கும் முன்பே இருந்துள்ளது தெரிய வருகிறது.

ஏனெனில், ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமழிசையாழ்வாரும், பேயாழ்வாரும், பின்னர் வந்த திருமங்கையாழ்வாரும், ‘திருவல்லிக்கேணி கண்டேன்’ என பார்த்தனைப்  போற்றி பரவசமாகப் பாடியுள்ளனர். ‘‘கோயில் எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம். அப்போது ஆட்சி செய்த இரண்டாம் நந்திவர்மன் எனப்படும் பல்லவ மல்லன் தீவிர வைஷ்ணவன்.

அவனே கோயிலுக்கான இடத்தை அளித்ததாகத் தந்திவர்மன் காலத்துக் கல்வெட்டில் காணப்படுகிறது. திருமங்கையாழ்வாரும் இக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது எனப் புகழாரம் செய்கிறார். இதன்மூலமும் பல்லவ மல்லனே பார்த்தசாரதி கோயிலைக் கட்டியிருக்க வேண்டுமெனச் சொல்லலாம்...’’ என 1939ல் வெளியான ‘The Madras Tercentenary Commemoration Volume’ நூலில் அன்றைய மெட்ராஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் வி.ஆர்.ராமச்சந்திர தீட்சிதர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கே பெருமாள் காட்சி கொடுத்த கதையும் தனி வரலாறாகக் குறிப்பிடப்படுகிறது. ‘‘பெருமாளின் மீது பக்தி கொண்ட சுமதி எனும் மன்னனுக்கு குருேக்ஷத்ரப் போரில் தேரோட்டியாக இருந்த கண்ணனை தரிசனம் செய்ய ஆசை ஏற்பட்டது. இதனை பெருமாளிடம் வேண்ட, அவர் சாரதியாக இங்ேக காட்சி கொடுத்தார். பாரதப் போரில், தான் ஆயுதம் ஏந்தமாட்டேன் என்று செய்த சபதத்துக்கு ஏற்ப இத்தலத்தில் சக்கரம் இல்லாமல் சங்குடன் மட்டுமே காட்சியளிக்கிறார். தேரோட்டிக்கு அழகு கம்பீரமான மீசை. அதனால், இத்தல பெருமாள் மீசையுடன் காணப்படுவது வேறெங்கும் இல்லாத அதிசயக் கோலம்!

மூலவர் வேங்கட கிருஷ்ணர் என்றும், உற்சவர் பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகின்றனர். பாரதப் போரில் பீஷ்மர் எய்த அம்புகளை சாரதியான கண்ணன் தாமே முன்நின்று தாங்கியதால் அவர் முகத்தில் வடுக்கள் ஏற்பட்டன. அதை உற்சவர் முகத்தில் காணலாம். தவிர, அண்ணன் பலராமர், தம்பி சாத்யகி, மகன் பிரத்யும்னன், பேரன் அநிருத்தன் எனக் குடும்ப சகிதமாகக் காட்சியளிப்பதும் இங்கேதான்...’’ என்கிறது கோயில் தல வரலாறு.

மட்டுமல்ல; வேங்கடகிருஷ்ணருடன், ராமர், ரங்கநாதர், கஜேந்திர வரதர், யோக நரசிம்மர் என ஐந்து மூலவர்களும், கிழக்கு, மேற்கு என இரண்டு வாசல்களும், இரண்டு கொடி மரங்களும் கொண்ட கோயிலாக இருப்பதும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் பெருமைகளில் ஒன்று. வேதவல்லி தாயாருக்கும், ஆண்டாளுக்கும் தனி சன்னதிகள் உள்ளன.

இதனால், வருடத்தில் பாதி நாட்கள் இங்கே திருவிழாக்கள் நடக்கின்றன. பல்லவர் ஆட்சிக்குப் பிறகு, சோழர்களும், பாண்டியர்களும், விஜயநகரப் பேரரசும் திருவல்லிக்கேணியை ஆண்டன. இந்த மன்னர்கள் காலத்தில் கோயிலுக்கு அளிக்கப்பட்ட தானங்கள் பற்றிய செய்திகளும் கோயிலின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. பின்னர், 1564ம் வருடம் ஊரிலிருந்த பக்திமான்கள் ஒன்று சேர்ந்து பிரதான கோயிலைப் பழுதுபார்த்ததுடன் பிரகாரக் கோயில்களையும் கட்டி முடித்தனர்.

ஆங்கிலேயர்கள் இங்கே வந்து செட்டிலானதும் 1658ம் வருடம் கோல்கொண்டாவிடம் இருந்து ஒப்பந்தம் ஒன்றின் மூலம் திருவல்லிக்கேணி கிராமம் பெறப்பட்டது. சிறிது காலத்திலேயே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது கோல்கொண்டா அரசு. பின்னர், 1672ம் வருடம் ஒரு வருடத்துக்கு 50 பகோடாக்கள் வாடகை என்ற வகையில் கோல்கொண்டா அரசிடம் இருந்து மீண்டும் எழுதி வாங்கப்பட்டது.

ஆனால், 1673ம் வருடம் டச்சுக்காரர்கள், முஸ்லிம்களுடன் இணைந்து சாந்தோமை ஆண்ட பிரஞ்சுக்காரர்களுடன் சண்டையில் ஈடுபட்டனர். அப்போது டச்சுக் கப்பல்கள் திருவல்லிக்கேணி கடற்கரைப் பகுதியில் நின்றன. அதன் துருப்புகள் திருவல்லிக்கேணி கோயிலை ஆக்கிரமித்ததுடன் அங்கிருந்தபடியே தாக்குதல்களும் தொடுத்தன.

இதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த பின்னரே 1676ம் வருடம் திருவல்லிக்கேணி முழுவதுமாக கிழக்கிந்தியக் கம்பெனியிடம் வந்தது.
இதன்பின்னர், கம்பெனியின் தலைமை வணிகரான காசி வீரண்ணா என்ற ஹாசன் கானுக்கு திருவல்லிக்கேணி குத்தகைக்கு விடப்பட்டது. அவர் 1680ம் வருடம் இறந்த பிறகு வந்த தலைமை வணிகர் வேங்கடாத்ரியிடம் சென்றது. பின்னர், மீண்டும் கம்பெனியே எடுத்துக் கொண்டது.
இதற்கிடையில் திருவல்லிக்கேணியும் பார்த்தசாரதி கோயிலும் யார் வசம் இருக்க வேண்டும் என்ற சச்சரவுகளும் நடந்த
படியே இருந்தன.  

18ம் நூற்றாண்டில் கர்நாடக நவாப் தாவுத் கான் மெட்ராஸுக்கு தொடர்ந்து கிலி ஏற்படுத்தியபடியே இருந்தார். அவர் சாந்தோம் வந்து முகாம் போடும் போதெல்லாம் திருவல்லிக்கேணியில் இருந்த தோட்ட இல்லங்களுக்கு வந்து சென்றுள்ளார். இதனால், செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் புறக்காவல் பகுதியாக திருவல்லிக்கேணி இருந்தது. மட்டுமல்ல. பிரிட்டிஷார் திருவல்லிக்கேணி தங்கள் பகுதி என்பதைக் காட்ட குயவர்களுக்கும், நெசவாளர்களுக்கும் முன்பணம் கொடுத்து அங்கே குடியர்மத்தி வந்தனர்.

1727ம் வருட மக்கள் தொகை கணக்குப்படி திருவல்லிக்கேணிவாசிகள் பெரும்பாலும் பிராமணர்களாக இருந்தனர். கம்பெனி வணிகர்கள் அவர்களுக்கு வேலைகள் வழங்கி பராமரித்து வந்தனர். இங்கே இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். அது, பிராமணர்கள் வடகலை, தென்கலை என இருபிரிவுகளாகப் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டதே! வழிபாட்டு முறைகளிலேயே இந்தச் சிக்கல்கள் எழுந்தன. சமாதானங்கள் மூலமாகவும் ஆணை பிறப்பித்தும் இந்தப் பிரச்னைக்கு அவ்வப்போது முடிவு கண்டது ஆங்கிலேய அரசு.

1746ல் பிெரஞ்சுப்படை மெட்ராஸைக் கைப்பற்றியபோது அதன் துருப்புகள் எல்லாம் பார்த்தசாரதி கோயிலின் கிழக்குப் பகுதியிலேயே முகாமிட்டு இருந்தன. முன்பு டச்சுக்காரர்கள் செய்ததை இப்போது பிெரஞ்சுப்படை செய்தது.மீண்டும் 1749ம் வருடம் பிரிட்டிஷார் வசம் மெட்ராஸ் வந்ததும் ஆங்கிலேய வணிகர்கள் கூவத்தின் தெற்குப் பக்கமாகத் தங்கள் தோட்ட இல்லங்களைக் கட்டிக் கொண்டனர். இந்தத் தோட்ட இல்லத்தில் ஒன்றுதான் 1753ல் அரசினர் இல்லமாக மாறியது.

இதற்கிடையே ஆற்காடு நவாப் வாலாஜா திருவல்லிக்கேணி அருகே இருந்த சேப்பாக்கத்தில் குடியேறினார். சேப்பாக்கம் தனித்து வளரத் தொடங்கியது. மட்டுமல்ல; திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, சேப்பாக்கம் பகுதிகளில் அதிகளவு உருது முஸ்லிம்கள் குடியேறினர். வாலாஜா 1794ல் திருவல்லிக்கேணி மெயின் ரோட்டில் பெரிய மசூதியைக் கட்டினார்.

19ம் நூற்றாண்டில் வாழ்ந்த பச்சையப்ப முதலியாருக்கும் பார்த்தசாரதி கோயிலுக்கும் கூட ஒரு சம்பந்தம் இருக்கிறது. ஆம். கோயிலின் கிழக்கு நுழைவாயிலின் அருகே உள்ள கல்வெட்டு மூலம் இதை அறிய முடிகிறதென ‘சென்னை மாநகர்க் கல்வெட்டுகள்’ நூல் குறிப்பிடுகிறது.
அதிலுள்ள செய்தி, தேசாந்திரிகளுக்கு உணவு வழங்குவதற்கும், இந்து பிள்ளைகளுக்கு இந்நாட்டு சாத்திரங்களையும் ஆங்கில மொழியையும் கற்பிப்பதற்கும் பச்சையப்ப முதலியார் ஒரு லட்சம் வராகன் பணம் அளித்துள்ளார் என்பதே!

மட்டுமல்ல; திருவல்லிக்கேணிக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் உள்ளதென ‘சென்னை மறுகண்டுபிடிப்பு’ நூலில் எஸ்.முத்தையா குறிப்பிடுகிறார். அது, நீதிக்கட்சி திருவல்லிக்கேணியில் தோன்றியது என்பது!‘‘இங்கு அக்பர் சாகிப் தெருவில் ஒரு பிராமணரல்லாத மாணாக்கர் விடுதி ஏற்படுத்திய டாக்டர் சி.நடேச முதலியார் ஆரம்பித்த சென்னை திராவிடக் கழகம், திராவிட எழுச்சிக்கு வித்திட்டு 1920ல் இந்தியாவிலேயே ஒரு காங்கிரஸ் அல்லாத, அதாவது நீதிக்கட்சியால் முதன்முதலாக ஒரு மாகாணத்தில் அரசாங்கம் அமைக்க முடிந்தது!’’

திருவல்லிக்கேணி அருகே வளர்ந்த இன்னொரு பகுதி ஐஸ் ஹவுஸ். அங்கே இருந்த ஜஸ் ஹவுஸ் கட்டடம் விவேகானந்தர் வந்து போனபிறகு விவேகானந்தர் இல்லமாக மாறிவிட்டது. மட்டுமல்ல; சென்னை மாநிலக் கல்லூரி, சென்னைப் பல்கலைக்கழகம், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், பழைய புத்தகங்கள் கிடைக்கும் பாரதி சாலை, ஸ்டார் தியேட்டர், கோசா ஆஸ்பத்திரி என இன்னும் எத்தனையோ அடையாளங்கள் இருக்கின்றன திருவல்லிக்கேணிக்கு!

சாரதியும், பாரதியும்...

*பாரதியார் திருவல்லிக்கேணியில்தான் பல காலம் வசித்தார். அவர் எழுதிய ‘கண்ணன் பாட்டு’ பார்த்தசாரதி கோயில் கண்ணனை வைத்தே எழுதியதாகச் சொல்லப்படுகிறது.

*அவர் தினமும் பார்த்தசாரதி கோயில் யானைக்கு உணவளிப்பாராம். ஒருநாள் அந்த யானை மிதித்துவிட, நோய்வாய்ப்பட்டு, பின்னர் வயிற்றுப் ேபாக்கு கண்டு செப்டம்பர் 12ம் நாள் 1921ம் வருடம் உயிரிழந்தார். திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பேராச்சி கண்ணன்

 ராஜா