தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்பு ஏன்?



இந்திய மருத்துவத்துறையில் மிகப் பெரிய சீரமைப்புகளை உருவாக்கப் போகும் ‘தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2019’க்கு நாடு முழுதும் உள்ள மருத்துவ சமூகம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகிறது.இது என்ன புது மசோதா? நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகும் இதற்கு இத்தனை எதிர்ப்புகள் ஏன்?

தேசிய மருத்துவ ஆணைய மசோதா 2019:

இந்த மசோதா அதிரடியாக பழைய ‘மருத்துவ கவுன்சில் சட்டம் 1956’ஐ நீக்கச் சொல்கிறது. பழைய மருத்துவ கவுன்சிலைக் கலைத்துவிட்டு அதற்கு பதிலாக இந்த மசோதாவின்படி தேசிய மருத்துவ ஆணையமே முந்தைய கவுன்சிலின் கடமைகளைச் செய்யும்.
இனி, மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவது, அவற்றை நிர்மாணிப்பது, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை நடத்துவது, படிப்பு முடிந்த பின் இறுதிக்கட்ட எக்ஸிட் தேர்வை நடத்துவது, மருத்துவப் படிப்புக்கான கட்டணங்களை நிர்ணயிப்பது ஆகியவை இதன் பணிகளில் முக்கியமானவை.

கடந்த 2010ம் ஆண்டு, இதன் தலைவர் கீதன் தேசாய் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சிபிஐ இவரை விசாரித்தது. இப்படியான ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்தே இந்த அமைப்பை சீரமைப்பதற்காக இந்த நடவடிக்கை என்று சொல்லும் அரசு, தரமான போதிய மருத்துவக் கல்வியை வழங்குவதன் மூலம் தரமான மருத்துவர்களை நாடு முழுதும் உருவாக்குவதே லட்சியம் என்று சொல்கிறது. ஆனால், இதில் உள்ள பல உட்பிரிவுகள் மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் புருவங்களை உயர்த்தச் செய்துள்ளன.

பிரிவு 32ன் படி மருத்துவக் கல்வியோடு தொடர்பற்றவர்களில் மூன்றரை லட்சம் பேர் நவீன மருத்துவ சேவை செய்யலாம் என்று சொல்கிறது. மருத்துவம் அல்லாதவர்கள் நவீன மருத்துவம் செய்வது என்றால் என்ன? ஏற்கெனவே போலி மருத்துவர்கள் பெருகிக் கிடக்கும் நாட்டில் அவர்களுக்கு சட்டரீதியான அந்தஸ்து தருவதா அரசின் வேலை என்ற கேள்வி எழுகிறது.

சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மாற்று மருத்துவங்களில் பட்டம் பெற்ற மருத்துவர்கள் நவீன அலோபதி மருந்துகளைப் பரிந்துரைக்கவும் அலோபதி முறையில் பயிற்சி அளிக்கவும் இரு மருத்துவமுறைகளுக்கும் இடையிலான பாலப் படிப்புகள் (Bridge course) உருவாக்கப்பட வேண்டும் என்ற திட்டம் இருந்தது.

ஆனால், இந்த வரைவுக்கு மருத்துவர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் எழவே அதில் அரசு மாற்றம் செய்துள்ளது.
அந்த மாற்றம் பிரச்னையை அதிகரித்திருக்கிறது. அதாவது, இந்த மாற்று மருத்துவர்கள் ஊரகப் பகுதிகளில் பணியாற்ற சட்ட அனுமதி இப்போது வழங்கப்பட்டுள்ளது. இவர்களை சமூக மருத்துவர் என்பார்கள்.

இந்த சமூக மருத்துவர் சுயமாகவே மருந்துகளைப் பரிந்துரைக்கலாம். ஆனால், தொடக்க நிலை மற்றும் தடுப்பு மருத்துவங்களில் மட்டுமே ஈடுபட வேண்டும். ஒருவேளை அடுத்த நிலை தீவிர மருத்துவம் என்றால் ஒரு முறையான் மருத்துவரின் மேற்பார்வையில் சிகிச்சை தரலாம் என்கிறது புதிய சட்டம்.

‘சமூக ஆரோக்கிய வழங்குநர் அல்லது சமூக மருத்துவர் என்ற சொல்லாட்சியின் மூலம் யார் ஒருவரும் மருத்துவ சிகிச்சை தருவதற்கான வாய்ப்பை புதிய சட்டம் வழங்குகிறது’ என்று இந்திய மருத்துவக் கழகம் குற்றம்சாட்டுகிறது. மேலும் ‘மருத்துவப் பின்புலம் எதுவுமே இல்லாத ஒருவர் இன்னொருவருக்கு சிகிச்சை செய்யலாம். இது மட்டுமல்ல, இப்படியான மற்ற முரண்பாடான சட்டப் பிரிவுகளை எல்லாம் எங்களால் ஏற்க முடியாது’ என்றும் கறாராகச் சொல்கிறது மருத்துவ சமூகம்.

நெக்ஸ்ட் (NEXT) என்னும் அடுத்த ஆப்பு:

National Exit Test (NEXT) - இதுதான் மருத்துவ மாணவர்களின் கடுப்பைக் கிளப்பியிருக்கும் புதிய வார்த்தை. சட்டப் பிரிவு 15(1) மருத்துவப் படிப்பில் இறுதி ஆண்டு பற்றிக் குறிப்பிடுகிறது. இதன்படி, எம்பிபிஎஸ் படித்து முடித்துவிட்டு எம்எஸ் போன்ற மேற்படிப்புக்குச் செல்லும் முன்பும் மருத்துவராகப் பயிற்சியில் இறங்கும் முன்பும் தேசிய தேர்வு ஒன்றை எழுத வேண்டும் என்று புதிய சட்டம் சொல்கிறது.

இதன் பெயர்தான் NEXT. இதில் தேர்ச்சி அடைந்தால்தான் மாநில பதிவேட்டிலும் தேசிய பதிவேட்டிலும் அந்த மருத்துவர் பெயர் இடம் பெறும். இது அயல்நாட்டு மாணவர்களுக்கான ஸ்க்ரீனிங் டெஸ்ட்டாகவும் இருக்கும்.மருத்துவ மாணவர் சமூகம் இந்த நெக்ஸ்ட் தேர்வு முறையை இதன் நடப்பு முறையில் முழுமையாக நிராகரிக்கிறது.

‘இறுதிப் படிப்பில் எடுக்கும் மெரிட்தான் மேற்படிப்பை தீர்மானிக்கும் விஷயமாய் இருக்க வேண்டும். இந்த நீட் - பிஜி முழுமையாக நீக்கப்பட வேண்டும்’ என்று ஆல் இந்தியா மெடிக்கல் சயின்ஸ் (AIIMS) அமைப்பு, ரெசிடெண்ட் டாக்டர் அமைப்பு, (RDA), ஃபெடரேஷன் ஆஃப் ரெசிடெண்ட் டாக்டர்ஸ் (FORDA) ஆகியவை போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

மருத்துவக் கல்விக் கட்டண மாற்றம்:

நாடு முழுதும் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களில் மருத்துவக் கல்விக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை ஐம்பது சதவீத இருக்கைகளுக்கு மாற்றி அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் இந்த மாற்றம் நிகழவுள்ளது.

‘அரசின் உதவி பெறாத மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டண மாற்றம் தேவையற்றது’ என்கிறது மருத்துவ சமூகம்.புதிய கல்விக்கொள்கைக்கு நாடு முழுதும் கடும் எதிர்ப்பலைகள் எழுந்துவரும் சூழலில் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சேவை ஆகியவற்றிலும் இந்த மோடி அரசு மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பது மக்களிடமும் சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர் சமூகத்திடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.                   

இளங்கோ கிருஷ்ணன்