தல புராணம்-ஜார்ஜ் டவுன் கோயில்கள்...



அன்றைய மெட்ராஸ் பட்டணத்தைச் சுற்றி இருந்தது இரண்டே பகுதிகள்தான். ஒன்று பெத்தநாயக்கன்பேட்டை. மற்றொன்று முத்தியால்பேட்டை!இவை இன்று ஜார்ஜ் டவுன், பார்க் டவுன், பாரிஸ் என்ற பெயர்களில் பரபரப்பான ஏரியாவாக மாறிவிட்டன.

இதில் ஜார்ஜ் டவுன் பெயர், 1911ம் வருடம் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியாவின் பேரரசராக முடிசூடியதன் நினைவாக வைக்கப்பட்டது. பாரிஸ் என்பதற்கு பாரி அண்ட் கோ பீச் ேராட்டில் தங்கள் நிறுவனத்தை நிறுவியதும், பார்க் டவுன் பெயருக்கு சென்ட்ரல் அருகே பீப்பிள்ஸ் பார்க் இருந்ததும் காரணங்கள்.

இந்தப் பகுதிகளில் இருக்கும் கோயில்கள் அனைத்தும் பழமையானவை.குறிப்பாக, சென்னகேசவப் ெபருமாள் கோயில், சென்ன மல்லீஸ்வரர் கோயில், ஏகாம்பேரஸ்வரர் கோயில், ஆர்மேனியன் தெருவிலுள்ள கச்சாலீஸ்வரர் கோயில், சைனா பஜாரில் வீற்றிருக்கும் கந்தகோட்டம் முருகன் கோயில் ஆகியவை சுமார் முந்நூறு வருடங்கள் பழமையானவை. இதேபோல் தம்புச் செட்டித் தெருவிலுள்ள காளிகாம்பாள் கோயிலும் பழமையானதே! ஒவ்வொரு கோயிலுக்குமான சரித்திரம் சுவாரஸ்யம் நிறைந்தது.

சென்னகேசவப் பெருமாள் மற்றும் சென்னமல்லீஸ்வரர் கோயில்:

பட்டணம் கோயில் அல்லது பூக்கடை கோயில் என்றழைக்கப்படும் இவை இரண்டும் இரட்டைக் கோயில்கள்.

அதாவது, சென்னகேசவப் பெருமாள் கோயிலும், சென்னமல்லீஸ்வரர் கோயிலும் ஒன்றாக இணைத்துக் கட்டப்பட்டவை.இன்று பூக்கடை பஜார் அருகே பிசியான தேவராஜ முதலித் தெருவில் வீற்றிருக்கும் இந்தக் கோயில்களில் ஒன்றான சென்னகேசவப் பெருமாள் கோயில், தொடக்கத்தில் உயர்நீதிமன்றம் உள்ள இடத்தில் இருந்தது.

1710ம் வருடம் அன்றைய மெட்ராஸ் கவர்னர் தாமஸ் பிட் வெளியிட்ட நகரின் வரைபடத்தில் இதைத் தெளிவாகக் காணலாம். அதில், இந்தக் கோயில், ‘Great pagoda’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று கோயில்கள் பகோடா எனக் குறிப்பிடப்பட்டன. நாணயங்களும் கூட பகோடாக்கள் என்றே அழைக்கப்பட்டன.

பிறகெப்படி சென்னகேசவர் பெத்தநாயக்கன்பேட்டை பகுதிக்குள் வந்தார்?
பிரெஞ்சுக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடந்த போரே காரணம். கோட்டையின் அருகிலுள்ள கருப்பர் நகரில்தான் சென்னகேசவப்பெருமாள் கோயில் இருந்தது. இதனாலேயே, கருப்பர் நகர் சென்னப்பட்டணம் என அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

1746 முதல் 1749ம் வருடம் வரை மெட்ராஸ் பிெரஞ்சுக்காரர்கள் வசம் இருந்தது. இந்நேரம் பிெரஞ்சுப்படை கருப்பர் நகரில் சில இடங்களை அழித்துவிட்டது. பின்னர், மீண்டும் மெட்ராஸ் ஆங்கிலேயரிடம் வந்ததும் முதல் வேலையாக பாதுகாப்பை பலப்படுத்தினர்.

ராணுவ நடவடிக்கைகளுக்காக கருப்பர் நகரை மொத்தமாக அப்புறப்படுத்தி முத்தியால்பேட்டைக்கும், பெத்தநாயக்கன்பேட்டைக்கும் கொண்டு சென்றனர். இதனால், 1757ம் வருடம் சென்னகேசவப் பெருமாள் கோயில் இடிக்கப்பட்டது.இதற்கு பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்ப, பிரச்சனை அன்றைய மெட்ராஸ் கவர்னர் பிகாட்டின் துபாஷியாக இருந்த மணலி முத்துக்கிருஷ்ண முதலியார் மூலம் பேசித் தீர்க்கப்பட்டதென குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அன்று துபாஷிகள் மிகுந்த செல்வாக்கு மிக்கவர்களாக விளங்கினர். அதனால், இந்தத் தகவல் உண்மையாக இருக்கலாம்தான். ஆனால், ஆங்கிலேயர்களின் பதிவில் எதிர்ப்புகள் பற்றி எந்தப் பதிவுகளும் இல்லை.

இந்நேரம், ஆங்கிலேயர்களும் இந்து சமயக் கோயில்களைப் பாதுகாக்கும் முயற்சியில் இருந்தனர். இதனால், 1762ம் வருடம் இடிக்கப்பட்ட கோயிலுக்கு இழப்பீடாக பழைய கோயில் பரப்பிற்குச் சமமாக அரை ஏக்கர் நிலத்தை சைனா பஜார் பகுதியில் தந்தனர். பின்னர், 1777ம் வருடம் கோயில் கட்டுமானப் பணிக்கு 1,173 பகோடாக்களையும் கொடுத்து உதவினர்.  

இதேபோல் முத்துக்கிருஷ்ண முதலியார் தன் பங்காக 5,202 பகோடாக்கள் கொடுத்தார். தவிர, மக்களிடம் இருந்து பெறப்பட்ட நன்கொடைகள் என மொத்தம் 15,652 பகோடாக்கள் வசூலானது. இதை வைத்து மீண்டும் கோயிலை பெத்தநாயக்கன்பேட்டையில் கட்டி முடித்தனர்.

இப்போது சென்னகேசவப் பெருமாள் கோயிலுடன், சைவ வழிபாட்டு பக்தர்களுக்காக சென்னமல்லீஸ்வரர் கோயிலும் சேர்த்துக் கட்டப்பட்டது. இந்த இரண்டு கோயில்களையும், ‘Town Temple’ என்றே மக்கள் அழைத்தனர்.கோயிலுக்கு வாடகைகள் மூலமும், ஆங்கிலேய அரசு தந்த ஐநூறு பகோடாக்கள் மூலமும் மற்றும் காளஹஸ்தி ராஜா தந்த நூறு பகோடாக்கள் வழியாகவும் ஆண்டு வருமானமாக 800 பகோடாக்கள் கிடைத்து
வந்தன. இதைக் கொண்டு நிர்வாகம் செய்யப்பட்டது.  

ஆரம்பத்தில், கோட்டையை ஒட்டியிருந்த கருப்பர் நகரில் கோயில் கட்டியவர் பேரி திம்மண்ணா என்பவர். இந்தப் புதிய கருப்பர் நகரில் கோயிலை முன்நின்று கட்டியவர் மணலி முத்துக்கிருஷ்ண முதலியார். இதனால், இவரே கோயிலின் முதல் காப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர் 1792ம் வருடம் இறந்தார். இதன்பிறகு, இவரின் வாரிசுகள் கோயிலைப் பாதுகாத்துவந்தனர்.

இந்தத் தகவல்களை எல்லாம் கோயில் நிர்வாக உரிமை யாருக்கு என்பது பற்றி அன்று கோர்ட்டிற்கு வந்த இருவேறு வழக்குகள் மூலம் அறிய முடிகிறது. முதல் வழக்கு 1831ம் வருடம் தொடரப்பட்டது.தொடுத்தவர்கள் மணலி முத்துக்கிருஷ்ண முதலியாரின் மகனும், பேரனும். நிறைவில், மணலி முத்துக்கிருஷ்ண முதலியாரின் பேரன்தான் கோயிலின் காப்பாளர் என்றது கோர்ட்.

பின்னர், 1898ம் வருடம் இன்னொரு வழக்கு வந்தது. இதில், உண்மையான ஆவணங்கள் சில தாக்கல் செய்யப்பட்டன. அதன்படி, 1646ம் வருடம் நாகபட்டனும் 1648ம் வருடம் பேரி திம்மண்ணாவும் நாராயணப்ப அய்யர் என்பவருக்கு கோயில் நிர்வாகப் பொறுப்பை அளித்துள்ளனர்.

நாகபட்டன் ஆர்மகானில் இருந்து வந்தவர். கிழக்கிந்தியக் கம்பெனியின் துப்பாக்கி வெடிமருந்து தயாரிப்பாளராக இருந்தார். பேரி திம்மண்ணா மெட்ராஸ் நிலத்தைப் பெற ஃபிரான்சிஸ் டேவிற்கு உதவியவர். கம்பெனியின் வணிகராக ஆரம்ப நாட்களில் இருந்தவர்.

இவர்கள் இருவரும் கோயிலுக்கு அறக்கட்டளை ஏற்படுத்தி இருந்தனர். இதில், ேபரி திம்மண்ணா பொறுப்பை அய்யருக்கு வழங்கிய போது எழுதிய குறிப்பில், ‘நான் சென்னப்பட்டணத்தில் சென்னகேசவப் பெருமாள் கோயிலைக் கட்டியிருக்கிறேன். அதற்காக மானியமும், சிறு நிலமும் கொடுத்ததுடன் மற்ற வசதிகளும் செய்து தந்துள்ளேன். சூரியன் சந்திரன் உள்ளவரை வழிவழியாக கோயிலில் சேவை செய்ய வேண்டும். அப்படி செய்யத் தவறினால் கங்கை நதிக்கரையில் ஒரு கருப்புப் பசுவைக் கொன்றதற்கு இணையான பாவத்தைச் செய்தவர்கள் ஆவர்...’ என உள்ளது.

இதேபோல நாகபட்டன் எழுதித் தந்ததிலும் இந்தச் செய்திகள் உள்ளன. ஆனால், அவர் நாராயணப்ப அய்யருக்கு பரிசாக அளிப்பதாக கையெழுத்திட்டுள்ளார்.இப்படியாக சென்னகேசவப் பெருமாள் கோயில் நிர்வாகம் பற்றிய குறிப்புகளை கர்னல் லவ் தன்னுடைய, ‘Vestiges of Old Madras’ நூலில் தந்துள்ளார். இன்று இரண்டு கோயில்களும் அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன.

சென்னகேசவப் பெருமாள் கோயிலின் உற்சவர் சிலையிலும் ஒரு கதை இருக்கிறது. ைஹதர் அலியின் படையெடுப்புக்குப் பயந்து இங்கிருந்த உற்சவர் சிலையை திருநீர்மலைக்குக் கொண்டு சென்றதாகவும், அங்குள்ள உற்சவர் நால்வருடன் ஐந்தாவதாக சென்னகேசவரையும் சேர்த்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்தச் சிலையைக் கொண்டு சென்ற பட்டாச்சாரியார் இறந்துவிட, பின்னர் சிலையை எடுத்து வரச் சென்றவர்கள் சென்னகேசவர் சிலை எதுவென அறியமுடியாமல் அங்கிருந்த நரசிம்மர் சென்னகேசவராக இருக்கலாம் என்று நம்பி எடுத்து வந்து பிரதிஷ்டை செய்ததாகச் சொல்கின்றனர்.

இங்கே தாயார் செங்கமலவல்லிக்கும், கோதண்ட ராமர், ஆஞ்சநேயர், ஆண்டாள் முதலிய தெய்வங்களுக்கும் தனி சன்னதிகள் உள்ளன.ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் திருப்பதி திருமலையில் நடக்கும் பிரம்மோற்சவத்திற்கு இங்கிருந்து பதினோரு அழகிய வெண்பட்டுத் திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சமர்ப்பிக்கப்படுகின்றன.

இந்தக் குடைகள் யானைக்கவுனி தாண்டும் நிகழ்வு இன்றும் அங்குள்ள மக்களிடம் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இதேபோல், சென்னமல்லீஸ்வரர் கோயிலில் அம்மன் பிரம்மராம்பிகை சன்னதி மேற்குப் பிரகார கோடியிலும் பிரசன்ன விநாயகர், முருகர் உள்ளிட்ட சன்னதிகளும் அமைந்துள்ளன. பரபரப்பான, சத்தங்கள் நிறைந்த சாலையில் இந்தக் கோயில்கள் அமைந்திருந்தாலும் உள்ளே அத்துணை பேரமைதி.

ஏகாம்பரேஸ்வரர் கோயில்:1726ம் வருடம் வெளியான நகரின் மற்றொரு வரைபடத்தில் இன்னொரு கோயிலையும் தெளிவாகக் காணமுடிகிறது. அது, ‘ஆலிங்கல்ஸ் பகோடா’ என ஆங்கிலேயர்களால் குறிக்கப்பட்ட ஏகாம்பரேஸ்வரர் கோயில்.

ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பே கட்டப்பட்ட கோயில் இது. இதைத் தனவந்தராக இருந்த ஆலங்காத்த பிள்ளை என்பவர் கட்டினார். இவர் 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கம்பெனியின் தலைமை வணிகராக இருந்தவர். மின்ட் தெருவின் ஆரம்பத்தில் இந்தக் கோயில் உள்ளது. அப்போது இந்தத் தெரு காலிக்கோ துணிகள் வெளுக்கும் நெசவாளர்களால் நிறைந்திருந்ததால் ‘துணிவெளுப்போர் தெரு’ எனப்பட்டது.

இந்தக் கோயிலின் முன்பக்க வாயிலை வ.மு.அப்புகுட்டி செட்டியார் என்பவர் கட்டியதாகத் தெரிகிறது. அவரின் பெயர் வாயிலில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயில் அன்று வலக்கர சாதியினருக்கும், இடக்கர சாதியினருக்கும் பொதுவானதாக இருந்தது. ஆனால், இருவகை சாதியினருக்கும் அடிக்கடி சண்டைகளும், சச்சரவுகளும் ஏற்பட அரசுக்குப் பெரிய தலைவலியாக இருந்தது. நிறைவில், கம்பெனி ஏகாம்பரேஸ்வரர் கோயில் வலக்கரச் சாதியினருக்குச் சொந்தமானது என முடிவு செய்தது.

ஆலங்காத்த பிள்ளை 1685ம் வருடம் இறந்ததாக 1939ல் வெளியான ‘The Madras Tercentenary Commemoration Volume’ நூலில் அன்றைய மெட்ராஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் வி.ஆர்.ராமச்சந்திர தீட்சிதர் குறிப்பிடுகிறார். இன்று அவரின் நினைவாக திருவல்லிக்கேணியில் ஆலங்காத்த பிள்ளை தெரு உள்ளது. சரி, வலக்கர சாதியினருக்கு இந்தக் கோயில் இருந்தது போல் இடக்கர சாதியினருக்கும் ஒரு கோயில் கட்டப்பட்டது. அதுபற்றி அடுத்த இதழில்...

(தொடரும்)   

பேராச்சி கண்ணன் ராஜா