குஷ்பூ பதில்கள்



இதுவரை நடிகைகள் யாரும் ஏன் தனிக்கட்சி தொடங்கவில்லை?

- அ.யாழினி பர்வதம், சென்னை - 78.
தெரியலையே யாழினி!

டிவி சீரியல்ல ஏன் ஆண்கள் டம்மி பீஸாவே இருக்காங்க?
- ரேவதி சரவணன், சாத்தூர்.

அப்படியில்ல! சீரியல்ஸை பெண்கள்தான் அதிகம் பார்க்கறாங்க. அதுதான் அவங்களுக்கு பொழுதுபோக்கே. அதனால பெண்களை மையப்படுத்தறோம். அதுக்காக ஆண்களை டம்மி ஆக்கறோம்னு அர்த்தமில்ல. ஆண்கள் இருப்பதால்தான் பெண்களால வில்லி, ஹீரோயின்னு விதவிதமான கேரக்டர்ஸ் பண்ண முடியுது!

தமிழகத்தில் காங்கிரஸ் மீண்டும் தழைக்க தங்களது ஆலோசனைகள் என்ன?
- உ.சங்கரசுப்பு, தக்கலை.

ஆலோசனை சொல்ற அளவுக்கு இன்னும் நான் வளரலை. ஆனா, ஒண்ணு. கண்டிப்பாக காங்கிரஸ் வரும். ஏதோ சூழல்களால் கீழே விழுந்தாலும் மறுபடியும் மேலே எழும். கடந்த ஐம்பதாண்டுகளா இதற்கான முயற்சியை முழுவீச்சுல நாங்க எடுக்கலை. இதை சொல்ல எந்த தயக்கமும் இல்லை. இப்ப காங்கிரஸ் வலுவா இருக்கு. கடந்த தேர்தலுக்குப் பிறகு இங்கிருந்து எட்டு பேரை பாராளுமன்றத்துக்கு மக்கள் அனுப்பியிருக்காங்க. அடுத்த தேர்தலில் இன்னும் சிறப்படையும். நல்ல பொசிஷன்ல இருப்போம்.

கோவையின் மருமகள் என்ற முறையில் குஷ்பூவுக்கு கோவையை பிடிக்குமா?
- மேட்டுப்பாளையம் மனோகர், கோவை - 14.

நிறையா! கோவை மருமகள்னு சொல்லிக்கவே பெருமையா இருக்கு. என் ரெண்டாவது வீடு அங்கதான். கோவைல எங்களுக்கு வீடு இருக்கு. அங்கே போறப்ப எல்லாம் அவ்வளவு ஆனந்தமா இருக்கும். தீபாவளியை கலர்ஃபுல்லா கொண்டாடுவோம். கொங்கு தமிழ் மேல க்ரேஸே உண்டு. சென்னைல என்னதான் தமிழ் பேசினாலும் கோவை மண்ணுல கேட்கற தமிழ் இருக்கே... அது டிவைன்!‘நாட்டாமை’ல நானும் கோவைத் தமிழ் பேசி நடிச்சிருக்கேன். ஒண்ணு தெரியுமா... இதுவரை என் படங்களோட ஷூட்டிங் கோவைல நடந்ததில்ல!

எப்படி இருக்கார் தயாரிப்பாளர் குஷ்பூ..?
- அன்வர்ராஜா, வேலூர்.

சினிமா, சின்னத்திரைனு எல்லாத்தையும் சேர்த்து பார்க்கறதால ரொம்பவும் பிசியா இருக்கேன். புரொடியூசரான புதுசுல எதுவும் தெரியாததால வெறும் கையெழுத்து மட்டும் போட்டுட்டு இருந்தேன்.அப்பதான் எங்க வீட்டுக்காரர், ‘பிசினஸிலும் இன்வால்வ்மென்ட்டை காட்டு. பணம் எங்க போகுது... எவ்வளவு செலவாகுது... எவ்வளவு மிச்சமாகுதுனு தெரிஞ்சுக்க’னு சொல்லி சின்னக் குழந்தைக்கு பயிற்சி கொடுக்கற மாதிரி சொல்லிக் கொடுத்தார். சின்னத்திரைல சீரியல் தயாரிக்க ஆரம்பிச்சதும் டோட்டலா ஹேண்டில் பண்றேன். இப்ப ஓரளவு
சூட்சுமம் பிடிபட்டிருக்குனு நம்பறேன்!

கலையுலகிலும், அரசியல் உலகிலும் நீங்கள் கற்றதும், பெற்றதும் என்ன?
- எம்.வளன் அரசு,
அம்பாசமுத்திரம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

ஸ்கூல், காலேஜ்ல நாம படிச்சு முடிச்சிருந்தாலும் வாழ்க்கை கத்துக்கொடுக்க
றதுதான் உண்மையான பாடம். கலையுலகப் பயணத்தில் நடிப்பில் இருந்து தயாரிப்பு வரை கத்துக்கிட்டேன். கத்துக்கிட்டிருக்கேன். அரசியல்ல நான் இன்னும் வளரவே இல்லை. அப்புறம்தானே, அங்க என்ன கத்துக்கிட்டேன்னே சொல்ல முடியும்!

குஷ்பூ என்பதன் அர்த்தம் என்ன?
- வே.முருகன், சென்னை.
நறுமணம்!

உங்களைக் கவர்ந்த ஷூட்டிங் ஸ்பாட் எது?
- கே.வித்யா, விருதுநகர்.

அப்ப எல்லாம் ஃபாரீன் ஷூட்டே இருக்காது. ஊட்டி, கொடைக்கானல்ல ஸாங் எடுக்கறதுனா கூட ‘பட்ஜெட் அதிகமாகிடுமோ’னு யோசிப்பாங்க!
பெரும்பாலும் ஊட்டி, பொள்ளாச்சிலதான் என் படங்களின் ஷூட்டிங் நடந்திருக்கு. அதனாலயே அந்த ரெண்டு ஊரும் ரொம்பப் பிடிக்கும். குறிப்பா வீடு. அதனாலயே ஊட்டில ஒரு வீடு வாங்கியிருக்கோம்!  

இன்றைய புதுமுகங்களுக்கு நீங்கள் சொல்லும் அட்வைஸ்..?
- கவிதா வேலு, திண்டுக்கல் - 2;
கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

இப்ப திரையுலகிற்கு வர்ற எல்லாருமே திறமைசாலிகள். ரொம்ப தெளிவா இருக்காங்க. அவங்களுக்கு எந்த அட்வைஸும் நான் சொல்லத் தேவையில்லை. அவங்களும் அட்வைஸ் கேட்கும் நிலையில் இல்ல. என்ன செய்யணும்... என்ன செய்யக் கூடாதுனு நல்லாவே தெரிஞ்சு வைச்சிருக்காங்க. அட்வைஸ் செஞ்சு அவங்களைக் குழப்ப விரும்பலை!

சுந்தர்.சி.யைக் காதலித்து மணந்த ரகசியத்தை சொல்லுங்கள்..?
- பி.காயத்ரி, சென்னை.

அஞ்சு வருஷங்கள் காதலிச்ச பிறகுதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அவர்கிட்ட நல்ல பழக்கங்கள் நிறைய இருக்கு. அவருக்கு பொய் சொல்லத் தெரியாது. ‘மனைவினா அவ கணவன் பேச்சைக் கேட்டுத்தான் நடக்கணும்’னு எப்பவும் அவர் நினைச்சதில்ல.

அவரை சந்திச்ச முதல் நாள்ல இருந்து இப்ப வரை என்னை அவ்வளவு கன்ஃபர்டபுளா ஃபீல் பண்ண வைக்கறார். சீரியல் தயாரிக்கணுமா? தொடர்ந்து நடிக்கணுமா? அரசியலுக்கு வரணுமா? இப்படி எல்லா கேள்விகளையும் அவருடன் மனசு விட்டு பேசி டிஸ்கஸ் பண்ணிட்டுதான் முடிவு எடுத்திருக்கேன். யோசனைதான் சொல்வாரே தவிர ‘இந்த முடிவை எடு’னு எப்பவும் அவர் சொன்னதில்லை.

‘இது இது இப்படி இருக்கும்... யோசிச்சு நீயே முடிவு பண்ணிக்கோ’னு சொல்லிடுவார். குடும்பத்துடன் நேரம் செலவழிக்கணும்னு விரும்புவார். ஆறு மாசத்துக்கு ஒருமுறை, இல்லைனா வருஷத்துக்கு ஒருமுறை ஃப்ரெண்ட்ஸுடன் வெளியூர் டூர் போவார். மத்த நேரம் எல்லாம் குடும்பம்தான் அவர் உலகம்!                                                         

ஆ.வின்சென்ட் பால்