கபடி வீரர்களை உருவாக்கும் கிராமம்!



உலகமே போற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு என்றால் அது கபடிதான். கபடி போட்டிகள் நடக்கும் இடத்தைக் கடந்து செல்லும்போது ஒரு கணம் அங்கு நம்மையும் அறியாமல் நின்று விளையாட்டைப் பார்த்துச் செல்வோம். அந்த அளவுக்கு அனைவரது ரத்தத்திலும் கபடி விளையாட்டு ஊறிப்போய் இருப்பதை மறுக்க முடியாது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கபடி விளையாட்டுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன. அதுபோல் குமரி மாவட்டத்திலும் பல அணிகள் உள்ளன. இருப்பினும் அளத்தங்கரை அணி தனது விளையாட்டுத் திறமையால் கோபுர கலசம்போல் மிளிர்கிறது. இந்த அணி கடந்த 1989ம் ஆண்டு டிசம்பர் இருபத்தொன்றாம் தேதி அளத்தங்கரையில் உருவானது. அளத்தங்கரையைச் சேர்ந்த தேசிய கபடி விளையாட்டு வீரர் ரவி என்ற ரவிச்சந்திரன் இந்த அணியை உருவாக்கிப் பயிற்சி அளிக்கத் தொடங்கினார்.

அளத்தங்கரை அணி தொடங்கப்பட்ட நாள் முதல் மாவட்டத்தில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வாங்கிக் குவித்துவருகிறது. அணி வீரர்களுக்கு பயிற்சியுடன் ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுப்பதால், அவர்கள் விளையாட்டில் முழு ஈடுபாட்டுடன் விளையாடி வருகின்றனர். இந்த அணியில் விளையாடிய ஜீவகுமார், இளங்கோ, மணிகண்டன், ரஞ்சித் பின்னாட்களில் இந்திய அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டார்கள்.

இதுபோல் பல வீரர்கள் மாவட்டம், மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அளத்தங்கரை அணி, மாநில அளவிலும் விளையாடி வருகிறது. வெளி மாவட்டங்களில் அளத்தங்கரை அணி வீரர்கள் விளையாடும் நுட்பங்கள், நுணுக்கங்களைப் பார்த்து வெளி மாவட்ட மாணவர்கள், கபடி வீரர்கள் அளத்தங்கரை அணியில் சேர்ந்து பயிற்சி பெற விருப்பத்துடன் வரத் தொடங்கினர்.

கடந்த 2010ம் ஆண்டுக்குப் பிறகு அதிக அளவிலான வெளி மாவட்ட விளையாட்டு வீரர்கள் அளத்தங்கரை அணிக்காகப் பயிற்சி பெற்றுவருகின்றனர். அவர்களுக்கு தங்கும் வசதியை அளத்தங்கரை கபடி அணி நிர்வாகம் இலவசமாகச் செய்து கொடுக்கிறது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கவும் சேர்த்துவிடுகின்றனர். இந்த அணிக்கு ரவிச்சந்திரன் தலைமைப் பயிற்சியாளராகவும், சுப்ரதீபன் துணைப் பயிற்சியாளராகவும், தாமு ஒருங்கிணைப்பாளராகவும், ரமணன் பொருளாளராகவும் செயல்பட்டு வருகிறார்கள்.

அளத்தங்கரை அணிக்காக ராஜபாளையத்தைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவர் தங்கி பயிற்சி பெற்று கபடி விளையாடிவந்தார். அவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஐசிஎஃப்பில் வேலை கிடைத்தது. இதன் பிறகு வெளி மாவட்ட வீரர்கள், மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. இங்கு விருதுநகர், நெல்லை, சேலம், கோவை, கரூர், திருச்சி, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கபடி பயிற்சி பெற்று
வருகின்றனர்.

அளத்தங்கரை அணிக்காக இங்கு தங்கி விளையாடும் வீரர்கள் தினமும் அதிகாலை நான்கு மணிக்கு மைதானத்துக்கு வந்து விடுகின்றனர். நாலரை மணிக்கு உடற்பயிற்சி, ஐந்து மணி முதல் ஏழு மணி வரை கபடி விளையாடுவதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளும் பயிற்சிகள் மேற்கொள்கின்றனர். ஏழு மணி முதல் ஏழரை மணி வரை கபடி விளையாடிவிட்டு பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்கின்றனர்.

இதுபோல் மாலை ஐந்து மணி முதல் எட்டு மணி வரை கபடி பயிற்சி வழங்கப்படுகிறது. பின்பு படித்துவிட்டு தூங்கச் செல்கின்றனர். ஞாயிற்றுக் கிழமைதோறும் காலை ஒரு மணி நேரம் யோகா வகுப்பு நடத்தப்படுகிறது. தொடர்ந்து நாற்பத்தைந்து நிமிடங்கள் வெள்ளிமலை ஆசிரம சுவாமிகள் பகவத்கீதையின் சாராம்சம் சொல்லிக் கொடுக்கின்றார். வீரர்களின் மனதை ஒருநிலைப்படுத்த இந்த வகுப்புகளை நடத்துகின்றனர்.

புரோ கபடிக்குப் பிறகு கபடி மேலும் வளர்ச்சி அடைந்துள்ளது. கபடியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய வடிவில் வந்துள்ளதை அனைத்து கபடி வீரர்களும் பின்பற்றி வருகின்றனர். புரோ கபடி அணியில் அளத்தங்கரை அணி வீரர்கள் தங்களது சிறப்பான பங்களிப்பைச்
செய்துவருகிறார்கள்.

இதில் ஜீவகுமார் உ.பி அணிக்கும், ராம் மும்பை அணிக்கும், ரஞ்சித் டெல்லி அணிக்கும், ஜெயசீலன், பொன் பார்த்திபன் ஆகியோர் தமிழ் தலைவாஸ் அணிக்கும், கலையரசன் குஜராத் அணிக்கும், விஜின் பெங்கால் அணிக்கும், சுரேஷ்குமார் மும்பை அணிக்கும், பாபு ஹரியானா அணிக்கும் விளையாடி வருகின்றனர். அளத்தங்கரை அணிக்காக விளையாடிய வீரர்கள் சுமார் முந்நூறுக்கும் மேற்பட்டோர் அரசு பணியில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு மைதானம்

அளத்தங்கரை கபடி அணி வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு என்று 13 கபடி மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று உள்விளையாட்டு மைதானம். மற்ற 12 மைதானங்களும் ஒவ்வொன்றும் வெவ்வேறு தன்மையுடன் அமைக்கப்பட்டுள்ளன. பயிற்சி பெறும் வீரர்கள் இந்த 13 மைதானங்களிலும் சுழற்சி முறையில் பயிற்சி பெறுகின்றனர். இப்படி பயிற்சி பெறும் வீரர்கள் எந்த மாவட்டத்திலும் எந்த மைதானத்திலும் விளையாட தங்களைத் தயார்படுத்திக்கொள்கின்றனர்.

இரண்டு மாதங்கள் சிறப்புப் பயிற்சி

அளத்தங்கரையில் வருடம்தோறும் கோடை விடுமுறையில் இரண்டு மாதங்கள் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கபடி அணி வீரர்களுக்கும் சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இந்தப் பயிற்சி வகுப்பில் வீரர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு பயிற்சியின்போது காலையில் கொண்டக்கடலை, சிறுபயிறு வழங்கப்படுகிறது. காலை உணவிற்காக மோருடன் கம்பங்கூழ் வழங்கப்படுகிறது. மாலையில் பாலுடன் முட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் வருடம்தோறும் சுமார் 200 வீரர்கள் பயிற்சி பெற்றுச் செல்கின்றனர்.

சி.உமாசங்கர்

ஆர்.மணிகண்டன்