உயர்சாதிப் பெண்கள் பரதத்தை எங்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டார்கள்!



‘‘ஒரு கலை எங்கிருந்து பிறந்தது... அதை தங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தது… என்பதை எல்லாம் மறந்துவிட்டு அக்கலைக்கு சொந்தக்காரர்களை புறந்தள்ளுவது எந்த விதத்தில் நியாயம்..?’’  அழுத்தம்திருத்தமாகக் கேட்கிறார் நிருத்தியா பிள்ளை. ‘‘நான் பிரபல நட்டுவனார், கலைமாமணி சுவாமிமலை ராஜரத்தினம்  பிள்ளை அவர்களின் முதல் பேத்தி. பிறந்த  என்னைக்  கொண்டாடி, நிருத்தியா என்று பெயர் வைத்தவர் தாத்தாதான்.

நிருத்தம் என்றால் நடனம். நிருத்தமும் அபிநயமும் சேர்ந்து வந்தால் நிருத்தியம்.  இசைவேளாளர்களுக்கும் சமஸ்கிருதத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால், நாட்டியம் சம்பந்தப்பட்ட எல்லாம் இன்று சமஸ்கிருதமாகி யிருக்கிறது. மறுமலர்ச்சி என்கிற பெயரில் சமஸ்கிருதத்தை முன்னிறுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து நிருத்தியா என்கிற பெயரும் பிரபலமானது. எனவே எனக்கும் அப்பெயரைச் சூட்டினார்கள். பொதுவாக எங்கள் வீட்டைப் போன்ற சாதாரண இல்லத்தைச் சேர்ந்தவர்கள் இப்படி பெயர் வைக்க மாட்டார்கள். அப்படியும் சூட்டியிருக்கிறார்கள் என்றால் அந்தளவுக்கு மக்கள் சமஸ்கிருதமயமாகி இருக்கிறார்கள் என்று பொருள்...’’ என்று சொல்லும் நிருத்தியா பிள்ளை, இன்று பிரபலமாக இருக்கும் பல பரதநாட்டியக் கலைஞர்கள் தன் தாத்தாவிடம் பாடம் கற்றவர்கள்தான் என்கிறார்:

‘‘மாளவிகா சருக்கை, பிரியதர்ஷினி கோவிந்த், நிதி சிதம்பரம், ரம்யா ஹரிசங்கர்… போன்ற எண்ணற்ற கலைஞர்களைத் தினமும் எங்கள் வீட்டில் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவர்கள் பரதம் கற்றுக்கொண்ட நேரங்களில் எங்கள் வீட்டுப் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.

ஆம்... என் அம்மா ஆடவில்லை. ஆனால், அவர் வயதுள்ள பெண்கள் எல்லோரும் பரதம் கற்றார்கள். அதுவும் என் அம்மாவின் தந்தையிடம்! நான் சிறுமியாக இருந்தபோதும் இதே நிலைதான். நான் வளர்ந்த காலத்தில் நிலைமை கொஞ்சம் மாறியிருந்தது என்றாலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமைகளும் சலுகைகளும் எனக்கு வழங்கப்படவில்லை!ஒருகாலத்தில் எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் பரதம் ஆடினர். எங்கள் சமூகத்தைச் சேர்ந்த யாரும் நட்சத்திர அந்தஸ்து பெறவில்லை.

ஆனால், உயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எப்போது பரதம் பயிலத் தொடங்கினார்களோ அப்போது நட்சத்திர அந்தஸ்து பெற்றார்கள்! இன்று ஏதோ வழி வழியாக அந்த சமூகத்தினர் பரதத்துக்காக தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்தது போல் பேசுகிறார்கள்!’’ நிதானமாகவும் அழுத்தமாகவும் சொல்லும் நிருத்தியா பிள்ளை, அன்று தேவதாசிகள் கோயில்களில் மட்டுமே பரதம் ஆடிய ‘டெம்பிள் டான்சர்ஸ்’ இல்லை என்கிறார்:

‘‘இப்படியொரு தவறான கருத்தைப் பரப்பி வருகிறார்கள். கோயில் வழிபாடுகள், மன்றங்கள், மன்னர்களின் சபைகள்... என எல்லா இடங்களிலும் நடனமாடி மக்களை மகிழ்வித்தனர். அங்கீகாரம் பெற்றும் வலம் வந்தனர். இவர்களால் பரதம் வளர்கிறது என்று தெரிந்ததால்தான் மன்னர்களும், மிராசுதார்களும், கோயில் அறங்காவலர்களும் இப்பெண்களுக்கு நில மானியம் வழங்கி பராமரித்தார்கள்.  

மறுமலர்ச்சி என்கிற விஷயமும், அதற்குப் பின்னால் நடந்த பிராமணிகல் அப்ராபிரியேஷன் என்கிற விஷயமும் இன்று வரை எங்கள் சமூகப் பெண்களைப் பாதித்து வருகிறது. வரலாறு தெரியாதவர்கள் தரக் குறைவாக எங்கள் பெண்களைக் குறித்து நினைக்கிறார்கள்.
இதனாலேயே இதிலிருந்து ‘எஸ்கேப்’ ஆக எங்கள் சமூகத்துப் பெண்கள் முயற்சிக்கிறார்கள். அதற்காகவே பரதத்துக்கும் தங்களுக்கும் தொடர்பே இல்லை என ஒதுங்குகிறார்கள். விளைவு, உயர் சாதிப் பெண்களின் கலையாக இன்று பரதம் மாறிவிட்டது!

கலை எல்லோருக்கும் பொதுவானது எனப் பலரும் சொல்கிறார்கள். அவர்களிடம் எல்லாம் நான் கேட்க விரும்புவது ஒன்றே ஒன்றுதான். மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்... நிஜமாகவே கலைகள் ஜனநாயகமாக மாறியிருக்கிறதா? பரதம் ஆடுபவர்களும், அரங்கேற்றம் செய்பவர்களும் பணக்காரர்களாகவே இன்று இருப்பது ஏன்..? பணமில்லாதவர்கள் திறமையானவர்களாக இருந்தாலும் அரங்கேற்றம், நிகழ்ச்சிகள் செய்ய முடியாமல் முடங்கிப் போவது ஏன்..?’’ என்று கேட்கும் நிருத்தியா பிள்ளை, முக்கியமான வினா ஒன்றையும் முன்வைக்கிறார்:

‘‘இன்று மிகப்பெரிய கலைஞர்களாக இந்த நாடு யாரையெல்லாம் முன்னிறுத்துகிறது என்று பாருங்கள்... அவர்கள் எல்லோருமே குறிப்பிட்ட உயர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். தப்பித் தவறி பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டியம் கற்றாலும் அவர்கள் ‘உயர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக’ கன்வர்ட் ஆனால்தான் பெயரும் புகழும் அவர்களுக்குக் கிடைக்கும்! என்னதான் என் சமூகம் சார்ந்த கலையாக இது இருந்தாலும், சபாக்களில் அந்த சமூகம் போல் எங்களுக்கு அங்கீகாரங்கள் கிடைப்பதில்லை. இதுதான் எதார்த்தம்!

பரதம் கற்றுக்கொள்ளும்போதே ஸ்லோகங்களும், நாட்டிய சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும் சொல்லித் தருகிறார்கள். உண்மையில் பரதம் என்பது இது அல்ல. இதற்கு தியரி கிடையாது. தட்டடவு, நாட்டடவு என்று அடவுகளிலிருந்துதான் நாங்கள் ஆரம்பிக்கிறோம்.சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்து, கடவுள் பக்தி என்று திணிக்கிறார்கள். இந்தக் கலை பொழுதுபோக்குக்காக ஆடப்பட்டது. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு தத்துவம் உண்டு. அதைச் சார்ந்தே அந்தந்த கோயில்களில் நடனமாடியபோது ஆடினார்கள். இதுதான் வரலாறு.

17ம் நூற்றாண்டுக்கு முன்னிருந்தே பரதநாட்டியம் என்கிற பெயர் இருந்திருக்கிறது. ருக்மணி தேவி, வி.ராகவன், இ.கிருஷ்ண அய்யர் ஆகிய மூவர்தான் பரதத்தை coin செய்ததாக இப்பொழுது சொல்கிறார்கள்; சொந்தம் கொண்டாடுகிறார்கள். ‘பா’வம் + ராகம் + தாளம் = பரதம் என்று முன்னிருத்துகிறார்கள். இது சரியில்லை.

வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் எப்படி தன் மொழியில் இங்கிருக்கும் கலைகளை ஆவணப்படுத்துவாரோ அப்படி சமஸ்கிருத மொழியில் பரத நாட்டியத்தை ஆவணப்படுத்துகிறார்கள். சதிர் என்பது தமிழ்ப் பெயராக இருந்திருக்கலாம். கீழ் சாதி மக்கள் ஆடினால் சதிர். மேல் சாதி மக்கள் ஆடினால் பரதநாட்டியமா..?   

என் பரம்பரையைக் குறிப்பிடுவது போல், என் உடல்வாகு, மனநிலைக்கு ஏற்றாற்போல் வடிவமைத்துக் கொள்கிறேன். நட்டுவனார் என்கிற பெயர் இசைவேளாளர் என்று மாறியதால் ஆண்களுக்கு நல்ல சோஷியல் பாசிபிலிட்டி கிடைத்துள்ளது. மேல்சமூகப்  பெண்களுக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் வாய்ப்பு அமைந்தது. ஆனால், பெண்களுக்கு..?

எல்லோருக்கும் கிடைக்க வேண்டிய விஷயத்தை சமூகத்தில் மேல்தட்டில் உள்ளவர்கள் மட்டுமே அனுபவிப்பது போல் இன்று பரதம் இருக்கிறது.     
வெளிநாடுகளில் (அகடமிக்) பரதநாட்டியம் ஒரு ‘அப்ராபிரியேட்டட் ஆர்ட் ஃபார்ம்’ என நிதர்சனமாகச் சொல்கிறார்கள்.
அதாவது, ஒரு சிறிய சமூகத்தின் கலையையோ, தொழிலையோ மேல் சமூகம் உள்வாங்கி அதற்கான பயிற்சிகளை எடுத்து தங்களுடையதாக மாற்றி, புது வரலாற்றை உருவாக்குகிறார்கள் எனக் குறிப்பிடுகிறார்கள்.    

1980வரை நட்டுவனார்களால் சொல்லிக் கொடுக்கப்பட்டது, 90களில் குறைய ஆரம்பித்தது. ஆடிக்கொண்டிருந்த பெண்களும் உயர் சாதிப் பெண்களின் வருகையால் புறக்கணிக்கப்பட்டனர். பாலசரஸ்வதி மட்டும் கடைசிவரை எவ்வளவோ போராட்டங்களை முன்னிருத்தி ஆடி வந்தார்.      
இப்போது இதை ஒரு டிகிரியாக எடுத்துப் படிக்க வேண்டுமென்றால் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும்! என் பரம்பரை வழிவந்த ஒரு கலைக்கு
அக்ரெடிடேஷன் வேண்டுமென்றால் ஏலியனான ஒரு விஷயத்தை நான் படிக்க வேண்டும்!   

2000 வருடம் பழமையான நாட்டிய சாஸ்திரத்தை, காஷ்மீரிலிருந்து எடுக்கிறார்கள். அதற்கு பரத முனி என்று கிரெடிட் கொடுக்கிறார்கள்! அவர்கள் எங்கள் கலையை தொழிலாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!கிரிமினல் குற்றம் என்று சொல்லப்பட்ட தேவதாசி நடனம், இன்று உயர்சாதி பெண்களால் ஆகமவிதிப்படி சிறப்புடன் ஆடப்படுகிறது! ஆனால், தேவதாசி என்கிற ஸ்டிக்மா எங்கள் வாழ்க்கையைத் தாக்குகிறது. எவ்வளவு அவலமான விஷயம் இது.  பத்து பதினைந்து வருடங்களாக நான் ஆடிக்கொண்டிருந்தாலும் எனக்கான அங்கீகாரம் அவர்கள் கையில்.

எல்லா இடங்களிலும் வரலாற்றை மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இதை எப்படி மறுமலர்ச்சி என்று சொல்லலாம்? எங்களுக்கும் மறுமலர்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் எங்கள் வீட்டில் கற்றுக் கொண்டார்களே தவிர, நாங்கள் அவர்கள் வீட்டிற்குச் சென்று இக்கலையைக் கற்றுக்கொள்ளவில்லை! அப்படியிருக்க இது எப்படி மறுமலர்ச்சியாகும்?    
 
அரசியல் அரங்கில் இந்த சீர்திருத்தம் நல்லது என்கிறார்கள். இதனால் பெண்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பது அவர்களது வாதம். இது நியாயமானதாக இருந்தாலும் பெண்கள் காப்பாற்றப்படுவதற்காக அந்தப் பெண்களையும், அவர்களது சமூகத்தையும் இழிவுபடுத்துவதில் முரண்படுகிறேன்.  

இ.கிருஷ்ண அய்யர், ‘மதிப்புடைய பெண்கள் ஆட ஆரம்பிக்க வேண்டும்’ என்கிறார். இங்கு அந்த மதிப்புடைய என்பது உயர் சமூகப் பெண்கள்... மரியாதை என்பது அவர்களுக்கு மட்டும்தான் இருப்பதாகக் குறிப்பிடுகிறது!’’ என்று சொல்லும் நிருத்தியா பிள்ளை, இப்படியெல்லாம், தான் பேசுவதால் குலக்கல்வியை, தான் ஆதரிப்பதாக அர்த்தமில்லை என்கிறார்:

‘‘கலை என்பது எல்லோருக்கும் சேரவேண்டிய விஷயம். அதற்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். என் கொள்ளுத் தாத்தா வழுவூர் ராமையாவிடம் கற்றுக்கொண்ட சிலரே, பரதமுனிதான் பரதத்தின் பிதா என்று பேச ஆரம்பித்திருப்பது வேதனையாக இருக்கிறது. 

தலித் இஷ்யூஸ் குறித்து இன்று பரவலாகப் பேசுகிறோம். பரதத்திலும் அதுகுறித்து பேச வேண்டும். ‘பிராமணிசத்தை’ திருத்த அண்ணல் அம்பேத்கர் தன் வாழ்நாளெல்லாம் பாடுபட்டார். அதனால்தான் சபாவில் ஆடும்போது ‘ஜெய் பீம்’ என்று முழங்குகிறேன்! அது, ஒடுக்கப்பட்டவர்களின் அழுகுரல்!’’ என்கிறார் நிருத்தியா பிள்ளை.

செய்தி:அன்னம் அரசு

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்