நியூஸ் வியூஸ்



இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

எழுபது ஆண்டு கனவு நனவாகி இருக்கிறது.1947 ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது.அடுத்த இரண்டு மாதங்களில் சுதந்திர இந்தியா, முதன்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் சீரிஸ் விளையாடச் சென்றது.

அப்போதெல்லாம் டெஸ்ட் மேட்ச் 6 நாட்கள் நடக்கும். ஓய்வு நாள் ஒன்றோடு சேர்த்தால் 7 நாட்கள் விளையாட வேண்டியிருக்கும். ஓவருக்கு 8 பந்துகள். மொத்தம் ஐந்து டெஸ்ட் மேட்ச்சுகள். உள்ளூர் மாகாண அணிகளோடு ஒன்பது முதல்தர கிரிக்கெட் டெஸ்ட்டுகள்.

கத்துக்குட்டியாக இருந்த இந்திய கிரிக்கெட் அணியை, ஆஸ்திரேலியாவின் உள்ளூர் அணிகளே வெளுத்து விட்டன. ஒன்பது போட்டிகளில் இரண்டு வெற்றி, மூன்று தோல்வி, நான்கு டிரா என்று பயிற்சிப் போட்டிகளிலேயே இந்திய அணி தடுமாறியது.பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுடன் நடந்த முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா முதலில் ஆடியது. உலக கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் 185 ரன்கள் விளாச, முதல் இன்னிங்ஸில் 382 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்துகொண்டு இந்தியாவை ஆடவிட்டது.

முதல் இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மென்கள் 8 பேர் ஒற்றை இலக்க ரன்களோடு (அதில் நான்கு டக் அவுட்) நடையைக் கட்டினார்கள். அதிகபட்சமாக லாலா அமர்நாத் அடித்ததே 22 ரன்கள்தான். முதல் இன்னிங்ஸில் மொத்தமாகவே 58 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபாலோ ஆன் ஆகி, இரண்டாவது இன்னிங்ஸிலிலும் 98 ரன்கள் மட்டுமே எடுத்து, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 226 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது இந்தியா.

ஒரு போட்டி மட்டும் மழையின் காரணமாக டிரா ஆக, அதற்கடுத்த, அடுத்த மூன்று போட்டிகளிலும் (இரண்டு இன்னிங்ஸ் தோல்வி, ஒன்றில் 233 ரன்கள் வித்தியாசம்) படுதோல்வி அடைந்தது இந்திய அணி.போட்டிகள் நடந்த ஐந்து மாதங்களும் ஆஸ்திரேலிய ஊடகங்கள், இந்திய கிரிக்கெட் அணியை கேலி கிண்டல் செய்யாத நாட்களே இல்லை. ஒட்டுமொத்தமாக நாம் படுதோல்வி அடைந்திருந்தாலும் தட்டு பட்கர், விஜய் ஹசாரே, வினு மன்காட் போன்ற பேட்ஸ்மேன்கள், தனிநபர் சாதனைகளால் நட்சத்திரங்களாக உருவெடுத்தார்கள்.

71 ஆண்டுகள் கழிந்த நிலையில் 2017-18 தொடரில் அதே ஆஸ்திரேலிய மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டுக்கு ஒன்று (மழையால் ஒரு போட்டி ஆஸ்திரேலியாவை தோல்வியிலிருந்து டிரா செய்து காப்பாற்றியது) என்கிற கணக்கில் இந்திய அணி வென்றிருக்கிறது.

வரலாறு அப்படியே ‘யூ-டர்ன்’ அடிக்க, இந்த இடைப்பட்ட 70 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. ஏனெனில் 1947-48க்கும் 2017-18க்கும் இடையில் ஆஸ்திரேலியாவில் 10 டெஸ்ட் தொடர்கள் விளையாடிய இந்தியா, ஒரு தொடரைக்கூட வென்றதில்லை. ஆஸ்திரேலிய மண்ணில், டெஸ்ட் வெற்றியை முதன்முதலாக இந்தியா பதிவு செய்யவே 30 ஆண்டுகள் தேவைப்பட்டது.

ஒட்டுமொத்தமாக 1947ல் தொடங்கி 1996 வரை இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இரு நாடுகளில் நடந்த 12 தொடர்களில் 50 டெஸ்ட் போட்டிகள் விளையாடி இருந்தன. அவற்றில் ஆஸ்திரேலியா 7 தொடர்களிலும், இந்தியா ஒரே ஒரு தொடரிலும், மீதி நான்கு தொடர்கள் டிரா என்கிற நிலையும் இருந்தன. போட்டி என்று எடுத்துக் கொண்டால் ஆஸ்திரேலியா 24, இந்தியா 8, 17 போட்டிகள் முடிவில்லை, 1 போட்டி சமம் என்கிற நிலையே இருந்தது.

1996க்குப் பிறகு இருநாடுகளும் தங்கள் டெஸ்ட் தொடரை ‘பார்டர்  கவாஸ்கர் டிராபி’ என்கிற பெயரில் விளையாட ஒப்புக் கொண்டன. சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளில் முதலில் 10,000 ரன்களைக் கடந்தவர் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில்கவாஸ்கர் என்பதும், அடுத்து 10,000 ரன்களைக் கடந்தவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆலன் பார்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதன்முதலாக டெல்லியில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியுடன் ‘பார்டர்  கவாஸ்கர்’ டிராபி தொடங்கியது. அதில் இந்தியா வென்றது. அப்போது தொடங்கி, கடந்த 22 ஆண்டுகளாக இந்தியா  ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் இந்தியாவே பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.இக்காலகட்டத்தில் நடந்திருக்கும்  14தொடர்களில் 8 தொடர்களை இந்தியாவும், 5 தொடர்களை ஆஸ்திரேலியாவும் வென்றிருக்கின்றன.

ஒரு தொடர் மட்டும் டிரா. போட்டியில் வெற்றி என்கிற எண்ணிக்கையில் பார்த்தால் ஆஸ்திரேலியா 18, இந்தியா 20, இருதரப்புக்கும் வெற்றியில்லாமல் டிரா ஆன போட்டிகள் 10.2010-11ல் ஆஸ்திரேலியாவுடனான போட்டியில்தான் சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய 15,000 ரன்களை கடந்தார். இன்றுவரையிலும் அந்த சாதனை யாராலும் முறியடிக்கப்பட முடியாத ஒன்றாக இருக்கிறது.

2000-01ல் கொல்கத்தாவில் நடந்த போட்டியில் ஹர்பஜன்சிங், ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக ஹாட்ரிக் எடுத்த இந்தியர் என்கிற சாதனையை நிகழ்த்தினார்.இதுபோல இருநாடுகளுக்கு இடையிலான இந்த எழுபது ஆண்டுகால போட்டித் தொடரில் இரு நாட்டு வீரர்களுக்கும் ஏராளமான மலரும் நினைவுகள் இருக்கின்றன.

எனினும் முழுமையாக ஆஸ்திரேலியாவை சரண்டர் ஆகச் செய்திருப்பது விராத் கோஹ்லி தலைமையிலான இந்த அணிதான். ஏனெனில், சொந்த மண்ணில் முதன்முறையாக ஒரு போட்டித் தொடர் முழுவதுமே ஒரே ஒரு ஆஸ்திரேலிய வீரர் கூட செஞ்சுரி எடுக்க முடியவில்லை. அவர்களுடைய குகையிலேயே அவர்களுக்கு ஃபாலோ-ஆன் கொடுத்த கெத்து எல்லாம் இப்போதைய இந்திய அணியையே சாரும்.

இன்னும் ஐந்தே மாதங்களில் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கும், அதன் ரசிகர்களுக்கும் இந்த ஆஸ்திரேலிய படையெடுப்பு பெரும் உற்சாகத்தைத் தந்திருக்கிறது.

‘தொடர்’ வரலாறு...

* 1947-48ல் இருந்து ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா நடப்பு தொடருக்கு முன்பாக 11 டெஸ்ட் தொடர்களில் விளையாடி இருந்தது. அவற்றில் 1980-81, 1985-86 மற்றும் 2003-04ல் மட்டும் டிரா செய்த இந்தியா, 8 தொடர்களில் தோற்றிருந்தது. தற்போது கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 2-1 என முதல் முறையாக தொடரை வசப்படுத்தி சாதனை படைத்துள்ளது.

* வெளிநாட்டு மைதானங்களில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளைக் குவித்த கேப்டன்கள் வரிசையில் சவுரவ் கங்குலியுடன் சமநிலையில் இருந்த கோஹ்லி (தலா 11 வெற்றி), சிட்னியில் தனது 12வது வெற்றியை பதிவு செய்து முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.

* நடப்பு தொடரில் ஒரு ஆஸ்திரேலிய வீரர் கூட சதம் அடிக்கவில்லை. இந்திய தரப்பில் புஜாரா 3 சதங்கள் உட்பட 521 ரன் குவித்தார் (அதிகம் 193, சராசரி 74.42, சதம் 3, அரை சதம் 1). கேப்டன் கோஹ்லி, விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் தலா 1 சதம் விளாசினர்.

* பந்துவீச்சாளர்களில் இந்திய வேகம் ஜஸ்பிரித் பூம்ரா, ஆஸி. சுழல் நாதன் லயன் இருவரும் தலா 21 விக்கெட் கைப்பற்றி முதலிடம் பிடித்தனர். முகமது ஷமி (16 விக்கெட்), பேட் கம்மின்ஸ் (14), ஹேசல்வுட் மற்றும் ஸ்டார்க் தலா 13 விக்கெட் வீழ்த்தி அடுத்த இடங்களைப் பிடித்தனர்.

யுவகிருஷ்ணா