தாத்தா தன்னை மறக்க விடாமல் செய்தது எப்படி?



தாத்தா காணாமல் போனபிறகு சில தினங்கள் என் பெற்றோர் கவலையோடு இருந்தனர். ஆனால், அவரைத் தேடும் நடவடிக்கையில் யாரும் ஈடுபடவில்லை. நாளடைவில் தாத்தா இருந்த சுவடே இல்லாமல் முற்றிலும் மறக்கப்பட்டுப் போனார். மறக்கப்படுவது அவருக்கொன்றும் புதிதல்ல.இளம் வயதில் என் தாத்தாவுக்கு உலக அளவில் புகழ் இருந்தது என்றால் என்னை ஏளனம் செய்வீர்கள்.

ஆனால், உண்மை அதுதான். அப்போது வெளியான அனைத்துப் பத்திரிகைகளும் அவர் பேட்டிகளை நாள் தவறாமல் வெளியிட்டன; பேட்டி இல்லாத பத்திரிகைகள் கழுதைக்கு தீனியாக்கப்பட்டன. ரேடியோக்கள் தாத்தாவின் பிரதாபங்களை முழங்கிய பிறகே அந்தந்த நாளின் நிகழ்ச்சிக்குள் நுழையும். ரசிகர்கள் தொந்தரவால் அவர் சிறிது காலம் மாறுவேடத்தில் இருந்ததாகவும் ஒரு வதந்தி உண்டு.

அத்தனை புகழ் வாய்ந்த தாத்தாவின் பெயரை நான் குறிப்பிடப்போவதில்லை. ஏனெனில், அடையாளம் காண முடியாத அளவு அவர் பெயரை இவ்வுலகம் மறந்துபோய் விட்டது. புகழ் போதையில் பல ஆண்டுகள் மயங்கிக்கிடந்த தாத்தா ஒரு நாள் கண்விழித்து, தான் ஏன் இத்தனை புகழோடு இருக்கிறேன் என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டார். பதில் தோன்றவில்லை. சற்றும் தாமதிக்காமல் அந்த எண்ணத்தை கைவிட்ட அவர் புகழோடு இருப்பதே தன் விதி என்று நம்பத் தொடங்கினார்.

ஆனால், தியேட்டரும், டிவியும் அசுர வளர்ச்சி கண்ட காலகட்டத்தில் தாத்தாவின் புகழ் மணல் மணலாக உதிரத் தொடங்கியது.
அந்தக் கால ஹீரோக்கள், தாத்தாவை அச்சு பிசகாமல் பின்பற்றினர். ‘அது கார்பன் காப்பிகளுக்கு தொழில் சூடுபிடித்த காலம்’ என்பார் தாத்தா.
தாத்தாவின் பிம்பத்தை துண்டாடி புகழடைந்த நகல்கள் அவருக்கு ஒரு மானசீக நன்றி கூட தெரிவிக்கவில்லை. கலையுலகம் ஒரு ஸெராக்ஸ் மெஷின் என்று நான் காலப்போக்கில் அறிந்துகொண்டேன்.

நகல்கள் நாட்டை ராஜ்ஜியம் பண்ணத் தொடங்கியபோது தாத்தா உள்ளூற நொறுங்கிப் போனார். நகல்களின் புகழை யாராவது பாடினால் நமட்டுச் சிரிப்பால் தாக்குவார். டிவியை அவர் அறவே வெறுத்தார். வீட்டார் அதை பார்க்க கறாராக தடை விதித்தார். மீறினால் டிவி நொறுங்கும்.
வீடடங்கிய ஓர் இரவில் டிவி பார்க்க முயன்ற என்னை தாத்தா கையும் களவுமாகப் பிடித்தார். தாத்தா குழந்தைகளை துன்புறுத்தும் அளவு மிருகம் அல்ல. ஆனால், அவரை மீறிய உணர்வெடிப்பு அப்போது நிகழ்ந்தது.

உதைபடும்போதே அதை நான் உணர்ந்திருந்தாலும் பீறிடும் அழுகை அடங்க மறுத்தது. தாத்தா பறவைகளுக்கு உணவிட என்னை பீச்சுக்கு அழைத்துக் கொண்டுபோன ஒரு நாளில் அந்த துர்நிகழ்வுக்கு கண் கசிய மன்னிப்பு கேட்டார்.ஆனால், அதற்கு மறுநாளே தாத்தா தொலைந்து போனார்.
டிவிதான் அவரை ஏதாவது செய்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்போது எனக்கு பதின்மம் கூட தொடங்கவில்லை. தாத்தாவின் பழைய கட்டளைப்படி 5ம் வகுப்பு போகும் வரை டிவி பார்ப்பதில்லை என முடிவெடுத்தேன்.

ஆனால், தாத்தா மறக்கப்பட வேறு காரணங்களும் இருந்தன. டிவியும், ஈஸ்ட்மேன் ஹீரோக்களும் என் அனுமானங்கள். தாத்தாவுக்கு சொறியும் பழக்கமும் இருந்தது. அவரது இளம்வயது பேட்டி ஒன்றில் கூட, சொறிவதை எந்த வித கூச்சமும் இன்றி அனுபவித்து செய்வதாக தாத்தா சொல்லியிருந்தார். சொறிக்கு பதில் சிகரட் பழக்கம் இருந்திருந்தால் தாத்தாவுக்கு நிச்சயம் இன்று வரை அபிமானிகள் இருந்திருக்கக்கூடும்.
நீங்களே சொல்லுங்கள், சொறியும் பழக்கம் உள்ளவர்கள் தன்னை பிரபலமாக தக்கவைத்துக் கொள்ள முடியுமா?

நான் ஒரு புகழ் இழந்த தாத்தாவின் பேரன் என்பதாலோ என்னவோ, புகழ் பெறுவதில் எனக்கு பல அதைரியங்கள் உண்டு: நான் ஒரு பெரிய விருது வாங்க மேடையேறுகிறேன். உலகத்தின் கண்களே என் மீதுதான். படியேறும்போது நான் தடுமாறி விழுகிறேன் அல்லது விருதை கையில் வாங்கும்போது என் பேண்டு அவிழ்கிறது அல்லது விருதே கைநழுவி ‘ப்ரேக்கிங் நியூஸ்’ ஆகிறது.

அடுத்த ஒரு மண்டலம் நான் மீம்களாக மாறி லட்சோப லட்சம் கோடிப்பேரால் சிரிக்கப்படுகிறேன். முதல் பக்கச் செய்தியில் என் பெயர் பல்லிளிக்கிறது. ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரி, தாத்தாவின் புகழையும் என் தோல்வியையும் ஒப்பிட்டு புது idiom உருவாக்கி இருக்கும்!
இந்த கற்பனை எனக்கு புகழ் மீது அருவருப்பு உண்டாக்கியது.

மறந்தே விட்டேன். தாத்தா சொறிவது பற்றித்தானே பேசிக்கொண்டிருந்தோம்? தாத்தாவைப்போல் சொறிப்பழக்கம் கொண்ட இன்னொரு புகழாளரை நான் பின்னொரு நாள் கண்டுபிடித்தேன். என் பள்ளி வரலாற்றுப் புத்தகத்தில் சட்டைக்குள் கைவிட்டபடி கம்பீரமாக நிற்கும் நெப்போலியன் போனபார்ட்!நெப்போலியனின் ஓவியம் பல ஊகங்களுக்கு நம்மைத் தள்ளுகிறது. சொறிகிறார் என்று சிலரும், அந்தக் கால ஒயில் என்று சிலரும் சொல்கின்றனர். இன்னும் சிலர், ரகசிய இனக்குழு முத்திரை என்றுகூட வாதிக்கின்றனர்.

நான் முதல் தரப்பு. சொறிப்பழக்கம்தான் நெப்போலியனின் வீழ்ச்சிக்குக் காரணம் என்பது என் தீர்மானம். தாத்தாவுக்கு நிகழ்ந்ததும் அதுதான். நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்!சொறிப்பழக்கம் அவரை புகழ் ஏணியில் இருந்து கீழே தள்ளியது. அவர் பெயரைக் கேட்டு அவர் தலைமுறையினரே மலங்க மலங்க விழிக்கும் அளவுக்கு கீழே. அவரது இருப்பு நீர்த்துப்போய் அனைத்து நினைவுகளில் இருந்தும் களையப்பட்டது தாத்தாவுக்கு வலியூட்டியது.
தினமும் காலையில் அவர் முகத்தில் அறைந்த முதல் விஷயம், தான், ‘தாத்தா’ என்ற சிறிய விஷயமாக சுருங்கி விட்டதுதான்.

வீட்டுக்குள்ளேயே தன்னை அடைத்துக்கொண்டவர் குடும்பத்தினர் கூட கண்டுகொள்ளாததால் என்னிடமும், மரம், செடி, கொடிகளிடமும் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். மணல் மேல் கால் பதியாமல் நடப்பது போல் ஆனது அவர் இருப்பு.தாத்தா தன்னை ஒரு அறைக்கலனாக பாவித்துக் கொண்டபோது நிலை இன்னும் மோசமானது. தாத்தாவின் பணத்தை அழிப்பதையே லட்சியமாக்கி வாழ்ந்த என் அப்பா ஒரு நாள் புதிய ஃபர்னிச்சர் போடுவதற்காக ஹாலை மறித்து நின்ற தாத்தாவை நகரச் சொன்னார்.

தாத்தா அசைந்து கொடுக்கவில்லை. தொடர்ந்து 3 நாட்கள் அதே இடத்தில் நின்றிருந்தார். அடுத்த நாள் 2 தடியன்கள் ஃப்ரிட்ஜை சுமப்பது போல் தாத்தாவைத் தூக்கிக்கொண்டு போய் அவர் அறையில் வைத்தனர். உடல் மருத்துவர், தாத்தா வயதுக்கு மீறிய ஆரோக்கியத்தோடு இருப்பதாக சொன்னார். மனநல மருத்துவரிடம் தாத்தா வாய் திறக்கவில்லை.

தாத்தா என்னை பீச்சுக்கு அழைத்துப்போன அன்று கூட பறவைகள் அவரை சிலையாகக் கருதி தலையிலும், தோள்களிலும், கைகளிலும் அமர்ந்திருந்தன. சிறு அணுக்கமும் காட்டாத ஜடப்பொருளாக உறைந்துவிட்ட தாத்தாவை அப்பா இட அடைப்பாகக் கருதினார். அவரை எடைக்குப் போட ஆலோசனை நடந்து கொண்டிருந்தபோது திடீரென ஒருநாள் தாத்தா மாயமாகிப் போனார். தாத்தாவை யாரும் தேடவில்லை, அவரும் திரும்பி வரவில்லை.

நான் 5ம் வகுப்பு வந்த பிறகும் டிவி பார்க்கவில்லை. அப்பா ஐஃபோன் வாங்கிக் கொடுத்தார். பல ஆண்டுகள் கழித்து ஓர்
அருங்காட்சியகத்தில் என் தாத்தாவைப் பார்க்க நேர்ந்தது. கண்ணாடிச் சுவருக்கு அந்தப்பக்கம் ஒரு மெழுகு சிலை போல தாத்தா ஈயாடாமல் நின்றிருந்தார். என்னிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. ஆனால், என்னை அடையாளம் கண்டுகொண்டதை அவர் கண்ணின் ஈர மினுக்கல் சொன்னது.
சுற்றியிருந்த பார்வையாளர்கள் தாத்தாவை மெழுகுச் சிலை என்றே பரிபூரணமாக நம்பினர். அவர் தத்ரூபத்தை சிலாகித்துக் கேட்க எனக்கு புளகாங்கிதமாக இருந்தது.  

இழந்த புகழின் கடுகளவை தாத்தா மீண்டும் ருசித்துக் கொண்டிருந்தார். உலகப்புகழ் பெற்ற ஒருவரின் மூளை மட்டும்தானே இப்படி சிந்திக்க முடியும்!
ஆனால், 20 ஆண்டுகளாக தாத்தாவால் எப்படி சொறியாமல் நிற்க முடிகிறது?  

அதீத ஹேப்பி!

டபுள் குஷியில் மின்னுகிறார் அதிதிராவ் ஹைதரி. மலையாளத்தில் அவர் ஜெயசூர்யாவுடன் நடித்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி இருப்பது ஒரு காரணம்.மற்றொன்று, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்துக்காக களரி கற்று வந்தவர், லாக் டவுன் பிரேக்கினால் அதை தொடர முடியாமல் போனபோது வருத்தப்பட்டார். சுதாரித்து இப்பொழுது மும்பை வீட்டில் கற்றதை வைத்து பயிற்சி எடுத்து வருகிறார்!

நான் அவள் இல்லை!

‘சூ  ரரைப் போற்று’ இயக்குநர் சுதா கொங்கரா, டுவிட்டரில் இல்லையாம். அவர் பெயரில் அங்கு நடமாடுவது போலியாம்!
இப்படி அறிவித்திருப்பவர் சுதா கொங்கராவே அல்ல! மாறாக, தனக்குப் பதிலாக வேதிகாவை வைத்து இப்படி டுவீட் போட வைத்திருக்கிறார்.
‘சுதா, எந்த சோஷியல் மீடியாவிலும் இல்லை. அவங்ககிட்ட பேசறப்பதான் இந்த உண்மையே எனக்குத் தெரிஞ்சுது. நீங்களும் உஷாரா இருங்க...’ என வேண்டுகோள் வைத்திருக்கிறார் வேதிகா.

கூகுளில் இல்லாதது மதுவிடம் உண்டு!

‘தூங்காவனம்’ மது ஷாலினி இப்போது ஹைதராபாத் வீட்டில் சிலுசிலுக்கிறார். தமிழில் சிபிராஜின் படம் மட்டுமே கைவசம் வைத்திருக்கும் மது, லாக்
டவுனில் புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறாராம். ‘‘எங்க வீட்ல மினி லைப்ரரி இருக்கு. அதுல கொஞ்சம் புக்ஸ் என் கலெக்‌ஷன். மீதமுள்ளது எல்லாம் எங்க அம்மா படிச்சது. கூகுள்ல தேடினாலும் கிடைக்காத விஷயங்கள் கூட எங்க வீட்டு புக்ஸ்ல இருக்கு...’’ என புன்னகைக்கிறார் மது ஷாலினி.‘தூங்காவனம்’ மது ஷாலினி இப்போது ஹைதராபாத் வீட்டில் சிலுசிலுக்கிறார்.

தமிழில் சிபிராஜின் படம் மட்டுமே கைவசம் வைத்திருக்கும் மது, லாக்டவுனில் புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறாராம். ‘‘எங்க வீட்ல மினி லைப்ரரி இருக்கு. அதுல கொஞ்சம் புக்ஸ் என் கலெக்‌ஷன். மீதமுள்ளது எல்லாம் எங்க அம்மா படிச்சது. கூகுள்ல தேடினாலும் கிடைக்காத விஷயங்கள் கூட எங்க வீட்டு புக்ஸ்ல இருக்கு...’’ என புன்னகைக்கிறார் மது ஷாலினி.

என்.எஸ்.அஷ்வின்