தலபுராணம்-மெட்ராஸ் பத்திரிகைகள்



இந்தியாவின் முதல் பத்திரிகை ‘பெங்கால் கெசட்’. 1780ம் வருடம் ஜனவரி 29ம் தேதி இது வாரப் பத்திரிகையாக வெளிவந்தது. இதை ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவர் கல்கத்தாவிலிருந்து கொண்டு வந்தார்.ஆசியாவிலும் இதுவே அச்சில் வெளியான முதல் பத்திரிகை. இதனையடுத்து ‘இந்தியன் ெகசட்’, ‘கல்கத்தா கெசட்’, ‘பெங்கால் ஜர்னல்’, ‘ஓரியண்டல் மேகசின்’ ஆகியவை வெளியாகின.

மெட்ராஸில் இருந்து 1785ம் வருடம் அக்டோபர் மாதம் ‘மெட்ராஸ் கூரியர்’ வெளிவந்தது. இதுவே மெட்ராஸ் மாகாணத்திலிருந்து வந்த முதல் பத்திரிகை; இந்தியாவிலிருந்து வெளியான ஆறாவது பத்திரிகை.இதுவும் வாரப் பத்திரிகையாகவே வெளியாகியது. இதை அரசின் அச்சுப் பணியில் இருந்த ரிச்சர்ட் ஜான்ஸ்டன் என்பவர் நிறுவினார்.  

அரசின் அதிகாரபூர்வ அங்கீகாரம் பெற்ற இந்தப் பத்திரிகையில் அரசின் அறிவிப்புகள் எல்லாம் வெளியிடப்பட்டன. அந்நேரம், விளம்பரங்கள் அரசு செயலர் அல்லது அதிகாரிகள் கையொப்பமிட்டே வெளியிட வேண்டுமென அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

ரிச்சர்ட் ஜான்ஸ்டன் இந்தப் பத்திரிகைக்காக தரமான அச்சு உள்ளிட்ட பொருட்களை கிழக்கிந்தியக் கம்பெனியின் கப்பலில் ெகாண்டு வர அரசிடம் வேண்டி கடிதம் அளித்தார். அதற்கு அரசு ஒப்புதல் தந்தது.

இப்படியாக மெட்ராஸ் கூரியரின் பணிகள் சிறப்பாக நடந்தன. இதன் ஆசிரியராக ஹக் பாய்டு என்பவர் இருந்தார். இவர், 1791ம் வருடம் இதிலிருந்து வெளியேறி ‘ஹிர்கார்ரா’ என்ற பத்திரிகையைத் தொடங்கினார். ஆனால், இது ஆரம்பித்த ஒரே வருடத்தில் பாய்டு இறந்ததும் மறைந்து போனது. 1795ம் வருடம் வரை மெட்ராஸ் கூரியருக்கு எந்தப் போட்டியும் இருக்கவில்லை. ஆனால், இதே வருடம் ‘ெமட்ராஸ் கெசட்’ என்ற பத்திரிகையை ராபர்ட் வில்லியம்ஸ் என்பவர் ஆரம்பித்தார்.

இதேநேரம், ‘கவர்ன்மென்ட் ெகசட்’ பத்திரிகையும் தொடங்கப்பட்டது. வானியலாளர் ஜான் கோல்டிங்ஹாம் அதன் ஆசிரியராக இருந்து நடத்தினார்.  
இந்த ‘கவர்ன்மென்ட் கெசட்’ பத்திரிகை 1800ம் வருடம் எழும்பூர் ஆண்கள் அனாதை இல்லத்துடன் இணைந்திருந்த அரசு அச்சகத்தில் இருந்து அச்சடிக்கப்பட்டது.  

18ம் நூற்றாண்டின் இறுதியில் மெட்ராஸ் கூரியர், மெட்ராஸ் கெசட், கவர்ன்மென்ட் கெசட் என்ற இந்த மூன்று பத்திரிகைகள்தான் மெட்ராஸில் கோலோச்சின. இவை அரசின் துணையுடன் நடத்தப்பட்டன.‘‘இந்த மூன்று வாரப் பத்திரிகைகளும் மக்களின் சமூக வாழ்க்கை சார்ந்த உள்ளூர் செய்திகளை அளித்தன. தவிர, ஐரோப்பிய பாராளுமன்ற நடவடிக்கைகளை ஐரோப்பிய பத்திரிகைகளிலிருந்து திரட்டிக் கொடுத்தன.

ஆனால், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மழைக்காலங்களில் கப்பல் வருவதில் காலதாமதம் ஏற்பட்டதால் ஐரோப்பிய பத்திரிகைகள் வருவதில்லை. இதனால், அந்தச் செய்திகள் சில காலம் விடுபட்டன’’ என 1939ம் வருடம் வெளியான, ‘The Madras Tercentenary Commemoration Volume’ நூலின் ‘மெட்ராஸ் இதழியல் வரலாறு’ என்ற கட்டுரையில் ‘தி ஹிந்து’ பத்திரிகையின் உதவி ஆசிரியரான கே.பி.விஸ்வநாத ஐயர் குறிப்பிடுகிறார்  
இதற்கிடையே 1795ம் வருடம் முதன் முதலில் ‘இந்தியா ெஹரால்டு’ என்ற பத்திரிகை அரசின் அங்கீகாரம் இல்லாமல் தொடங்கப்பட்டது. இதனால், கோபம் கொண்ட அரசு இதை ஆரம்பித்த நபரை கைது செய்து இங்கிலாந்திற்கு நாடு கடத்த இருந்தது. ஆனால், அந்த நபர் கப்பலில் இருந்து தப்பினார்.

அன்று அரசின் அங்கீகாரம் இல்லாமல் பத்திரிகைகள் செயல்பட முடியாது. அவை தணிக்கை செய்யப்பட்டே வெளியாகின. மட்டுமல்ல; பத்திரிகையாளர்களின் தலைமேல் எப்போதும் கத்தி தொங்கும் நிலைதான்.பத்திரிகையாளர்களைத் தண்டிக்கும் வகையில் அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். இந்நிலை சார்லஸ் மெட்காஃப் சட்டம் வரும் வரை நீடித்தது. இந்தச் சட்டம் வந்தபிறகே இந்தியர்கள் அச்சகத்தைத் தொடங்கினர்.
1827ம் வருடம் மெட்ராஸ் கூரியர் மூடப்பட்டது. தற்போது, கடந்த 2016ல் இந்தப் பத்திரிகையின் இன்னொரு இன்னிங்ஸாக அதே பெயரில் இணைய இதழாக வெளிவருவது குறிப்பிடத்தக்கது.  

இதனையடுத்து, 1831ம் வருடம் ‘தமிழ் பத்திரிகை’ என்ற பெயரில் முதல் தமிழ் இதழ் மெட்ராஸில் தோன்றியது. மாத இதழாக வெளிவந்த இந்தப் பத்திரிகை கிறிஸ்துவ மத பிரச்சாரத்திற்காகவே தொடங்கப்பட்டது. இதுவே, தமிழ்ப் பத்திரிகையின் ெதாடக்கம்.

‘‘இதன்பிறகு, இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து 1856ல் ‘தினவர்த்தமானி’ என்ற பெயரில் தமிழில் முதல்தடவையாக வார இதழ் ஒன்று வெளிவந்தது. இதை ரெவரண்டு பெர்சிவல் பாதிரியார் தொடங்கினார். இந்த வார இதழைத் தமிழில் கொண்டு வருவதற்கு வசதியாக, பெர்சிவல் ஓர் ஆங்கில-தமிழ் அகராதியையும் உருவாக்கினார். இவ்வகையில் ஏற்பட்ட முதல் முயற்சி இதுவே’’ என ‘தமிழ் இதழ்கள்’ நூலில் குறிப்பிடுகிறார்
எழுத்தாளர் சோமலெ.

பிறகு, 1836ம் வருடம் ‘தி ஸ்பெக்டேட்டர்’ என்ற ஆங்கில இதழ் ஆக்டர்லோனி என்பவரால் தொடங்கப்பட்டது. பின்னர் இது சுப்புமுதலி மற்றும் சி.எம்.பெரேரா ஆகியோரால் பிரசுரிக்கப்பட்டது. வார இதழாகத் தொடங்கப்பட்ட இந்தப் பத்திரிகை பிறகு வாரம் மும்முறையாகி, 1850ம் வருடம் நாளிதழானது. இதுவே, மெட்ராஸில் இருந்து வெளியான முதல் ஆங்கில நாளிதழ்.

பின்னர், ‘தி ஸ்பெக்டேட்டர்’ நாளிதழ் 1859ம் வருடம் ‘தி மெட்ராஸ் டைம்ஸ்’ பத்திரிகையுடன் இணைந்தது. ‘‘இந்த ‘மெட்ராஸ் டைம்ஸ்’ பத்திரிகை 1835-36ல் மாதம் இருமுறை வெளிவந்தது’’ என ‘சென்னை மறுகண்டுபிடிப்பு’ நூலில் வரலாற்று ஆய்வாளர் எஸ்.முத்தையா குறிப்பிடுகிறார்.
‘‘இதை ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஜஸ்டினியன் கான்ட்ஸ் என்பவர் நடத்தி வந்தார். இவர், கான்ட்ஸ் அண்ட் சன்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தார். இந்நிறுவனம் பிராட்வேயில் ஒரு பிரின்டிங் பிரஸ் வைத்திருந்தது. புத்தக விற்பனையில் ஹிக்கின்பாதம்ஸுக்குப் போட்டியாக இந்நிறுவனம் விளங்கியது’’ என்கிறார் எஸ்.முத்தையா மேலும்.

இந்தப் பிரின்டிங் பிரஸ்ஸில் இருந்தே ‘தி மெட்ராஸ் டைம்ஸ்’ அச்சானது.  இதன் ஆசிரியர்களாக சார்லஸ் லாசனும் ஹென்றி கார்னிஷும் இருந்தனர். கான்ட்ஸ் இறந்ததும் அவருக்குப் பிறகு அந்த இடத்திற்கு வந்தவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சச்சரவு ஏற்பட்டது.இதனால், சார்லஸ் லாசனும், ஹென்றி கார்னிஷும் மெட்ராஸ் டைம்ஸில் இருந்து வெளியேறி 1868ம் வருடம் ‘தி மெட்ராஸ் மெயில்’ என்ற மாலை நாளிதழைத் தொடங்கினர். இதுவே, இந்தியாவில் வெளிவந்த முதல் மாலை நாளிதழ்.  

முதலில் மெட்ராஸ் மெயிலின் அலுவலகம் இரண்டாவது பீச் லைனில் இருந்து செயல்பட்டது. சில காலத்திற்குப் பிறகு முதல் பீச் ைலனுக்கு நகர்ந்தது.
அப்போது மெட்ராஸ் டைம்ஸுக்கும், மெட்ராஸ் மெயிலுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ‘‘1870களிலும், 1880களிலும் வில்லியம் டிக்பை பதிப்பாளராக இருந்தபோது மெட்ராஸ் டைம்ஸ் இந்திய வாசகர்களுக்கு ஆதரவாக இருந்தது.

 மெட்ராஸ் மெயில் அதிகார வர்க்கத்தைப் பிரதிபலித்தது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எதிர்பார்த்தபடி இந்திய மூலதனம் கிடைத்தவுடன் 1910ல் மெட்ராஸ் டைம்ஸ் மவுன்ட் ரோட்டுக்கு நகர்ந்தது. 1911ல் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ஆரம்பித்தபின் இரண்டு வருடங்களுக்குப் பிறகு, மெட்ராஸ் டைம்ஸ் பிரின்டிங் அண்ட் பப்ளிஷிங் கம்பெனி மூலம் அது முழுவதும் இந்தியர்களின் உடைமையானது. ஜனவரி 1, 1921ல் ஸ்பென்சர்ஸின் ஜான் ஆக்‌ஷாட் ராபின்சனால் மெட்ராஸ் டைம்ஸ் எடுத்துக் கொள்ளப்பட்டு கம்பெனியின் பெயர் அசோஷியேட்டட் பிரின்டர்ஸ் என்று மாற்றமானது’’ என ‘சென்னை மறுகண்டுபிடிப்பு’ நூலில் குறிப்பிடுகிறார் எஸ்.முத்தையா.

இதற்கிைடயே மெட்ராஸ் மெயில் பத்திரிகையும் மவுன்ட்ரோட்டுக்கு நகர்ந்தது. இன்றும் அதன் பில்டிங்கை அண்ணாசாலையில் ‘தி ஹிந்து’ பத்திரிகை அலுவலகம் அருகே பார்க்கலாம். தொடர்ந்து, மெட்ராஸ் டைம்ஸை வாங்கிய அதே ராபின்சன் 1921ல் மெட்ராஸ் மெயில் பத்திரிகையையும், ஹிக்கின்பாதம்ஸையும் வாங்கி அசோஷியேட்டட் பப்ளிஷர்ஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கினார். இதனால், மெட்ராஸ் மெயிலும், மெட்ராஸ் டைம்ஸும் இணைந்தன.  மெட்ராஸ் மெயில் என்ற பெயரில் பத்திரிகை வெளியானது.

1928ல் மெட்ராஸ் மெயிலுக்கு ஆசிரியராக ஆர்தர் ஹேல்ஸ் என்பவர் வந்தார். இவர் மெட்ராஸ் என்பதை அதன் தலைப்பிலிருந்து நீக்கிவிட்டு ‘தி மெயில்’ என்று மாற்றினார். காரணம், அது தேசிய அளவில் இந்தியப் பத்திரிகையாக மிளிர வேண்டும் என நினைத்தார். இந்நிலையில், 1945ல் அமால்கமேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அனந்தராமகிருஷ்ணன் அசோஷியேட்டட் பப்ளிஷர்ஸை வாங்கினார். இதனால், தி மெயில் அவரிடம் வந்து சேர்ந்தது.

1981ல் ‘தி மெயில்’ மூடப்பட்டுவிட்டது. ஆனால், அதன் பெயரில் இன்று ஹிக்கின்பாதம்ஸ் புத்தக விற்பனை நிலையம் மாதாந்திர நியூஸ்லெட்டரை கொண்டு வருகிறது.இதற்கிடையே 1877ம் வருடம் ‘மெட்ராஸ் ஸ்டாண்டர்ட்’ தொடங்கப்பட்டது. இதற்கடுத்த வருடம் பள்ளி ஆசிரியரான ஜி.சுப்பிரமணிய ஐயரும், அவருடன் பணியாற்றிய எம்.வீரராகவாச்சாரியாரும், இவர்களின் நான்கு சட்டக் கல்வி நண்பர்களான டி.டி.ரங்காச்சாரியார், பி.வி.ரங்காச்சாரியார், டி.கேசவராவ் பான்ட், என்.சுப்பாராவ் பந்தலு ஆகியோரும் சேர்ந்து ‘தி ஹிந்து’ பத்திரிகையைத் ெதாடங்கினர்.

இவர்கள் ஆறு பேரும் திருவல்லிக்கேணி இலக்கிய சங்கத்தைச் சேர்ந்தவர்கள். ‘The Triplicane Six’ என வர்ணிக்கப்பட்டனர். அப்போது மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாக சர் டி.முத்துசாமி ஐயர் நியமிக்கப்பட்டார். இவரே மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி. இதைக் கண்டித்து ஆங்கிலேய ஆதரவு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

இதனால், வெகுண்டு எழுந்த மேற்சொன்ன அந்த ஆறு இளைஞர்களும் இந்தியர்களின் கருத்தைத் தெரிவிக்க ஒரு பத்திரிகை வேண்டுமென நினைத்தனர். அப்படியாக, தி ஹிந்துவை வாரப் பத்திரிகையாகத் தொடங்கினர். ‘‘பத்திரிகை ஆரம்பிக்கும் போது எங்களுக்கு எந்த ஐடியாவும் இல்லை. அதை எப்படி நடத்துவது, எவ்வளவு செலவாகும் என்பது பற்றியெல்லாம் எதுவும் தெரியாது.

பணம் கூட கையில் இல்லை. ஒண்ணே முக்கால் ரூபாய் கடன் வாங்கி 80 காப்பிகள் அச்சிட்டோம். அதில், முத்துசாமி ஐயரின் நியமனம் சரியென்றும், மற்ற ஆங்கிலப் பத்திரிகைகளின் தலையங்கத்தைக் கண்டித்தும் எழுதினோம்’’ என ஜி.சுப்பிரமணிய ஐயர் சொன்னதாக, ‘A Hundred Years of The Hindu’ நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே ஜி.சுப்பிரமணிய ஐயர்தான் பின்னர் சுதேசமித்திரன் இதழைத் ெதாடங்கினார். எதற்காக? அடுத்த வாரம் பார்ப்போம்.                              

பேராச்சி கண்ணன்

ராஜா