கவிதை வனம்




பழங்கணக்கு

விழாக் காலங்களுக்கென
விரும்பியே நேர்த்தியாய்
திரிபுநிலை தழுவும்
கூத்தாடிகள்
வர்ணங்கள் தம்மை மறந்து
பூத்து மணக்கும் சம்பவம்
செவ்வியலையும்
அகவியலையும்
செப்பனே வாய்மொழியால்
ஒலித்துக்கொண்டிருக்கும்
உடுக்கைப்பாடல்
வழக்கொழிந்து போன
வாழ்வியலெல்லாம்
வசனங்களில் நுரைத்துக்
கிடக்கின்றன
மன்னனும் மனுவும்
மலையாகி மடுவாகும்
காட்சியில் சரித்திரத்தைக்
கடந்தபோது
முகப்பில் பதிக்கப்பட்டிருந்தது
தெற்கு தேச
மொழிபெயர்ப்பு புத்தகமென.
- ரா.த ஜீவித்தா

பறத்தல்

நினைவுகளின்
மிதப்பை மாற்றி
சாளரம் வெறித்தபடியிருந்தேன்
சாளரத்தின் வழி பறந்த
தனிப்பறவையொன்று
எனதறையில்
ஓர் இறகுதிர்த்துச்
சென்றது
பறவையோடு சேர்த்து
என் மனமும் இப்போது
துயர்களின் திசையில்
பறக்கலாயிற்று.
- பிறைநிலா