பகவான்-41மீண்டும் கோட்டையைப் பிடித்தார்!

ஓஷோவை போர்ச்சுக்கல்லின் லிஸ்பன் நகரில் அமெரிக்க அதிகாரிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் ஸ்பெயினின் மாட்ரிட்டில் தரையிறங்கினார்.

உடனே அமெரிக்கர்கள் வெறியோடு மாட்ரிட் நோக்கி பயணிக்க, சத்தமேயின்றி மாட்ரிட்டில் இருந்து லிஸ்பனுக்கு வந்தார் பகவான்.அமெரிக்காவுக்கு இவ்வாறாக அல்வா கொடுத்துவிட்டு, லிஸ்பனில் ஒரு ஹோட்டல் அறையில் ரகசியமாகத் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

போர்ச்சுக்கல்லில் இருந்த பக்தர்கள் பகவானை கோலாகலமாகக் கொண்டாடினார்கள். தினமும் ஹோட்டலுக்கு திரண்டு வந்து அவரை தரிசித்துவிட்டுச் சென்றார்கள்.இதனால் அதுநாள் வரை டூரிஸ்ட்டுகளே இல்லாமல் ஈயடித்துக் கொண்டிருந்த அந்த ஹோட்டலில் திடீரென்று சலசலப்பு ஏற்பட்டது.பகவானின் சீடர்கள் சிலர் அவரிடம் சொன்னார்கள்.

“பகவானே! தாங்கள் இங்குதான் தங்கியிருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொண்டால் மீண்டும் அமெரிக்கா பிரச்னை செய்யும்…”“பிரச்னை செய்வது அவர்களது வேலை. ஒவ்வொரு முறையும் அவர்களது மூக்கை உடைப்பது நம்முடைய கடமை...” என்று ஜாலியாக ஜோக்கடித்தார் பகவான்.

“அதனால்தானே லிஸ்பனுக்கு வருவதாக தகவல் சொல்லி, நாம் மாட்ரிட்டில் இறங்கி அமெரிக்கர்களை அலையவிட்டோம். இப்போது நீங்கள் இங்கே தங்கியிருப்பதை அமெரிக்கர்கள் அறியாவண்ணம் மேலும் சில முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்கிறோம்...”“என்னமாதிரி முன்னெச்சரிக்கைகள்?”“நீங்களே கவனித்திருக்கலாம். சமீபமாக நாங்கள் யாரும் ஆரஞ்ச் நிற உடை அணிவதில்லை. தாடி வைப்பதில்லை. சுற்றுலாப் பயணிகளைப் போன்ற தோற்றத்தில் உலவுகிறோம்...”“கவனித்தேன்!”“நீங்களும் அதுமாதிரி…”

“அதாவது என் நீண்ட அங்கியைத் துறக்க வேண்டும். தாடியை மழிக்க வேண்டும். முடியை ஒட்ட நறுக்க வேண்டும்...”
“ஆமாம் பகவானே. நம் பக்தர்களைத் தவிர வேறு எவரும் உங்களை அடையாளம் காண முடியாது...”“அதாவது என்னை மறைந்து மாறுவேடத்தில் வாழச் சொல்கிறீர்கள்...”“சில காலத்துக்குத்தான். அதற்குள்…”“அமெரிக்க அதிகாரிகள் முட்டாள்கள்தான். ஆனால், நீங்கள் நினைக்குமளவுக்கு அடிமுட்டாள்கள் அல்ல…” பகவானின் குரலில் உஷ்ணம் ஏறியது. அவரே தொடர்ந்தார்.

“கேவலம் அமெரிக்க அதிகாரிகளுக்கு பயந்து இந்த ஓஷோ முடியைத் துறந்தார், உடையை மாற்றினார் என்று எதிர்காலம் என்னை கேலி பேசவேண்டுமா?”நிர்த்தாட்சண்யமாக தன்னுடைய தோற்றத்தை மாற்றிக்கொள்ள பகவான் மறுத்துவிட்டார்.அதே ஹோட்டலில் மேலும் சில நாட்கள் தங்கியிருந்தால் மாட்டிக் கொள்வோம் என்கிற உண்மை நிலவரம், பகவானை அங்கே பாதுகாத்து வைத்திருந்த பக்தர்களுக்கு புரிந்தது.

உடனடியாக அங்கிருந்து வெளியேறுவதாக ஒரு நாடகம் நடத்தினார்கள். எவருக்கும் தெரியாமல் ரகசியமாக அதே ஹோட்டலில் இருந்த வசதிகள் குறைவான சுமாரான அறையை எடுத்து ஓஷோவை வேறு பெயரில் தங்க வைத்தார்கள். இதனால் ஓஷோவைத் தேடிவந்த பக்தர்கள் பலரும் ஏமாந்துபோய் திரும்பினார்கள். ஏமாந்து திரும்பிய அந்தக் கூட்டத்தில் சில அமெரிக்க உளவாளிகளும் அடக்கம்.

ஆனால் -போதுமான வசதிகள் இல்லாத தூசி நிறைந்த அறையில் தங்கியதால் ஓஷோவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஏற்கனவே அவரைத் துன்புறுத்தி வந்த ஆஸ்துமா பிரச்னை அதிகரித்தது.பகவானுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக வேறொரு ரகசிய வீட்டைத் தேடினார்கள்.

லிஸ்பன் நகருக்கு வெளியே தனித்திருந்த அந்த வீடு கிடைத்தது. அங்கு வைத்து ஓஷோவுக்கு சிகிச்சை அளிக்க அவருடைய மருத்துவரான டாக்டர் அம்ருதோ திட்டமிட்டிருந்தார்.இதற்கிடையே அமெரிக்கர்கள் சுறுசுறுப்பாகப் பணியாற்றி இருந்தனர்.

போர்ச்சுக்கல் அரசாங்கம் மூலமாக காய்களை நகர்த்தத் தொடங்கினர்.புதிய வீட்டுக்கு பகவான் வருவதற்கு முன்பாகவே, அந்த வீட்டை காவல்துறையினர் முற்றுகையிட்டனர். ஓஷோவுக்கு இடம் தரக்கூடாது என்று வீட்டின் உரிமையாளர் மிரட்டப்பட்டார்.
உடல்நலமும் மோசமாகிக் கொண்டிருந்த நிலையில் இன்னும் பகவானை அலைக்கழித்துக் கொண்டிருக்க வேண்டாம் என்கிற முடிவுக்கு வேதனையோடு பக்தர்கள் வந்தனர்.

எனவே அவரை இந்தியாவுக்கே அனுப்புவதற்கு முடிவெடுத்தனர்.தான், தங்குவதற்கு உலகின் பல்வேறு நாடுகளின் கதவுகளைத் தட்டி, தோல்வியோடு தாய்நாட்டுக்கே திரும்பினார் பகவான். இருபத்தியோரு நாடுகள், அவரை தங்கள் நாட்டில் தங்க விடாமல் துரத்தி அடித்தன. தங்க வைக்க முன்வந்த நாடுகளும் பல்வேறு காரணங்களால் கையை விரித்து விட்டன.

1986, ஜூலை 28ம் தேதி மீண்டும் இந்தியாவுக்கு கிளம்பினார். மறுநாள் மும்பை வந்து சேர்ந்தார். அவர் தங்குவதற்கு சன்னியாசி ஒருவர் இடம் அளித்தார்.இடைப்பட்ட இந்தக் காலத்தில் ஆசிரமத்தின் பெரும் பணம் வெவ்வேறு நாடுகளில் செலவாகி இருந்தது. புதிதாக நிதி திரட்டக்கூடிய நிலையிலும் நிர்வாகிகள் இல்லை.

பகவான் திட்டமிட்டிருந்த புதிய திட்டங்கள் எல்லாமே தொடங்கிய நிலையிலேயே கைவிடப்பட்டன.ஓஷோவோடு மதரீதியாக பல்வேறு கருத்து மாறுபாடுகள் கொண்டிருந்தாலும், இந்திய சன்னியாசிகள் தங்கள் மத்தியில் அவரை ஒரு சூப்பர் ஸ்டாராகவே மதித்தனர். எனவே, அவர் பக்கம் நின்றனர்.

மும்பையில் மக்களை மீண்டும் சந்தித்து உரையாற்ற ஆரம்பித்தார் பகவான். நாளுக்கு நாள் அவரைக் காண கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. சாதி, மதங்களையெல்லாம் கடந்து முக்கியஸ்தர்கள் அவரை தரிசித்து வாழ்த்து பெறுவதை பாக்கியமாகக் கருதினார்கள்.கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றதால் சன்னியாசியின் சிறிய வீடு சந்திப்புகளுக்கு போதுமானதாக இல்லை.மும்பையில் வேறு பெரிய வீடு பார்க்கலாம் என்றால், அதற்குரிய நிதிவசதி இல்லை.

ஆம், கிட்டத்தட்ட நூறு ரோல்ஸ்ராய்ஸ் கார் வைத்திருந்த உலகின் மிகப்பெரிய பணக்கார சாமியாருக்கும் அப்போது கொஞ்சம் பணநெருக்கடி இருக்கத்தான் செய்தது. போதாக்குறைக்கு ஓஷோவுக்கு இடம் அளிக்க முன்வருபவர்களை காவல்துறை வேறு அச்சுறுத்திக் கொண்டிருந்தது.

ஓஷோ, இந்தியாவுக்கே திரும்பிவிட்டதால் அமெரிக்கா கொஞ்சம் நிம்மதி அடைந்தது. என்றாலும், இந்தியாவிலும் அவருக்கு நெருக்கடி கொடுக்கும் வேலைகளை அவ்வப்போது மறைமுகமாகச் செய்து வந்தது.

பகவானின் சாம்ராஜ்யம் எங்கு ஆரம்பித்ததோ, அதே பூனா நகருக்கே மீண்டும் சென்று ஆரம்பத்தில் இருந்து அனைத்தையும் தொடங்கலாம் என்று ஆலோசகர்கள் கூறினர்.காவல்துறையின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஒரு சனிக்கிழமை இரவு சப்தமில்லாமல் பூனாவுக்குக் கிளம்பினார் பகவான். 1987, ஜனவரி 4-ஆம் நாள் அதிகாலையில் பூனாவில் இருந்தார்.

இது அறியாத காவல்துறை மும்பையில் இருந்த சன்னியாசியின் வீட்டுக்கு வழக்கம்போல உளவு பார்க்கப் போனது. அங்கே பகவான் இல்லையென்றதுமே பதற்றப்பட்டு விட்டனர். அவர் பூனா சென்று சேர்ந்த சேதி வெகுதாமதமாகவே காவல்துறைக்குக் கிடைத்தது.
அவரை மும்பையிலேயே ‘லாக்’ செய்து வைத்துவிட வேண்டுமென்ற மேலிட உத்தரவை நிறைவேற்ற முடியாததால் மும்பை கமிஷனருக்கு ஏகத்துக்கும் ‘டோஸ்’ விழுந்தது.

இதனால் கடுப்பாகிப் போன கமிஷனர், பூனாவுக்கு ஒரு காவல்படையை அனுப்பி பகவானைக் கைது செய்யச் சொன்னார். கையில் எந்த வாரண்ட்டும் இல்லாமல் போய் பூனாவில் அந்தப் படை மூக்குடைபட்டுக் கொண்டு திரும்பியது.பூனாவுக்கு வந்தபிறகே பகவான், மீண்டும் பழைய உற்சாகத்தோடு செயல்படத் தொடங்கினார்.

புதியதாக ஒரு புத்தா ஹாலை நிர்மாணித்தார். அங்கு அனைவரும் அமர்ந்து அமைதியாக தியானம் செய்ய போதுமான வசதிகளை ஏற்படுத்தினார்.பகவான், மீண்டும் தன்னுடைய கோட்டையில் குடியமர்ந்துவிட்டார் என்பதை அறிந்து வெளிநாட்டு பக்தர்கள் ஏராளமாக படையெடுக்கத் தொடங்கினர்.

ரஜனீஷைக் காண வரும் பக்தர்களுக்கு விசா மறுப்பது இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் வாடிக்கையாக இருந்தது. பக்தர்கள், பல்வேறு காரணங்களைச் சொல்லி விசா வாங்கி, இந்தியாவுக்குள் நுழைந்ததுமே பகவான் இருக்கும் பூனாவுக்கு படையெடுத்தார்கள்.

மீண்டும் ஓஷோவின் இயக்கம் பழைய மாதிரியாக களைகட்டத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக நிதிவரத்தும் அதிகரித்தது. பழைய அனுபவங்களில் சூடுபட்டிருந்த பகவான், இம்முறை மிகவும் கவனமாக பொறுப்பாளர்களை நியமித்து நிர்வாகத்தை திறம்பட நடத்தத் தொடங்கினார்.
‘தியானத்தின் மூலமாக மட்டுமே ஒரு மனிதன், தான் யார் என்பதை உணரமுடியும்’ என்பதில் உறுதியாக இருந்த ஓஷோ, ரஜனீஷ் உலக தியானப் பல்கலைக் கழகத்தை பல்வேறு பிரிவுகள் அமைத்து, பத்துவிதமான பயிற்சிக்கூடங்களோடு செயல்பட வைத்தார்!

(தரிசனம் தருவார்)  

யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்