நடிகர்களான கவிஞர் விக்கிரமாதித்யன் தம்பதியர்!



கவிதையும் கனிவும் இரண்டு கண்களில் ஒளிர… தென்காசி வீட்டில் இருக்கிறார் கவிஞர் விக்ரமாதித்யன். கூடவே ஆத்மார்த்தமாக உதவியாக இருக்கிறார் மனைவி பகவதியம்மாள். கவிதைகளால் நம்மை ஆற்றுப்படுத்திய கவிஞர், மனைவியோடு சேர்ந்து ‘இன்ஷா அல்லாஹ்’ படத்தில் தம்பதியராகவே நடித்திருப்பதுதான் இலக்கிய உலகில் புத்தம் புது டாபிக்!‘‘எனக்கு நடிகர்னா சிவாஜிதான். அவரோட ஆரம்பகால படங்களிலேயே எல்லாத்தையும் நடிச்சுப் பார்த்திட்டாரு. ‘புனர்ஜென்மம்’ல அவர் குடிகாரனாக வருவார். நானே அப்படியிருந்திருக்கேன்.

ஆனால், அவர் அப்படி நடிப்பார்! அவருக்கு, தான் சிறந்த நடிகர்ங்கற எண்ணம் இயல்பாகவே இருந்திருக்கணும். அப்படியில்லாமல் இப்படி தயக்கமின்றி நடிக்க முடியாது.
க.நா.சு., ‘தமிழர்கள் பாக்கியசாலிகள். ஆனால், அதை அவர்கள் உணர மாட்டார்கள்’னு சொல்வார். ஆனால், சிவாஜி இறந்தபோது அவருக்கு சிறப்பான மரியாதையைக் காட்டினார்கள். பெருங்கூட்டம் பெருகி அன்பில் கூடவே அவர் பிரிவில் நனைந்தது.

அவர் நடிச்ச தமிழ் சினிமாவில் நானும் நடிக்கிறேன்னு நினைச்சா பெருமையா இருக்கு. இன்னிக்கும் நான் சினிமாவிற்கு வந்ததை நினைச்சா ஆச்சரியமாயிருக்கு. கவிஞர் யூமா வாசுகி, ‘எப்படி அண்ணே கூச்சம் இல்லாமல் நடிக்கிறீங்க’னு கேட்பார். அவருக்கு நான் கவிதை எழுதுவதுதான் அதிகம் தெரிஞ்சிருக்கும். ‘நான் மாணவப் பருவத்தில் மன்ற பேச்சாளர். அண்ணா, கே.ஆர். ராமசாமி, சம்பத், லட்சிய நடிகர்னு பேச்சு கேட்டு வளர்ந்தவன். அதனால் பேசுறதில் எந்தத்தயக்கமும் வந்தது இல்லை’ன்னு அவர்கிட்டே சொல்வேன்.

ஒரு நாள் உலக சினிமா பாஸ்கரன் அலைபேசியில் ‘அண்ணே, தோப்பில் முகமது மீரான் எழுதிய ‘அன்புக்கு முதுமை இல்லை’ கதையையும், பிர்தௌஸ் ராஜகுமாரன் எழுதிய ஒரு சிறுகதையையும் இணைத்து ‘இன்ஷா அல்லாஹ்’னு படம் எடுக்கப் போறோம். இஸ்லாமியரின் வாழ்வியல் குறித்து அந்தக் கதை பேசுது. அதில் நீங்களும், அம்மாவும் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும்’ என்றார்.

எனக்கு நடிப்பு கஷ்டம் இல்லை. ஏற்கனவே ‘நான் கடவுள்’, ‘அங்காடித்தெரு’, ‘மான் கராத்தே’ இப்படி நிறையப்படங்களில் நடித்துவிட்டேன். என் மனைவிதான் தயங்கினார். ஆனால், என்னோட இணையாக என்று இயக்குநர் பாஸ்கரன் கேட்டதும் சம்மதித்து விட்டார்.

நானும் பகவதியும் கிளம்பி கோவை போனோம். 13 நாட்கள் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டோம். வயதை மனதில் நிறுத்தி தினமும் சில மணி நேரம்தான் எங்களை வைத்து படப்பிடிப்பு நடத்தினார்கள். நாங்கள் இருவரும் இரந்துண்டு வாழ்வது போல காட்சிகள். அதோடு எங்களின் பிரியமும், அன்னியோன்யமும், கதைப்பொருளாக இருந்தது...’’ என்று சொல்லி சிரிக்கும் விக்ரமாதித்யன் அண்ணாச்சி, ‘உன் அனுபவத்தைச் சொல்லம்மா’ என பகவதியம்மாளைத் தூண்டுகிறார்.

‘‘கேட்டதுமே சரின்னு சொல்லிவிட்டேன். ஆனால், எனக்கு நடிக்க வருமான்னு சந்தேகம் இருந்தது. எனக்கு கோவையில் வைத்து நடிப்பு சொல்லிக்கொடுத்தார்கள். ஆதாரமான சில விஷயங்களைத் தெரிந்து கொண்டாலே பயம் போய்விடுகிறது. நாங்க இரண்டு பேரும் சாயங்காலமாக கோவை வீதிக்கடைகளில் போய் பிச்சை எடுக்கணும். நாங்க அம்மாதிரி நடிக்கும்போது கடைக்காரர்கள் பலரும் நம்பிட்டாங்க. ‘ஏம்மா இப்பத்தான் கடையைத் திறந்தேன். வந்திட்டிங்களா’னு திட்டினதும் நடந்தது. படப்பிடிப்பு என அறியாமல் சந்தோஷமாக காசைக் கொடுத்தவர்களும் உண்டு.

அவர் மத்தவங்க கொடுக்கிற காசை வாங்கிக்கொண்டு, என்கிட்டே கொடுப்பார். ‘போய்யா, வந்திட்டீங்க…’ என நிஜ பிச்சைக்காரர்களாக நினைத்து திட்டும்போது எனக்கு சிரிப்பு வந்திடும். நான் உடனே தலையைக் குனிஞ்சுக்கிட்டு சிரிப்பை அடக்கிக்குவேன்.ஒரு நாள் நானும் அவரும் உட்கார்ந்து கொண்டு அன்னிக்கு கஞ்சியைக் குடிக்கிற மாதிரி சீன். குடிச்சிக்கிட்டே ‘உனக்கு முன்பே நான் மவுத்தாகிப் போயிடணும் அய்யா’னு சொல்லும் போதே எனக்கு பொங்கி வந்திடுச்சு. அழுது தவிச்சிட்டேன்.

டேக் முடிந்ததும் எல்லோரும், ஓடி வந்து ‘நடிப்பு ரொம்ப அருமையாக இருந்தது. பிரமாதப்படுத்திட்டிங்க’ன்னு சொன்னாங்க. நான் அதை நடிப்பாக நினைச்சு சொல்லலைன்னு எனக்குத்தான் தெரியும்...” என்றவரை அண்ணாச்சி கைபிடித்து ஆற்றுப்படுத்துகிறார்.‘இன்ஷா அல்லாஹ்’ 130 திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு எல்லோரின் கவனத்தையும் ஈர்த்து, தனிப்பட்ட சிறந்த சினிமாவிற்கான விருதுகளையும் பெற்றிருக்கிறது. ஜனவரியில் தியேட்டர்களை எட்டிப்பார்க்கத் தயாராக இருக்கிறார்கள்.

நா.கதிர்வேலன்